எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 செப்டம்பர், 2023

எங்கள் தோழர் விநாயகர் - ஒக்கூர் சசிவர்ணவிநாயகர் கோவில் கும்பாபிஷேக மலரில்.

 எங்கள் தோழர் விநாயகர்


புது முயற்சி, வியாபாரம், சுபநிகழ்வுகள் எதுவென்றாலும் பிள்ளையார் சுழி போட்டு செயலெதுவும் தொடங்குவோம்.. சொல்லப்போனால் உ என்ற எழுத்துக்கு சிவன் என்று பொருள். அதை நாம் பிள்ளையார் சுழி எனக் கூறுகிறோம். சமண, பௌத்தக் காப்பியங்கள், பிரபந்தங்கள், சங்ககால இலக்கியங்கள் தவிர அனைத்துப் பக்தி இலக்கிய நூல்களையும் நாம் விநாயகர் காப்பைக் கொண்டே தொடங்குகிறோம். புதுமனை புகுதல், திருமணம் மற்றும் எந்த ஹோமம், பூஜை என்றாலும் விக்னம் இல்லாமல் நடந்தேறவேண்டி விநாயகருக்கு அனுக்ஞை பூஜை செய்து யதாஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தபின்தான் மற்ற பூஜைகள், ஹோமங்கள் செய்யப்படும்.


விழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள் என முருகனிடம் உருகும் நாம் நம் வழிக்குத்துணையாக அவரைக் கூப்பிட்டாலும் நம் வழி முழுவதும் (ஆலோ, அரசோ, குளமோ கம்மாயோ, அதனருகில் கோயில் கொண்டு) துணையாக வருபவர் கணபதி. பாலும் தெளிதேனுமோ,பாகும் பருப்புமோ, கைத்தலம் நிறை கனியோ, அப்பமோடு அவல்பொரியோ படைப்பதெல்லாம் நம் விருப்பம்தான். ஆனால் மிக எளிமையாக ஒரு சிதர்காயை உடைத்துவிட்டால் நம் வேண்டுதல்கள் எல்லாம் அவர் அருளால் சித்தியாகிவிடும் என்பது கண்கூடு.

வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்டவர் என்று ஒரு கருத்து நிலவினாலும் பல நூற்றாண்டுகளாக நம்முடைய சமூகத்தினர் விநாயகர் வழிபாடு செய்தும், பிள்ளையார் நோன்பு கொண்டாடியும் வருகிறோம். சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தியும் அவரை வணங்க விசேஷமான தினங்கள். மூன்றாம் பிறையில் தோஷத்தால் பீடிக்கப்பட்டு மங்கும் சந்திரன் நாலாம் பிறையில் விநாயகர் அருளால்தான் விசேஷமாகத் தரிசிக்கத்தக்கவர் ஆகிறார்.

16 சோடச நாமங்கள். 32 வித விநாயகத் திருச்சிற்பங்கள். ஆயிரக்கணக்கான வண்ண வண்ண ஓவியங்கள், இப்படி எவற்றில் பார்த்தாலும் சலிக்காத திருமேனி கொண்டவர். ஏன் மஞ்சளிலோ, மண்ணிலோ, சாணத்திலோ, பச்சரிமாவிலோ கூம்பாகப் பிடித்து வைத்தால் அதுவும் நம் மனக்கண்ணில் பிள்ளையாராகத் தோன்றுவது பேரதிசயம். விநாயகரே பிரவண ரூபம்தான். தாயின் திருமேனியில் உருவாகி மாறுதலையாக ஆனைத் தலையும் ஐங்கரமும் பெற்றவர். அனலாசுரனை விழுங்கியதால் அருகம்புல்லால் குளிர்ச்சி அடைந்தவர். ஒரு உருவிலேயே இரு அவதாரங்கள் (சிரம்)  எடுத்தவர்.

அங்காரகனை அமரன் ஆக்கியவர், காவிரி நலம்பெருக்கக் காக்கையாய்த் தட்டியவர், ஆமையின் இறுமாப்பு அடக்கக் கடலைக் குடித்த தொப்பையப்பர், பாம்பை இடைக்கயிறாய்க் கட்டியவர், விஷ்ணுவின் சக்கரத்தை எடுத்து விஷ்வக்சேனரை விகடக் கூத்தாட வைத்தவர். கொம்பை ஒடித்து எழுதுகோலாக்கிப் பாரதம் எழுதிய புதுமை எழுத்தாளர். மோதகப் பிரியர், மூஷிக வாகனர், சசி வர்ணர்.  பெற்றோரே உலகம் என்று உலாவந்து மாங்கனியைப் பெற்றவர். சுந்தரரும் சேரமானும் கையாயத்தை எட்டுமுன் தன் பக்தையாகிய ஔவையைத் துதிக்கையால் தூக்கிக் கயிலாயத்தில் சேர்த்தவர்.  

விநாயகர் வழிபாட்டுக்குக் காணாபத்யம் என்று பெயர். விநாயகர் அகவல், கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை, விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான், காக்கும் கடவுள் கணேசனை நினை, என்று சீர்காழியும், எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி என்று பாரதியாரும் பாடியதும் மட்டுமல்ல. ஒவ்வொரு பிள்ளையார் நோன்பின் போதும் நம் இல்லத்தில் அனைவரும் கூடிச் சொல்லும் பிள்ளையார் சிந்தனையும், பள்ளியிற் பிள்ளையார் சிந்தனையும் நம் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருக்கிறது. பிள்ளையார் நோன்பில் இழை எடுத்துத் தீபம் காட்டி வணங்கி உண்பதும் நம்மவரின் சிறப்பு வழக்கம்.  


காரைக்குடி நெல்லி மரத்துப் பிள்ளையார் எங்கள் அருணாசல ஐயா வணங்கி வந்த திருமூர்த்தம். வெள்ளிக்காப்பு செய்து சிறப்பு நாட்களில் அணிவித்து மகிழ்வார்கள். மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. 1986 இல் தனியாகக் காட்சி அளித்தவர் இன்று தன்னைச் சுற்றிலும் சொல் கேட்ட கல்யாண விநாயகர், நூற்றெட்டுப் பிள்ளையார், ஆஞ்சநேயர், அம்மன், பதினெட்டாம் படிக் கருப்பர், பனையடிக் கருப்பர், சனீஸ்வர பகவான் ஆகியோர் (தனித் தனித்தனியாகக் கோயில் கொண்டுள்ளார்கள்) புடைசூழத் திருக்காட்சி அளிக்கிறார்.

அதன் பின் மன்னார்குடி ஆனந்த விநாயகர் சிந்தை கவர்ந்தார். தந்தையார் அங்கே மார்கழி மண்டகப்படிக்குக் கொடுப்பார்கள். பரிட்சை என்றால் பிரார்த்தனைகள் பலமாகி விடும். சொல்லப்போனால் கோயில் எதிரே எங்கள் பள்ளி அமைந்திருந்ததால் தினம் விநாயகரை வணங்காமல் சென்றதேயில்லை. நெற்றியில் குட்டி குட்டி மனனம் செய் என வாத்தியார்களின் அறிவுரைகள் வேறு தொடர்ந்து வரும் J

பிள்ளையார்பட்டி விநாயர் பற்றியோ கேட்கவே வேண்டாம். மலையோடு அமைந்த திருமூர்த்தம். அங்கே கிடைக்கும் தோமாலை விசேஷம். நெற்றியில் குட்டி உக்கிகள் போட்டால் ஞாபக சக்தியையும் உடல் ஆரோக்யத்தையும் பெருக்குபவர். கணபதி ஹோமம் பிரம்மாண்டமாய் நடக்கும். பசவங்குடி தொட்ட கணபதி, மதுரை முக்குறுணி விநாயகர், கோவை முந்தி விநாயகர், ஈச்சனாரி விநாயகர் ஆகியோரோடு பிள்ளையார்பட்டி மாபெரும் விநாயகர்தான் என் முதல் விருப்பத்துக்குரியவர்.

மன்னை ஆனந்த விநாயகர் எங்கள் சிறுவயதுத் தோழர். எங்கள் எல்லா நம்பிக்கையும் வேண்டுதல்களும் இவரிடம் இருந்தே ஆரம்பிக்கின்றன. நாங்கள் முதன் முதலில் அறிந்த எங்கள் விளையாட்டுத் தோழன், வழி நடத்துபவன் , துணை வருபவன், தோள் கொடுப்பவன்  & ஆத்மார்த்தக் கடவுள். இத்தனை வருடம் கழித்துச் சென்ற வருடம் சென்று பார்த்தபோதும் அதே மாறாத புன்னகையோடு எங்களோடு என்றும் இருப்பதான ஒரு பார்வை பார்த்தார். இருவரும் எங்கெங்கோ இருந்தாலென்ன? அகமும் முகமும் குளிர அவரைத் திரும்பவும் சேர்த்தெடுத்துக் கொண்டு ஆனந்தத்தோடு வந்தோம்.

நெல்லிமரத்துப் பிள்ளையார் காரைக்குடி என்பதால் என் வாழ்வு நெடுக துயரங்களில் என்னைச் சுமக்கும் தோணியாகவும் என் ஏற்றங்களின் ஏணியாகவும் என்றென்றும் என் கைத்துணையாகவும் திகழ்பவர். எனவே விநாயகர் இல்லாமல் என் வாழ்வில்லை. முன்பு புதுவயல் கைலாச விநாயகர் கும்பாபிஷேக மலருக்காகக் கவிதை ஒன்று எழுதினேன். இன்று சசிவர்ண விநாயகருக்காக இக்கட்டுரையை ஆத்மார்த்தமாகச் சமர்ப்பிக்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...