எனது மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு அ போ இருங்கோவேள் அவர்கள் கண்கள் பராமரிப்புப் பற்றி எழுதி இருக்கும் விழிப்புணர்வுக் கட்டுரைகளை அவ்வப்போது என் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சுற்றுச்சூழல் மாசுபாட்டில் மட்டுமல்ல நம் விழிகளுக்கும் பகையாகும் புகை பற்றி விரிவாக அவர் எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள். நன்றி இருங்கோவேள் சார்.
*********************
புகை நம்விழிகளுக்கும் பகை
கட்டுரை ஆசிரியர் :
அ போ இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஒரு கொடிய நோய் புகைபிடித்தல் - மற்றும் புகையிலை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது.
”புகைபிடித்தல் புற்று நோயை உருவாக்கும் என்பது ஒரு அப்பட்டமான பொய், புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் வருகிறது” - என்று விவாதம் செய்பவர்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள்.
அது மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பது தெரிந்தும், அந்த குற்றத்தினை எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி செய்யும் மெத்த படித்த மேதாவிகளும் , உயர்ந்த பதவிகளில் இருக்கும் மேல் தட்டு மக்களும் - வேலை நேரத்தில் ரிலாக்சேஷனுக்காக கூட்டமாக வெளியே வந்து புகைபிடிப்பதும், படிப்பறிவே இல்லாத பாமர ஜனங்களும் புகைபிடிப்பதை தொடர்வதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் - புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் - புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரிக்கை வாசகங்களை ஒளிபரப்பி தனது சமுதாய பொறுப்பினை தட்டிக்கழிப்பதும் தான் உச்சகட்ட வேதனை.
புகை பிடித்தலினால் வரும் பிரச்சினைகள், புகை பிடிப்பவரைக்காட்டிலும், அவரைச்சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
மருத்துவமனையில் என்னிடம் ஒரு நோயாளியின் உடன் வந்தவர் கேட்ட கேள்வி:
“கேட்டராக்ட் பொதுவாக வயோதிகம் அடைந்த எல்லோருக்குமே வரக் கூடிய வாய்ப்பு உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். புகை மற்றும் மது பானம் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கேட்டராக்ட் வருவதை நான் கவனித்திருக்கிறேன்”.
”நீங்கள் புகை பிடிப்பதனாலும் மது பானம் அருந்துவதனாலும் வரக் கூடிய வாய்ப்பு உண்டு என்கிறீர்கள். புகை பிடிப்பவர்களுக்கு புற்று நோய் வரும், டி பி வரும் என்றெல்லாம் உங்களைப் போன்றவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன், ஆனால் கண்ணில் கேட்டராக்ட் வரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”. என்று விவாதம் செய்தார்.
தனது புகைப்பழக்கத்திற்கு ஆறுதல் தேடிக்கொள்ள முயற்சிக்கும் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன்:
- கேட்டராக்ட் என்பது கண்களில் வயோதிகத்தின் காரணமாக வருவது என்பது ஒரு பொதுவான காரணமே!
- ஆனால் புகை பிடித்தலும், மது பானம் அருந்துவதும் கேட்டராக்ட் வருவதற்க்கான காரணங்களில் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை.
- புகைபிடித்தல் கண்புரை வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் எனப்படும் கேட்டராக்ட் அதிக அளவில் வருவதற்க்கான வாய்ப்பு இருப்பதை சங்கர நேத்ராலயாவில் நடைபெற்ற சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
- புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 20 அல்லது இருபதுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளது.
சரி, புகை பிடிப்பதனால் ஒருவருக்கு கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு எவ்வாறு அதிகரிக்கிறது என்று விளக்கமாகக் கவனிப்போம்:
1. கேட்டராக்ட் என்பது நமது கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பது மற்றும் லென்ஸின் தோற்றம் புகை போன்ற படலம் படர்ந்த நிலையும் கூட.
2. லென்ஸ் கிரிஸ்டலின் என்ற புரோட்டினால் ஆனது.
3. நமது உடலின் பல பாகங்களில் ஆக்ஸிஜனேற்றம் எனப்படும் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இது மனிதர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்தினை நிலைபெறச் செய்வதற்க்கான, ஊட்டச் சத்திற்க்கான நிகரான நல்ல நண்பர் எனலாம். ஆக்ஸிஜனேற்றம் மூலம் நமது உடலின் செல்களை பாதுகாத்து, நோய்களிலிருந்து விலக்கிவைத்து, சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய செயல் ஆகும்.
4. இந்த ஆக்ஸிஜனேற்றம் நமது லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மையை சரி வர கண்காணித்து செயல்படுத்துகிறது.
5. நமது லென்ஸ்ஸில் சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேஸ் மற்றும் குளுதாதயோன் பெராக்ஸைட்(superoxide dismutase and glutathione peroxides) எனப்படும் அவசியமான என்சைம்கள் உள்ளன.
6. சிகரெட் மறும் பீடிகளில் காட்மியம் மற்றும் நிக்கோடின் உட்பட சுமார் 4000 தேவையற்ற ரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளன. அவற்றை அட்டவணைப்படுத்த வேண்டுமென்றால் ஒரு குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழே தேவைப்படும்.
7. ஒருவர் சிகரெட் அல்லது பீடி புகைக்கின்ற போது அவரது இரத்தத்தில் இந்த ரசாயனப் பொருட்கள் கலந்து விடுகின்றன. ஒருவரது இரத்த்த்தில் அதிகரிக்கும் கேட்மியம் நமது கண்களில் உள்ள லென்ஸில் உள்ள என்சைம்களான சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேஸ் மற்றும் குளுதாதயோன் பெராக்ஸைட் களை பாதிக்கிறது.
8. இதன் காரணமாக நமது லென்ஸில் ஒழுங்காக நடைபெற வேண்டிய ஆக்ஸிஜனேற்றம் சேதமடைகிறது. எனவே லென்ஸ் பாதிக்கப்பட்டு தனது பணியை செய்வது, அதாவது ‘ஒளி ஊடுருவும் தன்மையை சரி வர கண்காணித்து செயல்படுத்துகின்ற வேலை’ தடை செய்யப்படுகிறது.எனவே லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கிறது.எனவே தெளிவற்ற பார்வையை அனுபவிக்கின்ற நிலை ஏற்படுகிறது. அந்நிலையே கேட்டராக்ட் எனப்படுகிறது.
9. எனவே, நியூக்ளியர் கேட்டராக்ட் புகை பிடிப்பவர்களுக்கு விரைவிலேயே வருகிறது.
நியூக்ளியர் கேட்டராக்ட்
10.புகை பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிகும் போது வெளிப்படும் கேட்மியம் கண்களின் லென்ஸில் சேரும்போது ஏற்படுத்தும் பாதிப்பு, புரை வருவதற்க்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக உயிர் வேதியியல் ஆராய்ச்சிகளும் ஏற்றுக் கொள்கிறது.
கேட்மியம் லென்ஸில் உள்ள புரோட்டீன்களோடு இணைந்து பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவும், தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவற்றோடு இணைந்து ஆக்ஸிஜனேற்றத்தினை படிப்படியாக குறைத்து நேரடியாக அல்லாமலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. எனவே கண் புரை வருவதற்க்கான வாய்ப்பினை புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் குறைந்த வயதிலேயே ஏற்படுத்துகிறது. அவர்கள் புகைபிடிப்பதை நிறுத்துகின்ற காலத்தில் கேட்மியம் லென்ஸில் சேருவது நிறுத்தப்பட்டு, கன் புரை வருவதற்க்கான சாத்தியக்கூறினை தாமதிப்பதும் சென்னை, சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும் கண் புரை (கேட்டராக்ட் - Cataract) மட்டுமல்லாது, வயது சார்ந்த மாக்குலா பாதிப்பு (Age Related Macula Degeneration), நீரிழிவு விழிதிரை நோய் (Diabetic Retinopathy), தைராய்டு கண் நோய்கள் (Uveitis), மற்றும் கண் நரம்பு சார்ந்த பிரச்சினைகளும் (Neuro Opthalmic disorders) அதிகமாக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
கட்டுரை ஆசிரியர்:
அ போ இருங்கோவேள்,
மருத்துவ சமூகவியலாளர்,
மேலாளர் - நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.
டிஸ்கி:- மிக மிக அத்யாவசியமான கட்டுரை இருங்கோவேள் சார். புகை, தைராய்டு, டயபடீஸ், கண் நரம்பு சார்ந்த பிரச்சனைகள் கூட பாதிப்பு ஏற்படுத்தும் என விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியமைக்கு நன்றி. முடிந்தவரை ஒவ்வொருவரும் இதைப் பின்பற்றினால் அனைவருக்கும் நல்லது.
நன்று, நன்றி...இதைப் பகிர முடியுமா?
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குபுகைத்தல்
பதிலளிநீக்குஉடல் நலத்திற்குக் கேடாகலாம் என்பது
அரச எச்சரிக்கை! - நானும்
வேற மாதிரி எச்சரிக்கிறேன்...
புகைத்தலால் தான்
புற்றுநோய் வந்து உயிரிழந்தேன்
இவ்வண்ணம் - உங்கள் முன்னே
புகையாக உலாவும் ஆவி!
நிச்சயம் பகிரலாம் நீலன்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!