எனது புது நாவல்.

திங்கள், 9 ஏப்ரல், 2018

பூக்களின் பின்னால்.. - நமது மண்வாசத்தில் மரபுக் கட்டுரை.

பூக்களின் பின்னால்..

நேரு என்றால் அவர் நெஞ்சில் சுமந்திருக்கும் ரோஜாப்பூ சட்டென நினைவுக்கு வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, மென்னகை அரும்புதல், முல்லைச் சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா, பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா, ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.

பெண்கள் பருவமடைந்துவிட்டால் புஷ்பவதியாகிவிட்டாள் என்பார்கள். பொதுவாகவே பூக்கள் என்பவை பெண்களைக் குறிப்பவைதான். அநேகப் பூக்களின் அமைப்புக்கள் கூட பெண்களின் அங்கங்களின் குறிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன. தலையைக் குனியும் தாமரையே, செங்காந்தள் விரல்கள், எள்ளுப் பூ நாசி, முல்லைப் பற்கள், மாதுளம்பூமேனி நிறத்தாள், முருக்கம்பூ மேனி நிறத்தாளே ஆகியன அவற்றுள் சில.ஆசிய மேற்கத்திய கலை ஓவியங்களில் பெண்ணுறுப்பின் அடையாளம் பெண்மையின் அடையாளமாகப் பூக்கள் குறிக்கப்படுகின்றன. தேன் ,மகரந்தப் பை, சூல் ஆகியனவும் பெண்களின் கரு உறுப்புகளோடு ஒப்புமை சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன் ஹிமாலயப் பகுதிகளில் பெண் உருவில் நாரிலதா என்று பெயர் கொண்ட பூக்கள் பூப்பதாகச் செய்தி உண்மையா என்று தெரியவில்லை.


பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர் வாழ்வில் பூக்களுக்கு இடமுண்டு. பூப்புனித நீராட்டு விழாவின்போது தாய்மாமா பூமாலை போடுதல், திருமண நிச்சயம், திருமணத்தில் மலர் மாலை அணிதல், பெண் தலையைப் பூநாகத்தால் அலங்கரித்தல் பூச்செண்டு வைத்திருத்தல் ,மேலும் வளைகாப்பு, குழந்தைக்குப் பெயர்சூட்டல், கடவுளுக்குக் காணிக்கையாக பூமுடி கொடுத்தல். குழந்தைகளுக்கு பூச்சடை தைத்தல் ( சீசன் பூக்களைக் கொண்டோ அல்லது தாழம்பூ போன்றவற்றை வெட்டித் தைத்தோ அலங்கரிப்பார்கள். ), நல்லது கெட்டதுக்கு சாமிக்குப் ( இரு வண்ணப் ) பூப்போட்டுப் பார்த்தல், மேலும் இறப்பின் போது பூமாலைகள் போட்டு பூத்தூவி அனுப்புதல், கல்லறையில் பூப்போடுதல், முன்னோர்களின் புகைப்படத்துக்குப் பூவைத்தல் என்று  இல்லங்களில் பூக்கள் ஆட்சி செலுத்துகின்றன. 

பூக்கள் இல்லாமல் விருந்து விஷேம் என்று ஏதுமேயில்லை. விழாக்களிலும் பூக்களை வைத்து மண்டபங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. மேலும் வரவேற்பில் சந்தனம் கற்கண்டோடு ரோஜாப்பூக்கள் வழங்குதல், திருமணம், பிறந்தநாள் விழா, பதவி உயர்வு, மேலதிகாரியை/முக்கிய விருந்தினரை வரவேற்க, வழியனுப்ப என்பன போன்ற நிகழ்வுகளுக்கு பூங்கொத்து வழங்கும் பழக்கமும் உண்டு. பேச்சாளருக்கு, அரசியல்வாதிக்கு ரிட்டயர்மெண்ட் ஆனவருக்குப் பூமாலை போடுவதுண்டு. அலுவலகங்களில் வரவேற்பறைகளில் இகபானா என்ற ஜப்பானிய மலர் அலங்காரம்.,வீட்டு அலங்காரம், அரங்க அலங்காரம். செய்ய மேலும் சூடிக்கொள்ளவும் பயன்படுகின்றன.

இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவ இஸ்லாமியக் குடும்பங்களிலும் மலர்கள் இல்லாமல் திருமணம் இல்லை. இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் திருமணத்தன்று  முன்புறம் முகத்தை மறைத்தாற்போல மல்லிகைப் பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பர். கிறிஸ்துவப் பெண்களின் திருமணத் தலையலங்காரங்களில் பூக்கள் இடம் பெறுகின்றன. உயர் வகுப்புத் திருமணங்களில் ஆர்க்கிட் போன்ற பூக்களைக் கொண்டு வரவேற்பார்கள். 

நம் காணும் பொங்கலன்று ஆவாரம்பூபறித்தல் என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். மாமன்மார் தங்கள் முறைப்பெண்களின் கூடை நிறையப் பூப்பறித்துக் கொடுக்கும் சுவாரசியமான நிகழ்வு இது. இதே போன்ற பூப்பறிக்கும் திருவிழா ஒன்று ஜப்பானிலும் நடைபெறுகிறது.

நம் புராண இதிகாசங்களிலும் கடவுள்களுக்கென குறிப்பிட்ட மலர்களும் உண்டு. விஷ்ணு, அம்பாள் ஆகியோருக்குத் தாமரை சரஸ்வதிக்கு வெண் தாமரை. துர்க்கை அரளிப்பூ, விநாயகர் எருக்கம்பூ, .முருகன் குறிஞ்சிப்பூ, சனீஸ்வரன் நீலச்சங்குப் பூ, ஆஞ்சநேயர் மகிழம்பூ, சிவனுக்கு நந்தியாவட்டை என்று அம்பிகைகளுக்கு வெண் சாமந்தி என்று விதம் விதமான பூக்களால் அர்ச்சிப்போம். பூப்பல்லக்கு, அம்மனுக்குப் பூத்தட்டு, பூந்தேர் என்று நிறைய வேண்டுதல்களும் கோயில்களில் நடைபெறும். பூக்கள் தூவும் வசந்த காலத்திற்கான ரோமானியப் பெண்கடவுள் ஃப்ளோரா. க்ரேக்கப் பெண் கடவுள் க்ளோரிஸ். உலகம் முழுக்கப்பெண் கடவுள் வணக்கத்துக்கும் பூக்கும் காலத்துக்கும் தொடர்பு இருக்கிறது. 

குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகைப் பூக்கள் பற்றிப் பாடி இருப்பார்.  இலக்கியங்களிலும் சரி, திரை இசையிலும் சரி, (திரைப்படப் பெயர்களிலும் சரி, )மலர்களைப் பெண்களோடு ஒப்பிட்டுப் பாடாத, குறிப்பிடாத கவிஞர்கள் குறைவு. 

தமிழர் மரபில் ஆதி காலம் தொட்டு பூக்களுடன் தொடர்பு இருக்கிறது. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பூக்கும் பூக்களைக் கொண்டு திணை வகுத்தவர் நாம். பூப்புனைதல் என்று மன்னர்கள் பக்கத்து நாட்டுடன் போர்புரிய ஆநிரை (பசுக்களைக் )கவரச் செல்லும்போது வெட்சிப்பூவையும், ஆநிரை மீட்போர் கரந்தைப் பூவையும் அணிவார்கள். அதே போல் பகை நாட்டின்மீது படை எடுப்பவர்கள் வஞ்சிப் பூவையும் அந்த நாட்டின் கோட்டை மதிலைக் காப்போர் நொச்சிப் பூவையும் அதனை முற்றுகை இடுவோர் உழிஞைப் பூவையும் அணிவார்கள். ஒரே களத்தில் யுத்தம் செய்யும் இரு சாராரும் தும்பைப் பூவையும் அதில் வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவையும் சூடுவார்கள். ஜீலியஸ் சீசர் லாரல் மாலை எனப்படும் வாசனை இலைகளைக் கொண்ட க்ரீடத்தை அணிந்திருப்பதாக ஆஸ்ட்ரிக்ஸ் என்னும் காமிக்ஸில் படித்திருக்கிறேன்.  

வாசனையற்ற மலர்களான காக்கரட்டான் மல்லி, கனகாம்பரம், டிசம்பர், மஞ்சள் டிசம்பர் பூ, நாம டிசம்பர்பூ  போன்றவற்றையும் மக்கள் விரும்புகிறார்கள். டேலியா, கினியா, கிருஷாந்திப்பூ, டெய்சியும் குளிரான இடங்களில் அதிகம் பூக்கின்றன. திரும்பிப்பார் கதம்பம் என்பது மதுரையில் பிரபலமான ஒன்று . மதுரை மல்லி , கோட்டை மல்லி என்று கோடைக்காலங்களில் மிகப் பெரிய அளவில் பூக்கும் மல்லியின் வாசம் வீடெல்லாம் நிறைந்திருக்கும். அநேகம் பூக்கள் மாலையிலேயே பூக்கின்றன. சாயங்காலம் அந்திமந்தாரை, இரவில் பவளமல்லி. விடியற்காலையில் செம்பருத்தி, நந்தியாவட்டை போன்றவை மலர்கின்றன. ஒரே நாளில் காலையிலிருந்து மாலைக்குள் மூன்று முதல் பல்வேறு நிறங்களில் மாறும் ரோஜாக்கள் கூட உண்டு.

மலர்கள் பற்றிய கல்விக்கு ஃப்ளோரியோகிராஃபி என்று பெயர். இவை மேற்கத்திய கலாச்சாரத்திலும் முக்கியக் குறியீடு வகிக்கின்றன. சிவப்பு ரோஜாக்கள் காதலைத் தெரிவிக்கவும், மஞ்சள் ரோஜாக்கள் நட்பைத் தெரிவிக்கவும் பயன்படுகின்றன. கல்லறைப்பூக்கள் என ஒரு வகை இருப்பது போல மரணத் தருவாயில் ஆறுதல் வழங்க பாப்பீக்கள் என்ற பூக்கள் அடையாளமாக இருக்கின்றன. லில்லிகள் உயிர்ப்பித்தலைக் குறிக்கின்றன. டெய்சிக்கள் அப்பாவித்தனத்துக்கான அடையாளம். 

மிகப் பெரும் ஸ்டார் ஹோட்டல்களில் மலர் உணவும் வழங்கப்படுகின்றது. அவிக்கப்பட்ட சால்மோன் மீனுடன் ஃபெடா சீஸ் சாண்ட்விச் மற்றும் டெய்சி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாலட்ஸ் வழங்கப்படுகின்றது. விலை சில ஆயிரங்கள் இருக்கும். மூலிகை டீயில் ரோஜா , அதிமதுரம் போன்றவற்றைப்பொடித்துப் போடுவதுமுண்டு. சூரிய காந்தி எண்ணெய், ரோஜா குல்கந்து, வேப்பம்பூரசம், முருங்கைப்பூத் துவட்டல், ப்ராக்கோலி சூப் , காலிஃப்ளவர் ( பூல் கோபி ) மஞ்சூரியன், முட்டைக்கோஸ் ( பந்த் கோபி ) பரோட்டா, வாழைப்பூ வடை , குங்குமப்பூப் போட்டுக் காய்ச்சிய பால், என்று பூக்களையும் நாம் உணவாகக் கொள்கிறோம். தாய்லாந்து உணவில் மல்லிகையை ஊறவைத்த நீரில் அரிசியைப் போட்டு ஒரு ஸ்பெஷல் உணவு சமைப்பார்கள்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்று விருந்தினரை உபசரிக்கும் பாங்கைத் திருக்குறள் அனிச்சமலர் கொண்டு விவரிப்பது அழகு.  இன்னும் மலர் பற்றிக் கவிதை எழுதாத ஒரு கவிஞரையும் நாம் கைகாட்டி விட முடியாது. 
ஒரு காலத்தில் தாலியில் பூச்சூடிய பெண்கள் பின்னர் தம் கூந்தலில் சூடிக்கொண்டார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆண்களும் கூந்தல் வளர்த்து கொண்டையாகச் செருகிப் போருக்குப் போனபோது தங்கள் கொண்டையில் பூச்சூடி இருந்தனர். பின் பக்தி மயத்தால் காதுகளில் கூட வாசனைப்பூக்களை செருகிக்கொண்டனர். அந்தப் பழக்கம் இப்போது வழக்கொழிந்து விட்டது.

பூக்களைப் போன்றே நளினமும் மென்மையும் கொண்டவர்கள் பெண்கள். எதிர்ப்புக் காற்றில் சட்டென்று சருகாய் வாடி விடும் தன்மையும் கொண்டவர்கள். எந்தக் காலகட்டத்திலும் பெண் தனக்குச் சரி என்று தோன்றியதைச் செய்யும் தைரியத்துடன் வாழ்வதே சமூகம் அவர்களுக்குச் செய்யும் சிறப்பாகும்.

தேனம்மை லக்ஷ்மணன்
எழுத்தாளர்

4 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பூக்களைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையினைப் படித்ததுபோல இருந்தது. நுட்பமான செய்திகள்.

Gossip Tamil சொன்னது…

உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது,

பார்வையிடவும்.

வணக்கம் நண்பர்களே.. !

தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/

வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக

பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின்

எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
http://gossiptamil.com/aggre/

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல பல தகவல்களுடன் மணம் வீசும் பதிவு சகோ/தேனு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி காஸிப் தமிழ்

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...