புதன், 8 ஜனவரி, 2014

பாராவின் கருவேல நிழலும் மண்டூகம் துப்பும் மொழியும்.

சிவகங்கைச் சீமையில் கருவை மரங்கள் அதிகம். அதன் நிழல் என்று ஏதுமில்லை. அதன் நிழலில் யாரும் அமர முடியாது. வெக்கையும் புழுக்கமும் நிரம்பிய கரம்பைக் காட்டில் அடர்ந்து முளைத்திருக்கும் கருவைகள்.

வெட்டிய யாருக்கும் முள் குத்தாமல் இருந்திருக்க முடியாது.அந்தக் கருவேல நிழல் தலைப்பில் தொகுக்கப்பட்ட வலையுலக நண்பர் ராஜாராம் அவர்களின் கவிதைத் தொகுப்புப் படித்துப் பலகாலம் ஆயிற்று.


அதுபற்றி எழுத  இப்போதுதான் சமயம் வாய்த்தது. மண்டூகம் துப்பும் மொழி அவரது ( வரப்போகும் ) இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

ப்ரியம் தழைத்த சொற்களால் நேசன் எழுதிய முன்னுரை வெகு அழகு.

தகப்பனாக இருப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் காரணப் பெயர்களுக்காக இயங்கிக் கொண்டிருப்பதும்.. தந்தை தாயை நாம் எவ்வாறு நேசிக்கிறோம் என்பதை விட நமக்காக அவர்கள் எவ்வளவு இழந்திருக்கிறார்கள் என்பதைப் புரியவைத்த கவிதை.

////அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக் கொண்டிருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவிற்கு.

எங்கள் ஊரில்
நிலங்களுக்குப் பெயர்
இருந்தது போலக்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது.

அது..
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா”

பிரியம் கலந்த கவிதைகள் அனைத்தும்..

///உன்னைத் தேடி அடைய எனக்குப் பிடித்திருக்கிறது.
என்னைத் தொலைத்து விளையாட
உனக்குப் பிடிக்கிறது. //

// நீ விரும்பி விளையாடும்
பொம்மை என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்னை..//

இயற்கையை நேசிக்கும் கவிதைகள் பல.. கோபப்படுபவையும் சில..

////குருவிக்கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிற போதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள தச்சன்..///

////அறுவடைக்குப் போவது
பாதி என்றாலும்
மீதி என்னவோ
களத்து மேட்டு
பன்னீர் மரத்துக்குத்தான்.

பஞ்சம்போன வருஷமே
பூத்துச் சிரித்தது சனியன்.///

இயலாமையைச் சாடும் கவிதைகளும்..

///ஆடுதுறை 20
ஐ.ஆர். 8
குதிரை சம்பா
பொன்னி
பூக்காத பருத்தி
தீஞ்ச தென்னை
பூச்சி மருந்து
கரும்பு திருட்டு
காகம் அப்பும் கடலை
வங்கிக் கடன்
பிள்ளைக்கு வாந்தி
பிறகு பேதி வேறு

என்னடா கிறக்கமா இருக்கிறே மூதி
உனக்கு மட்டுமா
நொட்டையும் நொங்கும்
ஆக வேண்டியதைப் பாரு///

 கருவைக் காட்டு மக்களின் வாழ்க்கையை, வெறுமையை, இழப்புக்களை வலியோடு பதிவு செய்யும் கவிதைகள் இவை.

சராசரி மனிதர்களின் துயர்கள், சின்னச் சின்ன இன்பங்கள், நெகிழ்வுகள் , இயற்கையோடு ஒட்டிய வாழ்வு அனைத்தையும் பதிவு செய்து போகிறது கருவேல நிழல்.

அடுத்து பாராவின் மண்டூகம் துப்பும் மொழியும் அகநாழிகையில் வருகிறது.. 

” கண்கள் வேறு வேறுதான்
மொழியும் தீராததுதான்’.

மொழியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கா.. அன்பினால் ஆனது உலகம்..

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிதைகள் அருமை... திரு. பா. ராஜாராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...