வெள்ளி, 2 டிசம்பர், 2016

100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

26. அசோகமித்திரனின் பிரயாணம். குருதேவருடனான அச்சமூட்டிய பயணம் எதிர்பாராதவிதமாக முடிவது சோகம் என்றாலும் முடிவில் ஒரு வினோதமும் காத்திருக்கிறது.

 

27. ஜெயகாந்தனின் குருபீடம். தன்னைத்தேடுதலை உணர்த்திய அற்புதமான கதை.

 

28. ஜெயகாந்தனின் முன்நிலவும் பின்பனியும். மனதை நெகிழ்வித்த கதை. இருந்தும் பக்கத்திலிருக்கும் குழந்தையை விடத் தன் பேரனே உசத்தி என்று கருதும் தாத்தாவின் குணபிரதிபலிப்பு நன்றாகப் படைக்கப்பட்டிருக்கு. முடிவில் லேசான பாசம் அத்திபோலக் பூக்கிறது. 

 

29. ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம். என்னே முதிர்ச்சியான எழுத்து என்று கல்லூரிப் பருவத்திலும் இன்றும் ஆச்சர்யப்பட வைத்த கதை.

 

30. பா. ஜெயப்பிரகாசம் - தாலியில் பூச்சூடியவர்கள்.  வர்க்க சாதி பேதத்தை அறைந்தது. மனதை அதிரவைத்த கதை. தைலி மனதில் சிற்பமாய்ச் சமைந்துவிட்டாள். 

 

31. பிரமீள். காடன் கண்டது. நல்ல திகில் திரில்லர். ஒரு கொலை அதிகாரவர்க்கத்தால மறைக்கப்படுவதை காடன் மொழியில் சொல்லி இருக்காரு.

 

32. ஆதவனின் சிவப்பாக உயரமாக மீசை வைச்சுக்காமல். திருமணம் ஆகும் நிலையில் இருக்கும் ஒரு வாலிபனும் பெண்ணும் தங்கள் அலுவலகத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் கொள்ளும் மாயத் தோற்றம் மற்றும் நிதர்சனமான எண்ணங்களின் அழகான யதார்த்தமான தொகுப்பு. 

 

33. ஆதவனின் ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள். உயர் அதிகாரியுடன் ஏற்படும் எண்ணப் போராட்டங்களும் இல்யூஷன்களும். ஒருவரை ஒருவர் தாஜா செய்துகொள்கிற ஆனால் மனதில் சமரசம் ஏற்படாத உரையாடல்கள். இதுபோல் நமக்குச் சிலரிடம் ஏற்படுவதுண்டு. மிக நுண்ணிய உணர்வுகளைப் படைத்த கதை.

 

34. எம் வி வெங்கட்ராம் - பைத்தியக்காரப் பிள்ளை. உழைத்துச் சோர்ந்தவனின் எதிர்பாரா முடிவு தந்த அதிர்ச்சியோடு அவன் மணக்கவிருந்த மனசாட்சி இல்லாத பெண் கொடுத்த அதிர்ச்சி அதிகம்.  

 

35. அ. முத்துலிங்கம் – மஹாராஜாவின் ரயில் வண்டி . இளம்பருவ ஞாபகங்கள் ரயில்வண்டித்தொடர்போலத் தொடர்வது இக்கதையின் அழகு.

 

36. ந. முத்துசாமியின் நீர்மை. ஒரு நார்மடிப் புடவை அணிந்த வயோதிகப் பெண்ணின் தனிமையான வாழ்வும் இறப்பும் பற்றிய கதை. சொல்லிய விதத்திலேயே சோகமும் ததும்பி வழிகிறது. எதுவும் செய்யமுடியாமல் மனதைச் சாட்டிய கதை. அந்தப் பெண்ணின்., முதியவளின் முகத்தையே அவள் இறந்தபின்தான் நெருக்கத்தில் பார்க்கிறார்கள் என்பது மிகத் துயரம். மிகச் சிறந்தகதை.

 

37. அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள். பெண்ணின் கப்பு நிறம் என்பது திருமணச்சந்தையில் பெற்றவர்களின் முகத்தில் அடிக்கும் ஒர் ஆயுதமாகும் அவலம். தாயை அம்பாளாக உபாசிக்கும் ஒரு பெண் பூப்பெய்தும்போது தன் தாயின் தேவஸ்வரூபம் உரிந்து வெறும் மனித அம்மாவாய்க் காணும் வலிமிக்க தருணம் கதையின் முடிவாய் அமைகிறது. 

 

38. அம்பையின் காட்டிலே ஒரு மான். பூப்பெய்த இயலாத உடற்கூறுடைய ஒரு பெண்ணின் மன உணர்வுகளை வடித்த கதை.

 

39. வண்ணநிலவன் - எஸ்தர் .பஞ்சத்தையும் வட்சியையும் பரிதவிக்கும்படி சொன்ன கதை. பாட்டியின் முடிவை எஸ்தரே உண்டாக்கினாளோ என எண்ண வைத்தது முடிவு.

 

40. வண்ணநிலவன் - மிருகம்:- உணவுக்காக மிருகத்துடன் போட்டி போடும் அளவு வறுமையும் பஞ்சமும் வட்சியும் சித்தரிக்கப்படும் கதை.

 

41. வண்ணநிலவன் – பலாப்பழம். மாசமான பெண் ஒருத்தி பக்கத்துவீட்டில் பலாப்பழம் நறுக்குவதைப் பார்த்துக் கொடுத்துவிடுவார்கள் என ஆசைப்படுகிறாள். ஆனால் அது நடக்கவில்லை. வேலை நிறுத்தத்தில் இருக்கும் கணவன் பணம் வந்ததும் மனைவிக்கு வைத்தியமும் செய்யாமல் ஆசைப்பட்ட பழத்தையோ உணவையோ சொல்லிய உறுதிமொழிப்படி வாங்காமல் குடித்துவிட்டு வருவதான கதை. அதையும் பழவாடை அடித்தது என்று மட்டுமே குறிப்பாக உணர்த்தி இருப்பார் வண்ணநிலவன். 

 

42.சம்பத். – சாமியார் ஜூவுக்குப் போகிறார். திருமணவாழ்க்கையை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்பாகக் கூறாவிட்டாலும் கணவன் மனைவிக்கிடையேயான ஆழ்ந்த அன்யோன்யத்தைக் கூறிய கதை. 

 

43. ராஜேந்திர சோழன். - புற்றிலுறையும் பாம்புகள். பெண்களின் கண்ணோட்டமும் ஆண்களின் கண்ணோட்டமும் மாறுபட்ட உணர்ச்சிகளும் பேச்சுமான கதை. முடிவில் பெண்ணின் பேச்சுக்களும் ஆணின் வார்த்தைகள் பெண்ணைச் சாடுமிடமும் கடுமை.

 

44. வண்ணதாசன் - தனுமை நீலப்பூவும் நீர்ப்பூவுமாக தனுவின் நினைவு அழகும் அற்புதமும். அழகான காதல் கதை

 

45.வண்ணதாசன் – நிலை. குழந்தைத் தொழிலாளியின் எளிய ஆசை தாமதமாக நிறைவேறும் கதை. அவலத்தைச் சொல்லாமலே உணரவைத்தவிதம் சிறப்பு.

 

46. ஆ. மாதவன் – நாயனம். நிகழ்வுகளின் தாமதமும் நேரங்கடந்து போதலும் சேர்ந்து நாயனம் வாசிக்கத் தெரியாமல் – சமய சந்தர்ப்பமறியாமல் இம்சிக்கும் நாயனக்காரரைப் புடைப்பதில் முடிகிறது. அனைவருக்கும் விடுதலைப் பெருமூச்சு புறப்படுகிறது. 

 

47. சுஜாதா – நகரம். ஜி ஹெச்சில் ஒரு கிராமத்துப் பெண் நோயுற்ற குழந்தையுடன் படும் பாடும் அவலமும். உயிரின் மதிப்பையும் அவசரமாகக் கவனிக்க வேண்டிய நிலைமையையும் உணராமல் மருத்துவ மையங்கள் கடனுக்கு செயலாற்றுவதைப் பலவருடங்களுக்கு முன்பே படித்து வருந்திய கதை. 

 

48. சுஜாதாவின் ஃபிலிமோத்ஸவ் .சராசரி மனிதன் நீலப்படம் பார்க்க ஆசைப்படுவதும் அது நிராசையாகிப் போவதும் கதை. சுஜாதா பாணியில் முடிவும் சராசரி மனிதனின் தயக்கத்தோடு எதிர்பாராமல் முடிகிறது.  

 

49. சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள். தாத்தாவும் பேரனும் மீன்பிடிக்க – வேட்டையாடப் போவது கதை. சின்ன விஷயமானாலும் தொழில் போட்டி போல பேரனுடன் தாத்தா கோபம் கொள்வது நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது, மனிதர்களின் மனோபாவம் எப்படி மாறுபாடு அடைகிறது என்பதை விவரிக்கும் இக்கதையும் சிறப்பான ஒன்று.

 

50. ஜி நாகராஜன் – டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர். தூக்கிட்டுக் கொள்வதற்காக முயலும் ஒரு கணிகையும் தரகனும் பேசும் கதை. நடுவில் வந்து அவளைச் சாவில் இருந்து தடுக்கும் அந்த டெரிலின் சட்டை மனிதரின் வருகை அரூபம் என்றாலும் அவளைச் சாவில் இருந்து தடுக்கத்தான் வந்திருப்பார் என எண்ண வைத்தது. வித்யாசமான கதை. 

 

நூல் :- 100 சிறந்த சிறுகதைகள்.
தொகுப்பு :- எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :- டிஸ்கவரி புத்தக நிலையம்.
பக்கம் :- 1092.
விலை :- ரூ. 650.

டிஸ்கி:- இதையும் பாருங்க

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீர்மையும் தனுமையும். ஒரு பார்வை.

100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.7 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

புத்தகம் வாங்கி விட்டீர்களா? அட!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே
அவசியம் வாங்கிப் படிப்பேன்

Thenammai Lakshmanan சொன்னது…

நல்ல வேளையாப் போச்சு ஸ்ரீராம் ! ஜனவரி 2014 லேயே புக் வாங்கியாச்சு. படிச்சும் ஆச்சு. இப்பத்தான் ரிவியூ போடுறேன் :)

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி. எனது வாசிப்புப்பட்டியலில் இதுவும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லது. முழுவதும் படிக்க வேண்டும்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...