எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 செப்டம்பர், 2013

பெண்ணியமும் பெண்களும்..

”கர்ப்பப்பைக்குள் அடங்கிக் கிடந்த கோபமோ என்னவோ கர்ப்பக்கிரகத்துள் அடக்கிப் போட்டாய் ” என ஒரு முறை கவிதை எழுதி இருந்தேன்.. அவ்வளவு ஆணாதிக்கம் அப்போது.

கவிதைகளில் பெண்ணியம் என்பது பலகாலம் வரை ஆண்கவிஞர்களாலேயே பாடப்பட்டு வந்திருக்கிறது..அதைக்கூட பெண்களுக்கு விட்டு வைக்கவில்லை அவர்கள்.


ஆதி மந்தியார்., வெள்ளி வீதியார்., காக்கைபாடினியார் என்ற சங்ககால பெண்பாற்புலவர்கள் பற்றி அறிவோம்.. இன்றைய கவிதாயினிகள் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். பெண்ணியம் என்பதன் டெஃபனிஷன் என்ன.? .தன்னை., தன் எண்ணங்களை தன் வாழ்வை தானே ஒரு சுதந்திரமான முறையில் வடிவமைத்தல்.. ஒரு பெண்ணின் உடலைப் பற்றி பெண்தான் இன்னும் சிறப்பாக எழுத முடியும். பெண்ணைக் காணும் ஆண் வர்ணிக்கத்தானே முடியுமே தவிர., பெண் உணர்வாய் எப்படி மாறி எழுத முடியும்.

தான் சாதி ரீதியாக., மத ரீதியாக., இன ரீதியாக தாழ்மைப்படுத்தப்படுவதை பெண் கவிகள் பதிவு செய்கிறார்கள். எத்தனை புத்தகங்கள்., கட்டுரைகள்., கதைகள் எழுதி விட்டார்கள் பெண்கள். தாங்கள் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதையும் குடும்ப வன்முறையில் சிக்கி அவதியுறுவதையும்.

பெரியாரும் அம்பேத்காரும் பெண் விடுதலையில் முன்னணி வகிக்கிறார்கள். அம்பேத்கார் சொல்லியது போல தலித்துக்களை ஒதுக்கியது போல பெண்களையும் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது. தீட்டென்றும் கற்பென்றும் கண்ணுக்குத் தெரியாத வலைகளோடு பின்னி வைத்திருக்கிறது. பெண் என்பவளைப் பேதைப் பெண் என்றும்., அபலை என்றும் வாழாவெட்டி என்றும்., கைம் பெண் என்றும் சொல்வது இந்த வழக்கில்தான். இதற்கெல்லாம் ஆண்பால் கிடையாது.

பேரிளம் பெண் என்று கூட கிண்டலடிப்பது உண்டு.. ஆனால் எவ்வளவு வயதானாலும் ஆண் ஆண் மட்டுமே. அப்பா., தாத்தா என்ற ஆர்டினரி ப்ரோமோஷனல் வார்த்தைகள் மட்டுமே சூடப்படும். ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும்., இப்படித்தான் நடக்க வேண்டும்., இப்படித்தான் பேச வேண்டும் என ஒரு வரையறை வைத்திருக்கிறது சமூகம். அதன் கோடுகளில் பிசகி விட்டால் அவள் வழுக்கி விழுந்தவளாகவோ., ஓடுகாலியாகவோ., நெறிகெட்டவளாகவோ அடையாள முத்திரை குத்தப் படுவாள்..

காமத்திபுரா என்னும் ஒரு ஏரியாவே உண்டு. ஆண்காமம் தணிக்க, பெண்களும் வியாபாரப் பொருளாக தன்னைக் காட்டி விற்க.. இது இன்னும் நம் நாட்டிலும் இன்னும் ஏனைய தாய்லாந்து பாங்காங் போன்ற இடங்களிலும் உண்டு. பெண் என்ன ஒரு பொருளா.. அவளுக்கு உணர்ச்சிகள் இல்லையா. இல்லை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன. அவள் கடத்தப்படுவதும்., வக்கிரம் பிடித்தவர்களுக்கு விற்கப்படுவதும் பின் இத்தொழிலிலேயே மூழ்குவதுமான ஒரு கயமைத்தனம் பெண்களுக்கு . எதிராக நடைபெறுகிறது.

இதில் இன்னும் கொடுமை பெண் குழந்தைகளைக் கடத்தி விற்பது. மகா நதி படம் பார்த்து விட்டு நாலுநாள் சோறு தண்ணீர் கூட இறங்கவி்ல்லை. பெத்த பிள்ளை கறிபோல் விற்கப்படுகிறது என்றால் எப்படித் துடிதுடிக்கும் மனது.. பெண் குழந்தைகள் அப்யூஸ்மெண்ட்., கண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக்கப்படவேண்டும் ., மரண தண்டனை கூட அளிக்கலாம் என ஒரு முறை நான் பேட்டி எடுத்தபோது நடிகை ஊர்வசி கூறினார்.

ஒரு ஹோட்டலில் அழகிகள் கைது என போலீசார் பெண்களின் புகைப்படத்தை மட்டும் வெளியிடுகிறார்கள். அப்போது அவர்களோடு சம்பந்தப்பட்ட ஆணையும் அல்லவா கைது செய்ய வேணும்.. அழகன்கள் கைது என எங்கேயாவது படித்திருக்கிறீர்களா. பெண்கள் காசுக்காவும் ஆண்கள் காமத்துக்காகவும் செல்கிறர்கள். இதில் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து பத்ரிக்கைகளில் அவர்கள் முகங்களோடு படங்கள் போட்டால் இந்த அக்கிரமம் குறையும்.

வெளிநாடுகளில் ஆண்கள் ஆண்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். பெண்கள் கூட பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட விழைவு அல்லது ஹார்மோனல் சம்பந்தப்பட்ட ., உணர்வுகள் சம்பந்தப் பட்ட விஷயம். திருநங்கைகள்-- இவர்கள் உடலால் ஆணாகவும் உள்ளத்தால் பெண்ணாகவும் உள்ளவர்கள். இவர்கள் இப்போது பெண் என்று சர்டிஃபிகேட் வாங்கிக் கொள்ளவும் வழி வகை உண்டு சட்டத்தில். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உருவாகும் போதே அவர்களின் எக்ஸ் ., ஒய் க்ரோமோசோமில் ஏற்படும் மாறுபாட்டின் விளைவாக அவர்கள் ஆணாகவோ., பெண்ணாகவோ., திருநங்கையாகவோ பிறக்க வாய்ப்புண்டு., இதில் நான் ஆண் என்ற பெருமிதமும்., பெண் என்ற இரக்கமும்., திருநங்கை என்ற இழிவும் வேண்டாம். ஆணாகி பெண்ணாகி நின்ற இறைவன் கொடுத்த உருவம் இது. வாழ்வு இது.. அவரவர்க்கான வாழ்வை அவரவரின் சுயதேவைகள் பொருட்டு நல்லபடியாக வாழ்ந்து செல்வதில் என்ன தவறு.அவர் பெண்ணாக மாற தற்காலத்தில் அரசு மருத்துவ மனையில் அரசாங்க டாக்டரி்ன் அனுமதியின் பேரில் அறுவை சிகிச்சை பாதுகாப்பான முறையில் செய்துகொண்டு பெண்ணாக மாறலாம். பெண் என்று சர்டிஃபிகேட் வாங்கி கல்லூரியில் பயிலலாம்., வேலைக்கும் செல்லலாம்.

திரைப்படங்களிலும்., தொலைக்காட்சியிலும் திருநங்கைகள் என்றால் ஒம்போது என்பதும் ., கேலியாக கிண்டலாக காட்சிகள் எடுப்பதும் உண்டு. அவர்களையும் செக்‌ஷுவல் ரீதியாக தொந்தரவு படுத்துவது உண்டு. ஆண்களின் காமத்தின் வடிகால்கள் எல்லா வழிகளிலும் வெளியாகின்றன. அவர்கள் ஆண்கள் என்ற உரிமை ஒன்றே போதும் என நினைக்கிறார்கள்.

இன்றும்கூட சுதந்திரமான முடிவுகளை தன்னிச்சையாக தன் குடும்பத்தில் ஒரு வேலைக்குச் செல்லும் பெண் கூட எடுக்க முடியாது. வீட்டின் மூத்த உறுப்பினரான அப்பா., அண்ணன்., அல்லது தம்பி., பின் கணவன்., அதன் பின் பையன் என ஆண்கள் சொல்லும் முடிவுக்குக் கட்டுப்பட்டே இருக்க வேண்டியதிருக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியில் இவர்கள் எல்லாம் துணை நிற்பார்களோ என்னவோ ஆனால் ஒரு பெண்ணை உலகத்தின் எல்லா அவலங்களிலும்.,, அசிங்கங்களிலும் இருந்தும் காப்பாற்றுவதாக எண்ணி அவளின் முயற்சியை முனையிலேயே உடைத்துப் போடுவார்கள்.

ஆண் தான் வாங்கும் சம்பளத்தின் முழுக்கணக்கையும் பெண்டாட்டியிடம் ஒப்புவிப்பதில்லை.. ஆனால் பெண் தான் சம்பாதித்தாலும் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குச் சொல்ல வேண்டியதிருக்கிறது. விவாகரத்தான பெண்கள்., தனித்து வாழும் பெண்கள் கொஞ்சம் சுயமாக செயல்படுகிறார்கள் என சொல்லலாம். ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்ட நிகழ்ச்சிகளே அவ்வாறு விவாகரத்து பெறவும்., தனித்து வாழவும் தூண்டியவை.

வன்முறைக்கு ஆளாகும் பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். உடல் ரீதியான வன்முறை., சொல் ரீதியான வன்முறை. செயல் ரீதியான வன்முறை.

நேரங்கெட்ட நேரத்தில் காமம் கொள்வது., வன்முறையாய் அடிப்பது., கையில் கிடைத்த பொருட்களை வீசுவது எல்லாம் உடல் ரீதியான வன்முறை இது படிப்பறிவற்ற மக்களிடம் காணலாம். வேலைக்குச் செல்லும் மனைவியிடம் காசைப் பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வேறு வந்து கலாட்டா செய்து கொண்டிருப்பார்கள். தாலியை அறுப்பேன் என்று அரிவாள் மணையைத் தூக்கி வந்து மனைவியின் கழுத்தில் வைக்க.,” இந்தா.. நீ கட்டிய தாலி ..”என என் அம்மா வீட்டில் வேலை செய்த அக்கா தன் கணவன் முன் கழட்டிப் போட்டு விட்டார்.. அதன் பின் அந்தக் கணவர் அடங்கி விட்டாரென்றா நினைக்கிறீர்கள்.. இல்லை இன்னும் கஞ்சா பிடித்து விட்டு வந்து வீட்டில் சோறு போடு என ஒரே ரகளை.. இருவரும் இன்னும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள். சினிமாவில் சொல்வது போல மஞ்சக் கயிறு செண்டிமெண்ட்தான்.

சொல் ரீதியான வன்முறை. மனைவியை கண்டபடி ஏசுவது., தான் சொல்வதையே கேட்கவேண்டும்., அதன் படியே நடக்க வேண்டும் என கட்டுப் படுத்துவது., மனைவி என்ன செய்தாலும் பேசினாலும் குற்றம் காண்பது., இது ஓரளவு படித்த மத்தியதர மக்களிடம் காணப்படுவது., வேலைக்குச் சென்றாலும் காசு பூராவையும் கையில் கொடுத்து விட்டு அத்யாவசியத்தேவைகளுக்கும்., பஸ்ஸுக்கும் மட்டும் கணவன் கையில் இருந்து காசு வாங்கிக் கொள்ள வேண்டும்.

செயல்ரீதியான வன்முறை. இது மற்ற யாரும் உணர முடியாது, சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே உணரக்கூடியது. சிலசமயம் அவர்கள் பிள்ளைகளுக்குக் தெரியும் அவ்வளவுதான். மனைவி என்ன செய்தாலும் பிடிக்காது எனவே சாப்பிடுவதில்லை., பேசுவதில்லை., இது பல நாட்களுக்கு நீடிக்கும் மௌன யுத்தம். அல்லது அவள் தன் நண்பர்கள்., கொலீக்ஸ் என அறிமுகப்படுத்தினால் ஒரு கேலியோடு அணுகுவது. அவள் செய்யும் செயல் எல்லாம் இளக்காரமாகக் கருதுவது.

அவள் என்ன செய்தாலும் இதை எதுக்கு செய்யிறே..என்றோ., இதனால என்ன பலன் என்றோ ., இதுக்கு சும்மா இருக்கலாம் என்றோ மேம்போக்குத்தனமாக கிண்டலடிப்பது. அதை விட தான் ஒன்றும் பெரிதாக சாதிக்காவிடினும். இதை நீ செய்யாட்டாலும் ஒண்ணுமில்லை.. என்று சொல்வது . அப்படியே சாதித்தாலும் இதனால என்ன.. ஏன் செய்யிறே., பேசாம வீட்டுல இருக்க வேண்டியதுதானே. நம்ம குடும்பத்துக்கு ஏதாவது பெனிஃபிட் உண்டா என கேப்பது.. தேவையே இல்லை சும்மா இரு என அவளை ஆதியிலேயே அடக்குவது. தான் என்ன செய்தாலும் வொர்த்., தன் மனைவி என்ன செய்தாலும் வேஸ்ட்.. இதுதான் இவர்களின் எண்ணமாக இருக்கும்.

இந்த மாதிரி சுயமரியாதை தாக்கப்படும் பெண்கள் தான் விவாகரத்தை விரும்புகிறார்கள். இதில் குடித்து விட்டு வந்து அடிப்பது கீழ்தட்டில் என்றால் பிற பெண்களோடு தொடர்பில் இருக்கும் கள்ளத்தனம் மேல்தட்டில் காரணமாகிறது.

தனக்கு நண்பர்கள் பெண் நண்பிகள் இருப்பதை பெருமையாகக் கூறும் ஆண் தன் மனைவிக்கும் அவ்வாறு ஆண் நண்பர்கள் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன் ஒரு ஆண் தன் நண்பர் என கூறுவதில் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் சங்கடமான உணர்வுகள் இன்று இல்லை. அவர் என் நண்பர் என தைரியமாக அறிமுகப்படுத்தும் வழக்கம் இருக்கிறது. இருந்தாலும் தந்தையர் வழி சார்ந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்.

என்ன ஒரேயடியாக பெண்ணுக்கே வக்காலத்து வாங்குகிறேன் என பார்க்கிறீர்களா., இல்லை பெண்ணிடமும் குறைகள் உண்டு., குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகை நாடி மிக்க கொளல் என நிறைகளை மட்டுமே சொல்லியுள்ளேன் இங்கு.

பெண்களும் கணவரை டாமினேட் செய்தல்., கோபப்படுதல் என செய்தாலும் ., அவர்களுக்கும் சில தேவையற்ற ஆண் சகவாசம் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. பெண் எப்போதும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பாக இருக்க எண்ணுவாள். தன் வாழ்வு தன் திட்டமிட்டபடி நடக்காமல் பொருளாதார ரீதியில் சரிவும்., கணவரின் அரவணைப்பு., ஆறுதல்., தேறுதல் கிடைக்காத நேரத்திலும்., தன் முன்னேற்றத்தை எப்போதும் முடக்கிப் போடும் கணவன் கிடைத்தாலும்., தன்னுடைய எளிய சிறிய ஆசைகள் கூட கவனிக்கப்படாவிட்டாலும் கூட பெண் சோரம் போகிறாள். அதை உண்டாக்குபவரும் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொள்பவரும் இன்னொரு ஆணே..

பெண்கள் தம் திருமண வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் வன்முறைகளுக்கு அல்ல. மேலும் கணவன் வாழ்வு முழுவதும் துணை வருபவர். சின்ன சின்ன குணக்கேடுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அவை உங்களிடமும் இருக்கலாம். பண விவகாரத்தில் கணவரிடம் கேட்டு முடிவெடுப்பதில் தப்பில்லை. சரியான முதலீட்டுக்கு அவர் வழிகாட்டுவார். உங்கள் வாழ்வின் துயரை நீங்களே வென்றிடுங்கள் அநாவசியமாக மூன்றாம் நபரை இதில் நம்பி விடாதீர்கள். கணவனுக்கு மனைவியை விட நெருக்கமான தோழியோ., மனைவிக்கு கணவனை விட நெருக்கமான நண்பரோ கிடையவே கிடையாது..

மனம் சஞ்சலப்படும் நேரங்களில் சரியாக வழிநடத்தக் கூடிய தோழி தோழர் தேவை. அவர்களிடம் பகிரலாம் ஆனால் முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்கள் திருமணம்., குழந்தைகள்., அவர்களின் வளர்ச்சி., படிப்பு ., எதிர்காலம் ஆகியவற்றை எந்த முடிவு எடுக்கும் முன்னும் சிந்தியுங்கள். பெண்களுக்கு உரிமைகள் முக்கியம்தான். ஆனால் தாய் என்னும் ஸ்தானத்தில் அந்த உரிமைகள் யோசிக்கப்படவேண்டியவை. நினைத்தேன் கவிழ்த்தேன் என எதையும் செய்ய முடியாது.

இன்றைய படித்த நன்கு வேலைக்குச் செல்லும் சுயசம்பாத்தியம் மற்றும் தன்னம்பிக்கையுள்ள பெண்களுக்கும் சிறிது சகிப்புத்தன்மை அவசியம். உரிமை உரிமை என்று கேட்டது எல்லாம் கிடைத்து விட்டது. அது உள்ளாடை அணியாமல் உடை அணிவதிலோ., ஆண் நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டிக்குப் போவதையோ., போதைப் பொருட்கள், மது அருந்துவதையோ., சிகரட் பிடிப்பதையோ ஊக்குவிப்பதல்ல. தன் நெறியாள்கைக்குட்பட்ட நேர்மையான சுதந்திரத்தை அனுபவித்தல்., தான் என்னும் நிலையை என்றும் சுப்ரீமஸியாக கையாளுதல். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாயிருத்தல்.

மனைவியாகவும்., தாயாகவும் உங்கள் கடமைகள் இருக்கும் போது உங்களுக்கென்று உரிமைகளும் உண்டு.. ஆனால் எந்த உரிமை எப்போது எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதில் தெளிவாயிருங்கள். அந்தரங்கம் புனிதமானது . எனவேகணவன் மனைவி இருவருமே ”ஒருவனுக்கு ஒருத்தி” என்றும். உங்கள் வாழ்வை ”ஒருவர் வாழும் ஆலயமா”கவும் வைத்துக் கொள்ளுங்கள்


5 கருத்துகள்:

  1. பெண் உணர்வாய் கொதித்து வந்த ஆதங்கமான கருத்துக்கள் அனைத்தும் உண்மை... சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் நேற்று ஆபீஸ் விஜய் டி.வி. சீரியல் பார்த்தீர்களா என்று தெரியவில்லை.

    அங்கு ஒரு மேனேஜர் தன கீழே வேலை பார்க்கும் ஒரு ஐ.டி. ப்ரோபிஷனளிடம் பேசுவதின் கருத்தையும் கவனித்து இருப்பீர்கள்.
    அவர் பேசும் தொனி நம்க்கு பிடிக்காது இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

    இருப்பினும் அதில் இருக்கும் உட்கருத்து : இன்றைய தேதியில் மிகவும் அதிகமாக ஐ.டி. மற்றும் அல்ல மற்ற துறைகளில் படிக்கும் பெண்மணிகளுக்கு ஒப்புமை இருக்குமா ?

    என்ன தான் படித்தாலும் தான் தன கால்களில் நிற்கமுடியும் என்ற நிலை இருந்தாலும் இன்னமும் நமது நாட்டின் மரபினைச் சார்ந்து ஒரு பெண் தனக்கு திருமணம் ஒரு கட்டாயம் என்று நம்பி, அதற்காக தான் படித்த படிப்பையும் வீணாக்கி வெறும் ஒரு வீட்டுத் தலைவி ஆகிறார் பல வேளைகளில். வீட்டுப்பொறுப்புகள் அதிகரிக்கும்பொழுது தன வேலையையும் பெறும் ஊதியத்தையும்,
    தியாகம் செய்கிறார்.

    வெளி நாடுகளில், குறிப்பாக, மேல் நாடுகளில், திருமணம் என்பது ஒரு வே ஆப் லைப் ஆகத்தான் கருதப்படுகிறது. அந்த நிர்ப்பந்தத்திற்குள் இருக்கவேண்டுமா வேண்டாமா என ஒரு கருத்து சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது.

    நமது நாடு, மற்றும் சமூக அமைப்பு களில் அந்த சாத்தியம் இருப்பதாக தோன்றவில்லை. எப்பொழுது ஒரு பெண் ஒரு ஆண் துணையின்றி தான் வாழ இயலும் என நம்புகிறார்களோ அப்பொழுது நீங்கள் சொல்லும் லட்சிய நிலை உருவாவதற்க்யு வாய்ப்பு இருக்கிறது.

    இன்றைய சமூகம் திருமணம் ஆகாத பெண்களை ஏன் இந்தப்பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை என பார்க்கும் நிலை யும் இருக்கிறது. இதனால் தன பெற்றோருக்குத் தன்னால் ஒரு தாழ்வு வரக்கூடாதே என்ற நிலையிலும் பல பெண்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு தான் படித்த படிப்பையும்நல்ல வேலையையும் தியாகம் செய்கிறார் கள் எனத் தோன்றுகிரது.

    சமுதாய இலக்குகள் மரபுகள் மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகும்.

    ஆனால், மாறும் எனத் தோன்றுகிறது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. பல பெண்களின் மனத்தில் உள்ள, தயக்கத்தினால் வெளிப்படுத்தவியலாத ஏராள எண்ணங்களை சிறப்பான முறையில் பகிர்ந்துள்ளீர்கள் தோழி. திருநங்கையரை சமுதாயம் பார்க்கும் பார்வை எப்போதுமே எனக்குள் வருத்தத்தை உருவாக்கும். திரைப்படங்கள் மிகவும் மோசம். அவர்களும் ஒரு மனித உயிர் என்பதை மறந்து பரிகாசத்துக்குரியவர்களாய் சித்தரிப்பது வேதனையான விஷயம். வளரும் தலைமுறையிலாவது இதுபோன்ற மனப்போக்கு மாறவேண்டும். நிதர்சனமிக்க கருத்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ

    நன்றி சுப்புசார் அருமையான பகிர்வு

    நன்றி கீதமஞ்சரி சரியான கருத்து

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...