எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 1 ஜூலை, 2013

தினமலரில் சிறுகதை. ஹலோ சரண்யா. ( கத்திக் கப்பல்/ எப்ப வருவ..?)

ப்ப வருவ எப்ப வருவ..
கர்ப்பம்தான் பத்து மாசம் ..
உன்னைக் காணவுமே பத்து மாசம் ..
வருடத்தில் இரண்டு மாதம் 
வந்துசெல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...

குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
குழம்புதய்யா என் மனசு..
சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...
வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?

வெளிநாட்டில் வேலை நிமித்தம் சென்ற கணவனை நினைத்து பக்கத்து வீட்டு அக்கா எழுதிய கவிதை. இது.இந்தக் கவிதையைப் படித்ததும் அரவிந்தன் ஞாபகம் வந்தது. எத்தனை நாளாயிற்று அவரோடு உணவு உண்டு உறங்கி. ஹ்ம்ம் ஒரு வாரமாகிவிட்டதே அதற்குள். கம்யூட்டரில் ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது இன்டர்நெட் கோளாற்றினால் அடிக்கடி அறுந்து விடும் தொடர்பாய் இருந்தது. உயர்தரமான சுவையான உணவை மெழுகுவர்த்தியின் ஒளியில் தனியாக அமர்ந்து உண்பதைப் போலிருந்தது வாழ்க்கை.

சரண்யா பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக இருந்தாள். அவள் கணவன் அரவிந்தன் மெரைன் இஞ்சினியரிங்க் படித்துவிட்டு சரக்கு கப்பல் ஒன்றில் இஞ்சினியராகப் பணிபுரிந்து வந்தான்.ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான் அவன் வீடு வர முடியும். காதலித்த நாட்களிலேயே தெரியும் அவன் ஷெட்யூல் பற்றி எல்லாம். முதன் முதலில் ஃபேஸ் புக்கில் நண்பனானதும் ,இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அவனைத் தங்கள் கல்லூரிக்குப் பேச அழைத்ததும் கனவுபோலிருந்தது

எப்படி நெருங்கினோம் என்பதெல்லாம் அறியாமல் பழகி காதலித்துத் திருமணமும் முடிந்து விட்டது. மிகக் கண்ணியமானவன், தன் நிலையில் என்றும் பிறழாதவன் என்ற எண்ணங்கள் மனதோடு படிந்து விட்டன.

ஒவ்வொரு முறையும் அவன் நிறுவனம் இந்த காண்ட்ராக்ட் வேலைகளை ஒப்புக்கொண்டதும் அவன்  மதுரையிலிருந்து சென்னைக்கு, அதன் பின் மும்பைக்கு, அங்கிருந்து துபாய்க்குப் ஃப்ளைட்டில் போக வேண்டும். அங்கே வளைகுடாவில் கச்சா எண்ணெய் அல்லது  வாயுவடிவில் எரிபொருளை ஏற்றிய கண்டெயினர்கள் சரக்குக் கப்பலில் ஏற்றப்படும்.  ஒவ்வொரு துறைமுகமாகப் போய் க்ளியரன்ஸ் கிடைத்ததும் இந்த வாயு வடிவ எரிபொருளைத் திரவ நிலைக்கு மாற்றி அங்கங்கே குறிப்பிடப்பட்ட அளவு வழங்கிவிட்டு அடுத்த நாட்டுக்குச் செல்ல வேண்டும். இஞ்சினியராக இருப்பதால் தினமும் 15 மணி நேரப் பணி இருக்கும்.  ஒவ்வொரு நாட்டிலும் சரக்கு இறக்கும் நாட்களிலும் ஏற்றும் நாட்களிலும் 2, 3 நாட்கள் நகருள் சென்றுவர ஸ்பெஷல் அனுமதி கிடைக்கும். நல்ல க்ளப்புகள், ஹோட்டல்கள், உயர்தர கேளிக்கை விடுதிகள் என சக பணியாளர்கள் செல்ல அரவிந்தன் மடிக்கணினியில்  ஸ்கைப்பே கதி எனக் கிடப்பான்.

அந்த நாட்களுக்காய்த் தவம் கிடப்பாள் சரண்யா. தன்னைச் சரணமென்று ஒப்புக்கொடுத்தவளைப் போல. கால்கள் இருக்கின்றனவா மிதந்து வருகிறாளா என்பது போலக் கல்லூரியிலிருந்து விடுதிக்கு ஓடி வருவாள்.அடுத்த இரு நாட்கள் விடுமுறை கிடைத்த சந்தோஷத்தோடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆசுவாசமடைந்து பேசித் தீர்த்துக்கொள்வார்கள். பொங்கித் ததும்பும் அந்த நாட்களின் சந்தோஷம் அவன் அடுத்த நாடு செல்லும் வரை நீடிக்கும். வாழ்க்கை புதுப்புனலைப் போல இருந்தது.ஆறு மாதங்களுக்குப் பிறகு அவன் வரும் சில நாட்களில் இன்பம் என்பது.  காட்டாறு போலவும் இருந்தது. காட்டானையிடம் கட்டுண்ட கொடிபோல அவளும் சுற்றிக் கிடப்பாள். . தேன் சிட்டு பறந்து பறந்து தேனுண்ணுவது போல அவனும் அவளும் மகிழ்ச்சியில் பறந்து கொண்டேயிருப்பார்கள்.

விடுமுறை முடியும் தினம் நெருங்க நெருங்க இருவர் முகத்திலும் இருள் கூடி விடும்.அவள் அவனுடன் செல்ல இயலாத உத்யோகம் அவனுடையது. அவளுக்கும் தன்னுடைய பேராசிரியைத் தொழிலை நேசித்ததால் காரியர் என்பது விட்டுவிட முடியாததாக இருந்தது.  உத்யோக நிமித்தம் விட்டுப் பிரிதல்தானே தவிர எந்தப் பிரச்சனையும் அவர்களுக்குள்ளே இல்லை.

ம்மா விட்டைச் சுற்றிலும் எத்தனை வீடுகள். எல்லாவற்றிலும் இருந்த அக்காள்களின் கணவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்கள்.  . சிங்கப்பூரிலோ, துபாயிலோ, சௌதியிலோ ரோடு போடவும். ஹோட்டலில் வேலை செய்யவும், கோழிக் கடையில் கோழி சுத்தம் செய்யும் பணியிலும் இருந்தார்கள். வலப்பக்க வீட்டு அக்காளின் கணவரும் கொழுந்தனார்களும் ப்ரான்சில் தையல் வேலை பார்த்து வந்தார்கள் .

அங்கே இருந்த அக்காள்களைப் பார்க்கும் போதேல்லாம் கோபர்கள் அற்ற கோபிகைகளைப் போல இருக்கும். ரொம்பப் படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஒவ்வொருஅக்காவும்.  இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தும் ,சீட்டில் போட்டும்  டெப்பாசிட்டாகவும் இடமாகவும் தன் கணவரின் வருமானத்தைச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு அக்கா எழுதியதுதான் இந்த மேற்படிக் கவிதை.  ப்ளஸ்டூ படித்து விட்டு கல்யாணமானவர்கள்தான் அனைவரும். இன்னும் படிக்க வைத்திருந்தால் சிறப்பாக வரக்கூடிய சாத்யக்கூறு இருந்தது. இருந்தும் கிராமப்புறங்களுக்கே உரிய இயல்பான வயதுக்கு வந்ததும் கட்டிக் கொடுப்பது என்ற விதிப்படி அனைவருக்கும் திருமணம் நடந்திருந்தது

ஒரு சில அக்காள்களும் விதிவிலக்காக இருந்தார்கள். ஐந்து விரலும் ஒன்று போலவே இருக்கிறதா என்ன. அதில் ஒரு  அக்காவின் கணவர் அவளைப் பற்றி ஊரே குறை கூறிய போதும் கண் முன் சாட்சியாகவே அவள் தவறு செய்த போதும் அவள் என் மனைவி எனக்கு அவள் துரோகம் செய்யவே மாட்டாள். நான் அவளை நம்புகிறேன் என்று கூறியவர். அப்படியும் சில மகராசன்கள் இருந்தார்கள். தங்கள் மனைவியைத் தனித்து விட்டுப் போகிறோமே என்ற தவிப்போடும் வாழும் காலத்தில் கூட இருக்காமல் போக நேர்கிறதே என்ற தாகத்தோடும் அவர்கள் தவறு செய்தாலும் மன்னித்துவிடும் இயல்போடும்.   .

என்ன செய்வது.. யாரைக் குறை சொல்வது. உங்களில் பிழை செய்யாதோர் மகதலேனாவைக் கல்லால் அடியுங்கள் என்று சொன்னாராம் யேசு பிரான். போகட்டும் அது  அவர்கள் வாழ்வு. அதை நியாயத்தராசில் போட நாம் யார்.?

எண்ணிக்கொண்டே வந்தவள் ஹாஸ்டலில் இருந்த கேர்டேக்கரைப் பார்த்து இரவு வணக்கம் சொல்லியபடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தாள். விடுதியின் ஜன்னல் வெளியே பார்த்தபோது மழைச்சாரலடித்து சின்ன ஓடைகள் உருவாகிக் கொண்டிருந்தன.குல்மோஹரிலிருந்து குட்டிச் சொட்டுக்களாய் வந்து ஜன்னலை முத்தமிட்டுக் கொண்டிருந்தன மழைநாளில் ,"அக்கா கப்பல் செய்துதா.." எனக் கேட்கும் பிள்ளைகள்   ,"அக்கா எனக்குக் கத்திக் கப்பல்தான் வேணும்.. அதுதான் சாயாமல் ஓடும்.." என்பார்கள்.

இவளுடன் அறையைப் பகிர்ந்து கொண்டிருந்த ரேகா வெளியே சென்றிருந்தாள். அவளின் கணவனும் வெளிநாட்டில் ஏதோ உயர்பதவியில் இருந்தார். நினைத்தால் இருவரும் சேர்ந்து  இருக்கலாம். ஆனாலும் தனித்தே தங்கள் வாழ்வை வாழ்ந்து வந்தார்கள்.

ள்ளியில் படிக்கும்போது கூடப்படித்த கேரளத் தோழி சொல்லி இருக்கிறாள். அவளுடைய அக்கா  அரபு நாடு ஒன்றில் நர்சாக வேலை செய்கிறாளாம். அவளின் கணவர் இங்கே கேரளாவில் ரப்பர் எஸ்டேட் சொந்தக்காரர். திருமணத்துக்குப் பின் அவள் தன் வேலையை விட்டு இங்கேயே இருக்க விரும்பியும் அங்கே நல்ல சம்பளம் என்பதால் தொடர்ந்து வேலை செய்யச் சொல்லி இருக்கிறார். இங்கே இருக்கும் நாட்களிலும் அவர் அவளோடு கழிக்கும் நேரம் குறைவு. இங்கே வருடம் ஒரு முறை வரும் அவள் இரு குழந்தைகளுக்குத் தாயானாள். இருந்தும் தொடர்ந்து அவள் வெளிநாட்டு வேலையிலேயே இருக்க இங்கே  அவள் கணவரும் மாமியாரும் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கணவனைப் பற்றிய ஏக்கம் போய் அவளுக்கு இப்போதெல்லாம் குழந்தைகளைப் பற்றிய ஏக்கம்தான்.  தான் நினைத்தபடிக்கூட வாழ முடியாத ஒரு சமூகக்கட்டமைப்பில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே அவளுக்கு சலிப்பாயிருக்குமாம்

லவித சிந்தனைகளோடு மறுநாள் வகுப்பெடுக்கக் குறிப்புகள் தயார் செய்ய உட்கார்ந்தாள் சரண்யா. அப்போதுதான் வந்து சேர்ந்தாள் ரேகா. "யேய் டைனிங் ஹால் மூடிடப் போறாங்கப்பா போய் சாப்பிட்டு வா .,"என்றாள் இவள்.  ரேகா ஒரு அட்டகாசமான சிரிப்பு சிரித்து." எல்லாம் முடிச்சாச்சு. நல்ல டின்னர்" என ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் பெயரைச் சொன்னாள்.அவளும் வெளிநாட்டு மென்பொருள் கம்பெனி ஒன்றில் பணியாற்றுவதால் அடிக்கடி இப்படி வெளியே செல்ல வேண்டி வருவதும் விதம் விதமான் ஓட்டல்களில் உணவருந்தி விட்டு அதைப் பற்றி விலாவாரியாகவும் விவரிப்பதும் நடக்கும். சமீபகாலமாக அவளிடமும் பல மாற்றங்கள்.   புது வகையாய் முடிவெட்டிக் கொண்டிருக்கிறாள். உடைகள் நல்ல மாடர்ன் ஆகிவிட்டது. பெரும்பாலும் ஜீன்ஸும் டாப்சும் அணிகிறாள். இந்த  உடைகள் அணிவதால் மட்டுமல்ல அவ்வப்போது அவள் உதிர்க்கும் ஜோக்குகளும் கருத்துக்களும் கூட வித்யாசமாய் அவளைக் காட்டின. 

'ஆத்துல போற தண்ணிதானே .. ஐயா நீ குடிச்சுக்கோ, அம்மா நீ குடிச்சுக்கோ' என்பது போலப் பேசுவதை எல்லாம் கேட்க தாங்க முடியாததாக இருந்தது. 'உன் கருத்தை ஒன்னொடவே வச்சுக்கோ' எனச் சொல்ல வேண்டும் என்ற கோவம் வந்தது.  " ஹேய் தெரியுமா இன்னிக்கு  அந்த ஹோட்டலுக்கு ரெண்டு பேர்  வந்திருந்தாங்க. என் ப்ரெண்டோட ப்ரெண்ட்ஸ். அவங்க கப்பல்ல ப்ரயாணம் செய்றவங்களப் பத்திக் கதை கதையா சொன்னாங்க ,"என்றாள்.

"கன்ட்ரி கன்ட்ரியா போகும்போது அங்கே இருக்க  கேளிக்கை விடுதிகள் எல்லாம் போகாம இருக்க மாட்டாங்க. லைவ் ஷோ, பீப் ஷோ, ந்யூட் ஷோ எல்லாம் தெரியாதுன்னு சொன்னா அவன் உன்கிட்ட நான் நல்லவன்னு ஷோ காட்டுறான்னு அர்த்தம்," என்று சொல்லி உரக்க சிரித்தவாறு நைட்டிக்கு மாறியபடி படுத்துக் கொண்டாள். 'என் நம்பிக்கையை எல்லாம் சிதைப்பதில் உனக்கு என்ன ஆனந்தம்..? 'என்ற கோவம் ஏற்பட்டாலும் மனசின் ஓரத்தில் அந்த வார்த்தைகள் படிந்து போயின..

ணவன் தான் இல்லாத இடத்தில் தப்பு செய்திருப்பானோ என்ற எண்ணத்தை விட தான்., அவன் தப்பு செய்திருக்கலாம் அதற்கு என்னென்ன வழிமுறைகள் கிடைத்திருக்கலாம் என்று யோசிப்பதில் ஒரு சிறிய நரகமே சூழ்ந்திருப்பது போலிருந்தது அவளுக்கு. இந்த எண்ணங்களை விட்டு எப்படி வெளிவருவது எனவும் தெரியவில்லை. அவனை சந்தேகிக்கவும் மனது மருக் கொண்டது.  இந்த மாதிரியெல்லாம் ஒரு போதும் பேசியிராததால் அவனிடம் எப்படிக் கேட்பது எனவும் தெரியவில்லை. மனதுக்குள் பூகம்பத்தைப் பூட்டி வைத்தது போல இருந்தது.

குழம்பிய எண்ணங்களோடு இணையற்றுத் தனித்துப் பறக்கும் பறவையாய் கட்டிலின் மேல் படிந்து இரவு விளக்கைப் பார்த்தபடி படுத்திருந்தாள். நம்பிக்கைதானே வாழ்க்கை என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.  கணவன் தப்பு செய்வான், அல்லது செய்திருக்கலாம் என்று தானே முடிவெடுத்தபடி தானும் தப்பு செய்யலாம் அதுக்கு லீகல் ரைட்ஸ் இருக்கு இதெல்லாம் ஒண்ணுமேயில்லை என்ற விதத்தில் தூங்கிக் கொண்டிருந்த ரேகாவைப் பார்க்கையில் பயமாய் இருந்தது. தன் நரகத்தைத் தானே நிர்மாணித்துக் கொள்கிறாளே என வருத்தம் வந்தது. 

ல்லூரி சென்றுவிட்டு அறைக்குத் திரும்பியபின் அன்று வந்திருந்த செய்தித்தாள்களைபார்வையிட்டபடி இருந்தாள் சரண்யா.  அதில் சரக்குக் கப்பல் ஒன்றை சோமாலியக் கொள்ளைக்காரர்கள் பிடித்து அதில் இருந்த இந்தியர்களைப் பிணைக்கைதிகளாக வைத்துக் கொண்டது பற்றிப் போட்டிருந்தார்கள் . திகிலடித்தது சரண்யாவுக்கு. ஒரு வாரம் முன்புதான் வந்து சென்றிருந்தான் அரவிந்தன்.முதுகுத்தண்டில் ஜுரம் போல ஒன்று பரவியது. எங்கே போன்.. ஹ்ம்ம் அவள்  தொடர்பு கொள்ள முடியாது. அவனாகத்தான் தொடர்பு கொள்வான். இந்தியத் தூதரக அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்களாம்.

அட  எங்கு சென்றாலும் ஏன் இந்தக் கஷ்டம். மீன் பிடிக்கச் சென்றால்  எல்லை தாண்டியதாக சுடுகிறார்கள். பணி செய்யச் சென்ற நாட்டில் போதைப் பொருள் வைத்திருந்ததாக தூக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். தீவிரவாதம் என்றால் என்ன எனத் தெரியாதவர்களை தேசத் துரோகக் குற்றமிழைத்தான் எனச் சொல்லி தனிமைச் சிறையில் அரசியல் கைதியாய் அடைக்கிறார்கள். ஒன்றுமறியாமல் தன் தொழிலைச் செய்து வாழ  எங்குமே இடமில்லையா.. கடத்துவதற்கு உங்களுக்கு தங்கள் தொழிலை மட்டுமே நேர்மையாக  செய்து வரும் அப்பாவி இந்தியர்கள்தானா கிடைத்தார்கள்.

விமானத்தைக் கடத்துகிறீர்கள். கலெக்டரைக் கடத்துகிறீர்கள். அரசியல் காழ்ப்புணர்வுக்காக பகடைக்காயாய்ப் பலரைக் கடத்துகிறீர்கள். மனித உயிர்களை மூட்டைப் பூச்சிகள் போல நசுக்கித் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறீர்கள். கட்டிடங்களை விமானங்கள் கொண்டு நொறுக்குகிறீர்கள். தலைவருடன் நின்ற அப்பாவிகளை வெடித்துச் சாகடிக்கிறீர்கள், உங்கள் வன்முறை மிருகத்துக்கு வேண்டியதெல்லாம் மனிதனின்   ரத்தம். அவனின் பயம். அந்த உயிருக்குள் வாழும் ஆசை எவ்வளவு இருந்திருக்கும் எனத் தெரியுமா உங்களுக்கு.? உங்கள்  உயிர் வேட்டையாடப்படும் வரை தொடர்கிறது உங்கள் ரத்த விளையாட்டு.

ரு பேராசிரியையாய்ப் பலவித விஷயங்கள் அவள் மனதுள்ளே ஓடிக் கொண்டிருந்தாலும் அரவிந்தன் என்னவானானோ அவன் சென்ற கப்பல்தான் கடத்தப்பட்டதா எனத் தெரியவில்லை அவளுக்கு. தன்னையுமறியாமல் கன்னங்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. துக்கத்தைக்கூட சத்தமின்றித் தொலைக்க வேண்டி வந்தது. அரவிந்தன் ஒரு முறை பேசி விட்டால் போதும் . அல்லது நலமுடன் இருக்கிறான் என்ற  விபரம் கிடைத்தால் போதும்.கத்திக் கப்பலைப் போல சத்தியத்தின் மேல் நகர்ந்து கொண்டிருந்த ஒரு விஷயத்தின் மேல் தான் கூர்ந்து கோபப்பட்டது அவனைப் பாதித்து விட்டதோ எனக் கவலையாய் இருந்தது. பேசவே முடியவில்லை. தங்கள் வாழ்வை நீரின் மேல் எழுதிச் செல்பவர்கள் நீரை விட்டு மீண்டு வருவார்களா எனத் தவிப்பும் துயரமுமாக இருந்தது. கூட இருந்த இந்தியர்கள் விபரமும் தெரியவில்லை. அவர்களாக வெளியிட்டால்தான் தெரியும்.

அந்த அக்காவின் கவிதையில் வந்த கடைசி இரண்டு வரிகள் வேறு அடிக்கடி மனதில் ஓடி வெருட்டியது..

“ என்னைக்
கைப்பிடித்த கருணையே..
என் கைப்பிடிக்குள்
எப்ப வருவ..? “ என மிழற்றிக் கொண்டே இருந்தது மனசு.

தன்னுடைய தவறான கோபத்துக்காக அவனைத் தண்டித்து விட வேண்டாம் என்று தெய்வத்திடம் மனதுக்குள் மருகியபடி இருந்தாள். தெய்வநம்பிக்கை என்று ஏதும் சிறப்பாக வேண்டிக் கொள்ளாவிடினும் எதனிடம் சரணடைவது என்பது தெரியவில்லை அவளுக்கு. அந்த சமயத்தில் அவளின் தொலைபேசி அழைத்தது. புது எண்ணாக இருந்தது.  நெஞ்சில் பயப்பந்து உருண்டு மூச்சை அடைத்தது. 

போனின் பட்டனைத் தட்டிக் காதில் வைப்பதற்குள் மயக்கம் வந்தது போலிருந்தது. என்ன கொடுமை இது. கணவனைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். அன்று அவன் உடுத்திச் சென்ற சந்தன நிறச் சட்டையும் செண்டும் மூச்சுக்குள் அவன் வாசத்தோடு மணப்பது போலிருந்தது. " ஹலோ சரண்யா.. "என்று அரவிந்தனின் குரல் கேட்டது.  சந்தோஷமா, கிளர்ச்சியா எனத் தெரியாமல் படபடவென வந்தது இவளுக்கு. "எங்கே இருக்கீங்க. எந்தக் கப்பல்ல..  பத்திரமா இருக்கீங்களா..?"  எனக் கத்துவதுபோலக் கேட்டாள். அவன் ," எல்லாம் பத்திரமா இருக்கேன்மா. நீ பயப்படுவேன்னு தெரிஞ்சுதான் போன் பண்ணேன். கடத்தப்பட்டது  எங்க கப்பல் இல்ல. இன்னும் ஒரு வாரம் கழிச்சுத்தான் எங்க கப்பல் கிளம்புது. நீ பயப்படாதே.. நான் நலமா இருக்கேன்." என்றான்.

விடுபட்டது போல இருந்தது மூச்சு.. "நீங்க அந்த வேலையை விட்டுட்டு வந்துடுங்க.. நாம இங்கே வேற வேலை பார்த்துக்கலாம்." என்றாள். "பார்க்கலாம்மா.." என்றான். " இல்ல வந்துடுங்க.. வந்துடுங்க." என்றபடி அழுது கொண்டிருக்கும் மனைவியை அவன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். தன்னைப் போல அந்த கடத்தப்பட்ட பயணிகளின் மனைவிகளும் அம்மாக்களும் , குழந்தைகளும் எப்படி வருந்துகிறார்களோ என நினைத்தமாத்திரத்தில் அவள் கண்களில் கண்ணீர் பெருகியபடி இருந்தது.

நீரில் நீந்தும் நிலவைக்  கீறிச் செல்லும் கப்பல்,  நிலவைத் துண்டுசெய்ய முடியாமல் விட்டு விட்டுப் போவது போல அவர்களும் பத்திரமாய் வீடு திரும்பட்டும் என்று வேண்டியபடி இருந்தது அவள் மனது.

டிஸ்கி :- இந்தச் சிறுகதை மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை பெண்கள் மலர், தினமலரில் வெளிவந்தது. ( இது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யா குமரி, நாகர் கோயில் , ராமநாதபுரம், திருவனந்தபுரம் ஆகிய 6 பகுதிகளுக்கான எடிஷனில் வெளிவந்தது. )

9 கருத்துகள்:

  1. சிறுகதை அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  2. மனதைக் கனக்க வைத்துப் பின் இலேசாக்கிய அருமையான சிறுகதை.. அந்தக் கடைசி கவித்துவமான உவமை அருமையிலும் அருமை..

    பதிலளிநீக்கு
  3. மனதைக் கனக்க வைத்துப் பின் லேசாக்கிய சிறுகதை..
    கடைசியில் சொன்ன அந்த கவித்துவமான உவமை அருமையிலும் அருமை..

    பதிலளிநீக்கு
  4. நன்றி குமார்

    நன்றி கிருத்திகா

    நன்றி அரவிந்த்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. நல்ல சிறுகதை. கதையினூடே வரும் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது......

    பதிலளிநீக்கு
  7. கதை.கதை நகர்வு.உவமை முடிவு எல்லாமேஅட்டகாசம் சூப்பர் ---- சரஸ்வதி ராசேந்திரன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...