புதன், 29 மார்ச், 2017

அஞ்சா நெஞ்சன் தீரன் சின்னமலை:-

ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தவர் தீரன் சின்னமலை.

அஞ்சா நெஞ்சன் தீரன் சின்னமலை:-

பதினெட்டாம் நூற்றாண்டில் வியாபார நிமித்தமாக வந்து இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து அரசர்கள் மற்றும் அரசிகள் போலவே நிறைய பாளையக்காரர்களும் போரிட்டிருக்கிறார்கள். அவர்களுள் வீரம் விளையும் கொங்கு நாட்டைச் சேர்ந்த பாளையக்காரரான தீரன் சின்னமலை மிக முக்கியமானவர். புகழ்பெற்ற ஓடாநிலைக் கோட்டையைக் கட்டி ஆண்டவர்.


இவர் 1756 இல் ஏப்ரல் 17 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் இவருக்கு ”தீர்த்தகிரிச் சர்க்கரை” எனப் பெயரிட்டிருந்தார்கள் இவரது பெற்றோர். தந்தையின் பெயர் ரத்தினசாமி. தாயின் பெயர் பெரியாத்தா. இவருக்கு நாலு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. இவர்கள் புகழ்பெற்ற பழைய கோட்டை பட்டக்காரர் பரம்பரையைச் சார்ந்தவர்கள்.

சிறுவயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், தடிவரிசை, வில்வித்தை, வாள்பயிற்சியில் தேர்ச்சியுற்றிருந்தார் தீர்த்தகிரி. ஹைதர் அலி யின் ஆட்சியில் கொங்குநாட்டு வரிப்பணம் மைசூருக்குச் செல்வதை சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையில் ஓரிடத்தில் மறித்துத் தடுத்து அதை ஏழைகளுக்கு வழங்கினார். ”இதை ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்” என்று வரி கொண்டு சென்ற தண்டல்காரரிடம் அவர் சொன்னதால் அவர் பெயர் சின்னமலை என்று வழங்கலாயிற்று. 

வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர் நம்நாட்டில் அரசாட்சியில் ஆதிக்கம் செய்வதை எதிர்த்தார். ஹைதர் அலியின் ஆட்சியில் கொங்குநாட்டுப் பகுதிகளில் வரிவசூல் செய்வதை எதிர்த்தாலும் டிசம்பர் 7, 1782 வில் அவர் மறைந்து அவர் மகன் திப்பு சுல்தான் மைசூரின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்த போரில் 40,000 கொங்கு வீரர்களோடு சென்று வெள்ளையர் படையை விரட்டியடித்தார் . கருப்ப சேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் இவரது படையில் முக்கிய இடம் பெற்ற வீரர்கள் ஆவர்.

கொங்குபகுதியிலும் கேரளா, சேலம் போன்ற பகுதியிலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்படத் தடையாக இருந்தார். ஏப்ரல் 18, 1792 இல் சிவன் மலை பட்டாலிக் காட்டில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார்.பிரஞ்சுக்காரர்களுடன் சேர்ந்து பீரங்கிகளும் தயாரித்தார். உதிரியாகப் போராடியவர்களை ஒன்று சேர்த்து போராளிகள் கூட்டமைப்பின் மூலம் லெஃப்டினெண்ட் கே க்ஸிஸ்டரின் 5 ஆவது பட்டாலியனை அழிக்கத் திட்டமிட்ட கோவைப்புரட்சி இவரது வீரர்களின் அவசர ஆக்கிரமிப்பால் தோல்வியுற்றது.

இவரது போர்களில் உறுதுணையாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவர் இவரது மெய்க்காப்பாளர் கருப்ப சேர்வை. பீரங்கிகள் கொண்டு நவீன முறையில் போரிட்ட ஆங்கிலேயப் படைகளை எதிர்க்க நெப்போலியனிடம் மைசூர் அரசர் உதவி வேண்டி அனுப்பிய குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். தீரன் சின்னமலையிடம் வரிவசூலிக்க வந்த ஆங்கிலேயப்படையைச் சேர்ந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை விரட்டி அடித்தார்.

தீரன் சின்னமலை ஆங்கிலேயரின் சட்டதிட்டங்களுக்குப் பணியாமல் சுயேச்சையாக ஆட்சி புரிந்தார். திப்புசுல்தானின் மறைவுக்குப் பின் ஓடாநிலைக் கோட்டையைக் கட்டினார். 1801 இல் காவிரிக் கரையிலும் 1802 இல் ஓடாநிலைக் கோட்டையிலும், 1804 இல் அரச்சலூரிலும் நடந்த போர்களில் கருப்பசேர்வை துணையுடன் கம்பெனிப் படைகளைத் துரத்தி அடித்தார். தன்னைக் கைது செய்ய வந்த கொலோனல் மாகிஸ்தானை வென்றார். அதன் பின் கேப்டன் ஹாரிஸ் இவரைப் போரிட்டுப் பிடித்தும் தன் புத்தி சாதுர்யத்தால் தப்பித்தார்.

ஆனால் சுபேதார் வேலப்பன் என்ற பிரிட்டிஷ் கைக்கூலி கொடுத்த தகவலால் இவரும் இவரது சகோதரரும் ஆங்கிலப் படையினரால் பிடிக்கப்பட்டனர். கள்ளிக்கோட்டையிலிருந்து வந்த பீரங்கிப் படை கொண்டு ஓடாநிலைக் கோட்டை தகர்க்கப்பட்டது. இவர்கள் இருவரையும் கருப்ப சேர்வையையும் சங்ககிரிச் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு.

ஆங்கிலேயர் ஆட்சியை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியும் தீரன் ஏற்றுக் கொள்ளவில்லை. போரின் மூலம் வெற்றி கொள்ள இயலாத இவரை சூழ்ச்சியின் மூலம் போலி விசாரணை நடத்தி நயவஞ்சகத் தீர்ப்பளித்து  இவரையும் கருப்பசேர்வையையும் இவரது சகோதரர்களையும் அக்கிரமம் பிடித்த ஆங்கிலேய அரசு  ஜூலை 31, 1805 இல் சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டது.

வாழ்நாள் முழுவதும் போர்புரிந்தும்  தீரன் சின்னமலை சமூக நல்லிணக்கம் கொண்டவர். பல திருப்பணிகள் செய்தவர். புலவர்களை ஆதரித்தவர். கொடை கொடுத்தவர்.

ஜூலை 31, 2005 இல் அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இவரது பெயரால் போக்குவரத்துக் கழகம், தனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் மாளிகை, சென்னை கிண்டியில் உருவச்சிலை, ஓடாநிலைக்கோட்டையில் நினைவு மணி மண்டபம், சங்ககிரியில் டிசம்பர் 13, 2013 அன்று அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் ஆகியன இவருக்கு நாடு செலுத்தும் அஞ்சலியாகும். இவர் பிறந்த ஏப்ரல் 17 ம் தேதியும் மறைந்த ஆடி பதினெட்டும் கொங்கு நாட்டு மக்கள் தம் அஞ்சலியைச் செலுத்தி கௌரவித்து வருகிறார்கள்.

கொங்கு நாட்டைச் சேர்ந்த பாளையக்காரரான யாருக்கும் அஞ்சா நெஞ்சனான தீரன் சின்னமலையின் பெயர் இந்திய சுதந்திரப் போராட்டச் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. இவர் மறைந்தாலும் இவர் பெற்றுத்தந்த சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்கிறோம். இவர் போன்ற வீரர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.  
 

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...