சிங்கப் பெண் டெய்சி மாறன்
2015 களில் ஆரம்பித்து இன்று வரை 85 நாவல்கள், 300 க்கும் மேற்பட்ட சிறுகதை, கவிதைகளை எழுதிய ஒரு நாவலாசிரியயைச் சந்தித்தேன்.இந்தக் காலக் கட்டத்தில் வந்த அநேக மாத நாவல்களைப் பார்த்தால் அதில் ஆசிரியர் என்று இவர் பெயர் இருக்கும். மிகப் பிரமிப்பாயிருந்தது. இத்தனை நாவல்கள் தொடர்ந்து அச்சேறுவது, அத்தனைக்கும் கற்பனை வளம் இன்றியமையாதது எனப் பல்வேறு விஷயங்கள் என் மனத்தில் ஓடின. இதனால் இல்லத்தரசியாக இருந்து இவ்வளவு சாதித்திருக்கும் அவரிடமே அவரைப்பற்றிக் கேட்டு விடுவது என அணுகினேன். அவர் கூறியதை அப்படியே தொகுத்துள்ளேன்.
”எனது இயற்பெயர் டெய்சி. கணவர் பெயரை இணைத்து டெய்சி மாறன் என்ற பெயரில் கதை கட்டுரை நாவல் சிறுகதைகள் என எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மயிலாடுதுறை மாவட்டத்தில்(சோழநாடு) உள்ள கொள்ளிடம் என்ற ஊர். தற்போது வசிப்பது சென்னை. எனக்கு இரண்டு மகன்கள்.
எனக்கு எழுத்து மீதான ஆர்வம் வர முழுக் காரணம் என்னுடைய தாய் தகப்பன் இருவருமே தான். அப்பா அம்மா இருவரும் தமிழ் ஆசிரியர்களாய் இருந்ததால் தமிழ் மீதான ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கி இருந்தது. சிறுவயதில் மற்ற பாடங்களை விட தமிழ் பாடத்தில்தான் அதிக மதிப்பெண் எடுப்பேன்.
அப்பா மேனேஜ்மென்ட் ஸ்கூல் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் யாராவது வரவில்லை என்றால் மொத்த மாணவர்களையும் அமர வைத்து இதிகாசங்களை பற்றி கதை சொல்லத் தொடங்குவார்கள். கதை என்றால் நான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். சிறுவயதிலேயே ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், என்று அப்பா சொல்லும் கதைகளை கேட்டு வளர்ந்ததால்தான் கதைகள் எழுதும் ஆர்வம் தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.
கல்லூரி காலங்களில் ஆண்டு மலர்களில் எழுதிய கவிதை தான் எனது எழுத்துக்கான முதல் துவக்கம். அதற்கு ஊக்கப்படுத்தி எழுத வழி அமைத்துக் கொடுத்தவர் கல்லூரி பேராசிரியர் புஷ்பராணி மேடம். அவர்களின் தூண்டுதலால் தான் அடுத்தடுத்து எழுதக்கூடிய எண்ணம் வலுப்பெற்றது. கல்லூரி கவிதை போட்டியில் நான் முதல் பரிசு பெற்றேன். அந்த பெருமையும் அவர்களையே சாரும்.
கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு குடும்பம் குழந்தை என்று நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிடும். ஆனாலும் நமக்கென்று இருக்கிற தனித்திறமைகளை ஒருபோதும் மூடி மறைக்கக் கூடாது. அதை நல்ல வழிகளில் செம்மைப்படுத்தி நமக்கான அடையாளத்தை நிலை நாட்ட வேண்டும் என்று அன்று கல்லூரி பேராசிரியை புஷ்பராணி மேடம் சொன்னதை மனதில் நிறுத்தித்தான் இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பெண்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் உடனே கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பல தடைகளையும் சில எதிர்ப்புகளையும் தாண்டிதான் ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க வேண்டிய சூழ்நிலைக்குள் இருக்கிறார்கள். நமது சமுதாய கட்டமைப்பும் அப்படித்தான் இருக்கிறது.
எழுத்துத் துறையில் நுழைந்தவுடன் எனக்கும் உடனே அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்காக துவண்டு போய் விடக்கூடாது. தொடர்ந்து எழுத வேண்டும். ஒரு இலக்கை அடைய வேண்டும் என்ற முனைப்போடு என் எழுத்து பயணத்தை தொடங்கினேன். எல்லா மாத வார இதழ்களிலும் என்னுடைய படைப்புகளை அனுப்பி வைத்தேன். மாத வருட கணக்கில் அனுப்பிய படைப்புகள் கிடக்கில் போடப்பட்டன. ஆனாலும் எனது முயற்சியை கைவிடவில்லை மீண்டும் மீண்டும் எழுதினேன்.
ஒரு சில காலகட்டங்களுக்குப் பிறகு அந்த மாத வார இதழ்கள் எனக்கான அங்கீகாரத்தை எனக்களித்தன. அதன் பிறகு எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வேறூன்ற துவங்கியது. என்னை நானே செதுக்கி கொண்டேன். வெறும் எண்ணிக்கைக்காக மட்டுமே எழுதி வந்த நான் அதன் பிறகு நின்று நிதானித்து எழுத துவங்கினேன்.
சிறுகதை போட்டிகளுக்காகப் பல படைப்புகளை அனுப்பினேன். அதில் வெற்றியும் கண்டேன். தினமலர் வாரமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டு பரிசுகளும், ஜெர்மன் ஞானசௌந்தரி பரிசுப் போட்டியில் முதல் பரிசும், பிரேமா நாவல்ஸ், சஹானா சிறுகதை போட்டி, இலக்கியச் சோலை சிறுகதைப் போட்டி, எழில் கலை மன்றம் நடத்தும் சிறுகதைப் போட்டி, வானதி சிறுகதைப் போட்டி போன்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றேன்.
கண்மணி, பெண்மணி, ராணி முத்து, மாலைமதி, திருமகள், செல்வி, துளசி, வான்மதி, காஞ்சனா, வானதி, கதை சொல்லி, வெண்ணிலா, பொன்மகள், துளசி, அப்ஸரா, அத்திப்பூ, குமுதம், குங்குமம், அவள் விகடன், ராணி, வாரமலர், இலக்கியச்சோலை, புதிய கோடாங்கி, விசுவாச குரல்) போன்ற பல மாத வார இதழ்களில் நாவல்களும் சிறுகதைகளும் இன்று வரை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறன.” என்றார்.
இவ்வளவு எளிதாக அனைத்தும் கைகூடியதா, எதிர்ப்பு, தடை ஏதுமே இல்லையா எனக் கேட்டபோது, ”நான் எழுதிய "கண்ணகி நகரம்!" என்ற கிரைம் நாவல் புத்தகமாக வெளிவந்த போது பல மாற்றுக் கருத்துக்கள் எழுந்தன. காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய கதை என்பதால் அதை படித்த ஒரு சிலர் நடந்த உண்மை சம்பவத்தை இவ்வளவு வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்களே இதனால் பெரிய பிரச்சனைகள் வரலாம் என்று எச்சரித்தார்கள்.
உண்மையை எழுத எதற்கு தயங்க வேண்டும் என்ற திடமான மனநிலையோடும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எதிர் கொள்ள என்னால் முடியும் என்ற தைரியத்தோடும் அந்த நாவலை வெளியிட்டேன். கண்ணகி நகரம் நாவல் எனக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
பிரபல கிரைம் மன்னர் திரு ராஜேஷ்குமார் அவர்கள் இந்த நாவலுக்கு அணிந்துரை கொடுத்தது மட்டுமல்லாமல், நாவலில் பல இடங்களில் தொழில்நுட்ப யுத்தியை கையாண்டு எழுதி இருப்பதை சுட்டிக்காட்டி வெகுவாக பாராட்டி எழுதியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளித்தது.
அதேபோல மற்றொரு சம்பவம் நான் சிறுகதை எழுதத் தொடங்கிய காலகட்டம் அது. ஒரு பிரபல பத்திரிக்கை நடத்திய சிறுகதைப் போட்டியில் எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. அப்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு சிலரின் எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளானேன்.
போயும் போயும் இந்த கதைக்கு மூன்றாவது பரிசு கொடுத்திருக்காங்களே? இந்தக் கதையில் வருவது எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத விஷயங்கள். இவங்க பேசாம சினிமாவுக்கு கதை வசனம் எழுத போகலாம் என்றெல்லாம் விமர்சித்தார்கள். மனதளவில் மிகவும் சோர்ந்து போனேன். அப்போதுதான் என் தோழி என்னை ஆறுதல் படுத்தினாள். உன்னுடைய எழுத்துக்கள் என்றைக்கு விமர்சிக்கப்படுகிறதோ அன்றிலிருந்து நீ சிறந்த எழுத்தாளராய் உருமாற தொடங்கியிருக்கிறாய் என்று அர்த்தம். தொடர்ந்து எழுது விமர்சனங்கள் தான் உன்னை செம்மைப்படுத்தும் விமர்சனங்கள் தான் உன்னை பட்டை தீட்டும் என்று என்னை ஊக்கப்படுத்தினாள். அது என் மனதில் தாரக மந்திரமாய் ஒலித்தது.
இப்போதெல்லாம் விமர்சனத்தை கண்டு நான் பயப்படுவதில்லை "கத்தி முனை சாதிக்காததை கூட பேனா முனையால் சாதிக்க முடியும்!" என்று திடமாக நம்புகிறேன். தன்னம்பிக்கையோடு இன்று வரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” என்று கூறி ஆச்சர்யப்பட வைத்தார்.
உங்கள் சாதனைகளைக் கூறுங்கள் எனக் கேட்டபோது “ இதுவரை 85 நாவல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தற்போது குறும்படம்,சினிமா, சின்னத்திரை சீரியல்களுக்கு கதை, திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பிரச்சனைகளை பார்த்து துவண்டு விடாமல் அதை ஒரு தூண்டுகோலாய் கையிலெடுத்து போராடி ஜெயிப்பதே பெண்களுக்கான உண்மையான அடையாளம் ,வெற்றி என்பதே எனது கருத்து. வாசிப்பை நேசிப்போம். “ என்று கூறினார் டெய்சி மாறன்.
எதிர்ப்புக்களும் எதிர்க்கருத்துக்களும் நம்மை இன்னும் வலிமையாக்குகின்றன என்று கூறிய பளிச் பெண், சிங்கப் பெண் டெய்சி என்னை இன்னும் அயர வைத்தார். இல்லத்தரசியாக மட்டும் இருக்கிறோம். நம்மால் எதையும் சாதிக்கமுடியாது என்று எண்ணாமல், எழுதுகோலே என் ஆயுதம். அதைக் கொண்டு புதிய உலகம் படைப்பேன். என்று புறப்பட்ட இந்தச் சிங்கப் பெண் டெய்சி மாறனின் வசனங்களை சின்னத்திரையில் சீக்கிரம் நீங்கள் கேட்கும் காலம் வரும். இவர் முயற்சிகள் தொடரவும் இன்னும் சாதித்து விருதுகள் பெறவும் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)