ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கொலைகளும் தற்கொலைகளும் இறப்புக்களும்..(மெல்லினம் )

கொலைகளும் தற்கொலைகளும் இறப்புக்களும்..:-

தமிழகத்தில் தற்கொலைக்கு முதலிடம் எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை படித்தேன். வரதட்சணைக் கொடுமை, கள்ளக் காதல், குடிகாரக் கணவன், தொழில் தோல்வி மட்டுமல்ல, குழந்தைகள் இறப்பு மற்றும் மனச்சிதைவும் கூட பல கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம்.

எந்தக் காரணமும் இல்லாமல் பஸ் பயணத்திலும், ரயில் பயணத்திலும், விமானப் பயணத்திலும் சுனாமி, வெள்ளத்தாலும் பலர் இறக்கிறார்கள். சுய தவறு ஏதுமின்றி நிகழும்  இந்த இறப்புக்கள் மிகக் கொடுமையானவை.

பல வருடங்களுக்கு முன்  மூணாறில் ஹனிமூன் சென்ற ஜோடியில் கணவரை மனைவி தன்னுடைய முன்னாள் காதலனான ஆட்டோ ட்ரைவருடன் சேர்ந்து கொன்றது மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று பத்ரிக்கையைத் திறந்தாலே இது போன்ற விபரீத உறவின் வெளிப்பாடாய் தற்கொலையோ , கொலையோ நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.காதலர்கள் இடையே தோன்றும் சந்தேகப் புயலும் இந்த அற்ப நிகழ்வுகளுக்குக் காரணமாகிறது. காந்தா ஷெட்டி என்ற மும்பையைச் சேர்ந்த  ஃபேஷன் டிசைனர் அவருடைய ஆண் நண்பர் ப்ரபாகர் ஷெட்டி ( ரெஸ்டாரெண்ட் மேனேஜர்)  என்பவரால் துண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் காரணமேயில்லாமல் தன்னைத் தன் கணவரும் ( ரமலான் சங்க்லா) அவரின் சகோதரரும் ஒரு அறையில் பூட்டி வைத்துக் காயும் கரண்டியால் முகத்தில் சுட்டுக் கொடுமைப்படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார்.

1995 இல் தன் மனைவி நைனா சஹானியை தந்தூரி அடுப்பில் வைத்து சுட்டுக் கொலை செய்ததற்காக சுசீல் சர்மாவைக் கைது செய்து வழக்கு நடந்தது இப்போதுதான்  2013இல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் புறத் தொடர்புகளை வைத்து அவளது கேரக்டரைச் சந்தேகப்பட்டு அவளை மட்டமாக எண்ணி  நடத்துவது/நடந்து கொள்வது குரூரமானது என மும்பை லோக்கல் கோர்ட் ஒரு 27 வயதுப் பெண்ணின் விவாகரத்து கேஸில் அறிவித்துள்ளது.

மனைவியிடம் 50,000யூரோ கேட்டுக் கொடுமைப்படுத்திய போர்த்துக்கீசியத் தொழில் அதிபர் ( பின்டோ) ஒருவரைப் பெங்களூரு போலீசார் பையப்பனஹள்ளியில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார் எனக் கைது செய்துள்ளார்கள். விஷயம் என்னவென்றால் போர்ச்சுக்கல்லில் இருக்கும்போதே இருவரும் விவாகரத்துக்கு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதுதான்.

ஒரே பெண்ணைக் காதலித்த இரு நண்பர்களில் (நிலகாதரனஹள்ளி, பீன்யாவைச் சேர்ந்த ) நாகராஜ் என்ற ப்ரைவேட் கம்பெனி ஊழியரை சேகரப்பா என்ற அவரது நண்பர் கொன்றிருக்கிறார்.

கே ஆர் புரத்தைச் சேர்ந்த இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஷைலா தன்னைத் தன் கணவர் தன்ராஜ் சந்தேகப்பட்டு மெண்டல் டார்ச்சர் செய்வதாக நியாயா தெகுலா காம்ப்ளெக்ஸில் ( ஹெச் சித்தையா ரோடு, லால் பாக் அருகில்  இருக்கிறது) கோர்ட்டை விட்டு வெளியே வந்து தன்னைத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொள்ள முயன்றிருக்கிறார். சில வக்கீல்களும், பெண்கள் சிலரும்  சேர்ந்து அவரைக் காப்பாற்றி வில்சன் கார்டன் போலீஸ் ஸ்டேஷனில் கணவருக்கெதிராக கம்ப்ளெயிண்ட் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.

திருமணமான இரண்டாம் நாளிலேயே பெங்களூர் புஷ்பலதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கணவன் மகனை ஊருக்கு அனுப்பி விட்டு திவ்யா சஷிதரும் தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

முகநூல் நட்பின் மூலம் உறவு கொண்ட மனோஜ் ஏமாற்றியதால் 14 வயது ஷிக்கா தன்னை முடித்துக் கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் சந்தித்த இருவர் ( ஜிம் இன்ஸ்ட்ரக்டர் ப்ரதீப், ரக்‌ஷா ( ஆட்டோ ரிக்‌ஷாக்காரர் மகள் )  ஃபேரி டேல்ஸ் காதல் போலக் காதலித்து மணந்து கொண்டார்கள்.தங்கள் முதலாம் ஆண்டு மண நிறைவு விழாவுக்குக் கணவன் மனைவிக்குத் தந்த பரிசு  காரில் அழைத்துச் சென்று ஆசிட்டைக் கொட்டியது. இதனால் உடம்புத் தோல் உரிந்து  இமைகள் இழந்து விட்டார் ரக்‌ஷா.  இமைகள் மாற்று ப்ளாஸ்டிக் சர்ஜரி கட்டாயம் செய்ய வேண்டுமென விக்டோரியா ஹாஸ்பிட்டலைச்  சேர்ந்த டாக்டர் ஷங்கரப்பா தெரிவித்துள்ளார்.  ஒரு மாதமாகத் தேடி ப்ரதீப்பை போலீஸ் அரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைத்துள்ளது. இவ்வளவு கொடுமையிலும்  தங்கள் மகள் மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ்வாள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என ரக்‌ஷாவின் தந்தை பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த மாதிரிக் குற்றங்களை வெளியில் வரமுடியாதபடி நான் பெயிலபிள் குற்றம் என அறிவித்து  ஆசிட் வீச்சுக்களுக்கு 3 லட்சம் வரை காம்பன்ஷேஷன் தரவேண்டும் என  வலியுறுத்தியுள்ளது சுப்ரீம் கோர்ட். ( HEINOUS ACT) மேலும் ஆசிட் விற்பனைக்கே தடை விதித்துள்ளது சுப்ரீம்கோர்ட்.

குடிகாரக் கணவனின் தினமும் அடிக்கும் தொல்லை தாங்காமல் கலப்பனஹள்ளியைச் சேர்ந்த லெக்ஷ்மி மஞ்சுநாத் தன்னையும் தன் இரு குழந்தைகளையும்( 6 வயது லாவண்யா , 4 வயது முரளி )  டீசல் ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு எரிந்து போனார்.

கொலை, கற்பழிப்பு, கிட்நாப் செய்வது, அடைத்து வைப்பது, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, வரதட்சணைக் கொலை, தவறாக நடந்து கொள்வது, பாலியல் பலாத்காரம் செய்வது , கொத்தடிமையாக நடத்துவது, கொடுமைப் படுத்துவது, இதெல்லாம் 2007 இல் இருந்து 20 12 வரைக்கும் சட்டம் தன் இரும்புப் பிடியைக் கொண்டு பிடித்தும்  மிக அதிகரித்தே உள்ளது.

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த இருவர் மணந்து கொண்டால் ( HONOUR KILLING) KHAP DIKTATS எனப்படும் கிராம கோர்ட் ஹானர் கில்லிங்க் என இருவரையும் கொன்று விடுகிறது. ஆனால் அப்படிச் செய்வதில்லை என ஹரியானா சீஃப் மினிஸ்டர் பூபிந்தர் சிங் ஹூடா சொல்லி இருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் பெண்களுக்கான அச்சுறுத்தல் இன்னும் அதிகமாக இருக்கிறது. அக்டோபர் மாதம் ஃபரிதாபாத்தில் ஒரு ஜெர்மன் பெண் ( ஜூடித் ஐனோ எஹ்னாஸ்) கொலையாகி இருக்கிறார் . இந்தியாவில் கற்பழிப்புக் கொலைகள் அதிகரித்து வருவதால் வெளிநாட்டில் இருந்து படிக்க மற்றும் வேலைக்கு வரும் பெண்கள் சதவிகிதம் குறையலாம்.

பணியிடத்தில் பணி அழுத்தம் காரணமாக புட்டம்மா ஜனார்த்தன் தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்.  வித்யா ஐயர் என்ற  ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் தன் குடியிருப்பில் தூக்கிலிட்டு மரித்திருக்கிறார். ஏலகங்காவில் ஒரு கால் செண்டர் ஓனர் ( சூரஜ் குமார்) தன்காதலி ( மௌனா) மரித்ததற்காக டிப்ரஷனில் ஆழ்ந்து தற்கொலை புரிந்து கொண்டிருக்கிறார். ஒரு சாஃப்ட்வேர் பெண் ட்ரக் அடிக்‌ஷனால் 4 வது மாடி பால்கனியிலிருந்து பக்கத்துப் பால்கனிக்குப் போவதாக இறங்கி விழுந்து இறந்துவிட்டார்.

சுஷ்மிதா பானர்ஜி என்ற இந்திய எழுத்தாளர் ஆஃப்கனில் அடிப்படை வாதத்தை மீறி எழுதியதாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறார்.

SCHIZOPHERNIA வால் தாக்கப்பட்ட அஞ்சலி சுமால்கள் என்ற பெண் தன் கணவரையும் 3 வயதுப் பெண் குழந்தையையும்  கிரைண்டர் குழவியால் தாக்கிக் கொன்றிருக்கிறார்.

ராகிங்கினால் மெடிக்கல் கல்லூரி இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்டிருக்கிறார் . ஆசிட்டுக்குத் தடை விதித்தது போல பெட்ரோல் விற்பனைக்கும் தடை விதிக்க முடியுமா.

தொலைக்காட்சியைப் பார்க்க விடாததற்காகத் தன் சகோதரனோடு சண்டையிட்டுத் துப்பட்டாவில் தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் நவநீதாவும், அன்னபூர்ணாவும். 20,21, 22 வயதே ஆன பெங்களூருவின் 3 பகுதிகளில் வசிக்கும்  3 பெண்கள் தற்கொலை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தாள முடியாத வயிற்று வலி என்றே எல்லா இறப்புக்களுக்கும் காரணம் சொல்லப்படுகிறது.

போலீசிடம் புகார்  அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தன் மனைவிஅனுராதாவும் உடன் பணியாற்றும் ஆட்டோ ட்ரைவர் அப்துல் வஹாசும் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டு மனம் வெதும்பிய ஆட்டோ ட்ரைவர் சுனில் உக்டே தன்னுடைய நிலையை 19 நிமிட வீடியோவாக எடுத்து வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் மாளவிகாவின்  பிரசவத்துக்காகச் செல்ல இருந்த சுசீதா தேவியை அவர் தன் உடைமைகளைப் பாக் செய்ய அழைத்து வந்த ஆட்டோ ரிக்‌ஷா ட்ரைவராலேயா ( லோகேஷ், ரகு, அபிஷேக் ) கொல்லப்பட்டுள்ளார். காவலாளி வசதி இல்லாத ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்துள்ளார்.

இருமணம் இணையும் திருமணம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அது கொலையிலோ தற்கொலையிலோ முடிகிறது. திருமணம் தாண்டிய உறவுகள் மட்டுமல்ல, பெற்ற குழந்தை இறப்புக்களும் கூட சில பெற்றோரின் தற்கொலைக்குக் காரணமாகின்றன.

காரைக்கால் விநோதினியின் தாய் சரஸ்வதியும் , பிரதிபா காவிரி கப்பலில் வந்து உயிரிந்த இஞ்சினியர் நிரஞ்சனின் தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இரு முறை சமீபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பலர் எந்தக் காரணமும் அறியாமல் இறந்திருக்கிறார்கள்.

எதிர்பாராமல் வண்டி வாகன விபத்தால் நடக்கும் இறப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. முன்கூட்டியே இவற்றைச் சரிவர வைத்திருப்பதன் மூலமும் பரமாரிப்பின் மூலமும், வண்டியோட்டிகளுக்குத் தகுந்த ஓய்வு வழங்குவதன் மூலமும் தவிர்க்கலாம்.

மனச் சிதைவிலோ, உறவு முறைச் சிக்கலிலோ, கள்ளத் தொடர்பாலோ நடக்கும் தற்கொலைகளுக்கு கவுன்சிலிங்கின் மூலமும் தகுந்த நேரத்தில் தரப்படும் உளவியல் சிகிச்சை முறைகளின் மூலமும் தீர்வு காணலாம்.

கொலைபுரிவோர்க்கு சட்டம் இரும்புக் கரம் கொண்டு தகுந்த தண்டனையை வழங்குவதன் மூலம் நிறுத்தலாம். இறப்பு அனைவர்க்கும் ஏற்படுவதுதான் என்றாலும் அது இயற்கையாகவே நிகழ வேண்டும்.

சாமுராய்களைப் போலக் கோயில்களில்  ஆத்மபலியிட்டுக் கொள்ளுதல்  13 இல் இருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை இடைப்பட்ட காலத்தில் பெங்களூருவின் வரலாற்றில் (ICHR - INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH)  வழக்கில் இருந்திருக்கிறது.  இது பெங்களூருவின் பீரேஸ்வரா கோயில் கட்டிடத்தில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிய வருகிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குத் தாங்கள் உண்மையானவர்கள் என்பதை நிரூபிக்க இப்படி ஆத்ம பலியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதே போல கடவுளுக்கும் ஆத்ம பலியிடும் பழக்கம்  வீரர்களிடையே இருந்ததாக SK ARUNI, (DEPUTY DIRECTOR OF ICHR)  சொல்லி இருக்கிறார். கே பாடீல் என்ற இன்னொரு ஹிஸ்டாரியன் பீரேஸ்வரா கோயிலில் ” சதி”  பற்றிய சிற்பங்களும் இருப்பதாக கூறுகிறார். இன்னும் பெல்லாரியில் உள்ள சிறுகுப்பா கிராமத்திலும் கண்டதாகக் கூறுகிறார்.

ஆத்ம பலியோ, சதியோ, கொலையோ வேண்டாம். ஆண்,பெண், குழந்தைகள் விகிதாசாரமின்றியும் அற்ப விஷயங்களுக்காககவும் கொலையும் தற்கொலையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  கடவுள் கொடுத்த உயிரையும் ஆன்மாவையும் மனக் குறைப்படாமல் கறைபடாமல் வாழ்வதன் மூலம் மனித இனம் தன்னை ஓரளவேணும் தற்காத்துத் திருத்தியமைத்துக் கொள்ள இயலும்.


4 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

nallathoru pakirvu akka...
tamilil type panninal accept pannalai... enakku mattum thaana...

சே. குமார் சொன்னது…

நல்லதொரு பகிர்வு...
அருமை அக்கா....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...