திங்கள், 23 செப்டம்பர், 2013

இருமனங்களும் திருமணங்களும்..:-

இருமனங்களும் திருமணங்களும்..:-


”காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் வாழ்வில் கசக்குமா..இல்லை இனிக்குமா..”  என்று பாடினார்கள் அன்று.. ஆனால் இன்று “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா.. இல்ல ஓடிப் போயிக் கல்யாணந்தான் கட்டிக்கிடலாமா. “ என்று பாடுகிறார்கள். அப்படி ஓடிப் போவது போல திருமண பந்தத்தையும் பாதியிலேயே விட்டு விட்டு ஓடிப் போய்விடுகிறார்கள்.


இருமனங்கள் இணையும் திருமணங்கள்   சஷ்டியப்த பூர்த்தியாக, சதாபிஷேமாக , கனகாபிஷேகமாக இணைந்து கொண்டாடப்படுவதற்கு அடிநாதமாக அச்சாணியாக ஆணிவேராக இருப்பது இடைவிடாத பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் அன்பும் காதலும்தான்.

இன்று என்ன நடக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இருவருக்கும் பரபரப்பான வாழ்க்கை முறை. இருவரும் இணைந்து உதவிக் கொண்டால்தான் அந்தத் திருமண வாழ்வு இனிமை நிறைந்ததாய் இருக்கிறது. இல்லையென்றால் அல்லும் பகலும் சண்டை சச்சரவு, மனஸ்தாபம்தான்.

காதல் கடிமணமாயினும் சரி, கலப்புத் திருமணமாயினும் சரி , பெற்றோர் அமைத்துவைத்த அரேஞ்ச்டு மேரேஜானாலும் சரி. வரன் வதுவை இருவரும் விட்டுக் கொடுத்து வாழப் பழகினால்தான் அது வாழ்க்கை.. இல்லையென்றால் அது வாழாவெட்டி வாழ்க்கைதான். காதலிக்கும்போது இனிப்பாகத் தெரிவது கல்யாணத்தின் பின் கசந்துவிடுவது எதனால் என்றால் பொறுப்புக்களின் சுமையால்தான்.

சுதந்திரப் பறவைகளாய் இருந்த இருவரும் அதன் பின் ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட்டவராக ஆகின்றனர். பொருளாதாரம், உறவினர்களோடு வாழ்தல், சுதந்திரச் செயல்பாடுகள் ஆகியவற்றில்  கட்டுப்பாடுகள் ஏற்பட்டால் உடனே  உரசல் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் ஆண் தன் வழியிலேயே வாழ முடிகிறது. பெண்கள்தான் சில பல விதங்களில் விட்டுக் கொடுத்துப் போக நேருகிறது. ஆனால் இன்றைய நிலைமையில் பெண்கள் இதை எல்லாம்  தூக்கிச் சுமக்க விரும்புவதில்லை. அவர்களும் தங்கள் சுதந்திரத்துக்குக் கேடுவிளையாத வகையிலேயே வாழ விரும்புகின்றார்கள்.  தன் முனைப்பு, தன் நலம் பேணத் துவங்கி விட்டார்கள். இது தொடர்ந்து தன்னைப் பேணித் தனத்தை வளர்க்கிறது.

வேலைக்குச் செல்லும் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்ய இன்றைய பெற்றோர்  அதிகம் யோசிக்கின்றார்கள். ஏனெனில் அந்தக்காலம் போல சொன்ன மாப்பிள்ளையிடத்தில் கழுத்தை நீட்டப் பெண்கள் தயாராக இல்லை. அவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். தங்களுக்குத் தேவையானதை அந்தக் காலம்போல கணவன் கையை எதிர்பார்க்காமல் தாங்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். எனவே கணவன் வருமானத்தை  எதிர்பார்த்து  அவனுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் கட்டுப்பெட்டித்தனம் எல்லாம்  கடந்தாகி விட்டது.

இது ஆரோக்கியமான மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் சில பெண்களிடத்தில் வீண் அகம்பாவத்தையும் கொண்டுவந்துள்ளது. எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் சமுதாய வானொலிக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தபோது அதில் பாடலாசிரியர் பத்மாவதி இணையங்களில் பெண்களின் நடவடிக்கைகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் கண்ணோட்டங்கள், மனோபாவங்கள் பற்றிப் பகிர்ந்தார். 

“வீட்டில் யாருமில்லாத போது அவனுக்கு நாந்தான்  காஃபி போட்டுத் தரணும்கிறான். என்னை அடக்கியாளப் பாக்கிறான். ஏன் அவன் போட்டுக்க மாட்டானா, எனக்குப் பிடிக்கலை. எனவே திருமணம் வேண்டாம்  என  நிச்சயித்த திருமணத்தை மறுதலித்தாராம்” ஒரு பெண்.

மாப்பிள்ளை சொன்னபடி வருமானம் இல்லை . அவரோட ஆஃபீசிலேயே போய் சம்பள சர்டிஃபிகேட்டை வாங்கிப் பார்த்தோம். வெப்சைட்ல போட்டதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை ( சிறிதுதான் வித்யாசம் ) எனப் பெண்ணைப் பெற்றவர்களே  திருமணத்தை நிறுத்துகிறார்கள்.

சில இடங்களில் பெண்ணும் ஆணும் ஓவராகப் பேசிப் புரிந்துகொள்கிறேன் பேர்வழி என்று கெடுத்துக் கொள்கிறார்கள். அதன் பின் அந்தத் தாக்கல் முறிந்ததும் அப்பாடா தப்பினேன் எனப் பெருமூச்சு விடுகிறார்கள். இதற்காக கட்டிக் கொண்டு அவதிப்படவேண்டும் எனச் சொல்லவில்லை.  பேச வேண்டியதைப் பேசினால் போதும். சொல்ல வேண்டியதைச் சொன்னால் போதும் என்பதைக் கடைப்பிடித்தால் என்றுமே எங்குமே வம்பேயில்லை.

பெற்றோர் தங்கள் மகளின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப மணமகனைத் தேர்ந்தெடுக்கும்படி புரோக்கர்களிடம் சொல்வதாகவும். அவளின் மூட் பார்த்து மனம் கோணாமல் புரோக்கர் தானாகவே திருமண விஷயங்களைச் சொல்லி மாப்பிள்ளை விபரத்தைப் பெண்ணிடம் சொல்லி சம்மதம் வாங்கச் சொல்வதாகச் சொன்னார். பெற்றோரே பெண்ணின் திருமணம் பற்றிப் பெண்ணிடம் பேச அஞ்சுகின்றனர். அந்த அளவில் இருக்கிறது சம்பாதிக்கும் பெண்களின் முன்னேற்றம். !

திருமணம் முடிவானதும் மாப்பிள்ளையும் பெண்ணும் ஓயாமல் தொலைத் தொடர்புச் சாதனங்கள் வழி ( கைபேசி, இணையம், முகநூல், ட்விட்டர் ) ஆகியவற்றில் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றனர். ஒருவரின் நட்பு வட்டம், உணவு, பிடித்த திரைப்படம், சீர் , செனத்தி, இப்படிப் போகும் உரையாடல் சிலசமயம் எல்லை கடந்து பாலியல் விருப்பப் பகிர்வாகவும் ஆகிறது. அந்த சமயத்தில் இதனால் அதிர்ச்சியுறும் ஆண் அல்லது பெண் இந்த விழைவுகளை விரும்பாமல் திருமணத்தை நிறுத்திய சம்பவங்களும் நிகழ்துள்ளது.  சில சமயங்களில் இது சீர், செனத்தி அல்லது ஆண் அல்லது பெண்ணின் வருமானத்தைத் திருமணத்துக்குப் பின் எப்படி செலவழிப்பது , யார் யாரிடம்கொடுப்பது என்பதெல்லாம் பேசி வீண் பிரச்சனை உண்டாகி நின்று போகிறது.

ஆண் சிவப்பான அழகான தன்னைக் கவனித்துக் கொள்ளும் சம்பாதிக்கும் பெண் மனைவியாக வரவேண்டும் என விரும்புவது போல பெண்களும் தங்கள் விருப்பப்படி உயரமாகவோ, கருப்பாகவோ, சிவப்பாகவோ, மீசையுடனோ அல்லது மார்டர்னாக உடையணிந்தோ உள்ள ஆண்மகன் பார்வைக்கு மட்டுமல்லாமல் பழகவும் பிடித்து இருந்து அவரின் வருமானம்  , தொந்தரவு இல்லாத உறவினர்கள், இன்னபிற பிடித்திருந்தால் மட்டுமே மணம் செய்ய இசைகின்றனர்.

கூட்டுக் குடும்ப முறை ஒழிந்து பல வருடங்களாகி விட்டது. பெரும்பாலான சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் வெளிநாட்டில் தனியாக வசிக்கின்றார்கள். அந்த மாப்பிள்ளைகளை மணக்கும் பெண்கள் தனியாகத்தான் வசிக்கின்றார்கள். ஏனெனில் அங்கே சென்ற பின் பெண்ணும் வேலைக்குச் செல்வதால் இருவரும் ( இங்கேயும் சாஃப்ட்வேரில் பணிபுரியும் ஆண் பெண் இருவருக்கும் ஷிஃப்ட் இருந்தால் நேர மாறுபாடு உண்டு .) தனித்தனியாகக் கிளம்பி அலுவலகம் சென்று ஒருவர் இல்லாத நேரம் இன்னொருவர் வீடு திரும்பி தனித்தனியாக சமைத்து பிரிட்ஜ் டோரில்  மெஜேஜ் ஒட்டி வைத்துவிட்டுச் செல்கின்றனர். வீக் எண்ட் எனப்படும் வார விடுமுறை நாளில் சந்திக்க நேர்ந்தால் எதேஷ்டம்.

இதேதான் இந்தியாவிலும் இப்போது பெருகி வருகிறது. மைக்ரோ குடும்பங்கள் பெருகிவிட்டன. அதில் கூட சில சமயம், பொருளாதாரம், பாலியல் விழைவுகள் அல்லது பாலியல் துன்புறுத்தல், பொறுப்புக்கள், சுதந்திரம் மறுக்கப்படுதல் போன்றவையால் விவாகரத்துக்கள் பெருகி வருகின்றன.

யாருக்கும் யாருடனும் இருக்கவோ பேசவோ கேட்கவோ பொறுமையேயில்லை. முதலில் யாருக்கும் நேரமே இல்லை . வாழ்வைத் தொலைத்துவிட்டு அதைச் செப்பனிட நேரம் கிடைக்காமல் வேலை வேலை என்றோ, வெளிவட்டார நட்பு என்றோ அலைகிறார்கள்.

 திருமணத்துக்கு முந்திய காதல், அல்லது திருமணத்துக்குப் பின்னும் தொடரும் காதல் விவகாரங்கள் நெருக்கடிகளை உண்டுபண்ணுகின்றன. சில சமயம் பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு வெகுளும் , மிரளும் கணவன் பெண்ணை அடக்கியாளும் ஆணாதிக்க மனப்பான்மையோடு செயல்படுதலும் இந்தப் பிரிவை அடர்த்தியாக்குகின்றன.

நம் பாட்டன், பாட்டி, பூட்டன் , பூட்டி காலத்திலெல்லாம் பெண் பார்த்தலென்பதெ கிடையாது. திருமணத்தன்றுதான் ஒருவரை ஒருவர் அரையும் குறையுமாக வெட்கத்தோடு பார்த்துக் கொள்வார்கள். அவர்கள்   60, 70, 80, 100 என இணைந்து மண நாளையும் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் குடும்பத்திலேயே வளர்ந்து வரும் இளைய தலைமுறையினர் சிலர்  திருமணமாகி சில ஆண்டுகளிலேயே விவாகரத்து வாங்கித் தனித்திருப்பார்கள்.

கணவனின் குடிப்பழக்கம் அல்லது வேண்டாத பழங்கங்கள் இதற்கு ஒரு காரணமாக இருக்கவும் கூடும். சில இடங்களில் பெண்களின் விருப்பங்கள் வேறாக இருக்கவும் கூடும். மேம்பட்ட சிந்தனைகளோடு இருக்கக்கூடிய பெண்ணுக்கு ஆணின் இந்தப் பழக்கங்கள் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆணின் வேறு பெண்ணுக்கான எழுச்சி மற்றும் விருப்பங்கள் மணவாழ்க்கையில் புயலாக அடித்துக் குழப்பங்களை உண்டுபண்ணிவிடலாம்.

ஆணின் ஆண்மையற்றதன்மை சில விஷயங்களில் விவாகரத்துக்கு அடிகோலுகிறது. குழந்தைப் பேறும் இல்லாமல் குடும்பத்தில் பற்றோ அக்கறையோ இல்லாமல் சதா சந்தேகப்படும், துன்புறுத்தும் துணையைப் பெண்கள் சகித்துக் கொள்வதேயில்லை. அதே சமயம் குழந்தையில்லாவிட்டாலும், ஆண்மையில்லாவிட்டாலும் சரியான புரிந்துணர்வோடு இருக்கும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஊடலோ கூடலோ இருக்கலாம். அது நாலு சுவர்களுக்குள் இருக்கும் வரை யார் கண்ணையும் உறுத்தாது. ஆனால் வெளியில் வந்தால் அது பலருக்கும் அவலாகலாம். அதற்காக ஒருவரே விட்டுக் கொடுத்துப் போக இயலாது. இன்னொருவரும் விட்டுக் கொடுத்தலும் திருத்திக்கொள்ளலும் அவசியம். அது குடும்ப இறையாண்மைக்கு இன்றியமயாதது.
எவ்வளவுதான் கோபித்துக் கொள்வதாகக் காட்டிக் கொண்டாலும் பாட்டியால் தாத்தாவைப் பிரிந்து இருக்க முடியாது. தாத்தாவுக்கும் பாட்டியின் சமையல், வார்த்தைகள், அரவணைப்பு இல்லாமல் இருக்கமுடியாது. அவர்கள் வாழ்வில் போலி இல்லை, பொய்மை இல்லை.

சகித்து வாழ முடியாது என விட்டுப் பிரிந்து நிம்மதியாக இருப்பதாகக் காட்டிக் கொள்பவரிடம் உள்ளே ஆயிரம் எண்ணங்கள் இருக்கும். நிச்சயம் திருத்தவோ மாற்றவோ முடியாது என உணர்ந்தால் ஏற்றதொரு இன்னொரு வாழ்வை ,இயைந்த இன்னொரு துணையை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் எதையும் யோசித்துச் செய்தல் நலம்.

திருமணம் என்பதே வாரிசு வேண்டுமென்பதற்காகவும், பெண்ணுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக்காகவும், ஆணின் தேவைகளுக்காகவுமே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் சமூகம் அதை திருத்தியமைக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் வாழ விரும்புகிறார்கள். திருநங்கைகளும் தங்கள் விருப்பு வெறுப்புக்களோடு இயைந்த துணையோடு வாழ விரும்புகிறார்கள்.

ஆணோ, பெண்ணோ குடும்பத்துக்கும் ஒற்றுமைக்கும் தங்கள் வாழ்வியலுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்களை விடுத்து ஒருவருக்கொருவர் தங்களின் தேவைகளை எந்தத் தவறான புரிந்து கொள்ளல்களும் இல்லாமல் சரியாகப் புரிந்துகொண்டு நிறைவேற்றிக் கொண்டால் இருமனங்கள் இணையும் திருமணங்கள் நிச்சயம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவையாகத்தான் இருக்கும்.


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியான மிகச்சரியான அலசல்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...