எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

உபஸர்க்கம்

உபஸர்க்கம்

ன்னைப் பார்க்கவேண்டும், ரசிக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் எத்தனையோ ஆசை இந்த மனதிலே.. அதை என்னவென்று எடுத்துச் சொல்லத் தெரியலை.. ஐ டோண்ட் நோ .. ஐ லவ் யூ “ என்று காரில் இருந்த ஆடியோ பாடிக் கொண்டிருந்தது. ஒரு அவசர வேலை இருப்பதாக நண்பர் குமாரின் அலுவலகத்துக்கு விரைந்து கொண்டிருந்தான் சாம். சிந்தனைகளின் வேகத்தில் அவசரமாக வெளிவந்து லிஃப்ட் வர நேரமானதால் படிகளை இரண்டிரண்டாகத் தாண்டி இறங்கினான் சாம்.

அவன் எண்ணப் போக்குக்கு ஈடு கட்டும் விதமாக ட்ரைவரும் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார். நாற்பதாண்டு காலமாக குடும்பத்துக்கு சேவை செய்து வரும் ட்ரைவர் அய்யாக்கண்ணு. முதலாளிகளின் மனவோட்டம் அறிந்தவர். ஆனாலும் ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார். அவரை மீறி எதுவும் எங்கும் போகாது. நம்பிக்கையான ஆள்.

பிஸினஸில் பெரிய லாஸ் , அதைத் தவிர்க்க வேண்டும். அதைக் கூறாமல் ’மூன்று மணி நேரம் குமாருடன் அர்ஜண்ட் பிஸினஸ் மீட்டிங்க் இருக்கப்போகிறது எனவே தொந்தரவு செய்யவேண்டாம்’ எனத் தேவியிடம் கூறிவிட்டுத்தான் கிளம்பி இருந்தான் சாம். 

டாக்டரைப் பார்க்க வேண்டும் என மஹாராணியிடம் ஃபோனில் சொல்லி இருந்தான். அவள் ”இல்லையே அடுத்த மாதம்தானே” எனக் கூறியபோது முக்கியத் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்றும் சில ப்ரிகாஷன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டியிருப்பதாலும் அழைத்ததாகச் சொன்னான். அவள் குரலை ஃபோனில் கேட்டதில் இருந்து அவன் உள்ளம் துள்ளிக் கொண்டிருந்தது. நினைத்தது எல்லாம் கைகூடி இருக்கிறது , இது கூடாதா என்ன ?

குமாரின் அலுவலகம் நெருங்கிக் கொண்டிருந்தது. ட்ரைவரிடம் வர நேரமாகும் திரும்ப அழைக்கிறேன் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டு வேகமாகப் படி ஏறினான். துள்ளலாக ஏறும்போது கால் ஸ்லிப்பாகியது. இரண்டு படி எட்டிக் கீழே விழாமல் தப்பிக்கக் கைப்பிடியைப் பிடிக்க கால் மடங்கி கட்டைவிரல் மேல் முழு உடல் பாரமும் ஏறி மளுக்கென்றது. ஒரு கணம் உலகமே இருள காலைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.

கிண்ணென்று கரண்ட் அடித்தாற்போல வலித்தது. நீ செல்லும் வழி தவறானது என்று தடுக்கிறதோ. ஆசை வெட்கமறியாதே. வலியும் அறியவில்லை. மெல்ல மெல்லக் கெந்தி எழுந்தான். மறுபக்கம் லிஃப்டில் இறங்கி அலுவலகத்தின் பின்புறம் வந்து ரோட்டுக்குச் சென்று ஆட்டோ பிடித்தான்.

சீராக ஓடிய ஆட்டோவில் அமர்ந்து காலை வருடியவாறு “ ராணி கிளம்பிட்டியா. நான் வந்திட்டு இருக்கேன். கார் ரிப்பேர். நீ மெயின்ரோட்டுக்கு வந்துடு. வரமுடியுமா “ என்றான். அவள் பதில் கேட்டுப் புன்னகைத்தவாறு ஃபோனை சட்டைப் பையில் வைத்தான்.

”ட்ரைவர் திரும்புங்க அந்த லெஃப்ட். அப்புறம் ரைட்”. என்றான். அங்கே மஹாராணி வந்து கொண்டிருந்தாள். பகலில் நிலவாய், தண்ணென்ற சூரியனாய், வசந்தகாலம் திரும்பியது போலிருந்தது அவனுக்கு. என்ன அழகு எத்தனை அழகு.. கொள்ளை அழகும் கம்பீரமுமாக வந்த அவளின் கை பற்றி அமரவைத்தான். யதேச்சையாகத்தான் நிகழ்ந்தது எல்லாமே.

ஆட்டோ டிரைவர் முன் பக்கம் சென்று வண்டியின் ஏதோ ஒரு பாகத்தைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்து முகம் கழுவித் தண்னீர் குடித்தார். சாமுக்கு எல்லாமே வசதியாக அமைந்து விட்டது.

வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. கர்ச்சீப்பை எடுத்து வேர்த்திருந்த அவள் முகத்தைத் துடைத்தான். அப்படியே கைகள் லேசாக வயிற்றின் மேல் சென்று வருடியது. புளகாங்கிதம் அடைந்தான். தன் சொத்தைத் தொட்டதும். திகைப்பாய்ப் பார்த்த அவளிடம் ”எப்பிடிடா இருக்கே” எனக் கேட்டபடி தோளின் பக்கம் கை போட்டுக் கொண்டான்.  அந்த ஆட்டோவில் வெய்யில் நேரத்தில் இருவர் அமரவே அசௌகர்யமாக இருந்தது.

வேர்த்து ஊற்றியது இருவருக்கும். ”எல்லாம் ஓகே நோ ப்ராப்ளம் . ஏன் கூப்பிட்டீங்க.” என்று கேட்டவளின் கண்கள் சிரித்தன. ’திருடா. எல்லாம் பொய்னு தெரியும்’ என. மலர்ந்து சிரித்த அவளின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவன் மனதின் எல்லாக் கவலைகளும் அழிந்த மாதிரி இருந்தது. புதிதாய்ப் பிறந்திருந்தான்.

”சரி எனக்குத் தெரியும் ஹாஸ்பிட்டலுக்குப் ஃபோன் செய்தேன். இன்னிக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லைன்னாங்க. சோ.” என்று குறும்பாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இவளை ஏமாற்றவே முடியாதோ.. விழி விரித்துப் பார்த்தான்.

”ஆமாம் நான் பார்க்கணும் என் குட்டிப்பாப்பாவை அதான் வர சொன்னேன். விரலால குத்தும்னு எல்லாம் படிச்சேன். அதான் அது விரலைத் தொட்டுப் பார்க்க வரச் சொன்னேன் ”என்றான் பிள்ளைபோல் முகத்தை மாற்றியபடி. ”இப்பவேவா . இப்ப ரெண்டு மாசம்தானே ஆகுது. அதுக்கு அஞ்சு மாசம் ஆகணும் . அப்பலேருந்து பத்து மாசம் வரைக்கும் உள்ளே குஸ்தி போடும்” என்றாள். இதைக் கேட்டதும் மகா த்ரில்லிங்காக இருந்தது அவனுக்கு. குழந்தைகளின் உலகம். இவளோடே இருந்துடமுடியாதா ஏக்கத்தோடு பார்த்தான்.

”சரிங்க உங்களுக்கு நேரமாகலையா” எனக் கேட்டபடி தன் தோளின் மீதிருந்த அவன் கையை இதமாக விலக்கியபடி எடுத்துப் பிடித்துக் கொண்டாள். அதிகப் பாசம் அவனைப் போக விடாது. அதற்கென்று விட்டேற்றியாகவும் இருக்க முடியாதே. தன் மனம் மாறிய அதிசயம் அவளுக்கு வியப்பாயிருந்தது.

மஞ்சள் கலரில் டிசைனர் சட்டை அணிந்து கூலர்ஸ் போட்டிருந்தான். நல்ல கருகருவென்று மீசை. கம்பீரமான ஆண்மகன். தனக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தகப்பன். கரு தன்னுடையது இல்லையென்றாலும் அதைச் சுமக்கும் தாய் தான்தானே.. என் குணாதிசயங்களும் அக்குட்டிப் பாப்பாவுக்கு வரும்தானே. லேசான குழப்பமும் மயக்கமுமாக வந்தது அவளுக்கு. அவன் தோளில் தன்னையறியாமல் சாய்ந்தாள்.

கருத்தரித்ததிலிருந்து நேரம் தவறாமல் சார்ட் படி உணவெடுத்துக் கொண்டிருந்தாள். ஏதேனும் சாப்பிட குடிக்க வேண்டும் போலிருந்தது. ”பக்கத்துல ஒரு ஜூஸ் கடை இருக்கு ஏதும் ஜூஸ் குடிப்போம்” என்றாள் அவள்.

”சே என்ன மடையன் நான். அவளுக்கு வெய்யிலில் மயக்கமாக இருக்கு. என் பிள்ளையும் பசியா இருக்கும்.” நினைத்ததும் பாசம் பொங்கியது அவனுக்கு.

”ட்ரைவர் ஆட்டோவை எடுங்க ” என்றான். ட்ரைவர் பக்கத்தில் இருந்த பெரிய பழமுதிர் சோலையில் நிறுத்தியதும் இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு குங்குமப்பூ, அத்திப்பழம், தேன் நெல்லி, ஃப்ரெஷ் பேரீச்சைகள், பழங்கள் என இரண்டு பேஸ்கட்டுகளில் நிரப்பிக் கொண்டுவந்துவிட்டான்.

அவன் கெந்தி கெந்தி நடப்பதைப் பார்த்த ராணி ”காலுக்கு என்னாச்சு” என்றாள். இரண்டு பெரிய மக்குகள் நிறைய மாதுளைச் சாறை அருந்தியவுடன் ஆட்டோவில் வந்து அமர்ந்து தன் வெள்ளை வெளேரென்ற காலைக் காண்பித்தான். ”வேகமாப் படி இறங்கினேன். ஸ்லிப்பாகி இடிச்சிருச்சு” என.

”ஏன் லிஃப்ட் என்னாச்சு. எல்லாத்துக்கும் அவசரம் “ என உரிமையாய்க் கோபித்தபடி  கன்னிப் போய் ரத்தத்துடன் நகம் பிதுங்கியிருந்த கட்டைவிரலைத் தொட்டாள். ”ஔச்” எனக் கத்தியபடி அவளின் கரத்தைத் திரும்பப் பிடித்துக் கொண்டான் சாம். இருவருக்கும் பேசத் தோன்றவில்லை. காலை லேசாக வருடிக் கொடுத்தபடி இருந்தாள். ”எதுக்கும் ஒரு டிடி போட்டுடுங்க.அப்பிடியே ட்ரெஸ்ஸிங்கும் பண்ணனும் பக்கத்துல க்ளினிக் எதுனாச்சும் போவோமா” என்றாள்.

”இல்ல பார்த்துக்குறேன்” என்றான். அவள் முகத்தைக் கைகளில் ஏந்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு. மௌனமான புரிதலில் சில நொடிகள் கழிந்தது. இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவரைப் பிரியச் சம்மதமில்லை. இருந்தும் பிரிந்துதானே ஆகவேண்டும்.  கைகளை இறுக்கிப் பிடித்தான். நடுவிரலில் அவளின் மோதிரம் நெருடியது. நல்லவேளை திருமண மோதிரமில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

தாய்மையின் விகசிப்பில் இருந்த அவள் முகத்தை ஆசையுடன் படம்பிடித்துச் சேமித்து தொலைபேசி எண்ணுடன் பதிந்தான். தன்னையும் அவளையும் ஆட்டோக்காரரிடம் ஃபோனைக் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டான். சோதனைகளின் ஆரம்பகட்டம் அது என்பதை உணராமல்.

பிரிய மனமில்லாமல் இறங்கினாள் ராணி. ”சரி டாக்டர்கிட்ட காமிச்சிட்டு ஃபோன் பண்ணுங்க” என்றாள். பார்வைகள் நான்கும் பதியமிட்டதுபோல் பிரிய மறுத்தன. மெல்லத் திரும்பி நடந்தாள். தாய்மையின் கனிவில் மின்னும் அவளது உடலையும் அசையும் அழகான பின்புறத் தோற்றத்தையும் ரசித்தபடி இருந்த அவனை ட்ரைவரின் குரல் உலைத்தது.

”யாரு சார் அவுங்க ” என்றார் ட்ரைவர்.

”என் அத்தை பொண்ணு” . ”கல்யாணமாயிடுச்சு.” என்பதோடு நிறுத்திக் கொண்டான்.

”அப்பிடியா அவங்க உங்களை லவ் பண்றாங்களோன்னு நினைச்சேன். ரொம்ப பாசமா பேசிக்கிட்டிருந்தாங்க.”  என்றார்.

”அப்புறம் ஏன் கேக்குறீங்க ” என சிரித்தபடி இவன் கேட்டதும் ஆட்டோ ட்ரைவர் முகத்தில் ரகசியத்தைத் தெரிந்துகொண்ட புன்னகை மின்னியது.

ந்தப் பழைய கோயிலின் பிரகாரங்களில் முடை நாற்றம் வந்து கொண்டிருந்தது. ஃபோன் ரிங்கிட்டுக் கொண்டே இருந்தது. காளிகாம்பாள் கோயிலுக்குத்தான் எப்போதும் செல்வது. பக்கத்தில் இருக்கும் இந்தப் புராதனக் கோயிலும் சக்தி வாய்ந்தது என அர்ச்சகர் சொல்லவும் அங்கேயும் போகச் சொல்லி டிரைவரிடம் சொன்னாள் தேவி.

மிகப் பழைய கோயிலான அது அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்தது. என்னவோ அதன் கொடுமையான நேரம் யாருமற்று இருண்டு கிடந்தது அம்மாநகருள். கர்ப்பக் கிரகத்தில் மினுக்கிட்ட தீபத்தில் ஆரத்தி பார்த்ததும் பிரகாரக் கல்மண்டபத்தில் ஓரமாகச் சாய்ந்து அமர்ந்து ஃபோனை எடுத்தாள்.

அவள் கணவனின் நண்பன் குமார். ” தேவி , நான் மும்பை வந்திட்டேன் , சாம் கிட்ட சொல்லிடுங்க . அவன் ஃபோனை ஸ்விட்ச்ட் ஆஃப்.”   அந்தச் செய்தியக் கேட்டதும் அங்கே தொங்கிக் கொண்டிருந்த வௌவால்கள் வேகமாகப் பறந்து வந்து முகத்தில் மோதியது போலிருந்தது தேவிக்கு. என்ன சோதனை இது.. சிவ சிவ என்று சன்னதியைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் தேவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...