எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

சீர்திருத்தத் திருமணம் செய்த கனகலட்சுமி ஆச்சி

 சீர்திருத்தத் திருமணம் செய்த கனகலட்சுமி ஆச்சி


என் சின்ன மகனின் திருமணத்தின் போது என் சின்னமருமகள் கனகலட்சுமி ஆச்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என் மருமகள் ஓவியங்கள் வரையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றுக் கொண்டதற்கு இவரே காரணம் என்று கூறினார்.  என் மருமகளின் அத்தைமகளின் மாமியார் இவர். தன் அத்தைமகளின் வீட்டுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்த போது அவர்கள் வீட்டு ஹாலில் மிகப்பெரும் தஞ்சாவூர் பெயிண்டிங் ஒன்றை இவர் வரைந்து கொண்டிருந்ததாகவும் அதைக்கண்டு பிரமித்துத்தான் இவரைத் தன்னுடைய முன்னோடியாகக் கொண்டதாகவும் மருமகள் கூறினார்.

கனகலட்சுமி ஆச்சியின் உறவினர்கள் பழமையை எதிர்க்கும் சீர்திருத்தக்காரர்கள். இவரது குடும்பத்தில் திருமணங்கள் எல்லாம் சீர்திருத்தத் திருமணங்களே. சுப வீர பாண்டியன், டைரக்டர் எஸ் பி முத்துராமன் ஆகியோர் இவரது பிரியத்துக்குரிய சகோதரர்கள். பெருங்குடும்பத்தில் பிறந்ததனால் உறவைப் பேணுவதிலும் அனைவரையும் அரவணைத்துச் செல்வதிலும் வல்லவர் இவர்.

பொதுவா பெண்கள் கோலம் போடுவாங்க. கைப்பின்னல் வேலை செய்வாங்க. ஆனால் இவர் தன் குழந்தைகள் பிறந்த பின்னும் ஊர் விட்டு ஊர் சென்று பல கைவேலைகளையும் கற்று அசத்தி வருகிறார். தன் க்ரோஷா வேலைப்பாட்டுக்காகக் கின்னஸ்சான்றிதழ் வாங்கி இருக்கிறார். இவர் தன் கைவேலைப்பாடுகளில் தேர்ந்தெடுத்திருக்கும் நிறங்களின் கலவை என்னை அசத்துகிறது. அதேபோல் பர்ஃபெக்ட் வொர்க்கும் கூட.  தஞ்சாவூர் பெயிண்டிங்குகள் செய்யப் பொருட்செலவு அதிகம் ஆகும் என்பதால்அதை அதிகம் செய்வதில்லையாம்.

க்ரோஷா வேலைப்பாடு, தஞ்சாவூர் பெயிண்டிங், பென்சில் ட்ராயிங், எம்பிராய்டரி , பூக்கள் தயாரிப்பு, ஆயில் மற்றும் கான்வாஸ் பெயிண்டிங் என்று அனைத்துத் துறையிலும் தனது கைவினைப் பொருட்களைச் செய்துள்ளார். தற்போது கலம்காரி பெயிண்டிங்கையும் கற்றுக் கொண்டு போட்டு வருகிறார்.

கண்ணாடி கூட அணியாமல் பின்னல் வேலைகளும், ஓவியங்களும் வரையும் இவரது வயதைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். அதிகமில்லைங்க இந்தத் தன்னம்பிக்கை மனுஷியின் வயது 89 தான். பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வரை பார்த்துவிட்டார். இந்த வயதிலும் உடல்நலக் குறைவினால் செயல்பட இயலாமல் தவிக்கும் தன் மகனைப் பராமரித்து அவருக்கும் தன்னம்பிக்கைத் துணையாக வாழ்ந்து வருகிறார்.


வீட்டையும் மகனையும் கவனிப்பதோடு தன் கலாரசனையையும் கைவினைப் பொருட்கள் செய்வதையும் தொடர்கிறார் இவர். சொல்லப் போனால் இவர்கள் உறவினர்களின் வீடுகளில் இருக்கும் அநேகக் கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் இவரால் செய்து அன்பளிப்பாய் வழங்கப்பட்டவையே. சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலினை இவர் தம் சகோதரர்களோடுசென்று சந்தித்த போது இவர் தன்கையால் எம்பிராய்டரி செய்த உதயசூரியன் கட்சிச் சின்னத்தை அவருக்குப் பரிசளித்து மகிழ்ந்துள்ளார்.

தொலைக்காட்சியில் தொலைந்து கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு மத்தியில் சுறுசுறுப்பு, உழைப்பு என இப்படி ஒரு எனர்ஜி பூஸ்டர் பெண்மணியைச் சந்தித்ததில் மகிழ்கிறேன். இந்தப் பளிச் பெண்மணி  நம் வாசகியருக்காகத்  தன்னைப் பற்றிக் கூறியதை அப்படியே தருகிறேன்.

”என் பெயர் கனகலட்சுமி. என் வயது 87. என் பெற்றோர்கள் காரைக்குடி இராம.சுப்பையா, விசாலாட்சி. அப்பா ஆதிகாலத்திலிருந்தே சுயமரியாதைக் கட்சியில், பெரியாரின் தொண்டர். செட்டிநாட்டில் ஓர் சீர்திருத்தவாதி. நல்ல உழைப்பாளி. அப்பா கலைஞர்ஆட்சியில் ஆறு ஆண்டு காலம் எம் எல் சியாக இருந்தார்கள். கூடப்பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், ஒரு தங்கை. அண்ணன் டைரக்டர் எஸ் பி முத்துராமன். தம்பிகள் செல்வமணி, சுவாமிநாதன், சுபவீர பாண்டியன். தங்கை இந்திரா. செல்வமணியும் இந்திராவும் இறந்து விட்டார்கள்.

என் கணவர் இராம. சிதம்பரம். எங்களுக்கு ஏழு மக்கள். அனைவரும் நல்ல பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் வளரும் காலத்தில் டிவி, வாஷிங் மெஷின், கேஸ் ஸ்டவ், ஃபோன், கிரைண்டர் எதுவும் கிடையாது. பள்ளிக்குப் போய் வந்தவுடன் எங்களுக்கு உதவியாக மாடு, கன்று, தோட்டம், துரவு, வயல் வரப்பு என்று எல்லா வேலைகளும் பார்ப்பார்கள்.

என் கணவர் இராம. சிதம்பரம் மெட்ராஸ் ஸ்டோர்ஸ் கடை வைத்திருந்தார்கள். ப்ரில் இங்க் ஏஜெண்ட். எனக்குத் தமிழில் மிக ஆர்வம். தமிழ் ஆசிரியை ஆக வேண்டும் என்று முடியரசன் அவர்களிடம் போய்க் கேட்டேன். ”நீ பிள்ளைகளையும் மாப்பிள்ளையையும் பார்த்துக்கொண்டு பேசாமல் இரு” என்று சொல்லி விட்டார்கள். ஒரு பிழை இல்லாமல் எழுதுவேன், படிப்பேன். நான் எஸ் எஸ் எல் சி வரைதான் படித்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில் என் அப்பா மாப்பிள்ளையிடம் என் பெண்ணைப் படிக்கவைக்க வேண்டும். ஐயர் இல்லாமல் சீர்திருத்தக் கல்யாணம் செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள்.மாப்பிள்ளையும் ஒத்துக் கொண்டு என்னை இரண்டு ஆண்டு காலம் படிக்க வைத்தார்கள். பதிநான்கரை வயதில் திருமணம். எனக்கு அடுப்புப் பற்றவைக்கக் கூடத் தெரியாது. எனக்கு உறுதுணையாக இருந்து என்னையும் எஸ் எஸ் எல் சி வரை படிக்க வைத்த பெருமை என் கணவரையே சாரும்.

என்னுடைய அறுவது வயதில், காரைக்குடியில் இருந்து தினமும் மதுரைக்குப்போய், வள்ளியம்மை என்ற பெண்ணிடம், காலையில் ஃபர் பயிற்சிக்கும், மாலையில்பெயின்டிங் பயிற்சிக்கும் போய் வந்தேன். ஹோம் ஒர்க்கை வீட்டிற்குப் பேருந்தில் கொண்டுவந்து செய்து அடுத்த வகுப்புக்கு எடுத்து செல்வேன். பெரிய புலி செய்து ஊஞ்சலில் மாட்டி இருந்தோம். நாய், டெடிபியர், பேரட், மங்கி அனைத்தையும் செய்தேன். மற்றும் மாலையில் Tanjore பெயின்டிங் கற்று கொண்டேன். மற்றும் Crochet கற்றுக்கொண்டு ஒரு குழுவில்சேர்த்து World Guiness ரெகார்ட் வாங்கி உள்ளேன். 

மெஷின் எம்பிராய்டரி, குஷன் எம்பிராய்டரி போடுவேன். ஜி டி நாயுடு தயாரித்த ஊசி இப்போது கிடைக்கவில்லை. முன்பக்கத்தில் பின்னிவிட்டுப் பின்புறம் கத்திரியால் கத்திரித்து எடுத்தால் பந்து மாதிரி, பூ, மயில், குருவி எது வேண்டுமானாலும் செய்யலாம். காரைக்குடியில் பக்தர் என்பவர்களிடமும், திருச்சியில் பெரியண்ணன் அவர்களிடமும் தஞ்சை ஓவியம் கற்றுக் கொண்டேன்.


திருச்சிக்கு வந்து மலைச்சாமி அவர்களிடம் க்ளாஸ் பெயிண்டிங், தஞ்சைஓவியம் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியும் வணக்கமும். என்னுடைய ஓவியங்களில் மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஓவியம் அரச இலை ஓவியம். ஃபேஸ்புக்கில் கனகம் என்று போட்டுப் பார்த்தால் என் கைவேலைப்பாடுகள் பற்றிய புகைப்படங்கள்கிடைக்கும். ஃப்ளவர், ஃப்ளவர் வாஷ், வளையல்கள் செய்திருக்கிறேன். 

என்னுடைய 50 ஆவது வயதில் காரைக்குடிஎம் எஸ் எம் எஸ் ஹைஸ்கூலில் பேரண்ட் டீச்சர் பிரசிடெண்டாக 3 ஆண்டுகள் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்தேன். சென்னையில் நடந்த மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன். காலமும், காலத்தின்மாற்றமும் என்ற தலைப்பில் பேசினேன். 87 வயதில் கவிதைகள் எழுதுகிறேன். என்னுடைய 60 வயதில் ஹிந்தி ப்ராத்மிக் எக்ஸாம் எழுதி ஃபர்ஸ்ட் க்ளாஸில் வெற்றி பெற்றுள்ளேன்.  இன்றைக்கும் Embroidery, cushion embroidery, painting செய்கிறேன். வெட்டிப் பொழுதுபோக்குவதில்லை. TV சீரியல் பார்ப்பதில்லை. இந்த வயதிலும் கண்ணில் கண்ணாடி போடாமல் அத்தனைவேலைகளையும் பார்க்கிறேன்.  

முடியும் என்றால் எதையும் சாதிக்கமுடியும்.  வெற்றி வந்தாலும் பணிவுடன் தான், தோல்வி வந்தாலும், பொறுமையுடன் தான், எதிர்ப்பு வந்தாலும் துணிவுடன் தான், எது வந்தாலும் நம்பிக்கையுடன் தான். இதுதான், இப்படிதான் என்று எதுவும்இல்லை. எது எப்படியோ, அது அப்படிதான் என்று, ஏற்றுக் கொண்டால் வாழ்கை வசந்தமாகும்.  அன்புடன் கனகலட்சுமி.” முத்தாய்ப்பாய்க் கூறிய தன்னம்பிக்கைவரிகள் அருமை கனகலட்சுமி ஆச்சி. லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடரட்டும் உங்கள் கலைப்பணி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...