எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 ஜனவரி, 2014

வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா


வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா:- 
===========================================
மோகனா லானில் நடந்து கொண்டிருந்தாள். நியான் விளக்குகளின் கண்சிமிட்டலில், கூடை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு “36 செரங்கி லேனை” எடுத்த அபர்ணா சென்னின் திறமையைப் பாராட்டிக் கொண்டு இருந்தனர் நான்கைந்து கல்லூரி மாணவர்கள். மோகனா 27B ல் ஏறி “மவுண்ட் ரோடு” என்று கூறிவிட்டுக் காசைக் கொடுத்தாள்.


மோகனா எம் பி பி எஸ் மூன்றாமாண்டு பயிலும் மாணவி. மாநிறம். ஒன்பது கஜத்தில் புடவை கட்டிக் கொண்டு பின்னலின் நுனியில் ரிப்பன் வைத்துக் கொண்டு, நெற்றியில் கோபி இட்டுக் கொண்டு மஞ்சள் பூசிய முகத்துடன் பகவத் கீதைக்கும், பைபிளுக்கும் உள்ள ஒற்றுமையான கருத்துக்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் அற்புதப் பிறவி அவள். அவளுக்கு ரோஜாப்பூக்கள் என்றால் கொள்ளை மகிழ்ச்சி.

இந்த வினோதப் பிறவிக்கும் காதல் ஏற்பட்டது. அவளுடைய பார்ட்னர் க்ருபாகரன். இருவரும் சேர்ந்தால் அஷ்டலெட்சுமி கோவிலுக்கோ, மகாலெட்சுமி கோவிலுக்கோ, கபாலீஸ்வரர் கோவிலுக்கோ, மெரினா கடற்கரைக்கோதான் செல்வார்கள்.

பீச்சுக்குப் போய்விட்டால் இருவரும் மௌனச்சாமியார்கள் போல எப்போதாவது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, கடலை இரசித்துக் கொண்டு, சூரிய அஸ்தமனத்தை அனுபவித்துக் கொண்டும் இருப்பார்கள். ‘வரேன்’ என்ற ஒற்றைச் சொல்லுடன் இருவரும் பிரிந்தபின் கடல், தனித்துவிட்டுப் போகின்றீர்களே நானும் வரேன் என்பது போல கிடந்து குதிக்கும். இது இரண்டு வருடமாக நடக்கும் தினக்காட்சி.

பேருந்தை விட்டு இறங்கிய மோகனா தூரத்திலிருந்தே க்ருபா வருவதைப் பார்த்துவிட்டாள். செல்லமாக, “ ஏண்டா மோகன் ! இன்னிக்கு இவ்வளவு லேட் !’ என்று கேட்டு அவளுடைய கைகளைப் பிணைத்து அழைத்துச் சென்றான் க்ருபா. மோகனா வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் இதுவரை இவ்வாறு செய்ததில்லையே. ! இன்று ஏனிப்படி.? என்று எண்ணியபடி கண்களால் வினாக் குறியிட்டாள். க்ருபா புன்னகைத்தான். பற்பசை விளம்பரம் போலப் பல்வரிசை மின்னியது. அவன் அமர்ந்தபின்னும் பிணைத்த கைகளைப் பிரிக்கவில்லை.

ஒரு வெள்ளை ரோஜாவைக் கொடுத்துவிட்டு,’” ஒரு நல்ல சேதி சொல்லப் போறேன். என்னவா இருக்கும்னு சொல்லேன்” என்று சீண்டினான். அவன் வாலிபால் குழுவின் காப்டன். வாலிபாலில் மாநில அளவில் அவர்களது குழு வெற்றி பெற்றதை, அவன் அக்காவுக்கும் இரண்டாவதும் ஆண்குழந்தையாகப் பிறந்ததை, அவன் தம்பிக்குப் பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்துவிட்டதை அவள் ஒவ்வொன்றாகக் கேட்க அவன் ‘ இல்லை, இல்லை’ என்றே தலையசைத்துக் கொண்டு வந்தான்.

”என்ன என்றுதான் சொல்லுங்களேன் க்ருபா” எனக் கெஞ்சியவுடன் மோகன் ”உன்னைப் பெண்பார்க்க வர்ற வியாழக்கிழமை என் அக்காவும் அம்மாவும் வர்றாங்க “ என்றான். அதைக் கேட்டதும் அவளால் ஒன்றுமே பேசமுடியவில்லை. மனசுக்குள் பத்துப் பதினைந்து மோகனாக்கள் தம், ததம், தனனம் பாடினார்கள், ஆடினார்கள்.

பிணைத்திருந்த கரத்தை அவள் எடுக்க முயற்சிக்க, அவன் கரங்களை இறுக்கமாகப் பிணைத்துப் பிடித்துக் கொள்ள, அவள் முயற்சி தோல்வியுற, சந்தோஷ கனம் தாள முடியாமல் அவள் அவனை ஏறிட்டுப் பார்க்கவும் கூச்சப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்து இருந்தாள். அவன் கடலைப் பார்த்தபோது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

“உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே.!’ “ விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!” என்று கடற்கரையில் ஒருவர் வைத்திருந்த டிரான்சிஸ்டர் சிலோனில் அலறியது இருவருமே சடாரெனச் சிரித்துவிட்டார்கள்.

வியாழக்கிழமையும் பறந்து வந்தது. க்ருபாவின் அம்மாவும், அக்காவும் டாக்ஸியில் வந்து இறங்கி வீட்டுக்குள் நுழைய அப்பாவும் வரவேற்றார். அம்மாவுடன் இவளும் உபசரித்தாள். வந்தவர்கள் சொன்ன விபரங்களுக்குச் சம்மதித்தும் வழியனுப்பி வைத்தார்கள். க்ருபாவின் அக்கா முகம் மட்டும் சரியாகவே இல்லை.

ஒரு வாரமாகக் கிருபாவைப் பார்க்க முடியாமல் பரிதவித்துப் போய்விட்டாள் மோகனா. அவளை அவன் வேண்டுமென்றே தவிர்ப்பது போலத் தோன்றியது.கடற்கரையில் அவனுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றச் சுமைகளால் கனத்துப் போன மனசு சோகத்தைக் கண்வழியே வழிய விட்டுக் கொண்டிருந்தது. என் க்ருபாவா இப்படி மாறிப் போனான் என்று மாய்ந்து மாய்ந்து போனாள்.

ஏழு மணிக்குக் கடற்கரையை விட்டுப் புறப்பட்டுச் சாலையை அடைந்த போது எதிரே நிழலாடியது. நிமிர்ந்தாள். க்ருபா.

“மோகனா. ஒரு விஷயம் பேசணும். கொஞ்சம் இந்த ரெஸ்டாரெண்டுக்கு வாயேன்” என்று அழைத்துச் சென்று அமர வைத்து பேரரிடம் இரண்டு காஃபிக்கு ஆர்டர் செய்துவிட்டுத் தயக்கமாக,”மிஸ் மோகனா .! எனக்கு வர்ற ஜனவரில கல்யாணம், பொண்ணு ரொம்பச் சிகப்பு. பேரு சுபத்ரா. அக்காவோட தேர்வு. என்னால மீறமுடியலை என்றான். ஆயிரம் ஆயிரமாய் வெள்ளை ரோஜாக்கள் நர்த்தனமாடிக் கெக்கலித்தன கண்முன்னே. மிஸ் மோகனா என்றவன் அழைத்தது அவளை மிஸ் பண்ணியதாகச் சொல்லியது.

அவள் சடாரெனத் தன்னுடைய கண்ணீரை விழுங்கிக் கொண்டு,” ஹார்ட்டி கன்கிராஜுலேஷன்ஸ் “ சொல்லிவிட்டு ரெஸ்டாரெண்டை விட்டு வெளியேறி பஸ் ஸ்டாப்பில் போய் நின்றாள். டீக்கடையில் ரெக்கார்டு,” கண்ணா, கருமை நிறக் கண்ணா.. உன்னை மறுப்பாரில்லை, கண்டு வெறுப்பாரில்லை, என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை’ என்று அவள் மனத்தைப் போலக் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தது.

வீடு, ஆஸ்பத்திரி, நோயாளிகள், அறுவை சிகிச்சை, க்ளினிக் என்று அந்த வெண்புறா தன்னை ஒரு வட்டத்துக்குள் ஒடுக்கிக் கொண்டது. புதிதாய் முளைத்த சிறகுகள் இடையிலேயே பறிபோய்விட்டாலும், அது தன் சொந்தக் கால்களினால் ஒரு வட்டத்தை அமைத்து அதனுள் நடை பயின்று வருகின்றது. 

டிஸ்கி:- இந்தச் சிறுகதை 1984 ஃபாத்திமா கல்லூரி மாகசீன் மேரிலாண்ட் எக்கோஸில் வெளிவந்தது.



3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...