எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2011

வி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும்..



கணவரின் கோபத்தை சமாளிப்பது எப்படி., மனைவியின் நச்சரிப்புக்களை சரி செய்வது எப்படி என்று ஒரு தோழி கேட்டிருந்தார். நிலையான உத்யோகங்களில் இருக்கும் குடும்பத்துக்குள்ளே சண்டை சச்சரவுகள் இருக்கும்போது வீஆர் எஸ்ஸில் வந்தவர் குடும்பம் எப்படி இருக்கும்.


முன்பு எல்லாம் கணவர்கள் நி்லையான உத்யோகம் பார்த்து வந்தார்கள். இப்பவெல்லாம் அடிக்கொருதரம் கம்பெனி மாறுகிறார்கள். சில சமயம் நிறுவனங்களே தன்னுடைய ஊழியர்களை வீஆர் எஸ்ஸில் வெளியேற்றுகிறது.


ஒரு நிறுவனம் பொருளாதார நிர்வாகக் காரணங்களால் இன்னொரு நிறுவனத்துக்குக் கை மாறும்போதே பல குடும்பங்களுக்கு சனி பிடிக்க ஆரம்பிக்கிறது. புது நிர்வாகம் பழைய நிறுவனத்தை எடுக்கும் முன்பு அனைவரையும் போக சொல்ல மாட்டோம் என்ற உறுதி அளித்தபடி எடுக்கிறது. ஆனால் அது தன் கொள்கையை சிறிது காலத்துக்குப் பின் மாற்றிக் கொள்கிறது. கம்பெனி கை மாறிய போதே தளரும் ஊழியர்கள் அது வீஆர் எஸ் ஸ்கீமைக் கொண்டு வந்து நாசுக்காக கழுத்தைப் பிடித்து வெளியேறச் சொல்லும் தருணம் மனதளவில் சோர்வுற்றவர்களாகிறார்கள்.

வாலண்டரி ரிட்டயர்மெண்ட் ஸ்கீம் என்பதுதான் அதற்குப் பெயர் என்றாலும் இங்கே கம்பெனியே ஊழியரை வாலண்டரியாக ரிட்டர்மெண்ட் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதுதான் பிரச்சனை.

போகாட்டா தெரியும் . அங்கே போடுவோம்., இங்கே போடுவோம் என மிரட்டுதல். அடுத்த அடுத்த வருடங்களில் இது செய்யலை., அது செய்யலை என இன்ஸ்பெக்‌ஷனில் குறித்தல். கடைநிலை ரேட்டிங் போடுதல்., தன் பொருளை விற்கச் சொல்லி டார்கெட் போடுதல்., பாண்டு பிடி., இன்சூரன்ஸ் பிடி., தங்கம் விய்யி என கம்பெனிகள் படுத்துவது தனி ரகம்.

வி ஆர் எஸ்ஸில் நல்ல பேக்கேஜ் கொடுத்தாலும் பலர் பென்ஷன் ஆப்ஷன் கொடுப்பதில்லை. கொடுத்தவர்க்கு பரவாயில்லை. இல்லாதவர்க்கு அதுவும் நஷ்டம். மேலும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட வயது லிமிட்டேஷனுக்குப் பிறகு எங்கு சென்று வேலை பார்ப்பது ., பலரைத் தான் நிர்வகித்தது போக இன்னொருவரிடம் கைகட்டி வேலை செய்வதா. மேலும் இந்தக் கம்பெனியில் நிறைய சம்பளம் இருக்கும். செல்லும் கம்பெனியில் அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது. இந்தக் காரணங்களால் குடும்பத் தலைவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.

வீட்டில் கல்லூரிப் படிப்பில் மகன் ., திருமணம் செய்ய வேண்டிய மகள். தங்கள் பிற்கால வாழ்க்கை., அதற்கான சேமிப்பு என கணவரின் கழுத்தைச் சுற்றி எதிர்காலம் இறுக்குகையில் அந்தக் கயிற்றுக்குள் அவர் தன் குடும்பத்தையும் ., மனைவியையும் நுழைக்கிறார். விளைவு தினம் சண்டையும் சச்சரவும்தான்.

சிலரை மட்டும் அனுப்பும் நிர்வாகம் மற்ற சிலரை வைத்துக் கொள்ளும். அப்போது அவர் நினைப்பார் எனக்கு என்ன தகுதி இல்லை என்று அனுப்பினார்கள் என்று . இந்த மூளைக் குடைச்சலால் அவதியுறும் அவர் தன் குடும்பத்தைப் படுத்தத் துவங்குகிறார். மனைவி எது செய்தாலும் குற்றம்., என்ன பேசினாலும் குற்றம். ”ஏங்க அவர் மட்டும் வேலையில் இருக்கார். உங்களை மட்டும் அனுப்பிட்டாங்க.. நீங்க இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கக்கூடாது” என மனைவி சொல்லும்போது அவர் கோபம் பன்மடங்காகிறது.

அடுத்து முயற்சி எடுத்து செல்லும் பணி இடங்களும் அவர் இதுவரை பார்த்து வந்த ஸ்டேட்சுக்கு ஈக்வல் இல்லாமல் இருப்பதாக அவர் கருதுவதால் எதற்குமே போய் ஒன்றிரண்டு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடிவதில்லை. இன்னும் சிலர் பிசினஸ் செய்கிறேன் என்று தங்கள் பணத்தை தெரியாத முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அல்லது யாரையாவது நம்பிக் கொடுப்பார்கள். அல்லது இவர் முதலீடு செய்த பங்குச் சந்தை தாறுமாறாக ஏறி இறங்கி இவர் பணத்தை எல்லாம் முழுங்கி இருக்கும்.

இதில் சிலர் மட்டுமே பாலன்ஸ் செய்து இருப்பார்கள். பணிக்கால ஆரம்பத்திலேயே முறையான சேமிப்பு., சொந்த வீடு., தங்கம் ., பிக்ஸட் டெப்பாசிட்டுகள்., குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என சேமிப்பு என திட்டமிட்ட முதலீடு செய்தவர்கள் தப்பிப்பார்கள். மற்றவர்கள் மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்டை நரகமாக்கிக் கொண்டு பிடிக்காத தொழிலில் வேலை பார்த்து தானும் நிம்மதி இழந்து மனைவியையும் படுத்துவார்கள்.

மனைவி அடுத்தவர்களிடம் என்ன பேசுகிறாள். தன்னைப் பற்றி ஏதும் குறை சொல்வாளோ என நினைத்து அடுத்தவரிடம் பேச விடுவதில்லை. ஒரு மாதிரி கொஞ்சம் பணம் இருந்தாலும் ஹோம் ஜெயிலுக்குள்ளே அடைபட்ட மன நிலையை அந்த மனைவி அடைகிறார். ”ஏன் பால் இவ்வளவு திக்கா கலக்குறே. நல்லா தண்ணீ ஊத்தீ காச்சி காஃபி போடு. கடுகை கொட்டாம தாளி . அதுவே சிறந்த சிக்கனம். ” என மனைவி எது செய்தாலும் அட்வைஸ் செய்வது பின்னாலேயே சென்று உண்பது ., தின்பது., உடுத்துவது என எல்லாவற்றிலும் கருத்து சொல்லி மனைவி என்பவளை ஒரு ஜீவனாக கருதாமல் தான் சொல்வதை செய்ய வேண்டிய கொத்தடிமையாக எண்ணுகிறார்கள்.

இந்த மாதிரி வி ஆர் எஸ்ஸில் வந்தவர்களின் குழந்தைகளுக்கு சிக்கனத்தை சொல்லிக் கொடுக்கவே வேண்டாம். தன் அப்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். பணம் முக்கியமானதுதான். பாசமும் கூட.

வி ஆர் எஸ்ஸில் வந்தவர்கள் நிலைமை இப்படி என்றால் அந்த நிறுவனத்திலேயே பல்லைக் கடித்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை இன்னும் விநோதம். அங்கே புது கம்பெனியின் எம்ப்ளாயீஸ் அளவுக்கு ரெக்கனீஷன் இருக்காது. சம்பளமும் வேறுபடும். அந்த நிறுவனத்தில் டைரக்ட் ஊழியருக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் பாதி அல்லது பகுதிதான் இந்த இணைப்பு கம்பெனி ஊழியருக்குக் கொடுக்கப்படும். போனஸ்., இன்க்ரிமெண்ட் எல்லாம் அப்படித்தான். வருடா வருடம் ரேட்டிங் போட்டு ஒவ்வொருவரையும் ஓரம் கட்டுவதால் இந்த இயர் எண்டிங்., ரேட்டிங் எல்லாம் ஏன்தான் வருறதோ என அந்த ஊழியரின் மனைவி ஆதங்கப் படுவார். ஏனெனில் கணவருக்கு தகுதி இருந்தும் நிர்வாகம் அல்லது அது சார்ந்த மனிதர்கள்தான் தீர்மானிக்கிறார் என்றால் அடுத்த வீஆர் எஸ் பாக்கேஜ் எப்ப வரும் என காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் பிள்ளைகள் படிப்பு., திருமணம் போன்றவை நடைபெற்றிருக்கும். நல்ல வீ ஆர் எஸ் பாக்கேஜ் வந்தால் வெளியேறி நிம்மதியாயிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுமளவு அந்த கம்பெனியில் டார்கெட் கொடுத்து படுத்திக் கொண்டிருப்பார்கள்.

பையன்கள் வேலை செய்யும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் கூட சனி ஞாயிறு லீவு கொடுக்கும். ஆனால் 50 வயது அப்பா வேலை செய்யும் நிறுவனத்துக்கு அவர் காலை 7 மணிக்குச் சென்று இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும். மேலும் சிலநாள் தணிக்கை வேலைகளை செய்ய இயலாமல் ஞாயிறுகளிலும் வேலை செய்யும் அப்பா., பேப்பர் படித்தல்., டிவி., சினிமா போன்ற பொழுது போக்குகளே இல்லாமல் வேலை செய்யும் எந்திரமாய் இருப்பார். எப்போது ரிட்டயராவோம் அல்லது வி ஆர் எஸ் பாக்கேஜ் வரும் என்பதே அவர் எண்ணமாய் இருக்கும். இதற்காய் அவர் மனைவியிடம் நாளொரு ப்ளான் சொல்லிக் கொண்டிருப்பார். இருக்கும் பணத்தில் அங்கே வீடு வாங்குவோம். இங்கே இடம் வாங்குவோம் என. அல்லது ரிசைன் செய்கிறேன் வேறு ஏதாவது படிச்சிட்டு வேற கம்பெனியில் வேலை செய்கிறேன் என. மனைவி திகைத்துப் போய் இருப்பார் என்ன சொல்வதெனத் தெரியாமல்.

”பார் அன்னைக்கே அவன் வெளியே போயிட்டான். கையில இவ்வளவு கேஷ் கிடைச்சது. இன்னிக்கு இன்னொரு வேலையில் நல்லா இருக்கான். என்ன நீதான் வரவேண்டாம்னுட்டே. ஒரு வேளை நானும் அன்னைக்கே வெளிய வந்திருந்தா வேறோரு வேலைக்குப் போய் நல்லா வந்திருப்பேன். ”என உளைச்சலுக்கு ஆளாக்குவார் மனைவியை.

மனைவியின் சொந்தகாரர்கள் வந்தால் குற்றம்., மகன் மகள் நண்பர்கள் வந்தால் குற்றம் என கோபிக்கும் குடும்பத்தலைவர் பார்த்து குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் படிக்கிறேன் என்று நண்பர்களோடும்., மனைவி படிக்கிறேன் என்று ஏதோ ஒரு புத்தகத்தோடும்.

வேலைக்குக் செல்லும் மனைவியருக்கு இந்த தொல்லைகள் ரொம்ப உறுத்துவது இல்லை.. ஏனெனில் குடும்பத்தலைவரின் தொல்லைகளில் இருந்து தப்பித்து அவர் வேலைக்குச் செல்கிறார் என்பது ஒன்று, மற்றும் அவரின் சம்பாத்தியமும் குடும்பத்தை நடத்திச் செல்ல உதவுவதால் குடும்பத் தலைவரும் அடக்கி வாசிக்கிறார் எனலாம். பின்னே மனைவி வேலை செய்யும் தைரியத்தில் தானே வி ஆர் எஸ்ஸில் வந்தது அல்லது வரத் துடிப்பது.

ரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்புத் தொல்லைகளையும் இந்த வி ஆர் எஸ்ஸில் வெளி வந்த கணவர்களும் ., வி ஆர் எஸ்ஸீல் வரத்துடிக்கும் கணவர்களும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்.

வேலைக்குச் செல்லாத மனைவி என்பதையும் குடும்பம் என்பதையும் உங்கள் அடிமைக்குட்பட்ட ப்ராப்பர்டியாக எண்ணாமல் சுதந்திரம் கொடுங்கள். உங்களுக்கு நேர்ந்ததேதானே அவர்களுக்கும் நேர்ந்திருக்கும். இதில் அவர்களை குற்றம் சுமத்துவது ., குமைச்சலுகுள்ளாக்குவது ஏன்.

வி ஆர் எஸ்ஸில் வெளிவந்து பத்து வருடமாக மனைவியைப் படுத்துகிறவர்களையும் பார்த்திருக்கிறேன். வி ஆர் எஸ்ஸில் வராமல் இப்போது வரை மனைவியைப் படுத்தும் கணவர்களையும் பார்த்திருக்கிறேன். எதெற்கெடுத்தாலும் மனைவியை குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையிலிருந்து மாறுங்கள். அவள் உங்கள் சந்தோசம்., துக்கம் இரண்டையும் பகிர்ந்து வாழவே வந்திருக்கிறாள்.

ஒரு நாளில் சில மணி நேரமாவது மனைவிக்கு சுதந்திரத்தைக் கொடுங்கள் . அவளுக்குப் பிடித்த டி வி ஷோ., அவளுடைய சிநேகிதிகள். , அவளுடைய சொந்தக்காரர்கள்., அவள் உணவு விருப்பம். அவளுடைய உடைத்தேர்வு., அவளுடைய பொழுது போக்கு என. ஒரு வேளை அவள் ஏதேனும் தொழிலில் ஈடுபட்டால் அதற்கும் நீங்கள் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கலாம்.

விஆர் எஸ் என்பது வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்ததே. உங்கள் மனைவிக்கு அந்த வாய்ப்பு என்றாவது உண்டா என நினைத்து அவளை அன்பு செலுத்துங்கள். வி ஆர் எஸ் என்றோ., பென்ஷன் என்றோ மனைவி கேட்டால் என்ன ஆகும். விட்டுக் கொடுப்பதாலும்., ப்ரச்சனைகளை ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவேண்டும். தன் உத்யோகப் பிரச்சனைகளைக் குடும்பத்துக்குள் புகுத்தாமலும் இருந்தால் குடும்பமே சொர்க்கமாகும். பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.

டிஸ்கி:- வி ஆர் எஸ் வாங்கிவிட்டு வீட்டில் நச்சரிக்கும் கணவரை சமாளிப்பது எப்படி? என்ற தலைப்பில் ஜூலை இவள் புதியவளில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.:)

13 கருத்துகள்:

  1. இன்று நகரங்களில் உள்ள தலையாய பிரச்சனையை
    மிகத் தெளிவாக அலசி ஆராய்ந்து கட்டுரையாக்கி இருக்கிறீர்கள்.
    பிரச்சனைகளை மட்டும் விலா வாரியாக சொல்லிவிட்டு
    தப்பித்துச் செல்லாமல் அதற்கான தீர்வையும்
    சொல்லிச் சென்றுள்ளது மிகச் சிறப்பு
    பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வி.ஆர்.எஸ்க்கு முன், வி.ஆர். எஸ்க்கு பின் என்று விரிவான அலசல். நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பயனுள்ள அலசல் கட்டுரை.

    //விஆர் எஸ் என்பது வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்ததே. உங்கள் மனைவிக்கு அந்த வாய்ப்பு என்றாவது உண்டா என நினைத்து அவளை அன்பு செலுத்துங்கள்.//

    ஆமாம். பாவம் வாழ்நாள் முழுவதும் கிச்சனைக்கட்டிக்கொண்டு அழும் மனைவிகளுக்கு 365 நாட்களும் தினம் 3 வேளைகளுமே தொடர்ந்து வேலைகள் தான். டி.வி. மட்டுமே அவர்களுக்கு சற்றே கவலை மறக்கச்செய்யும் மருந்தாக உள்ளது.

    //பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.//

    உண்மை தான்.

    பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. வீ.ஆர்.எஸ், ரிட்டயர்மெண்ட் இதலிருந்து தப்பித்து வரும் ஆண்கள் மிகக்குறைவு. அதனால் வரை பணம் சம்பாதித்து கர்வமாக உத்யோகம் புருஷலட்சணம் என்று இருந்த ஆண்கள் மதிப்பு போய்விடுமோ என்று பயந்து செய்யும் கலாட்டக்கள்தான் எல்லாம்.

    பதிலளிநீக்கு
  5. // மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்டை நரகமாக்கிக் கொண்டு பிடிக்காத தொழிலில் வேலை பார்த்து தானும் நிம்மதி இழந்து மனைவியையும் படுத்துவார்கள்.//


    //தன் உத்யோகப் பிரச்சனைகளைக் குடும்பத்துக்குள் புகுத்தாமலும் இருந்தால் குடும்பமே சொர்க்கமாகும். பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.//

    கணவன்மார்களே இங்கே கவனியுங்கள்... கவனத்தை தொழிலிலும் அன்பை குடுபத்துக்கும் செலுத்துங்கள் என்பதை கலக்கலாக சொல்லிவிட்டீர்கள்.... வாழ்த்துக்கள் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    நல்ல விரிவான அலசல்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. //ரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்புத் தொல்லைகளையும் இந்த வி ஆர் எஸ்ஸில் வெளி வந்த கணவர்களும் ., வி ஆர் எஸ்ஸீல் வரத்துடிக்கும் கணவர்களும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்//

    இதோட இன்னொரு வடிவத்தை நானும் பார்த்திருக்கேன். என்னோட தோழியின் கணவருக்கு வி.ஆர்.எஸ்ஸில் வர விருப்பமில்லை.. ஆனா, கம்பெனி அவரை அனுப்பத்துடிக்குது. விளைவு.. எல்லா டென்ஷனும் மனைவி தலையில்தான் கொட்டப்படும். பிள்ளைகளையும் விட்டுவைக்கிறது கிடையாது...இது இப்போ நேத்து இல்ல, நாலுவருசத்துக்கு மேலா இந்த மனவேதனையை அந்தப்பெண் அனுபவிச்சுட்டிருக்கார்.

    பதிலளிநீக்கு
  8. அருமை தோழி !

    யதார்த்தமான உண்மை, பதிவுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. இன்றைக்கு பயந்து பயந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் உபயோகமான கட்டுரை. நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அற்புதமான பயனுள்ள திறனாய்வு. பாராட்டுக்கள்,

    பதிலளிநீக்கு
  11. என்ன செய்ய முடியும் அவரவர் நேரம் அரசு வேலை என்றால் எந்த கவலையும் இல்லை எலோருக்கும் கொடுப்பினை வேண்டுமே

    பதிலளிநீக்கு
  12. நன்றி ரமணி., ரமேஷ்., கோபால் சார்., புதுகைத் தென்றல்., மாய உலகம்., நானானி., ரத்னவேல் சார்., சாந்தி., புவனேஷ்வரன்., ஜிஜி., ராஜி., பிரபாஷ்கரன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...