சீர்திருத்தத் திருமணம் செய்த கனகலட்சுமி ஆச்சி
என் சின்ன மகனின் திருமணத்தின் போது என் சின்னமருமகள் கனகலட்சுமி ஆச்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். இன்று என் மருமகள் ஓவியங்கள் வரையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கற்றுக் கொண்டதற்கு இவரே காரணம் என்று கூறினார். என் மருமகளின் அத்தைமகளின் மாமியார் இவர். தன் அத்தைமகளின் வீட்டுக்குச் சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்த போது அவர்கள் வீட்டு ஹாலில் மிகப்பெரும் தஞ்சாவூர் பெயிண்டிங் ஒன்றை இவர் வரைந்து கொண்டிருந்ததாகவும் அதைக்கண்டு பிரமித்துத்தான் இவரைத் தன்னுடைய முன்னோடியாகக் கொண்டதாகவும் மருமகள் கூறினார்.
கனகலட்சுமி ஆச்சியின் உறவினர்கள் பழமையை எதிர்க்கும் சீர்திருத்தக்காரர்கள். இவரது குடும்பத்தில் திருமணங்கள் எல்லாம் சீர்திருத்தத் திருமணங்களே. சுப வீர பாண்டியன், டைரக்டர் எஸ் பி முத்துராமன் ஆகியோர் இவரது பிரியத்துக்குரிய சகோதரர்கள். பெருங்குடும்பத்தில் பிறந்ததனால் உறவைப் பேணுவதிலும் அனைவரையும் அரவணைத்துச் செல்வதிலும் வல்லவர் இவர்.