எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 செப்டம்பர், 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 6

 ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 6

  தித்யா பள்ளியிலிருந்து வந்ததில் இருந்து ஏனோ மௌனமாக இருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு விஷயத்தில் வருத்தம் எனப் புரிந்தது ஆராவமுதனுக்கு. ஆராதனாவும் உம்மென்றிருந்தாள் அண்ணனுக்கு ஜோடியாக. இதைப் பார்க்கத்தான் விசித்திரமாக இருந்தது அவருக்கு

  மாலை வேளைகளில் அவ்வப்போது பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வாக்கிங் செல்வதுண்டு. அங்கே குழந்தைகள் விளையாடும் சீசா, சறுக்கு மரம், ஊஞ்சல் எல்லாம் இருந்தன.

  ரம்யாவிடம் குழந்தைகளை பார்க்குக்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

  இருவரும் பள்ளி விட்டு வந்ததில் இருந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதையும், யூனிபார்மைக் கழட்டிவிட்டு வீட்டில் போடும் காஷுவல்ஸை அணிந்து கொண்டதையும் கொடுத்த மைலோவை சத்தமில்லாமல் வாங்கி அருந்தியதையும் ரம்யா பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

  ஷூக்களும் புத்தகப் பைகளும் கூட அதன் அதன் ரேக்கில் இருந்தன. ’என்னாச்சு  குட்டிவால் ரெண்டுக்கும்’ என அவளுக்குப் புரியவில்லை. மேலும் அன்று அவளுக்கு மாலை ஆறு மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம க்ளாஸ் வேறு இருந்தது. ஒரு மணி நேரம் நீடிக்கும். அதைச் சொல்லும்போது ஏற்படும் தெய்வீக அமைதிக்காகவும் நிம்மதி உணர்விற்காகவும் அவள் அந்த வகுப்பைத் தவறவிட்டதேயில்லை.

  அதனால் ”ஹோம் வொர்க் இருக்கும், பார்க்கில் மழைபெய்யும்,  பிள்ளைகளுக்கு சளி பிடிக்கும் , வாடைக்காற்று அடிக்குது “ என்றெல்லாம் தடுக்கும் ரம்யா அன்று மாமாவாவது கூட்டிச்சென்று அவர்களிடம் பேசி வாட்டத்தைப் போக்கினால் தேவலை என நினைத்து சரி என்றாள்.

  குளிர் மழைக்காலமாக இருந்தாலும் பார்க்கின் பெஞ்சுகளில் பகலின் சூடு பரவித்தான் இருந்தது. வானம் லேசாக பொன் மஞ்சள் நிறத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. பார்க்கில் விதம் விதமான பூக்களும் புல்வெளியும் மனதை லேசாக்கின. நடந்து சென்றவர்கள் பூசியிருந்த விதம் விதமான பவுடர், செண்ட் வாசனைகளும் அந்த இடத்தை ரம்யமாக்கி இருந்தன.

வாசலில் குடை ராட்டினமும், பஜ்ஜி கடைகளும் களை கட்டி இருந்தன. என்றைக்கும் ஏதும் வாங்குவதில்லை என்றாலும் பிள்ளைகளுடன் சென்றதால் மூன்று பொட்டலம் வறுத்த வேர்க்கடலைகளை வாங்கிக் கொண்டு பார்க்கில் நுழைந்தார் ஆராவமுதன்.

  ஆராதனாவும் ஆதித்யாவும் அவர்களின் நண்பர்கள் ஓரிரிவரைக் கண்டுவிட்டதால் அவரின் கையை விட்டு விட்டு ஓடிப் போய் சீஸா விலும் ஊஞ்சலிலும் சறுக்குமரத்திலும் ஏறி விளையாடத் தொடங்கி இருந்தனர். ஊஞ்சலில் ஒருவர் மாற்றி ஒருவரை ஆட்டி விட்டு நன்கு விளையாடி வேர்த்துக் களைத்ததும் தாத்தா அமர்ந்திருக்கும் சிமெண்ட் பெஞ்சில் ஓடி வந்து அமர்ந்தனர்.

  ”சரி குட்டீஸ். இந்த வேர்க்கடலையை சாப்பிடுங்க. இதுல இருக்குற ப்ரோட்டீன் உடம்புக்கு நல்லது. நல்ல பலம் கொடுக்கும்” என்று புஜத்தைத் தூக்கிக் காட்டிச் சிரித்தார். கூட லேசாக புன்முறுவல் செய்தனர் பேரனும் பேத்தியும்.

  வேர்க்கடலையின் சிவப்புத் தோலை எடுத்து ஊதி இருவர் கையிலும் கொடுத்தபடி ”சரி இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது. ஏன் ரெண்டு பேரும் அமைதிப்புறா ஆயிட்டீங்க. என்றார் தாத்தா சிரிப்போடு.

  “தாத்தா எங்க ஸ்கூல்ல இண்டிபெண்டன்ஸ் டேக்காக ஒரு ஃபேன்சி ட்ரெஸ் காம்பெடிஷன் இருக்கு. அதுல ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு பேசணும். “ என்றான் ஆதித்யா.

  ”அட சூப்பர் விஷயமாச்சே. ” என்று கண்களை அகலவிரித்தபடி சொன்னார் ஆராவமுதன்.

  “டூ டேஸ் பேக் மிஸ் என்ன பாரதியார் பாட்டு ஒண்ணை சொல்ல சொன்னாங்க. மறந்து போய் பாதி பாதியா சொன்னேன் . சரியா படிக்க சொன்னாங்க. இன்னிக்கும் சொன்னேன். இதென்ன ஒப்பிக்கிறமாதிரி சொல்றே. பாரதின்னா ஒரு உணர்ச்சியோட சொல்ல வேணாமா. இன்னும் சில பசங்ககிட்ட கேப்பேன். அவங்க சொன்னா அவங்களதான் எடுப்பேன்னுட்டாங்க தாத்தா “ என்று சொல்லும்போது மூக்கில் சளி பிடித்தது போல் தழுதழுத்தது ஆதித்யாவின் குரல். கண்களில் நீர் தளும்பி இருந்தது.

  “தாத்தா என்ன தில்லையாடி வள்ளியம்மை செய்ய சொன்னாங்க. ஆனா இந்த பாப் கட்டிங் இருக்கதால இன்னொரு கேர்ளை செலக்ட் செய்யப் போறாங்க “ என்றாள் கூடவே தழுதழுத்தபடி ஆராதனா.

  “அட. இதானா ரொம்ப சின்ன விஷயம். இதுக்குப் போயி அலட்டிக்கலாமா. எல்லாத்துலயும் விடாமுயற்சியோட போராடணும். பயிற்சி எடுக்கணும். அப்பத்தான் வெற்றி கிடைக்கும்” என்றார்.

  “சரி நான் உங்களுக்கு ஒரு ஸ்காட்லாந்து ராஜாவோட கதை சொல்றேன். அவர் பேரு ராபர்ட் ப்ரூஸ். அவரோட நாட்டு மக்கள் எல்லாம் அவரோட அரசாட்சியில் மகிழ்ந்து நல்ல அரசர் இராபர்ட் அப்பிடின்னு புகழ்வாங்க.

  அப்ப ஸ்காட்லாந்து இங்கிலாந்து மன்னர்களின் ஆளுக்கைக்குக் கட்டுப்பட்டிருந்துச்சு.  இங்கிலாந்து மன்னரா இருந்த எட்வர்ட் 1, எட்வர்ட் 2 ஆகியோரை எதிர்த்து ஸ்காட்லாந்தின் சுதந்திரத்துக்காகப் போரிட்டார் ராபர்ட். ஒரு முறை இல்லை ஆறு முறை போரிட்டார். ஆறு முறையும் படு தோல்வி.

 அவரோட மனைவி கில்ட்ரம்மியை பிணை கைதியா பிடிச்சு வைச்சிக்கிட்டாங்க. அவரோட சகோதரன் நைஜலைத் தூக்குல போட்டுட்டு அவரோட கடைசிச் சொத்தான கோட்டையையும் கைப்பற்றி வைச்சுக்கிட்டாங்க.

  ராபர்ட் ப்ரூஸ் தப்பிச்சு ஐரிஷ் கடற்கரையில் இருக்கும் ராச்சிரின் தீவுல தனியா ஒரு மரவீட்டில் இருந்தார். வெளியேயோ பனிப்புயல் அடிக்குது. அந்த மரவீட்டின் இடுக்குக்குள்ள எல்லாம் பனி கசிஞ்சு குளிர்ல விறைக்க வைக்குது . வெப்பம் கொடுக்குற கணப்பு அடுப்பும் வெறகு இல்லாம அணையப் போகுது. அங்கே ஒரு ஓரமா இருந்த தட்டுல பழைய சாப்பாடு கொஞ்சம் உறைஞ்சு போய் கிடக்குது. அவர் அணிந்திருந்த உடைகள் அந்தக் குளிரைத் தடுக்கப் போதுமானதா இல்லை.

  நாம இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துறதா இல்லை பின்வாங்கிவிடலாமான்னு யோசனையா அந்த மரக் குடிசையின் முகட்டைப் பார்த்துக்கிட்டே படுத்திருந்தார். அப்போ அந்த முகட்டில் இருந்து ஒரு சிலந்திப் பூச்சி வாயில் கூடு கட்ட சிலந்தி வலையோட தொங்கி இறங்குது. ஆனா இழை அறுந்து கீழே விழுந்துடுது. இது மாதிரி ஒரு தரம் இல்லை ரெண்டு தரமில்லை. ஆறு தரம் இப்பிடி இறங்குச்சு.

  ராபர்ட் ப்ரூஸ் இத ஆச்சர்யமா பாத்துக்கிட்டு இருந்தாரு. ஏன்னா அவரும் ஆறு முறை இங்கிலாந்து அரசோட மோதி தோற்று இருந்தாரு. அப்ப நினைச்சாரு. ஏழாம் முறை இந்த சிலந்தி தனது இழையை அறுக்காம மேலேறி கூட்டைக் கட்டிடுச்சுன்னா நானும் அடுத்த போரில் ஜெயிச்சிடுவேன். என்று எண்ணிக்கிட்டே அந்த இழையையும் சிலந்தியையும் துடிப்போட பார்க்குறார்.

 மெல்ல மெல்ல இறங்குது சிலந்தி. தன்னோட இழையில தொங்குது எழுந்து உக்கார்ந்து அது அந்து விழப்போகுதா எழப்போகுதான்னு பார்த்துக்கிட்டே இருக்காரு கண்ணிமைக்காம. அந்தவலையிலேயே சர்ருன்னு சுத்தி ஏறி ஜம்முன்னு தன்னோட வலையைப் பின்ன ஆரம்பிச்சிடுச்சு. அட என்ன அதிசயம். அதப் பார்த்துக்கிட்டு இருந்த ராஜா மனசுல அளவில்லாத தன்னம்பிக்கை ஊத்தெடுத்துருச்சு நாம ஜெயிச்சிருவோம்னு.

 அடுத்து படையை எல்லாம் கூட்டிட்டுப் போய் அக்கிரமமா ஆக்கிரமிச்சிருந்த ஆதிக்க சக்தியை எல்லாம் விரட்டிட்டு தன்னோட நாட்டை கைப்பற்றி அரசாள ஆரம்பிச்சிட்டார் இராபர்ட் ப்ரூஸ்.  எனவே அவர்மாதிரி விடாமுயற்சியும் உழைப்புமே வெற்றியைச் சாதிக்கும்.”

  சொல்லிக்கிட்டே தாத்தா நடந்துவர பக்கத்துல கேட்டுக்கிட்டே பேரப்புள்ளைங்களும் வந்தாங்க. அவங்க முகத்துல பழைய மலர்ச்சி வந்திருந்தது.

  தாத்தா ஆதித்யா கழுத்தைச் சுத்தி ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டி கறுப்பு கோட் ஒண்ணை மாடி அவன் தலையில் தலைப்பா போல் முண்டாசு கட்டிவிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு பாரதியார் பாட்டு ஒன்றைக் கொடுத்துச் சொல்லச் சொல்லி இருந்தார். கண்ணாடியைப் பார்த்துச் சொல்லச் சொல்ல அவன் மெருகு கூடிக்கிட்டே இருந்துச்சு.

  ண்டிபெண்டன்ஸ் டே வந்திச்சு. அன்னிக்கு ஸ்டேஜுல பார்த்தா கம்பீரமா நின்னு

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ” அப்பிடின்னு ஆதித்யா சொல்லச் சொல்ல கரகோஷம் அள்ளுச்சு.

 அடுத்து தில்லையாடி வள்ளியம்மையா ஆராதனா வந்து ” வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள் “ என்று கை உயர்த்திச் சொல்லவும் இன்னும் கரகோஷம் ஜாஸ்தியாச்சு. ஆமா அவளோட பாப் முடி என்னாச்சு. கறுப்பு கொண்டை எப்பிடி வந்துச்சு தாத்தாதான் அவளுக்கு கறுப்பு துப்பட்டாவால தலையைச் சுத்திக் கொண்டை மாதிரி முடிச்சுப் போட்டு விட்டிருந்தாரே.

  பரிசு அறிவிக்கும் நேரம். முதல் பரிசு பாரதிக்கும் , இரண்டாம் பரிசு தில்லையாடி வள்ளியம்மைக்கும் அறிவிக்க. அதைக் கொடுத்த கலெக்டர் இருவரையும் கன்னம் பிடித்துக் கொஞ்ச வெட்கத்துடன் அம்மா அப்பா தாத்தாவிடம் ஓடிவந்தார்கள். தங்கள் பரிசுக் கோப்பைகளைத் தாத்தாவிடம் கொடுத்த இருவரும் ‘தாத்தா இருக்க பயமேன்” என்று சொல்லி தம்ஸ் அப் செய்ய ஆராவமுதன் நெஞ்சு கொள்ளா பேரன்புடன் இருவரையும் அணைத்துக்  கொண்டார்.

     6.   ஊக்கமது கைவிடேல்
     எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமையினைக் கைவிடாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...