எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

புள்ளி விபரம்

புள்ளி விபரம்

சாம் அனுப்பிய அந்த மெயிலைப் படித்துக் கொண்டிருந்தாள் தேவி. ஏ யப்பா எவ்வளவு விபரங்கள் சேகரித்திருக்கிறார். குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் வளர்ப்பதும் விட அதைப் பெற்றுக் கொள்ளும் முறைகள் சிக்கலாயிருந்தன. அவற்றிற்கு ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ், சட்ட திட்டங்கள். தத்தெடுப்பு, வாடகைத்தாய், விந்து தானம், கருமுட்டை தானம், வெளிநாட்டினர் தத்தெடுக்கவோ குழந்தை பெற்றுக் கொள்ளவோ என்னென்ன சட்டங்கள், அதே இந்தியர் என்றால் என்னென்ன பின்பற்ற வேண்டும்.SURROGATES, SURROGACY என்றால் என்ன எனப் படித்து மலைத்துக் கொண்டிருந்தாள்.

தோட்டத்தில் சில பூக்களாகவே வாடிவிடுகின்றன. சிலதான் காயாகிக் கனியாகி அதன் பின் விதையாகிப் பலன் கொடுக்கின்றன. தான் ஒரு பூக்கும் மரம் ஆனால் காய்ந்து கனிக்க முடியாதவள் எனப் புரிந்த சில நாட்கள் வீட்டில் மெல்ல மெல்ல ஒரு மௌனப் பூகம்பம் வெடித்துக் கொண்டிருந்தது. டாக்டர் கொடுத்த ரிசல்டை ஒருவாறு இருவரும் படித்து ஏற்றுக் கொண்டிருந்தனர்.

”மஞ்சள் பூசி மலர்கள் சூடி” என்று சிவாஜியும் தேவிகாவும் பாடிய கர்ணன் படப்பாடல் ஒலித்த அன்று அது குமுறி வெடித்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சாமின் மடிகளில் அவள் வேரறுந்த வாழைமரமாட்டம் வீழ்ந்து கிடந்தாள். தட்டிக் கொடுத்துக் கண்ணீர் துடைத்தவனின் கரங்கள் அவளைக் குழந்தைபோல் வருடிக் கிடந்தன. “விடுரா தேவி. எழுந்திரு. கொஞ்சம் எங்காவது வெளியே போய் வருவோம் “ என அழைத்தான்.

அவன் கரங்களுக்குள் பூனைக்குட்டியாய்ப் பொதிந்து கிடந்தவள் எழுந்து கொண்டைபோட்டுக் கொண்டாள். ”இல்ல.. எனக்குக்  கொஞ்சம் பேசணும். நாம ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கலாம். ஆனா எனக்கு உங்க குழந்தை வேணும். என்னோட கரு முட்டை உயிர்ப்போட இருக்கு ஆனா கர்ப்பப்பை வீக்கா இருக்கு. அதனால நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா ? “

“சொல்லுடா தேவி “ என்றான் அவள் கன்னத்தில் படர்ந்திருந்த கூந்தலை ஒதுக்கியபடி. குழந்தையைப் போல என்னவொரு மென்மை. இந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை பெறும் பாக்கியம் இல்லையா. லேசாகத் தோளைக் குலுக்கினான். அவன் தோளைப் பற்றியபடி காதருகே முகம் வைத்துக் கெஞ்சலாகக் கேட்டாள், “நாம ஏன் ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெத்துக்கக்கூடாது ? “ இன்பமா, அதிர்ச்சியா எனப் புரியாமல் ஒரு உணர்ச்சி தாக்கியது சாமை.

எதை எதிர்பார்த்தானோ அது நடந்துவிடப் போகிறதா. அதற்கு அவன் மனைவியே பச்சைக்கொடி காட்டுகிறாளா. உடனடியாக ஆமோதிக்கலாமா வேண்டாமா எனக் குழம்பியபடி அவளைப் பார்த்தான். பலநாட்களாக மனதில் ஓடிய எண்ணங்கள்தான். சொன்னால் ”இதற்குத்தான் காத்திருந்தாயா” என மனைவி நினைக்கலாம் எனச் சொல்லாமல் இருந்தது இன்று கனியாகி மடியிலேயே விழுந்து விட்டது. 

தங்களுக்கென்று ஒரு குழந்தையா.. பிள்ளைக் கனி.. அஹா அந்த இன்பத்தை அனுபவித்து விடலாமா.. ஆம் வேறு மாதிரி சொல்லி விடுவோம் என ஆரம்பித்தான். “ தேவிக்கண்ணு டாக்டர்கிட்ட கேட்டு முடிவெடுப்போம். அதை இங்கே வீட்டில் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். “ தேவியை விட அவனுக்குத் தன் தாயின் மேல் பக்தியும் பயமும் அதிகம்.

அதன்பின் மனோவேகம் வாயுவேகமாகச் செயல்கள் நிறைவேறின. பிஸினஸ் சம்பந்தமாக சென்னையில் இருந்தால் இன்னும் வசதி என்று ஊரை மாற்றினான். அதன் பின் வாடகைத் தாயாக மஹாராணியிடம் சம்மதம் வாங்கினான். டாக்டரிடம் கூறி அவர் மூலம் அதை தேவயானிக்குத் தெரிய வைத்தான். முன்பே தனக்கு மஹாராணியைத் தெரியும் என்றால் என்னென்ன வார்த்தை அம்புகளை எதிர்கொள்ள நேருமோ என்ற பயம் அவன் ஆழ்மனதில் வேரோடிக் கிடந்தது.

தேவயானிக்கும் மஹாராணிக்கும் தனித்தனியாகக் கவுன்சிலிங்க் செய்யப்பட்டது. தனித்தனிப் பேப்பர்களில் அதற்கான அனுமதி கோரியும் வழங்கியும் மூவரும் கையெழுத்திட்டிருந்தனர். இருவரிடமும் அதன் காப்பி கொடுக்கப்பட்டது.  இருவருக்கும் பல்வேறு பரிசோதனைகள். தேவயானியின் கரு முட்டையும், சாமின் விந்தணுவும் உறைகுழாய்களில் பத்திரப்படுத்தப்பட்டன. ஒரு சுபயோக சுபநாளில் அவை கருத்தரிக்கப்பட்டு மஹாராணியின் கர்ப்பப்பையில் அடைக்கலமாயின. இரண்டு மூன்றானது.

சாமின் வாழ்விலும் இரண்டு மூன்றானது. எந்நேரமும் மஹாராணியைப் பற்றிய சிந்தனைகளிலேயே ஆழ்ந்து கிடந்தான். அவனுக்கு அவளைப் பார்க்கவேண்டும் போல் தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த மணி வயிற்றைத் தடவித் தன் குழந்தையின் இருப்பை உறுதி செய்யவேண்டும் போல இருந்தது. அவளைத் தொட்டதேயில்லை இதுவரை. அவள் ஒரு கோப நெருப்பு. நேரம் ஆக ஆக அவனுக்குள் ஏதோ ஒன்று புகுந்து அவளைப் பார்த்தே தீரவேண்டும் போலிருந்தது.

மாதாந்திரச் சோதனைகள் முடிந்து அவள் சென்று இரண்டு நாட்கள் ஆயிருந்தது. வீட்டோர் எல்லாருக்கும் தேவிதான் கருவுற்றிருப்பதாகச் செய்தியைச் சொல்லியாயிற்று. ஒவ்வொரு சொந்தமாக வந்து வாழ்த்திச் செல்லும்போதெல்லாம் அவனும் தேவியும் அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தார்கள். அப்பாடா அவளது பிறந்தவீட்டார், அவனது பிறந்த வீட்டார் அனைவரும் போய்விட்டார்கள்.

இனிப் பிரசவத்துக்கு என்று ஒரு ஊரை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அகஸ்மாத்தாகச் செல்வது போல் காட்டி அங்கே பிறந்ததும் இங்கே சில நாட்கள் கழித்துக் கொண்டு வந்து காட்டலாம் என்று. எவ்வளவு பொய்யனாக ஆகிவிட்டோம் என்று மனதுக்குள் வெறுப்பாக இருந்தாலும் குழந்தை வரப்போகிறதே என்று குதூகலமாக இருந்தது அவனுக்கு.

தேவிக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களைத் தீர்க்க கூகுளில் தேடி சரோகேஸியின் அவ்வளவு தகவல்களையும் கொட்டி அனுப்பினான். சரோகேட்ஸ் மதர்ஸ், எத்தனை விதமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், அவை டிசைனர் குழந்தைகள் என்ற பேடண்டில் கூட பெற்றுக் கொள்ளப்படுகின்றன என்றும் டாக்டர் , சயிண்டிஸ்ட், விளையாட்டு வீரர்கள், மாணவர்களின் விந்தணுக்கள் கேட்டுப் பெறப்படுகின்றன என்றும், அதிலும் இந்தியாவில் குஜராத்தில்தான் வாடகைத் தாய்கள் அதிகம் என்பன போன்ற தகவல்கள்.

குழந்தை உருவாக குஜராத் போகவில்லை. அதற்குச் செந்தமிழ்நாட்டுத் தமிழச்சிதான் வேண்டும் ஆனால் பெற்றுக் கொள்ள ஏன் குஜராத் போகிறோம் ? அப்போதுதானே அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டுக் குழந்தையோடு வந்து இறங்கலாம். என்று கசப்பாகப் புன்னகைத்தபடி மஹாராணி பத்திரமாய்ப் பெற்றுத்தரவேண்டுமே எனக் கவலையில் ஆழ்ந்தாள் தேவி.

2 கருத்துகள்:

  1. ஓ! காதல் வனம். கதை இங்கு தொடர்கிறதா....இப்பகுதி முன்பு வாசித்த நினைவில்லை. இதில் வீட்டுக்குத் தெரியாமல் செய்வது என்றால் எவ்வளவு கஷ்டம் இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆமாம்பா. சரோகஸி பத்தி ஒரு நாவல் இது.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...