எனது மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு அ போ இருங்கோவேள் அவர்கள் கண்கள் பராமரிப்புப் பற்றி எழுதி இருக்கும் விழிப்புணர்வுக் கட்டுரைகளை அவ்வப்போது என் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சுற்றுச்சூழல் மாசுபாட்டில் மட்டுமல்ல நம் விழிகளுக்கும் பகையாகும் புகை பற்றி விரிவாக அவர் எழுதி இருப்பதைப் படித்துப் பாருங்கள். நன்றி இருங்கோவேள் சார்.
*********************
புகை நம்விழிகளுக்கும் பகை
கட்டுரை ஆசிரியர் :
அ போ இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ஒரு கொடிய நோய் புகைபிடித்தல் - மற்றும் புகையிலை பொருட்களுக்கு அடிமையாக இருப்பது.
”புகைபிடித்தல் புற்று நோயை உருவாக்கும் என்பது ஒரு அப்பட்டமான பொய், புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் வருகிறது” - என்று விவாதம் செய்பவர்கள் இப்போது அதிகரித்து வருகிறார்கள்.
அது மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பது தெரிந்தும், அந்த குற்றத்தினை எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி செய்யும் மெத்த படித்த மேதாவிகளும் , உயர்ந்த பதவிகளில் இருக்கும் மேல் தட்டு மக்களும் - வேலை நேரத்தில் ரிலாக்சேஷனுக்காக கூட்டமாக வெளியே வந்து புகைபிடிப்பதும், படிப்பறிவே இல்லாத பாமர ஜனங்களும் புகைபிடிப்பதை தொடர்வதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் - புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் - புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று எச்சரிக்கை வாசகங்களை ஒளிபரப்பி தனது சமுதாய பொறுப்பினை தட்டிக்கழிப்பதும் தான் உச்சகட்ட வேதனை.