எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 ஜனவரி, 2014

கீரை வெரைட்டீஸ்.. புதிய தரிசனத்தில்.

கீரை வெரைட்டீஸ்..:-
*****************************

கீரை சாப்பிடணும்னா ஓடுறவரா நீங்க.. இந்த கீரை வெரைட்டீஸை ட்ரை பண்ணிப் பாருங்க ரொம்ப டிலைட்ஃபுல்னு சொல்லுவீங்க..

நமக்கு இயற்கையிலேயே கீரைகள்ல அதிக சத்து கிடைக்குது. விட்டமின்ஸ் மினரல்ஸ் மற்றும் குரோமியம் உப்பு , அப்புறம் இரும்புச் சத்தும் கிடைக்குது. குழந்தைகளுக்கு தினம் கீரை கொடுப்பது நல்லது. ஒரே மாதிரி பொரியல் கூட்டு வைக்காமல் வெரைட்டியாக செய்யலாம்.  அதுக்குன்னு கீரை போண்டா., கீரை கட்லெட். கீரை வடைன்னு எண்ணெயில குளிச்சு எந்திரிக்காம. சத்துள்ள அதே சமயம் சுவையான கீரை சமையல்கள் பத்திப் பார்ப்போம்.


முதலில் கருவேப்பிலைக் குழம்பு, கருவேப்பிலை கீரை வகைதான் அதை நிறைய உணவுல சேர்த்துக்குறதுநல்லது. தாளிக்க உபயோப்படுத்தி தூக்கி எறிஞ்சிடுவோம் நாம் அப்படி இல்லாம கருவேப்பிலை உப்பு., புளி ., மிளகாய்., சோம்பு வைத்து அரைத்து. எண்ணெயில் கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம்., பூண்டு ., தக்காளி சேர்த்து., அரைத்த மசாலாவை ஊற்றி எண்ணெய் பிரியும்வரை அடுப்பில் சிம்மில் வைத்து இறக்கி சூடான சாததோடு சாப்பிட்டால் தேவாமிர்தம்தான்.

அடுத்து கொத்துமல்லி தோசை. கொத்துமல்லியில் என்னன்னவோ சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு கைப்பிடி ஆய்ந்து பொடியா நறுக்கி தோசையில் போட்டு திருப்பிப் போட்டு சாப்பிட்டு பாருங்க ப்ளெயின் தோசையே சாப்பிட மாட்டீங்க.

வெத்திலைன்னா என்ன செய்வீங்க பாக்கு சுண்ணாம்போட தாம்பூலமாதானே போடுவீங்க.  ரசம் வைக்கும் போது 2 வெத்திலையையும் கிள்ளிப்போட்டு வதக்கி வைங்க. ஒரு கப் குடிச்சீங்கன்னா அப்புறம் சளித் தொல்லையெல்லாம் போயே போச்சு.

வல்லாரை ஞாபக சக்திக்கு உதவுற ஒரு பொருள் . அதை பிள்ளைகளுக்கு படிக்கும் நேரத்தில் சூப்பாக வைத்துக் கொடுக்கலாம். பட்டை., இலை., சோம்பு தாளித்து ஒரு பெரியவெங்காயம்., தக்காளி., ஒருகைப்பிடி வல்லாரை போட்டு., மஞ்சள் பொடி., உப்பு., பருப்பு வேகவைத்து மசித்த நீர்  3 கப்  ஊத்திக்  கொதிக்க வைத்தால் அது வல்லாரை சூப்புங்க. மிளகுப் பொடி போட்டு சூடா குடிச்சா எந்தக் கணக்கும் மறக்கவே மறக்காது.

அப்புறம் முளைக்கீரை பொரியல். இது போல சிறுகீரை., அரைக்கீரை., எல்லாம் பொரியல் செய்யலாம். . கடுகு., உளுந்து ஒரு கைப்பிடி சின்னவெங்காயம் ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து. அலசி கழுவி பொடியாக அரிந்த கீரையைப் போட்டு வதக்கி., கடைசியா உப்பு போட்டு இறக்கினா சூப்பர் பொரியல் ரெடி. விரும்பினா தேங்காய் சேர்க்கலாம்.

1 தக்காளியோட 4 சின்னவெங்காயம் ., பச்சை புதினா., பச்சைமிளகாய்., உப்பு., புளி., பெருங்காயம்., வைச்சு துவையல் செய்தா இட்லி தோசைக்கு அருமையா இருக்கும்.சத்தும் கூட.

மணத்தக்காளிக்கீரை., சுக்குடிக்கீரை., மிளகுதக்காளிக்கீரை  இதெல்லாம் ஒண்ணுதான். இதை பொரியல் செய்யலாம். பருப்பு தேங்காய் போட்டு. இல்லாட்டா இப்படி கீரை மண்டியா வைச்சு சாப்பிட்டுப் பாருங்க.  2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு ., உளுந்து., சின்னவெங்காயம் ரெண்டா நறுக்கியது 10., காய்ந்தமிளகாய் கிள்ளிப் போட்டு . ஆய்ந்து கழுவிய கீரையைப் போட்டு ரெண்டு வதக்கு வதக்கி அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி ., வேகவைத்து கடைசியா உப்பு போட்டு கொஞ்சம் தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிடாமல் இறக்கினால் அதுதான் மண்டி . இது வாய்ப்புண் வயிற்றுப் புண் உள்ளவங்களுக்கு நல்லது. வெய்யில் காலத்தில் வைச்சு சாப்பிடலாம்.


தூதுவளைன்னு ஒரு கீரை கேள்விப்பட்டிருப்பீங்க. அது சளித் தொந்தரவு ., சள்ளைக்கடுப்பு., உடல்வலியை குணப்படுத்தும். கொஞ்சம் முள்ளோடு கூடியது.  அதைக் கழுவி லேசா நச்சுட்டு ரசத்துல தாளிக்கும்போது வதக்கி சேர்த்துக் குடிச்சுப் பாருங்க. உடல்வலி போயே போச்சு. ஹெர்குலிஸ் மாதிரி இந்த உலகத்தையே தூக்குவேன்னு  சொல்வீங்க. 

பச்சக்கொத்துமல்லிய தேங்காய்., உப்பு., புளி., காய்ஞ்ச மிளகாய்., வச்சு துவையல் அரைச்சா அது  நல்ல இரும்புச்சத்து. சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.

வெந்தயக்கீரை இருந்தா சாம்பார் வைக்கலாம். சப்பாத்தி மாவோடு பிசைந்து சப்பாத்தியாவும் போடலாம். ரொம்ப சத்து உள்ள கீரை இது. டயபடிக் பேஷண்டுகளுக்கு நல்லது. துவரம்பருப்பு வேகவைத்து., தக்காளி., சின்ன வெங்காயம்., கீரை, ரெண்டு பச்சைமிளகாய்.,  1 ஸ்பூன் சாம்பார் பொடி., ஒரு சுளை புளி கரைத்து ஊற்றி சாம்பார் வைத்தா நல்லா இருக்கும். கசப்பே இருக்காது. கடைசியா கடுகு., உளுந்து வடகம் தாளிக்கலாம் .

இளம் கருவேப்பிலையை., சின்னவெங்காயம். புளி., பெருங்காயம். ரெண்டு காய்ந்த மிளகாயோடு துவையல் அரைத்தா அதுவும் செம சத்து. , மேலும் டேஸ்டு. ட்ரை பண்ணிப்பாருங்க.


வல்லாரையில் துவையலும் செய்யலாம்.

இன்னும் முள் முருங்கை., முடக்கத்தான் போன்ற கீரைகள் இருக்கு. இவற்றை அரிசியோடு சேர்த்து அரைத்து தோசை செய்வார்கள். முள் முருங்கை தொண்டை கரகரப்பு., வலி.,,சளிக்கும்., முடகத்தான் ( முடக்கை நீக்குவது) கைகால் சுகத்துக்கும் பயன்படுவது.

ஸ்கூல் போற பிள்ளைகளுக்காகட்டும்., அலுவலகத்துக்காகட்டும். இந்த புதினா  புலவு செய்து எடுத்துப் போங்க ரொம்ப ஈஸி. பாசுமதி அரிசி ஒரு கப் அல்லது பச்சரிசி ஒரு கப் களைந்து வைக்கவும்.  பானில் எண்ணெயைக் காயவைத்து பட்டை., கிராம்பு., ஏலக்காய் தாளித்து ஒரு பெரிய வெங்காயம் பொடியா அரிஞ்சது., ஒரு தக்காளி பொடியா அரிஞ்சது. வதக்கி அரிசி உப்பை சேர்க்கவும். அதுக்கு முன்னால ஒரு கட்டு புதினா ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி., ஒரு பீஸ் தேங்காய்., 2 பச்சைமிளகாய்., 5 பல் பூண்டு . ஒரு இன்ச் இஞ்சித்துண்டு ., ஒரு ஸ்பூன் மிளகு  போட்டு அரைத்து ரெண்டு கப் தண்ணீர் ஊற்றி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இந்த நீரை அரிசியில் போட்டு மஞ்சள் பொடி போட்டு கிளறி ஒரு சவுண்ட் வந்ததும் இறக்கி வெங்காய தயிர்பச்சடி., உருளை சிப்ஸோடு பரிமாறவும் . தினம் இதையே லஞ்சுக்கு கேப்பாங்க அப்புறம்.  ஆனா ஒண்ணு அரைச்ச மசாலாவை ரொம்ப நேரம் வைக்க வேண்டாம் கறுத்து டேஸ்ட் போய் விடும்.

கருவேப்பிலை பொடி செய்து வச்சுகிட்டா அது இட்லிக்கும் தொட்டுக்கலாம். கருவேப்பிலை சாதமும் செய்யலாம். கருவேப்பிலை சாத பொடிக்கு., ஒரு கப் கருவேப்பிலை., 4 காய்ந்த மிளகாய்., உப்பு., பெருங்காயம். ., ஒரு டீஸ்பூன்  உளுந்து ., தேவைப்பட்டால் சிறிது புளியும் வைத்து் நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்லவும். இட்லிப்பொடிக்கு இன்னும் கொஞ்சம் பருப்பு சேர்க்கணும் . சூடான சாதத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த பொடியைப் போட்டுக் கிளறினால லஞ்ச் பாக்ஸ் ரெடி.

பசலைக்கீரை மற்றும் பாலக்கீரைகளும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது. ஒரு கப் பாசிப்பருப்பு., ஒரு கட்டு பசலைக் கீரை அல்லது பாலக் அல்லது தண்டுக் கீரை எதுவானாலும் சுத்தம் செய்து நறுக்கிப் போட்டு கொஞ்சம் சின்ன வெங்காயம்.,ஒரு பல் பூண்டு., ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு குக்கரில் ஒரு சவுண்ட் வைத்து மசித்து நெய்சாதத்தில் போட்டு சாப்பிடலாம். 

முக்கியமான ரெண்டு கீரைகள் இருக்கு அது முருங்கைக் கீரை மற்றும் அகத்திக் கீரை. ரெண்டையுமே பருப்பு ., தேங்காய் போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். அவ்வளவு இரும்புச் சத்து. ரத்த விருத்தி., மேலும் முருங்கைக்கீரையில் குரோமியம் உப்பு கிடைக்குது. அது கொழுப்பைக் கரைக்குது. ரத்தத்தை சுத்தம் செய்யுது. அகத்திக்கீரை வயிற்றில் உள்ள புழுபூச்சிகளை சுத்தம் செய்யுது.

மேலும் முள்ளங்கிக் கீரை., வெங்காயத்தாள்., சீலரி., பார்ஸ்லி ., பொன்னாங்கண்ணி., பருப்புக்கீரைனு பல கீரைகள் இருக்கு. எல்லாத்துலயும் நம்ம உடம்புக்குத்தேவையான இரும்புச்சத்து இருக்கு. எனவே வாரம் ஒன்றிரண்டு முறையாவது கீரைகளை சேர்த்துக் கொள்வோம். கீரை குளிர்ச்சியும் கூட.முடியும் நன்கு வளரும்.  இந்தக் கோடையில் தினமும் சேர்த்தாலும் நல்லதுதான். சுத்தம் செய்ய சோம்பல் பட்டு எளிய செலவில் குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய சத்தை இழக்காதீங்க.சத்துள்ள கீரைகளை தினமும் சாப்பிடுங்க .

டிஸ்கி :- இந்தக் கட்டுரை டிசம்பர் 1-15 , 2013 புதிய தரிசனத்தில் வெளிவந்தது.


8 கருத்துகள்:

 1. பல பயனுள்ள சமையல் குறிப்புகள்... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி சகோதரி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள பகிர்வு... கீரைகள் பற்றிய குறிப்புகள் உபயோகமாக இருக்கும்..வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள சமையல் குறிப்புக்கள்... அருமை அக்கா...
  பேராசிரியர் அய்க்கன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிச்சாச்சா...

  பதிலளிநீக்கு
 4. சத்தான குறிப்பு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி தனபாலன் சகோ

  நன்றி ஆதி வெங்கட்

  நன்றி குமார்

  நன்றி மாதேவி

  பதிலளிநீக்கு
 6. ஜூப்பரேய்.. அத்தனைக் குறிப்புகளுக்கும் நன்றி தேனக்கா..

  பதிலளிநீக்கு
 7. சத்துள்ள குறிப்புகள் வாழ்த்துக்கள் தேனக்கா

  பதிலளிநீக்கு
 8. நன்றி சாந்தி :)

  நன்றி ஜலீலா.:)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...