எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 7

 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 7

  குட்டீஸ் என்ன பண்றீங்க”. தனது ஈஸிசேரில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதன் பெட்ரூமை நோக்கிக் குரல் கொடுத்தார்.

  அங்கே பெருத்த அமைதி நிலவிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ளும் சப்தம் கேட்டால்கூடக் கலங்காத ஆராவமுதன் இருவரும் அமைதியாக இருப்பதைக் கண்டால் கலங்கி விடுவார். ஏனெனில் ஏதோ அவர்களை பாதித்த விஷயம் நடந்திருக்கலாம் என்பதை அவருடைய அனுபவ அறிவு சொல்லிவிடும்.

  உள்ளே அவரது மருமகள் ரம்யா பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். நடுவில் வேலையாக கிச்சனுக்குச் சென்றிருந்தாள். கால்மணி நேரமாக சப்தமில்லாமல் இருவரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று போய் எட்டிப் பார்த்தார்.

  தலை நிமிர்ந்து பார்த்த ஆதித்யா, “தாத்தா தாத்தா எனக்கு நாளைக்கு அல்ஜிப்ரா டெஸ்ட். ரொம்ப டஃபா இருக்கு. சரியா போட முடியாம அம்மாட்ட திட்டு வாங்குறேன்.” பரிதாபமாகப் பார்த்தான்.

  தலை தொய்ந்து அமர்ந்திருந்த ஆராதனா தாத்தா” எனக்கு நாளை இங்கிலீஷ் பேப்பர் டூ கிராமர் டெஸ்ட் . எனக்கு வவல்ஸ் எங்க போடுறதுனு தெரில. இதெல்லாம் எதுக்காம் ”.என்றாள். இருவரின் விழிகளும் பளபளத்துக் கொண்டிருந்தன.

  மருமகள் கிச்சனிலிருந்து வந்து பிள்ளைகளோடு அமர்ந்து கொள்ள அவர் ஈஸி சேருக்குத் திரும்பினார். “எலக்கணம் படிக்கவில்லை. தலைக்கனமும் எனக்கு இல்லை “ என்று டிவியில் அசந்தர்ப்பமாக சுகாசினி பாடிக்கொண்டிருக்க உள்ளே சிரித்த இருவரும் அம்மாவிடம் மண்டையில் தட்டு வாங்கினார்கள்.

  படக்கென்று டிவியை அணைத்துவிட்டு ஆராவமுதன் குழந்தைகளுக்காகக் காத்திருந்தார். ஓரளவு அவர்கள் ஹோம் வொர்க்கை முடித்ததும் மூவரும் ரம்யா கொடுத்த உப்புமாவை சப்தமில்லாமல் சாப்பிட்டனர்.

  ”பிள்ளைகளோடு பத்து நிமிஷம் வாக்கிங் போயிட்டு வர்றேம்மா” என்று கிளம்பினார் ஆராவமுதன். இரு கைகளிலும் இருவரும் தொற்றிக்கொண்டு ஜாலியாகக் கிளம்பினார்கள்.

  ”மாமா நைட் நேரம் குல்ஃபி ஏதும் வாங்கிக் கொடுத்துடாதீங்க. நாளைக்கு டெஸ்ட் வேற இருக்கு. இல்லாட்டி இந்த சுட்டீஸ் ரெண்டும் சுட்டி போட்டுடும்.” என்று எச்சரித்து அனுப்பினாள் ரம்யா.

  தோட்டம் சூழ் வீடுகள், வில்லாக்கள் இருந்த இடத்தில் அமைந்திருந்தது அவர்கள் வீடு. ரோட்டில் எப்போதாவது குல்ஃபி , பாம்பே மிட்டாய் வருவதுண்டு. அன்றைக்கு ரோடு வெறிச்சோடி இருந்தது . அவர் மகன் ராஜன் அலுவலகத்தில் இருந்து வர இன்னும் சிறிது நேரமாகும்.

  மணி எட்டுத்தான் ஆயிருந்தது. குதித்துக் கொண்டே சென்ற பிள்ளைகள் அவர் கதை சொல்ல ஆரம்பித்ததும் கைபிடித்தபடி வந்தார்கள்.

  ”உங்களுக்கு இன்னிக்கு நான் காளிதாசன் என்ற கவிஞனைப் பத்தி சொல்லப்போறேன். அவனை ஏதோ ஊமை, படிப்பறிவில்லாதன் அப்பிடீங்கற மாதிரி சொல்றாங்க. அப்பிடி எல்லாம் இல்லை. அவன் அறிவாளிதான் “

  “நான்காம் நூற்றாண்டில் உஜ்ஜெயினில் பிறந்தார் காளிதாசன். அவர் மகிஷாபுரி இளவரசியை திருமணம் செய்துகொண்டார். இயல்பிலேயே கவிஞனா இருந்த அவர் தன்னோட மனைவியின் சவால்ல ஜெயிக்க மகா கவிஞனா ஆனாரு”

  ”சாதாரணமா ஒன்றிரண்டு இல்ல பல காவியங்கள் இயற்றி இருக்காரு. சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம் இதுமாதிரி பல காவியங்கள் எழுதி இருக்காரு. “

  “ஒரு மனிதன் பயிற்சியின் மூலமும் முயற்சியின் மூலமும் தன்னை செழுமைப்படுத்திக்க முடியும். அவர் தன்னால முடிஞ்ச சிறப்பானதைப் படைக்கணும்னு நினைச்சாரு. அந்த உறுதியிலேயே படைச்சாரு. இந்த உலகத்துல கஷ்டம்னோ கத்துக்க முடியலைன்னோ எதுவுமே கிடையாது. பயிற்சி செய்யணும் அதுதான் முக்கியம். “

  ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் புரிந்தது பாடம் படிப்பதையும் கஷ்டமா நெனைச்சு கடமையா செய்யக்கூடாதுன்னு தாத்தா சொல்றாருன்னு.

  அங்கே சென்ற பாம்பே மிட்டாய் வண்டியையே அவர்கள் ஏக்கமாகப் பார்க்க இருவருக்கும் ஆளுக்கொரு பொட்டலம் பாம்பேமிட்டாய் வாங்கிக் கொடுத்தார். பொசு பொசுவென்றிருந்த அந்த சோன்பப்டி இருவரின் வாயிலும் பட்டு கன்னங்களிலும் பட்டு இனிப்பாகிக் கொண்டிருந்தது.

  மந்தமாருதம் வீசிக் கொண்டிருக்க நீள ரோட்டிலிருந்து திரும்பி வீடு நோக்கி வந்தார்கள்.  அவர்களது தந்தை ராஜனின் பைக் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த குட்டீஸ் ரெண்டும் ஓடிப்போய் கேட்டைத் தட்டிக்கொண்டு அப்பாவிடம் பாய்ந்தார்கள்.

  ”என் செல்லம் ரெண்டும் சாப்புட்டுச்சா” என்று இருவரையும் இரு கைகளில் வளைத்துத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார் ராஜன். ”சாப்புட்டோம்பா.. உப்புமா” என்று கையை அவர் மூக்கருகே கொண்டு சென்று இருபக்க கன்னங்களிலும் சோன்பப்டி வாயால் முத்தின.

  கணவருக்கு தட்டில் உப்புமாவை எடுத்து வைத்துவிட்டுப் பிள்ளைகள் அருகே வந்தாள். ”அம்மா குல்ஃபி தானே வேண்டாம்னே . அதுனால பாம்பேமிட்டாய் சாப்பிட்டோம்” என்று அவளையும் முத்தினார்கள். மூக்கைப் பிடித்துத் திருகி இருவரையும் கொஞ்சினாள் ரம்யா.

  அம்மா ஏ ஸ்கொயர் ப்ளஸ் பி ஸ்கொயர் என்று சொல்லிக்கொண்டு சென்ற ஆதித்யாவை இடைவெட்டினாள் ஆராதனா. அம்மா ஏ ஈ ஐ ஓ யூ வவல்ஸ்.. என்று சொல்லிச் சிரித்த அவளின் கைபிடித்து இழுத்து விழுத்தாட்டினான் ஆதித்யா. இருவரும் சிரித்தபடி கட்டிலில் உருண்டார்கள்.

  ”அப்பாடா இன்னிக்கு அம்மா பக்கத்துல படுக்குறதுக்கு சண்டை போடலையே சமத்துச் செல்லம்ஸ்” என்று சிலாகித்தபடி கிச்சனை ஒழித்துவைக்கச் சென்றாள் ரம்யா.

  அம்மாவோட ரைட் ஹாண்ட் சைட் நாந்தான் படுப்பேன் இல்ல நாந்தான் படுப்பேன் என்று துவந்த யுத்தம் ஆரம்பமாகி இருந்தது.   

      7.     எண் எழுத்து இகழேல்
       கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...