எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-

டிஸ்கவரி சானலின் ட்ராவல் அண்ட் லிவிங் சேனலில் நான் முன்பு இவரின் சமையல் நிகழ்ச்சியைத் தவறவிட்டதேயில்லை.. “நைஜெல்லாஸ் ஃபீஸ்ட். “ மிக அழகாக சமைத்து மிக அழகாக டிஸ்ப்ளே செய்வார். போற போக்கில் சமைப்பது போல் இருக்கும். முட்டையை உடைப்பதானாலும் சரி, பச்சை எலுமிச்சங்காயின் தோலைத் துருவி சமையலில் சேர்த்து ரொம்ப ஃப்ளேவரா இருக்கு என்று சொல்லும்போதும் சரி,  சாக்லேட் ஃபட்ஜை செய்து சுவைத்து மயங்குவதிலும் சரி, இமைக்காமல் அவர் செய்வதையே பார்த்து அவர் சமையலிலும் அழகிலும் பேச்சிலும் அசந்திருக்கிறேன்.


53 வயதான இவர் பிரபல டிவி குக் மற்றும்  சமையல் குறிப்பு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவரின் மதிப்பு $ 23 மில்லியன் டாலர். எவ்வளவு பிரபலமான பெண் ஆனால் என்ன. எவ்வளவு அழகு, திறமை இருந்தாலென்ன. இவரின் கணவர்  அட்வர்டைசிங் குரு என்றழைக்கப்படும்  சார்லஸ் சாட்சி சில நாட்களுக்கு முன்  ஏதோ ஒரு சச்சரவில்  இவரின் கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார்.  கேட்கவே அதிர்ச்சியாய் இருந்தது.

பெண்களுக்கு நிகழ்த்தப்படும் மொத்தக் கொடுமைகளும் சமூகத்தினால், வெளியுலகத்தினால் மட்டுமே என நாம் நினைத்துக் கொண்டிருக்க  அதில் மூன்றில் ஒரு பங்கு அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்த்தப்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

பெண்கள் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் திறமையாளராய் இருந்தாலும் ஆண் சார்ந்த சமூகம் என்பதே உலகளாவியதாய் இருக்கிறது. ஆண் நிர்ணயிக்கும் கோட்டைத் தாண்டி பெண் செயல்பட முனைந்தால் சேற்றை அள்ளி வீசவும்., வார்த்தைகளால் காயப்படுத்தவும்,  எல்லைமீறி அடிப்பதும் துன்புறுத்துவதும் நிகழ்கிறது. படித்தவர் படிக்காதவர் என்பதெல்லாம் மீறி எல்லாக் குடும்பங்களிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா தேசங்களிலும் இது நிகழ்கிறது.

ஆணின் விலா எலும்பினால் உருவாக்கப்பட்டவள் பெண் எனவே அவள் விலாவை நொறுக்கலாம் என்பதே சித்தாந்தமாக ஆண் என்னும் ஆதிக்கக்காரர்கள் கருதுவதாகத் தோன்றுகிறது. இன்றும் பெண்களை ஊக்குவித்து அவள் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் குடும்பத்தார், கணவர் ஏதேனும் சில காரணங்களால், சில விஷயங்களில் பெண்ணின் எழுச்சியையோ, முன்னேற்றத்தையோ கட்டுப்படுத்துவதைக் காணலாம். அலுவலகமானாலும் சரி, அங்கே மேலே இருக்கும் அல்லது கீழே பணிபுரியும் அலுவலரானாலும் சரி எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பெண்தானே என்ற மனோபாவத்துடன் பேசுவதை சிந்திப்பதைக் காணலாம்.


வரதட்சணை பிரச்சனை, வேலைக்குச் செல்லுதல் மட்டுமில்லாமல் நிறைய கருத்து வேறுபாடுகளோடு ஏற்படும் பிரச்சனைகள்தான் அதிகம். ஆண் இன்னும் மனைவி என்னும் பெண்ணைக் கொத்தடிமையாகக் கருதுவதால் நிகழ்த்தும் கொடுமைகள் அநேகம். அடித்தல், உதைத்தல், வார்த்தைகளால் சாடுதல், அடிப்படை உரிமைகளை மறுத்தல், சக ஜீவியாக நடத்தாமல் இருத்தல், தனக்கு வேலை செய்யும் கருவியாக மட்டுமே பயன்படுத்துதல், மதம் மற்றும் சாதிக் கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி ஒடுக்குதல், கல்வி மற்றும் வேலைக்குச் செல்லுதலையும் வெளி உலகத் தொடர்பையும் துண்டித்தல் ஆகியன நிகழ்கின்றன.

இதோடு பெண் குழந்தைகள் பெற்றால் அதற்காக குடும்பத்தாரின் அதிருப்தியான நடவடிக்கைகளை எதிர் கொள்ளுதல், வேலைக்குச் சென்று வந்தாலும் முழுப் பணத்தையும் குடும்பத்தாரிடம் வழங்கிவிட்டு தன் செலவுகளுக்கு அவர்களின் கையை எதிர்பார்த்திருத்தல், எந்த ஒரு முக்கிய முடிவுகளிலும் கருத்து வழங்கும் சுதந்திரமின்மை, சேமிப்பு ஏதுமில்லாமல் குடித்துவிட்டு அடிக்கும் கணவர்கள், கணவரின் வருமானம் போதாமல் குடும்பப் பொருளாதாரச் சிக்கல்கள், எதிர்த்துக் கேட்டாலோ , வேலைக்குச் சென்றாலோ அதனால் வரும் இடப்பாடுகளைச் சமாளித்தல்  எனப் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குடும்பத்தில்தான் அநேகம்.

கர்நாடகாவில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில்  பதிவாகும் வழக்கு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களின் குடும்பம் அவர்களுக்கு நிகழ்த்தும் வன்முறை சார்ந்த வழக்குகளாகவே இருக்கின்றன. 2008 இல் பெண்களுக்கு எதிரான 7, 968 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 2, 638 வழக்குகள் அவரின் கணவர் மற்றும் குடும்பத்தாரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை காரணமாகப் பதியப்பட்டுள்ளன. இது 34.26 சதவிகிதமாகும். இதே 2012 இல் 10,879 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 3,688 வழக்குகள் குடும்ப வன்முறை வழக்குகள். இது 34.18 சதவிகிதம் ஆகும். பார்த்தால் பொதுவாக பெண்களுக்கான குற்றத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குடும்ப வன்முறை பர்சண்டேஜ் விகிதத்தில் சமமாகவே உள்ளது. 

தன் அலுவலகத்தில் மிகப்பெரும் பதவியில் சிறப்பாக புத்திசாலித்தனத்தோடு ஜொலிக்கும் ஒரு பெண் தன் கணவரைப் பற்றியோ குடும்பத்தாரைப் பற்றியோ  வெளியுலகில் சொல்லிவிட்டால் அவர்களுக்கான சமூக மதிப்பீடுகள் மாறிவிடுமே என்று சொல்லாமல் விட்ட , பதியாமல் விட்ட வழக்குகள்  அநேகம். மேலும் அவர்கள் போலிசாரிடம் புகார் கொடுக்காமல் மூன்றாம் நபர் மூலம் ( குடும்ப நண்பர்கள்/ நம்பிக்கையான உறவினர்கள் மூலம் )  தீர்த்துக் கொள்ளவே விழைகின்றனர்  என்கிறார் விமோசனா என்ற பெண்கள் உரிமைக்கான அமைப்பின் தலைவியான டோனா ஃபெர்னாண்டஸ். இதனால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமல்ல . நிஜமான பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் வழக்குகளின் சதவிகிதமும்  இன்னும் அதிகம் இருக்கக்கூடும் என்கிறார்.

பெண்கள் பதிவு செய்யாமல் விடுவதால் அவர்களுக்கெதிரான வன்முறையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் தாங்களாகவே ஈடுபட்டு செயலாற்ற இயலாது என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. கண் எதிரே தெரிந்தாலும் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுங்கள், புகார் அளியுங்கள் என வலியுறுத்த முடியாது என்கிறார்.

கணவரைப் பற்றியோ தன் குடும்பத்தாரைப் பற்றியோ ஒரு பெண் குற்றம் குறை கூறுவதையோ, பிரிந்து வந்து வாழ்வதையோ பெண்ணைப் பெற்றவர்களும் அவரின் தாய் வீட்டு உறவினர்களுமே விரும்புவதில்லை. மாமியார் வீடு என்றால் அப்படித்தன் இருக்கும். கணவர் என்பவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும். அதுவே பெண்களுக்கானது என எண்ணுகின்றனர். சமூகத்தின் , குடும்பத்தினரின் கண்ணோட்டம் மாற வேண்டும் என்கிறார் என் ஜி ஓ என்ஃபீல்ட் ட்ரஸ்டின் அங்கத்தினர் டாக்டர் ஷைபியா சல்தான்ஹா .

தவறான , பொருந்தாத , மனப் பொருத்தமில்லாத திருமணங்களை விட்டுப் பெண்கள் வெளியேறுவதில்லை., சில காரணங்களால். ஏனெனில் வன்முறை நிகழ்வுகளால் அவர்கள் மனம் பலவீனமடைந்து விடுகிறது.  சரியோ தப்போ, நல்லதோ கெட்டதோ அம்மா அப்பா ஏற்படுத்தித் தந்த உறவை விட்டு வெளியேற அச்சம். உறவிலிருந்து வெளியேறி தனியே வாழ்வதற்குப் பயம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எவ்வளவு வன்முறையைச் சந்தித்தாலும் கணவரோடு அவரின் குடும்பத்தோடு இருப்பதுதான் பெருமை என்றெண்ணுவது. கணவர் ஒன்றே தன்னுடைய பாதுகாப்பு எனக் கருதுவது. சில சமயங்களில்  கணவரின் அதீதமான பொறாமை உணர்வை, வன்முறையைக் காதலென்று தவறாகக் கணித்துக் கொள்வது. இதை விட்டு வெளியே சென்றால் என்ன நிகழுமோ என்ற அச்சத்தில் செயல்படாமலிருப்பது, வெளியே சென்றால் தன்னைப் பற்றிய பிம்பம் உடைந்துவிடும், தன்னுடைய பெருஞ்சக்தி அழிந்துவிடும் என்றெண்ணிக் கொள்வது, இதனால் ஒரு பெண் தனக்கு நிகழும் வன்முறையை எந்த அதீதமானாலும் தாங்கிக் கொள்வது. அடக்கியாளும் தந்தையைப் பெற்ற ஒரு பெண் தன் கணவரும் அவ்வாறே இருப்பதில் தவறில்லை எனக் கருதுவது இதெல்லாம் சில காரணங்கள்.

உலகளாவிய வன்முறை வழக்குகளில் சில பதிவாகின்றன. சில சோஷியல் , குடும்ப ஸ்டேடஸ்கள் கருதி செய்தியாகி மறைந்து விடுகின்றன தீர்வு இல்லாமலே. பெண் வாழும்வரை இரட்டை முகங்களோடு வெளியுலகில் ராணியாகவும் வீடுகளில் அடிமைப் பெண்ணாகவும் வாழ நேரிடுகிறது. இதற்கு மனிதர்களின் மனோபாவம் மாற வேண்டும். பெண் சாதிப்பதற்கான சூழல்களைக் குடும்பங்கள் ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பற்ற மோசமான வெளியுலத்தை விட மோசமான உள்குடும்பச் சூழல் மாறவேண்டும். எவ்வளவுதான் சாதித்தாலும் பெண்களுக்குக் குடும்பம் தரும் பாதுகாப்பும் நிம்மதியும் முக்கியம்.

3 கருத்துகள்:

  1. நீங்க ஒரு பெண் என்பதாலேயே பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சொல்லி புலம்புகிறீர்கள் .இன்று நிலைமை நிறைய மாறியுள்ளது ஆணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மிரட்டல்களை சுலபமாக மறந்து விடுகிறீர்கள் இல்லை மறைத்து விடுகிறீர்கள். குடும்ப கௌரவம் கருதியும் மீடியாக்களில் அவமானப்பட நேரிடுமென்று எத்தனை ஆண்கள் கணவர்கள் பெற்றோர்கள் ரத்தக் கண்ணீர் விடுகிரார்கலேன்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் பெண்ணும் பெண்ணை பெற்றவர்களும்,மருமகனின் எச்சில் சோற்றை திங்க எத்தனை நாய்கள் அலைகின்றன ? அதற்காக பெண்ணின் மூலம் நிர்பந்திக்க காய் நகர்த்தப்படுகின்றன இதை ஏன் ஊடகங்களோ உங்களை போன்ற எழுத்தாளர்களோ கண்டு கொள்வதில்லை ? வக்கீல்களிடம் கேட்டு பாருங்கள் 80% வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என்று தெரியும் .உண்மை நிலவரத்தை யாரும் வெளிக்கொண்டு வருவதில்லை என்பது நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  2. இருபக்கமும் தவறு இருக்கலாம் மின்னல் நாகராஜ். இது பெண்மொழிக் கட்டுரை என்பதால் பெண்கள் பக்கத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். விதிவிலக்கான பெண்கள் இருக்கலாம். நன்கு தெரிந்த பிறகு அவர்கள் பற்றியும் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...