எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 ஏப்ரல், 2018

பிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.

பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.

ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் பூக்கும் சூரிய தேவன் தன் வெப்பத்தால் அதைத் தூய்மையாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த இடத்தின் பெயர் சாம்பபுரம். அது தேவர்களுக்கெல்லாம் தேவன் சூரியன் உறையும் இடம். அதற்கு ஏன் சாம்பபுரம் என்ற பெயர் ஏற்பட்டது? ஜாம்பவதியின் புதல்வன் சாம்பன் ஏன் ரோகம் பீடித்த உடலுடன் அங்கே சூரியதேவனைப் பற்றிக்கொண்டு தவமியற்றிக் கொண்டிருக்கிறார்.

தந்தையே மகனுக்கு சாபம் அளிக்க முடியுமா.. அதுவும் கொடுவினையாகிய தொழுநோய் பீடிக்கும்படி.? சில நிகழ்வுகள் நிகழ வேண்டியே இந்த சாபம் உண்டானது. அவை என்னென்ன நிகழ்வுகள். ?


விருஷ்ணியின் யாதவ வம்சத்தில் தோன்றிய கிருஷ்ணருக்கு காந்தாரியின் சாபம் ஒன்று இருந்தது, அது குருஷேத்திரப் போரில் தன் குலத்தை அழித்த கிருஷ்ணரின் யதுகுலமும் அழிந்துபடும் என்பது. நூற்றுக்கணக்காகக் குழந்தைகளை இழந்த தாய் அல்லவா. அவள் சாபம் பலிக்கும் நேரம் வந்தது. அது கிருஷ்ணரின் மகன் சாம்பனின் தலையில் வந்து விடிந்தது.

ருமுறை கிருஷ்ணரைக் காண நாரதர் வந்திருந்தார். நாரதர் வந்தாலே கலகம்தானே. அவர் வரும் நேரம் சாம்பன் அவரை வரவேற்காமல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தான். கட்டிளங்காளை. பொலிவான தெளிவான தேஜஸான ஆண்மகன். அவனுடைய பதினாயிரம் தாய்களின் பேரன்பு தாங்கிப் பொற்சிலையாக ஜொலித்தான். சாம்பசிவனின் அருளால் அவன் பிறந்தமையாலும் ஜாம்பவதியின் புத்திரன் என்பதாலும் அவனுக்கு சாம்பன் என்ற பெயர் விளங்கலாயிற்று.

கர்மவினை தன் வினை முடிக்க நாரதர் மூலம் மாசு மருவற்ற அவ்விளைஞனைத் தேர்ந்தெடுத்திருந்தது. கடவுளின் மைந்தன் என்றாலும் கர்மவினைப்பயனை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். அன்று அமைதியுடன் சென்றுவிட்ட நாரதர் சிறிது காலம் கழித்துத் தன்னை உரிய மரியாதையுடன் வரவேற்காத சாம்பன் மேல் காழ்ப்புணர்வுடன் கிருஷ்ணரிடம் ஒரு மாயையை உண்டாக்கினார்.

கிருஷ்ணரின் பதினாயிரம் மனைவியரும் ஒரு முறை தடாகத்தில் தங்கள் புத்திரன் சாம்பனுடன் விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது  நாரதன் சாம்பனிடம் தந்தை கிருஷ்ணர் அழைப்பதாகக் கூற அவன் எழுந்து சென்றுவிட அனைவரும் தடாகத்தில் அவனைத் தேடுகிறார்கள்.

ஒவ்வொரு தாயின் மனமும் பரிதவிக்கிறது ’எங்கே சாம்பன், மூழ்கி விட்டானோ’வென்று.

அச்சமயம் நாரதர் கிருஷ்ணரிடம் “பாருங்கள் இவர்கள் சாம்பன் இல்லாமல் பரிதவிப்பதை. உங்களை விடவும் அவனிடம் அதிக அன்பு செலுத்துகிறார்கள். “ என்று கோள் மூட்டவும், கோபத்தில் கிருஷ்ணரும் அவர்களுக்கு புத்ரலோகத்தில் இடமில்லை எனவும் அழிந்து படுவார்கள் எனவும் அவர்களை சிந்தை குலையச் செய்த சாம்பனின் அழகு உருவம் அருவறுப்புக் கொள்ளும் தோற்றமடையும் என்றும் சாபமிட்டார்.  

தந்தையைக் காணவந்த சாம்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. ’தான் செய்த தவறென்ன.? தந்தை அழைப்பதாகக் கூறியதும் காணத்தானே வந்தோம் ஏன் அவர் இவ்வாறு சாபமிட்டார் ?’
யதுகுலம் அழியவேண்டியே இவ்வாறு சாம்பனுக்கும் கிருஷ்ணரின் பதினாயிரம் மனைவிகளுக்கும் சாபம் கிடைக்கச் செய்த நாரதர் தன் வினை முடிந்ததெனக் கிளம்பிச் சென்றார்.

னம் நொந்து அழுதபடி தனியறையில் தன் ரோகம் பீடித்த உடலுடன் நொந்து போய்க் கிடந்தான் சாம்பன். ”யாவரும் வெறுக்கும்படியான நோயை எனக்கு ஏன் தந்தீர்கள் தந்தையே ? இதிலிருந்து நான் தப்பும் வழி என்ன ?”. அவன் அவலக் குரல் தந்தையாகிய கிருஷ்ணரை அசைக்கிறது. அல்லும் பகலும் தான் ரசித்த குழந்தைக்கு இப்படி ஒரு சாபமிட நேர்ந்ததே என வருந்துகிறார் கிருஷ்ணரும். பாசத்தால் நெஞ்சம் நோகிறது.

நாரதர்தான் இந்த நிலைக்குக் காரணகர்த்தா என்றும் அவரும் ஒரு கருவியே என்பதையும் புலப்படுத்துகிறார். யார்கண்ணிலும் படாமல் ஒடுங்கிப் போய்க்கிடந்த சாம்பன் நாரதர் அடுத்தமுறை அரண்மனைக்கு வரும்போது தனக்குத் தகுந்த பரிகாரத்தைச் செய்யும்படி வேண்டுகிறான். மனம் கனிந்த நாரதர் ஒரு சாபவிமோசனத்தையும் உபதேசிக்கிறார்.

மித்ரவனத்தில்  பிரமனைத் தியானித்துக்கொண்டிருக்கிறான் சாம்பன். ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றன. அவன் உள்ளொளி பெருகப் பெருக பிரமனின் கருணைப்பார்வை பட்டு சாம்பனின் அகமும் முகமும் பொன்னாக ஒளிர்கிறது. ஆம் யார் இந்த பிரமன். ?

அவர்தான் தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஆதி தேவனான, சூர்யபகவான். பாஸ்கரா, ஆதித்யா, ரவி, திவாகரன், மார்த்தாண்டன், விவஸ்வான், என்றெல்லாம் சொல்லப்படும் சூரியதேவனே நித்தியமாக அங்கே தவம்செய்துகொண்டிருக்கிறார். அவர் மும்மூர்த்திகளின் பிரத்யட்ச சொரூபம். 

உயிர்களைப் படைப்பதில் பிரமனாகவும், காப்பதில் விஷ்ணுவாகவும் அழிப்பதில் சிவனாகவும் முத்தொழிலையும் புரிந்து வருகிறார். அவர் உதிக்கும்போது உலகம் உயிர்க்கிறது. உயிர்களை உயிர்ப்பிப்பதால் அவர் பிரமன் ஆகிறார். அவரையே ஆதாரமாகவும் ஆகாரமாகவும் உட்கொண்டு உலகம் உய்கிறது.

ஆமாம். பிறப்பிறப்பற்ற சூரியன் தவம் செய்வதா.. அதுவும் எதைக் குறித்து ? தன் ஆத்ம ஸ்வரூபமான பிரம்மத்தைப் பற்றுவது குறித்து நித்ய தவத்தை அவர் சந்திரபாகா நதிக்கரையில் இயற்றிக் கொண்டிருக்கிறார். நதி தீரத்தில் ஒளிர்கிறான் பிரமனாகிய சூர்யன். தன் சாபம் நீங்க அங்கேயே தங்கித் தவம் செய்து வருகிறான் சாம்பனும்.    

ந்திரபாகா நதிக்கரை தேஜசாய் ஒளிர்கிறது. கோடி சூர்யப் ப்ரகாசத்தோடு கிருஷ்ணகுமாரனின் முன் தோன்றுகிறார் சூர்யபகவான் என்னும் பிரமன். உயிர்களை யாக்கும் அவர் அவன் யாக்கையைத் தன் பொன்னிறக் கிரணங்களால் தீண்ட அவனைப் பீடித்திருந்த கொடிய ரோகம் மறைந்து பொன்னுடல் பெறுகிறான் சாம்பன். நோய் அகன்ற சாம்பன் தன் தந்தை கிருஷ்ணரை அடைந்து பரிபூரண இன்பத்துடன் வாழ்ந்து வந்தான்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 30. 3. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

7 கருத்துகள்:

  1. நம் மதக் கதைகள் என்றுமே சோடை போகாது

    பதிலளிநீக்கு
  2. எளிமையான நடையில் நல்ல கதை...

    பதிலளிநீக்கு
  3. நன்றி இளங்கோ சார்

    நன்றி பாலா சார்.

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி மணவாளன்

    நன்றி முத்துசாமி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...