அமெரிக்கப் பங்குச் சந்தையைப் புரட்டிப் போட்ட ஒரு ஸ்டாக் புரோக்கரின் -- ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் - கதை என்று ஒரே வரியில் சொல்லி விடலாம்.
ஒரு பங்குத் தரகர் எப்படி என்னென்ன தகிடுதத்தங்கள் செய்து வாழ்வில் உயர்ந்தார். பணக்காரரானர் . பின் வழக்கம் போல சட்டத்தின் பிடியில் அகப்பட்டு சிறைக்குச் செல்கிறார் என்பதே கதை.
அதில் அவருக்கு ஏற்பட்ட ( 200 மில்லியன் டாலர். அதில் பாதியை -- 110 மில்லியன் டாலர் ) கடனை அடைக்க புத்தகங்கள் எழுதினார், அதை சினிமாவாக எடுக்க உரிமத்தை விற்றார், மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக ஆனார்.
ப்ளாக் மண்டே எனப்படும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அக்டோபர் 19, 1987 இல் பங்குச் சந்தை தாறுமாறாகச் சரிய மனைவி தெரசா ( கிரிஸ்டின் மிலோட்டி ) கணவருக்கு ஒரு விளம்பரத்தின் மூலம் லாங் ஐலண்ட் பாய்லர் ரூம் என்ற நிறுவனத்தில் (பென்னி ஸ்டாக்ஸ்) வேலை இருப்பதாகக் கூறுகிறார்.
பின் நண்பர் அசாஃப் (ஜோனா ஹில்) உதவியுடன் ஜோர்டான் ( லியனார்டோ டீ காப்ரியோ ) ஸ்ட்ராடன் ஓக்மெண்ட் என்ற ஸ்டாக் ப்ரோக்கிங் நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் பத்திர மோசடி, பண மோசடி , நிறுவனத்தின் பங்குகளை போலியாக உயர்த்துதல், மொத்தமாகப் பங்குகளை வாங்கி அதை ஏற்றி விற்பது போன்ற அனைத்து வித மோசடிகளையும் செய்து முன்னேறுகிறது.
இதன் நடுவில் கோக்கெய்ன், மரிஜுவானா, லெம்மான் 714 போன்ற போதைப் பொருட்களை உபயோகிப்பதையும் கண்களில் போதை சொட்டு மருந்து போட்டுக் கொள்வதையும் காஃபி டீ சாப்பிடுவது போலக் காண்பிக்கிறார்கள்.
இரண்டாவதாக நவோமியை ( பிரிட்டிஷ் மாடல் ) காதலிப்பது மனைவிக்குத் தெரிந்து விட டிவோர்ஸ் ஆகிறது. அடுத்து நவோமியை ( மார்காட் ராபி) க் கைப்பிடிக்கிறார். ஸ்கைலர் என்ற மகள் பிறக்கிறாள். நவொமிக்கு ஆடம்பரக் கப்பல் ஒன்றைப் பரிசளிக்கிறார்.
போதை மருந்துகளும் பெண்களுடன் கும்மாளம் அடிப்பதும் , விபசாரிகளுடன் செல்வதும் பாதிப் படத்தை நிரப்புகிறது. தவறான வழியில் வரும் பணம் அனைத்துத் தவறுகளையும் கைபிடித்தே அழைத்துவருகிறது.
மாட மாளிகையோடு 20 , 30 வேலைக்காரர்களோடு வீடு. ரோல்ஸ் ராய்ஸ் கார் என்று பணத்தில் உச்சத்தில் இருக்கிறார் ஜோர்டான். ஆனால் அதைச் சம்பாதிக்க மக்களைப் போலியாகப் பேசி ஏமாற்றிப் பங்குகளை விற்றுவிடுகிறார்கள். வாய் சாமர்த்தியம் என்று வேறு வியாபார நுணுக்கங்களைப் பட்டியலிடுகிறார்.
ஸ்விஸ் வங்கியில் கோடிக்கணக்கான டாலர்களை ஒரு பெண் மூலம் ( உடம்பெல்லாம் பணத்தைக் கட்டி ஒட்டி உடையணிவித்து ) கிட்டத்தட்ட 50 முறை விமானப்பயணம் செய்ய வைத்துக் கடத்துகிறார்கள்.
அந்தப் பணத்தை நவோமியின் அத்தை பெயரில் டெப்பாசிட் செய்திருக்கிறார்கள். அவர் திடீரென ஹார்ட் அட்டாக்கில் இறந்து விடுவதால் உடனடியாக அந்த சொகுசுக்கப்பலிலேயே மொனோக்கோ போகிறார்கள் . வழியில் அந்தக் கப்பலும் இவர்களை மீட்க வந்த ஏரோப்ளேனும் விபத்துக்குள்ளாகிவிட அதன் பின் வாழ்வின் நிலையாமையைப் பற்றி யோசிக்கத் துவங்குகிறார் ஜோர்டான்.
அதன்பின் இவர்கள் செய்யும் தகிடுதத்தங்களை ஆராயும் எஃப் பி ஐயை சேர்ந்த ஒரு நேர்மையான அதிகாரி கைல் சாண்ட்லர் இவர்களைப்பின் தொடர்ந்து கண்டுபிடித்து சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கிறார்.
சொத்துப் பத்துப் போனவுடன் இரண்டாவது மனைவி கோபித்துக் கொண்டு விவாகரத்துச் செய்துவிடுவதாக மிரட்ட மகள் ஸ்கைலரைத் தூக்கிக்கொண்டு போய் காரில் உட்காரவைத்துக் காரை ஓட்டி வீட்டினுள்ளேயே ஆக்ஸிடெண்ட் ஆக்குகிறார்.
அவர் காலில் ஒரு வயர்லெஸ் கருவி மாட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மற்றும் அவர் அசாஃபுக்குக் காண்பிக்கும் துண்டுச் சீட்டையும் கைப்பற்றி அனைவரையும் பொறி வைத்துப் பிடிக்கிறது எஃப் பி ஐ. ஸ்ட்ராடன் ஓக்மெண்டில் வேலை செய்த 1000 பேரில் முக்கியமாக 20 பேரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது எஃப் பி ஐ.
இவர்கள் அனைவரும் ஒரு போலீஸ் வேனில் ஜெயிலுக்குப் போக நேர்மையான அதிகாரி ஒரு ட்ரெயினில் தன் வீட்டுக்குப் போவதைக் காட்டுகிறார்கள்.
3 ஆண்டு தண்டனை பெற்று சிறைக்குச் செல்கிறார் ஜோர்டான். தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவரது அப்பாவும் அம்மாவும் கண் கலங்கி அமர்ந்திருக்கிறாரக்ள் கோர்ட்டில்.
இது மோசடி செய்பவர்கள்தான் லக்ஸுரி காரில் போவார்கள் . நேர்மையாக இருப்பவர்கள் பஸ்ஸில் ரயிலில் பொதுஜனம்போகும் வழியில்தான் போக வேண்டும் என்று சொல்வதைப் போலிருக்கிறது.
முதல் மனைவி இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் தன்னுடைய கணவனுக்குத் தொடர்பு இருப்பதைக் கண் கூடாகக் கண்டபின் விவாகரத்து வாங்கி விலகிச் செல்கிறார். கடைசியில் இரண்டாம் மனைவி வஞ்சகமாக நடந்து கொள்ளும் போது தமிழ் சினிமா மாதிரி முதல் மனைவி உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று கண்ணீரோடு ஒரு ஓரமாகக்கூட எட்டிப் பார்ப்பதில்லை.
ட்ரக் உபயோகிக்கவும் தினம் இரண்டு முறையாவது வேசிகளுடன் உறவு கொள்ளவும் போதிக்கிறார் முன்னாள் பாஸ் மார்க். என்ன சித்தாந்தமோ. டென்ஷன் ஃப்ரீஎன்று ஊம் ஊம் என்று கத்தி நெஞ்சில் வேறு டம் டம் என்று அவ்வப்போது குத்திக் கொள்கிறார்கள். பார்க்கிறவர்களுக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்தால் முதலுதவி செய்யும் எண்ணமோ என்னவோ.
மரிஜூவானா விற்பவர்களை ஸ்டாக் புரோக்கர்களாக அப்பாயிண்ட் செய்கிறார்கள் ஸ்ட்ராடன் ஓக்மெண்டில். படிப்பு ஏதும் தேவையில்லை இதைச் செய்ய என்ற கிண்டலா தெரியவில்லை.
லாபத்தில் பாதிக்குப் பாதி பங்குகொடுத்து ஒவ்வொருதரமும் பார்ட்டி கொடுக்கிறார்கள். இப்படி ஒரு கம்பெனி இருந்தால் தினம் தினம் திவாலாகி புதுசுதான் ஆரம்பிக்க வேண்டும். இதில் வேலையை விட்டு விட்டு நிறுவனத்தை அசாஃபிடம் ஒப்படைத்து விட்டு வரும்படி தந்தை கூற.. ஒவ்வொரு தரமும் மோசடி செய்யச் சொல்லிக் கொடுக்கும் அதே பேச்சுடன் உரையாடி அங்கே இருந்தவர்களை நெகிழ்வித்து நான் இங்கேதான் இருப்பேன். இதுதான் என் இடம் என்கிறார்.ஏதோ சுதந்திரப் போராட்ட உரை போல அனைவரும் உணர்ச்சி வயப்படுகிறார்கள் இதுபோன்ற பேச்சின் போதெல்லாம்.
5,000 டாலர் சம்பளம் வாங்கிய பெண் இங்கு வந்ததும் 25, 000 டாலர் சம்பளம் வாங்குவதாக கூறி உன்னை எனக்குப் பிடிக்கும் ( இதைக்கூட எப்பிடிக் கெட்ட வார்த்தையாக உச்சரிக்க முடியுமோ அப்படி உச்சரித்திருக்கிறார்கள்.. !) என்று நெகிழ்கிறார். உடனே அனைவரும் உணர்ச்சி வயப்பட்டு அதே வார்த்தையைக் கோரஸாகக் கூறிக் கும்மாளமிட்டு மகிழ்கிறார்கள்.!
ஆனால் படத்தில் ஏ டு இஸட் வரும் ஆங்கில கெட்ட வார்த்தைகளுக்கு ஒரு டிக்ஷனரியே போடலாம். வாயைத் திறந்தாலே அனைவரும் கெட்ட வார்த்தையைத் தவிர வேறு ஏதும் பேசுவதில்லை. இதை நீக்கினால் மொத்த வசனத்தையும் ஒரு 40 பக்க நோட்டில் எழுதிவிடலாம். TERENCE WINTER டயலாக்குகளை இவ்ளோ மோசமா எழுதி இருக்க வேண்டாம். நம்ம காதுதான் கெட்ட வார்த்தை கேட்டு மரத்துப் போனாப்புல ஆச்சு.ஆனா தியேட்டர் பூரா மக்கள் ரசிச்சுப் பார்த்தாங்க. நாம முறைச்சபடி உக்கார்ந்திருந்தா எல்லா வசனத்துக்கும் கன்னா பின்னான்னு சிரிக்கிறாங்க வேற..படத்தைப் பார்த்துட்டு வெளியே வர்றவங்க நாலு கெட்டவார்த்தையை சரளமா உபயோகிக்கலாம்..இதுல என்ன தப்பு இருக்குன்னு.. அந்த அளவுக்கு இருக்கு.
ஷேர் மார்க்கெட் பத்தி விலாவாரியா தெரிஞ்சவங்க நிச்சயம் விலா நோக சிரிக்கலாம். என்னடா ஓவரா கலாய்க்கிறாங்களே என்றும் ஃபீல் பண்ணலாம். மார்ட்டின் ஸ்கார்சிசி ரொம்ப வொர்க்கவுட் செய்துதான் இந்தப் படத்தை எடுத்துருக்காரு. பணமும், பெண்களும், போதையும் படுத்தும் பாட்டை ஓவராகவே சொல்லி இருக்கிறது படம்.
LEMMON 714 ஐப் போட்டவுடன் உடல் போதையில் செயலற்று மயங்கி விழும் நிலையிலும் கண்ட்ரி க்ளப்பிலிருந்து ஊர்ந்தபடி படிகளில் உருண்டு காரில் தட்டு முட்டி ஏறி வீடு வந்து சேரும் காட்சியில் லியானார்டோ அற்புதமாக நடித்திருக்கிறார்.
முழுத் திரையிலும் உடலுறவுக் காட்சிகள்., வீட்டினுள்ளே படுக்கை அறை வரை வீடியோ காமிராக்கள், ஃப்ளைட்டில் செல்லும்போது ட்ரக் அடித்துவிட்டு ஏர் ஹோஸ்டசுகளுடன் அடிக்கும் லூட்டிகள் என்று ஒரே ஏ காட்சிகள்தான்.
பணம் இல்லைன்னா மனுஷன் பிணம் என்று சொல்ல வந்த கதை. பணத்தைச் சம்பாதிப்பது எப்படி.. எப்பிடி வேணாலும் சம்பாதிக்கலாம். அதுக்கு எந்த வழியை வேணாலும் பின்பற்றலாம் என்ற கருத்தைச் சொல்கிறது.. எல்லாமே விற்பனைக்குத்தான் என்ற தாரக மந்திரத்தைப் போதிக்கிறது படம்.
எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. மனிதர்களுக்கும் கூட . அதைப் பணம்தான் நிர்ணயிக்கிறது. பணம்தான் தீர்மானிக்கிறது. பணம்தான் கடவுள். என்பதை அழுத்திச் சொல்லிய படம்.
கடைசியில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது ஒன்றுதான். அதுதான் அவரது பிஸினஸ் ஸ்ட்ராட்டஜி.. சேல்ஸ் டெக்னிக்ஸை சொல்லிக் கொடுக்க ஒரு வகுப்பெடுக்க வருவார். முன் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் பேனாவைக் கொடுத்து “இதை என்னிடம் விற்றுக் காண்பியுங்கள்.” ( SELL ME THE PEN )என்று சொல்வார். ஒவ்வொருவரும் தடங்குவார்கள்.
”இது நல்ல பேனா.இதுல எழுதினா சூப்பரா எழுதும். அழகான பேனா, இந்த ப்ராண்ட் பேனா என்று.. ”
ஆனால் நடுவிலேயே ஒரு ரெஸ்டாரெண்டில் இருக்கும்போது இதே போல நண்பர்களிடம் பிசினஸ் ட்ரெண்ட் பற்றிப் பேசும் போது இந்தப் பேனாவை விற்றுக் காண்பியுங்கள் என்னும் போது ஒவ்வொருவரும் இண்ட்ரஸ்ட் இல்லாமல் ஏதோ ஆர்டர் செய்து கொண்டிருப்பார்கள் . அப்போது பக்கத்தில் இருப்பவர் ( ட்ரக் டீலர் ) ப்ராட் இடம் ஒரு ஃபோன் நம்பர் சொல்றேன் எழுதிக்கோ என்பார். அப்ப அவர் என் கிட்ட பேனா இல்லையேன்னு சொல்வார். அப்ப ஜோர்டான் , இந்தா இந்தப் பேனாவை வைச்சுக்க.. இது உனக்குத்தான் ரொம்ப தேவைப்படும். நம்பர் எழுத என்று சொல்லிக் கொடுத்து இப்படித்தான் தேவையை உண்டாக்கி விக்கணும் என்பார். !
நிஜமா சொன்னா நம்மளால எல்லாம் ஒரு பேனாவைக்கூட விக்க முடியாது. புடவை, டஃபர் வேர், எம் எல் எம் என்று சொந்தங்கள் சிலர் விற்பனையைத் துவக்குவார்கள். அதே ஜோரிலேயே முடிந்து விடும். சோ விக்கிறதும் அடுத்தவங்களை வாங்க வைக்கிறதும் ஒரு திறமைதான்.
ஆனா இதுல இல்லாததையே விக்கிறாங்க. மோசடி செய்து ஜெயிலுக்குப் போறாங்க. ரொம்ப சிந்திக்க வைத்த படம். நிறுவனங்கள் எல்லாம் மக்களுக்கு டார்கெட்டை அதிகமாக்குங்கன்னு ப்ரஷர் கொடுக்கும் அடிக்கடி. அப்படித் தங்களோட ” விக்கிற திறமையை மட்டும் அதிகரிக்க ” இவரோட பேச்சிலேருந்து கத்துக்கலாம்.
இந்தப் படத்துக்குப் பொதுமக்கள் கொடுத்துருக்குற ரேட்டிங் 8. 7. கோபாலன் மாலில் பயங்கர கூட்டமா இருக்கு.
ஜோர்டான்பெல்ஃபோர்ட்டின்சுயசரிதையை வைச்சு எடுக்கப்பட்டிருக்கு. இதன் ட்ரெயிலர் இங்கே.
http://trailers.apple.com/trailers/paramount/thewolfofwallstreet/
படத்தைப் பாருங்க.. ஆனா எதுக்கும் அடிக்ட் ஆயிறாதீங்க..
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.
2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)