எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 மார்ச், 2015

உடை அரசியலும் உடல் அரசியலும்.

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே.. என்ற திரைப்படப் பாடல் கேட்டு இருக்கலாம். தமிழ்நாட்டுப் பெண்கள் என்றால் புடவைதான் அணிய வேண்டும் என்ற மனோபாவத்தில் கிண்டலாக எழுதப்பட்ட பாடல் அது.

தோள்சீலைப்போராட்டம் எனக் கேள்வியுற்றிருக்கலாம்.போன நூற்றாண்டுகளில் தென்னிந்திய கேரள ஊர்களில் சாதியால் தாழ்ந்ததாக முத்திரை குத்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. உயர்சாதிப் பெண்டிர் மட்டுமே. மூன்று முண்டுகள் அணியலாம். மற்ற பெண்கள் இரண்டு முண்டு மட்டுமே. அதுவும் மேல் முண்டு எனப்படும் தோள்சீலையையும் பெரும்போராட்டத்துக்குப் பின்னே சட்டத்தின் உதவி பெற்று அணியத் துவங்கினார்கள். பெருங்கொடுமையாக இருக்கிறதல்லவா.



உணவு, மொழி, வாழ்விடம் எல்லாவற்றிலும் அந்நியக் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் அனுசரிப்போம் ஆனால் உடையில் மட்டும் கட்டுப்பாடு விதிப்போம். இதுதான் பெரும்பாலான மக்களின் மனோபாவம். இதற்காக ஆண்கள் எல்லாம் இன்று தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டிகளில் உலவுவதில்லை.

தட்பவெப்பம் மிகுந்த நம் நாட்டின் பருவநிலைக்கு ஏற்றாற்போல உள்ள உடைகளில் ஒன்று வேஷ்டி. இதை அணிந்து எந்த கிளப்புகளுக்கும் எந்த நாட்டுக்கும் எந்த அலுவலகத்துக்கும் போக முடியாது. ஏன் இந்தியாவிலேயே இதைப் பல நிறுவனங்களுக்கு அணிந்து போக முடியாது. என்னதான் வெய்யில் கொளுத்தினாலும் அவர்களுக்கென்று கோட் சூட் என்று ஒரு ட்ரெஸ் கோட் உண்டு.

ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதற்கும் இந்த மார்டன் உடை கலாச்சாரம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை விடக் கேலிக்கூத்து எதுவுமே கிடையாது. ஏனெனில் இது போல பலவிதமான மார்டன் உடை அணிந்த பெண்களும் உள்ளுடை அணியாமல் டாப்ஸ் அணிந்து காரில் வரும் எல்லாப் பெண்களும் பாலியல் பலாத்காரத்துக்கோ, வன்கொடுமைக்கோ ஆளாவதில்லை.

கிராமப்புறங்களிலும் புற நகர்களிலும் கல்விக்காக, வேலைக்காக சென்றுவரும் எளிய பெண்களே பெரும்பாலும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். வட நாட்டிலே பெரும்பாலும் அணியப்பட்ட சுடிதார், குர்த்தா, பைஜாமா, போன்ற உடைகள் உடனடியாக அணியும் வசதிக்காகவே பெரும்பாலான பெண்களை வசீகரித்தது. அதையும் தாண்டி வீட்டில் அணியும் நைட்டி போன்ற உடைகளும் முழு உடம்பையும் மறைக்கக்கூடியது.

புடவை என்றாலும் தாவணி என்றாலும் சல்வார் என்றாலும் மார்டன் உடைகள் என்றாலும் அதை அணிபவர் அணியும் விதம் பொறுத்தும் பார்ப்பவர் கண்ணோட்டம்  பொறுத்தும் மாறுபாடு அடையும் தன்மை உண்டு. எந்த உடையிலும் கண்ணியமாகத் தோற்றமளிக்கும் பெண்களும் உண்டு.

ஆணாதிக்க மனோபாவமும் பெண்களை மட்டுறுத்தலும் இந்த உடை  அரசியலில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தும். அதை சமூகம் இப்படி அணிய வேண்டும் அப்படி அணிய வேண்டும் என்று பணிய வைக்க முயல்கிறது. பல்வேறு கல்லூரிகளில் கூட புடவை என்பது கட்டாயமாக உள்ளது.

பொதுவாக சொல்லப்போனால் உடை என்பது பருவ காலத்துக்கும் நாட்டுக்கும் ஏற்றபடி பெண்கள் தங்கள் மனோ நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப அணிவது. உடம்பை மறைக்கவே உடை . அதை அணிபவர் எந்த உடையிலும் செக்ஸியாகத் தோன்றலாம். எந்த வகையிலாவது பெண்ணை இழிவுபடுத்த அவர்கள் அணியும் உடை ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

மிக நுணுக்கமாகக் கவனித்துப் பார்த்தால் பாரம்பரிய உடைகள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன. சென்ற மாதங்களில் வடநாடு சுற்றுலா சென்றிருந்தபோது ஒன்றைக் கவனித்தேன். தமிழக கிராமங்களில் வயல் வேலை செய்யும் வயதான மக்கள் மட்டுமே வேஷ்டி அணிவது போல வட இந்திய கிராமங்களிலும் பஞ்ச கஞ்ச ஸ்டைலில் குஜராத் போர்பந்தர் சோம்நாத், வெராவல், துவாரகா,   ஆகிய இடங்களில் வேஷ்டி கட்டி இருந்தார்கள். மும்பையில் சில பெண்கள் மராட்டி ஸ்டைலில் புடவை கட்டி இருந்தார்கள். குஜராத் பெண்கள் மார்வாரி ஸ்டைலில் கட்டி தலையில் முக்காடிட்டு இருந்தார்கள்.எல்லாருமே திருமணமான மத்திய வயதும் அதற்கு மேலும் ஆன  ஆண்களும் பெண்களும்தான். இளவயதினர் எல்லாருமே சுடிதார் மற்றும் பேண்ட் டாப்ஸ்தான்.

தமிழகத்திலும் கோயில் திருவிழாக்கள், திருமணம்,போன்ற விசேஷங்களிலும் வைபவங்களிலும் புடவை அணியும் பெண்கள் அலுவலகத்துக்குச் செல்ல சுடிதார் போன்ற ஈஸிவேர் உடைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
பெண் பணம் சம்பாதிக்கும் மிஷினாக வேலைக்குச் செல்லலாம். ஆனால் விரும்பியதை அணியக்கூடாது. என்றால் கொத்தடிமைக் கொடுமைக்கும் இதற்கும் என்ன வித்யாசம். பெண் முதலில் ஒரு மனித உயிர் சக உயிர். அவர்களை அவர்களின் எண்ணங்களை விருப்பங்களை மதிக்கக் கற்க வேண்டும்.

எனவே உடைதான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குக் காரணம் என்றால் அந்த உடையை பெண்ணின் ஒரு அங்கமாக ஒரு குணமாக உருவாக்கிய கீழ்மை ஒரு கட்டுப்பெட்டி சமுதாயத்தின்  அடையாளமாகும். பள்ளிக்கூடப் பெண்கள் கூடப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் ஒரு நாட்டில் ஆண்மக்கள் ஒழுக்க போதனைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்படவில்லை என்று அர்த்தம். எந்த சமூகம் தன் பிரஜைகளை எந்த ஒழுக்கக் கோட்பாடுகளும் இன்றி பாரபட்சமாக ஆணுக்கு ஒரு சலுகையும் பெண்ணுக்கு ஒரு கீழ்மையும் வழங்குகிறதோ அது மிகப்பெரும் அழிவையே சந்திக்கும்.

பெண்ணியம் பேசும் பெண்கள் தங்கள் உடை பற்றி அதன் உரிமை பற்றிப் பேசினால் அவர்கள் ஏழைகள் பற்றியும் உடை உணவு அற்றவர்கள் பற்றியும் பேசுவதில்லை எனவே அவர்கள் மார்க்சிய சித்தாந்தத்தைப் பேசாத பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். உடையை ஒட்டியே ஒருவரின் கற்பும் இன்னபிறவும் மதிக்கப்படுகின்றன.மதங்களின் பெயரால் மனிதர்கள் பெண் உடைகளை வரையறுக்கிறார்கள். 

பெண் எதை அணிய வேண்டும் எதை அணியக்கூடாது என்பதை நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. அடுத்தவர் கவனத்தைக் கவரும் உடைகள் அணியக் கூடாது. ஆபாசம் என்பதை எதைக்கொண்டு நிர்ணயிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒரு முறை டாப்ஸ் & ஜீன்ஸ் அணிந்து லயோலா கல்லூரிக்கு லீனா மணிமேகலை பேசச் சென்றபோது அந்த ட்ரெஸ் கோட் தங்கள் கல்லூரியில் பேசுவதற்கு ஏற்றதல்ல என்று கல்லூரி முதல்வரால் தடுக்கப்பட்டதாக செய்தி  பத்ரிக்கைகளில் வந்தது.

இவ்வளவெல்லாம் பேசும் ஆண் சமூகம் பெண்ணை ஒரு விளம்பர உயிரியாக விற்பனை அதிகரிக்கும் உயிரியாகக் கருதி அதில் மட்டும் அரைகுறை ஆடையோடு தோன்றவைப்பது மட்டும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் பெண்களை அரை குறை ஆடையோடு தோன்றவைத்து ரசிப்பது பற்றிய குற்றவுணர்ச்சி மட்டும் ஏற்படுவதேயில்லை.

அழகிப்போட்டிகள் நடத்தி அதில் அரை குறை ஆடையோடு பெண்ணை உலவவிட்டு ரசிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்கவே சதுரங்க ராணிகளாகக் கீழை நாட்டுப் பெண்களையும் பிரபஞ்சப் பேரழகிகளாக அறிவிக்கின்றன. பெண்கள் என்றாலே பொருட்கள். அவற்றின்  விற்பனைக்கான தூண்டில்கள் என்ற மனோபாவம்தான் காரணம்.

அர்ச்சனா நடித்த ஒரு படத்தில் அவர் ஒரு சிற்றரசில் அரசியின் ( தெலுகு அல்லது கன்னடப் படம் -- தேசியமொழிப் படம் ) அந்தப்புரப் பணிப்பெண்ணாக இருப்பார். அப்போது அவர் மீது அந்த சிற்றரசனும் அங்கே வரும் விருந்தினர்களும் கூட அவருடன் உறவு கொள்வார்கள். போன நூற்றாண்டுகளில் தேவதாசிகள் எனவும் பணிப்பெண்கள் எனவும் அந்தப்புரப் பெண்கள் எனவும் நிகழ்த்தப்பட்டுள்ளது இக்கொடுமை.

காதலனுடன் சென்ற பெண்கள் கற்பழிக்கப்படுவதும் மும்பை பீச்சில் நண்பர்களுடன் சென்று புத்தாண்டின் இரவில் தனியே அகப்பட்ட இருபெண்கள் அங்கே இருந்த ஆண்களால் முறைகேடாகக் கையாளப்பட்டதும், உத்தர் ப்ரதேசத்தில் நான்கு பெண்கள் கற்பழித்து மரத்தில் தூக்கிலிடப்பட்டதும் உடையினால் அல்ல.

கோவாவில் பெண்கள் பிகினிக்கு மேல் மேலுடை அணிய வேண்டும் என்றும் அதனால் கற்பழிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார் கோவா அமைச்சர் தாவேலிகர். அங்கே வருபவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு டூரிஸ்டுகள்தான். அவர்களின் நாட்டில் பீச்சில் இப்படி உலவுவது பழக்கமாக இருக்கலாம். இந்த மாதிரி இடங்களில் கட்டுக்காவலை அதிகப்படுத்த வேண்டும்.

பெண்ணின் உடலைத் தனக்கானதாக்கிக்கொள்கிற, தனக்குக் கீழ்மைப்படுத்துகிற.. ஆதிக்கமனோபாவமும் கொடுங்கோல் தன்மையும் கொண்ட மனிதர்கள் அதிகரித்து வருகிறார்கள். உடலை அடையும் அரசியலுக்காக உடையைக் காரணம் காட்டுகிறார்கள்.  வெறும் உடலாகக் கருதப்படும் உடமையாகக் கருதப்படும் நிலையைப் பெண்கள் வெறுக்கிறார்கள்.

நிலவறையில் பெண்ணைப் போட்டு மறைத்த மாதிரித் தற்காலத்தில் எந்த அறையிலும் அடைத்துக் கட்டுப்படுத்த முடியாது. எனவே உடையை ஒரு காரணமாகக் கற்பிக்கிறார்கள். பெண் படிக்க வேண்டும். வேலைக்குச் செல்லவேண்டும். குடும்பப் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும். இன்னும் காவல், ராணுவம் போன்ற துறைகளிலும் பணிபுரியலாம். ஆனாலும் பெண்ணுக்கான உடைகளை நாங்கள்தான் நிர்ணயிப்போம் அதன்படிதா அணிய வேண்டும் என்பது இன்னும் நிலவுடமைச் சமூகமே நம்மை ஆட்சி செய்வதைக் காட்டுகிறது.இந்த உடல் அரசியலில் இருந்தும் உடை அரசியலில் இருந்தும் பெண்கள் விடுபடும் கணமே அவர்களின் மெய்யான விடுதலையாகும்.

பிற்போக்குப் பழமைவாதிகள் நிறைந்த நாடுகளில் கூட வெளிநாட்டுப் பெண்கள் பயணிகளாக அரை ட்ரவுசரும் கையில்லாத மேலாடையும் அணிந்து செல்வதைக் கண்டனம் செய்வதில்லை. நாட்டின் வருமானம் அதை விட முக்கியமானதாயிற்றே.

பெண்ணை உடைமையாகக் கருதும் ஒரு சமூகம் பெண்ணை சக மனித உயிராக மதித்தாலே இந்தப் பிரச்சனைகளில் இருந்து ஆணும் பெண்ணும் விடுபட்டு நிம்மதியாக வாழலாம். அதற்கு அடுத்த தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதலின் மூலம் பெண்ணும் ஆணும் சரிசமம். என உணரவைத்தலே இதற்குத் தீர்வாகும்.

டிஸ்கி :- இந்தக்கட்டுரை 2014, புரட்டாசி மாத மெல்லினத்தில் வெளிவந்தது. 


8 கருத்துகள்:

  1. நிறை + குறைகளையும் சரியாக சொல்லி உள்ளீர்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. //பெண்ணை உடைமையாகக் கருதும் ஒரு சமூகம் பெண்ணை சக மனித உயிராக மதித்தாலே இந்தப் பிரச்சனைகளில் இருந்து ஆணும் பெண்ணும் விடுபட்டு நிம்மதியாக வாழலாம்//

    அருமைய்யா இருக்கு அக்கா. பெண்ணுக்கு மட்டுமே சட்டதிட்டங்கள் போடுவட்ஜால் குற்றங்கள் தீரவே தீராது!!

    பதிலளிநீக்கு
  3. 'உடை அரசியலும் உடல் அரசியலும்' என்ற தலைப்பினில் வல்லினம், இடையினம், மெல்லினம் ஆகிய அனைத்தையும் சப்ஜாடாக தலையோடு கால் புட்டுப்புட்டுக்கொடுத்துள்ள தங்களின் இந்த அருமையான கட்டுரை ‘மெல்லினம்’ இதழில் வெளிவந்துள்ளதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

    பத்திரிகையால் காட்டப்பட்டுள்ள படங்கள் அனைத்துமே அழகாக உள்ளன. வெளியிட்டு சிறப்பித்துள்ளோருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை அக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் பதிவு அக்கா ..உடை விஷயத்தில் பார்வையை மாற்றினால் போதும் ..

    பதிலளிநீக்கு
  6. பெணகள் உடை பற்றின பதிவு மிக அருமை தேனக்கா.

    பதிலளிநீக்கு
  7. நன்றி தனபாலன் சகோ

    நன்றி ஹுசைனம்மா

    நன்றி கோபால் சார்

    நன்றி குமார் சகோ

    நன்றி ஏஞ்சல்

    நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...