”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்
26.உங்கள் வாசிப்பு அனுபவம் எழுதுவதற்குத் துணைபுரிகிறதா?
நிச்சயமாக. அதிகம் வாசிக்காத பொழுதுகளில் நான் வெறும் குடுவை போல காலியாக உணர்ந்திருக்கிறேன். வாசிக்கும்போது எழுத்து என் எழுதுகோலிலிருந்து தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
27.பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு பொதுவாகப் பெண்களிடம் அதிகரித்திருக்கிறதா?
பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வாக அது இல்லாமல் தவறான புரிதல்களாக அவை அதிகரித்திருக்கின்றன. உடை அணியும் சுதந்திரம், பாலியல் பற்றி சுதந்திரமாக எழுதுவது இவற்றை விடுங்கள். கல்வி வேலைவாய்ப்பு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் தனது தனிப்பட்ட சுதந்திரம் என்பதைப் பெரியவர்களையும் கணவனையும் மதிக்காமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று ஆண் மற்றும் சமூகம் செய்ததைத் திருப்பி அவர்களுக்குச் செய்வது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக தங்கல் படத்தைச் சொல்லலாம். தன் பெண் விளையாட்டு வீராங்கனையாக அண்ணன் பையனை அமீர்கான் கோழி சமைக்கச் சொல்வது. அவர் பெண் உயர்வு என்பதால் அண்ணன் பையன் எங்கே தாழ்வாகப் போனான். அவன் எந்தப் பெண்களையும் எந்த விதத்திலும் இழிவு படுத்தாத போது அவனை ஏன் இழிவுபடுத்தவேண்டும்.
28.பெண்ணுக்குக் குடும்பம்தான் இன்னும் பாதுகாப்பான அமைப்பா?
அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை திருமணமாகிவிட்டதால் அது எனக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. டார்ம் மற்றும் பிஜிக்களும் கூட பாதுகாப்பான அமைப்புகள்தான். அது அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பொறுத்தது.
29.பெண்தான் குடும்பத்தை உருவாக்குபவளாக இருக்கிறாளா?
இப்போது ஆணும் குடும்பத்தை உருவாக்குபவனாக ஆகி வருகிறான். நிறையப் பொறுப்புகளை ஆண்களும் தங்கள் தோளில் சுமக்கிறார்கள்.
30.குடும்ப அமைப்புத் தொடரவேண்டுமா?
என் வயதுக்கும் அனுபவத்துக்கும் என்னைக் கேட்டால் அது ஒரு பாதுகாப்பான ஏற்பாடு என்பேன். தன் சொந்தக்காலில் நிற்கும் வலிமை, தனித்தியங்கும் தன்னம்பிக்கை ஒரு பெண்ணிடம் இருந்தால் அவள் திருமணம், குடும்ப அமைப்பு ஆகியவற்றில் ஈடுபாடு இல்லாதவளாக இருந்தால் திருமணம் செய்துகொண்டு இன்னொருவர் வாழ்வைக் கெடுக்காமல், பணயம் வைக்காமல் இருப்பதே நல்லது.
31.குடும்பம் சிதைவடைவதால் சமூகம் சிதையுமா?
இந்தியாவில் குடும்ப அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டுக் குடும்பங்களில் இருந்து தனிக்குடித்தனம் அதிலும் நியூக்ளியர் ஃபாமிலி ஆகிவிட்டோம். இதிலிருந்தும் பிஜி போன்றவற்றில் தனித்து தனது கேரியரே முக்கியம் என வாழும் ஆண், பெண் பெருகிவிட்டார்கள். இது சமூகத்தைச் சிதைக்கிறதோ இல்லையோ மக்கள்தொகையை குறையச் செய்துவிடும். நிச்சயம் அது சமூகத்தின் சமநிலைத் தன்மையை ஆட்டம் காணவைக்கும். தனித்த விழைவுகளோடு ஆண்கள் ஆண்களோடும் பெண்கள் பெண்களோடும் வாழும் சூழ்நிலை பெருகும்.
32.குடும்பம் முன்பு இருந்த அதே மதிப்புகளை இப்போதும் கொண்டிருக்கிறதா?
இல்லை. கமிட்மெண்ட் இருப்பதால் திருமண வாழ்வும் குடும்பமும் தேவையா என திருமணவயது ஆண்பெண்கள் பலர் குழப்பத்தில் இருக்கிறார்கள். விட்டுக் கொடுத்துப் போவது அனுசரிப்பது என்றால் என்னவென்றே தெரியாத இளையர்களை வளர்த்து வைத்திருக்கிறோம். திருமணமும் குடும்பமும் தேவையில்லை என்றே பல பெண்கள் நினைக்கிறார்கள். தான் சம்பாதிப்பதால் தனியாக இருந்தால் தனக்கானதை மட்டும் செய்தால் போதும். ஒரு ஆணைத் திருமணம் செய்தால் அவனுக்கும் சமைத்து குழந்தை சுமந்து விட்டுக்கொடுத்து ஊதியத்தையும் பகிர்ந்து வீட்டிலும் வேலை செய்ய வேண்டுமா எனப் பெண்கள் நினைக்கிறார்கள்.
33.மாற்றம் இருக்கிறது என்றால் எதில்?
வேலைக்குச் செல்லும் இளம் மகளிர் இன்றைய குடும்பத்தின் நிலைத்தன்மையை நிர்ணயிக்கிறார்கள். சிலரின் சுயநலம் அச்சுறுத்துகிறது. அவர்கள் விருப்பப்படி இருந்தால் குடும்ப வாழ்வு., இல்லாவிட்டால் விவாகரத்து நிகழ்கிறது. நிறையப் பெண்கள் பிடிக்காவிட்டால் விவாகரத்துச் செய்துவிடுகிறார்கள். ஆண்கள் அட்ஜஸ்ட் செய்துபோனாலும் பெண்கள் அரக்கத்தனமாக நடந்துகொள்கிறார்கள். போன நூற்றாண்டுகளின் செயல்களுக்கான பழிவாங்கல்களாகவே அது இருக்கிறது. பெண்கள் சதவிகிதம் குறைந்துவிட்டதால் ஒவ்வொரு ஆணுக்கும் திருமணம் செய்துகொள்ளப் பெண் கிடைப்பது அரிதாகிறது. அதனாலேயே பெண்ணைப் பெற்றோர் ஆணைப் பெற்றவர்களிடம் ஆயிரத்தெட்டுக் கேள்விகளை முன்வைக்கின்றனர. திருமணத்துக்குப் பின் ஆணின் சம்பளத்தை அப்படியே பெண்ணிடம் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்கவேண்டும் என எண்ணுகிறார்கள். சம்பளம் இவ்வளவுதானா, வெளிநாட்டு உத்யோகம் என்றால் எத்தனை வருடம் நீடிக்கும் எனக் கேள்விகளை அடுக்குகிறார்கள்.பெண்களோ தாங்கள் எப்படி இருந்தாலும் காரும் வீடும் இருக்கும் இளமையான தலைமுடி அதிகம் உள்ள ஹேண்ட்சமான பையனை எதிர்பார்க்கிறார்கள். பெண் 50 கிலோ வெயிட் இருந்தால் ஆண் 60 கிலோவில் இருக்க வேண்டும் என்றும் அதற்காக ஜிம்மிற்குச் சென்று குறைக்குமாறும் அசைவ உணவைக் குறைக்குமாறும் திருமணத்துக்குப் பார்க்கும் முன்பே பெண்கள் அறிவுறுத்துகிறார்கள். பெண்களின் எதிர்பார்ப்பு எகிறிப்போய்க்கொண்டே இருக்கிறது. அது எப்படி என்றால் திருமணம் ஆனபின் ஆணுக்கு அம்மா அப்பா அக்கா தங்கை அண்ணன் தம்பி என்ற மற்ற சொந்தங்களே இல்லாதிருக்க வேண்டும் என்கிற அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.
வேலைக்குச் செல்லும் மகளிரின் பெற்றோர் தமது மகளைத் திருமணம் செய்வதில் அக்கறை காட்டுவதுமில்லை. மேலும் மகளின் வாழ்வு கணவனோடு சேர்ந்து வாழும் வாழ்வாக இருக்க வேண்டும் என எண்ணுவதுமில்லை. ஜாதகப் பொருத்தம் அது இது என்று தட்டிக் கழிக்கிறார்கள். இன்று பணம்தான் நிர்ணயிக்கிறது அனைத்தையும்.
34.சமூகப் போக்குகள் மாற்றத்தை நிர்ணயித்தனவா?
சமூகப் போக்கும் ஒரு காரணம். பெண் ஆணுக்கு இளைப்பில்லை என்பதைக் காலம் தாழ்த்தித் தாறுமாறாகப் புரிய வைத்திருப்பது. அதனால் அனைத்தையும் துச்சமாக எண்ணி பெண்ணைப் பெற்றவர்கள் உதறிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடரைப் போல வாழ்க்கை த்ரில்லும் சஸ்பென்ஸும் துரோகமும் வஞ்சகமும் நிறைந்ததாகக் கற்பனை செய்து பையனைப் பெற்றவர்களைப் படுத்துகிறார்கள் பெண்ணும் பெண்ணைப் பெற்றவர்களும். சுயநலம் பிராதானமாகிவிட்டது எங்கும்.
35.சமூகப் போக்குகள் மாற என்ன செய்யவேண்டும்?
பள்ளிகளிலும் வீட்டிலும் நன்னெறி போதிக்கப்படவேண்டும். பெண்ணும் ஆணும் சமம் என்பதை இருவருக்குமே பள்ளி மற்றும் வேலைத்தளங்களில் புரியவைக்கவேண்டும். நேர்மறைச் சிந்தனைகள் பெருக வேண்டும். எண்ணியதை எய்தலாம் என்ற எண்ணமும் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவது என்றால் என்ன என்பதையும் ஆசிரியர்கள் பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும். மாரல் சயின்ஸ், நன்னெறி வகுப்புகள் அவசர அவசியத் தேவை. ஊடகங்களின் பொய்த் தகவல் பரப்புரைகளுக்கு ஒரு கண்காணிப்பு அவசியம். வாட்ஸப் , பேஸ்புக் போன்றவற்றிகும் கட்டுப்பாடு அவசியம். இணையம் மற்றும் ஊடகங்கள் உண்மையையும் நன்மையையும் உரத்துப் பதிவு செய்யவேண்டும்.
37.சமூகப் போக்குகளுக்கு எழுத்தாளர்கள் பங்களிப்பு என்ன?
மனிதநேயம், குடும்ப ஒற்றுமை போன்றவற்றையும் அன்பு, காதல், பாசம், ஆகியவற்றை இலைமறை காயாகப் போதிக்கும் எழுத்துக்கள் பெருக வேண்டும். எழுத்தாளர்கள் இதற்காக சீரிய அறப்பணி ஆற்ற வேண்டிய காலகட்டமிது. தமது குடும்பத்துக்குள்ளேயே அவற்றை யாருக்கும் பாதகமில்லாமல் செய்ய முயற்சிக்க வேண்டும். விருப்பமின்றிச் சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தக்கூடாது. எல்லாருக்குமான சுதந்திரமான வாழ்வு முக்கியம். அது தனித்திருந்தாலும் சரி சேர்ந்திருந்தாலும் சரி, முதல் உறவிலிருந்து பிரிந்து மறுமணம் செய்துகொண்டாலும் சரி. நிம்மதி முக்கியம்.
38.சமூகப் போக்குகளில் தனிநபர் மனமாற்றம் முக்கியமா?
நிச்சயமாக. அதுதான் முழு சமூகத்தையும் மூழ்காமல் காக்கும். தனி நபர் ஒவ்வொருவரும் தன்னை ஆய்வு செய்தாலே போதும். தான் செல்லும் வழி சரிதானா என்ற ஆத்ம சோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்வது அவசியம்.
39.தனிநபர் மனமாற்றத்தை எப்படிச் சாத்தியப்படுத்துவது?
குழந்தைப் பருவத்திலிருந்தே இவை சொல்லப்பட வேண்டும். அவ்வப்போது பள்ளி கல்லூரிகளில் கவுன்சிலிங் செய்யலாம். குடும்பங்களில் உள்ள பெரியவர்களின் உதவியாலும் சீர்படுத்தலாம். ஒவ்வொரு விஷயத்திலும் தன் முடிவு யாருக்கும் பாதகமில்லாமல் அமைகிறதா அது சரியானதுதானா என்பதைப் பாரபட்சமில்லாமல் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
40.தனிநபராக எழுத்தாளர் உணர்கிறாரா? நீங்கள் உணர்கிறீர்களா?
மாற்றம் என்னிலிருந்தே தொடங்கவேண்டும் என உணர்கிறேன். விட்டுக்கொடுத்துப் போவது, அனுசரிப்பது மட்டுமல்ல, அனைவருக்கும் நலம் பயக்கும் சரியானவற்றையே தொடர்ந்து செய்வதும் கட்டாயம் என உணர்கிறேன். நிச்சயம் அதைத் தொடர்வேன். யாருக்கும் குந்தகம் விளைவிக்காத செயல்களையே செய்வேன்.
41.சமூகத்தின் பிரதிநிதியாக உணர்கிறீர்களா? மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் நபராக உணர்கிறீர்களா?
ஆம் இரண்டாகவும் உணர்கிறேன். சமூகத்தின் பிரதிநிதியாக இதுவரை பெண்ணாக என்னாலும் கொண்டுவரப்பட்ட குழப்பங்களுக்கு வருந்துவதோடு இனி அதை எப்படி நேர்கோட்டில் கொண்டு செல்வது என்பதையும் யோசிக்கிறேன்.
42.நீங்கள் நினைக்கும் சமூக மாற்றம் எத்தகையது?
ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவம் உடைய பரஸ்பரம் புரிதல் உடைய சமூகம் அமையவேண்டும். கணவன் மனைவி, ஆண் பெண் என்ற இரு கூறுகளும் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து வாழும் அற்புதமான வாழ்வைக் கனவு காண்கிறேன். அதற்கு நம் பாரம்பரிய மிக்க குடும்ப அமைப்பு வழிகோலும் எனவும் நம்புகிறேன்.
43.நீங்கள் எப்படிச் சாத்தியப்படுத்துவீர்கள்? ஒரு கற்பனையைச் சொல்லுங்கள்...
முதலில் அர்த்தம் கெட்ட உறவுகளையும் வன்மத்தையும் வக்ரத்தையும் சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவேன். மருத்துவம், கல்வி, வேலை வாய்ப்பு, உணவுப் பங்கீடு, அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற நிலையைக் கொண்டு வருவேன். புரிதல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு அவர்களுக்கான தேவைகள் என்ன, செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெளிவுபடுத்துவேன். புரிதலோடு பிரிந்தோ சேர்ந்தோ வாழ்பவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படுவேன். ஒவ்வொருவருக்கும் உரியதைக் கற்பித்தபின், செய்து முடித்தபின் என் கவனத்தை மட்டும் அவர்கள் மேல் வைத்து அவர்களின் வளர்ச்சியைக் கண்டு தேவைப்பட்டால் சென்று நேர்படுத்தி வருவேன். தனித்தனியாக வாழ்ந்தாலும் சேர்ந்து வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது முக்கியம். அந்த மகிழ்ச்சியை அனைவரின் முகத்திலும் காண என்னென்ன வழிமுறைகள் உண்டோ அது அனைத்தையும் கையாள்வேன்.
44.உங்கள் எழுத்தில் அதைச் சாத்தியப்படுத்துகிறீர்களா?
ஓரளவு. ஆனால் எழுத்திலும் என்னால் தந்தையர் வழி சார்ந்த சமூகத்தைப் பின்பற்றும் போக்கையே கடைப்பிடிக்க முடிகிறது. ஆனாலும் நான் யாரிடமும் அராஜகத்தைக் கையாண்டதில்லை. ஒவ்வொருவர் போக்குக்கும் செல்வதால் எழுத்தில் கூட அதையே பிரதிபலிக்கிறேன். பெற்றோர்களால் எப்போதும் சமரசத்துடனே வாழக் கற்பிக்கப்பட்டிருப்பதால் எனது வாழ்வும் எழுத்தும் ஒன்றுக்கொன்று இயைந்தே செல்கிறது.
45.தினம் புதிதாக உங்களையே மாற்றி அமைக்கும் எழுத்தும் சிந்தனையும் கிடைக்க என்ன செய்வீர்கள்?
புதுப்புது எழுத்துக்களை வாசிக்க விழைகிறேன். அவ்வப்போது மாத்தி யோசிக்கிறேன். வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களின் ஒரு செயல் இப்படி நடக்கும் என அனுமானிக்கும் போது அப்படி நடக்காமல் எதிர்விதமாக நடக்கும்போது என்னை அது ஆச்சர்யப்படுத்துகிறது மேலும் அது என் படைப்புகளை மட்டுமல்ல என்னையும் என் சிந்தனையையும் அவர்களுக்கேற்ற மாதிரி மாற்றி அமைக்கிறது. எதிர்மறைச் சிந்தனைகள் என்னைத் தாக்குவதில்லை என்றாலும் நானும் மாறுபடவும் பல்வேறு பட்ட மனிதர்களின் உணர்வுகளைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் பண்படவும் உதவுகிறது.
46.உங்களுக்கு வரும் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?
எதிர்ப்புகள் என்றால் கொஞ்சம் துவண்டுதான் விடுவேன். எதிர்க்கருத்துக்களை எதிர்கொள்ள சங்கடமாக இருப்பதால் தவிர்த்துவிடுவேன்.
47.உங்கள் எழுத்தை விமர்சிக்கும் போது ஏற்பீர்களா?
ஆக்கபூர்வமான விமர்சனம் என்றால் ஏற்பேன். வீம்புக்காக செய்யப்படும் வாத விவாதங்களில் எனக்கு பயம் கூட உண்டு.
48.பெண் என்பதால் சலுகை காட்டப்படுகிறதா? அதை ஏற்கிறீர்களா?
சலுகை காட்டப்படுகிறது. ஏற்பேன். ஆனால் ஏற்காமல் இருப்பது நல்லது. பெண்ணின் எழுத்துகள் என்பதால் விற்பனை ஆகும், முகநூலில் தங்கள் பத்ரிக்கை தொடர்ந்து பிரபலமாக உதவலாம் என ஒரு சில பத்ரிக்கைகள் வாய்ப்பு அளிப்பதுண்டு. அவர்கள் நம் திறமைக்காகவும் எழுத்துக்காகவும் மதிப்பதில்லை, தங்கள் பத்ரிக்கை தொடர்ந்து பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக முகநூலில் வெகு பிரபலமான சாரமில்லாத எழுத்துகளை எழுதுபவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் போதுதான் நமக்கு உண்மை தெரியும்.
49.அவலங்களை, நேசங்களை, பரிதவிப்புகளை, மனஅவசங்களை, என்று எதிர்மறைகளைப் பதிவு செய்யும் எழுத்தில் ஆழம் அதிகமா
ஆம். ஒவ்வொரு கருத்துக்குப் பின்னும் ஒவ்வொரு வேதனையான வாழ்வியல் இருக்கிறது. உண்மையும் இருப்பதால் ஆழம் அதிகம்தான்.
50.வெளிப்படையான கருத்தைச் சொல்வதுதான் எழுத்தின் வேலையா?
ஆம். தேவைப்படும் இடங்களில் வெளிப்படையாகச் சொல்லிவிடவேண்டும். மறைத்துச் சொல்வதால் யாருக்கு லாபம் ?
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!