எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 ஏப்ரல், 2018

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அவதி.

பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் விடுமுறை என்பதால் பழனிக்குச் சென்றிருந்தோம். அங்கே கடல் அலைபோல் கூட்டம். அசந்தே போனோம். நடக்கக்கூட இடமில்லை. மலை முழுவதும் பால் காவடி, பன்னீர்க்காவடி, சர்க்கரைக் காவடிகளும் இன்னும் பல காவடிகளும் அணிவகுத்தன.

இதோ பறவைக்காவடியாக கிரேனில் நால்வர் வரும் காட்சி. பார்த்ததும் புல்லரித்தது. இறையருளால் அன்றி இது சாத்யமே இல்லை. இன்னுமொருவர் டிவிஎஸ் 50 இல் கழுத்தில் சூலம் குத்தி முதுகில் ஆறு வாள்கள் ( இடப்பக்கம் மூன்று வலப்பக்கம் மூன்று ) செருகியபடி ஓட்டி வந்தார். இவர்கள் அனைவரும் யானையடிப்பாதையில் மலை ஏறினார்கள்.

தங்கியிருந்த இடத்தில் இருந்து கேபிள் காருக்கு ஆட்டோவில் வந்தோம். ஒரே வெய்யில் வேறு வின்ஞ்சிலும் டிக்கட் விலை வாரியாக க்யூ. அதிலும் அதிக விலை டிக்கெட்டுக்கு அதிக க்யூ. வெய்யில் கொளுத்துகிறது. மணியோ பதினொன்று. விஞ்சுக்குச் சென்றாலும் அதே கதிதான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துத்தான் விஞ்சோ, கேபிள் காரோ ஏற முடியும் அவ்வளவு க்யூ.

அதன் பின் ஒரு குதிரை வண்டி பிடித்து யானையடிப் பாதை வழியாகப் போகலாம் என்று போனால் குதிரை வண்டியை விட்டு இறங்கும்போது வலது பாதம் சுரீரென சுளுக்கோ ரத்தக் கட்டோ பிடித்தால்போல வலித்தது. முருகா இது என்ன சோதனை என்று அங்கேயே அமர்ந்தால் ரங்க்ஸ் நீ இங்கேயே இரு என்றார். அங்கே உக்காரவா இவ்வளவு தூரம் வந்தது.


அங்கே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மணி இன்னிக்குப் பூரா கூட்டமாத்தான்மா இருக்கும். விஞ்சோ, கேபிள் காரோ கிடைக்காது. நடக்க வேண்டியதுதான் என்றார். ஒரு வாறு சரியாகி நடக்கத் துவங்கினால் மூச்சு வாங்குது.

நல்லவேளை படிக்கட்டில் பிச்சைக்காரர்களும் இடைஞ்சலாய் இடித்துக் கொண்டிருக்கும் கடைகளும் இல்லை. பத்துப் பத்துப் படியாக ஏறி அங்கங்கே அமர்ந்து ஒருவழியாக பன்னிரெண்டு முப்பதுக்கு மலை ஏறியாச்சு. எங்கெங்கும் பக்தர் வெள்ளம். மலை ஏறும்போதே நம்மைத் தாண்டிச் சென்ற காவடிகள் எண்ணில் அடங்கா.
எங்கெங்கு பார்த்தாலும் தடுப்புக் கட்டைகள். அங்கங்கே வெய்யில் தாக்காமலிருக்க நீண்ட சணல் மிதிகளும் ஸ்பெஷல் வெள்ளை பெயிண்டும்  அடித்திருக்கிறார்கள். ட்ராலியில் வைத்து குடிதண்ணீரும் சப்ளை செய்கிறார்கள் .

தர்ம தரிசனம் க்யூவோ பெரிசு. பத்துரூபாய் டிக்கெட் போட்டிருக்கு ஆனால் கிடையாது. இருபது ரூபாய் க்யூ மட்டுமே உண்டு. அதை விட 200 ரூபாய் சின்னதாகத் தெரிந்ததால் உள்ளே வந்தாச்சு. அட அப்பா.. அது 20 ரூ க்யூவை விட பெரிசு என்று உள்ளே வந்ததும்தான் தெரிந்தது. திடீரென அந்தக் க்யூவை இன்னொரு பக்கம் திருப்பிவிட அங்கும் இங்கும் ஓடி இன்னும் பெரிதாகிவிட்டது க்யூ. ஒன்றே காலுக்கே ஓரளவு உள்ளே வந்துவிட்டோம். அப்படியே நின்றது க்யூ. வெய்யில் கம்பிகளின் வழியே எரிக்கிறது. ஒரு முப்பது லைன் வளைவுகளில் புகுந்து வெளியே வந்திருப்போம்.

அதே நேரம் மணி இரண்டாகிவிட க்யூ நகரவே இல்லை. காவடி கொண்டு வந்த எல்லாரும் போயாச்சு ஆனால் சாதரண பக்தர்கள் எல்லாரும் அப்படி அப்படியே அமர்ந்தோம். குழந்தை குட்டிகளோடு வந்த அனைவருமே சுமார் பத்து மணிக்கோ அல்லது எட்டு மணிக்கோ புறப்பட்டு வந்திருக்கக் கூடும். கையில் இருந்த பிஸ்கட், தின்பண்டங்களை உண்டார்கள். தண்ணீர் அங்கங்கே கிடைத்தது. அதில் ஏதும் பிரச்சனையில்லை.

ஆனால் அங்கே குரங்குகள் படையெடுக்க பயமாகி விட்டது. சோர்விலும் பசி தாகத்திலும்  பலர் அங்கேயே அப்படி அப்படியே படுத்துவிட்டார்கள்.

பங்குனி உத்திரத்திற்காக நேர்ந்துகொண்ட பலர் அன்று விடுமுறை என்பதால் தங்கள் பிரார்த்தனையைச் செலுத்த வந்திருந்தார்கள். அன்று ஒரு நாளாவது மதியமும் தரிசனத்துக்கு அனுமதித்திருந்தால் வந்தவர்களும் தரிசித்து உணவு உண்ணப் போயிருப்பார்கள்.

ஆனால் எங்கும் யாரையும் காணோம். வழியோ பூட்டி அடைத்திருக்கிறது. பசியோ வயிற்றைக் கிள்ளுகிறது. திரும்பிப் போகவோ, பாத்ரூம் செல்லவோ வழியே இல்லை. அவ்வப்போது வெவ்வேறு க்யூக்களில் இருந்து முருகா என்றோ அரோகரா என்றோ சத்தமும் தள்ளுமுள்ளும் கேட்டது. ஒரு வேளை அங்கே திறந்து விட்டார்களோ அல்லது இங்கே திறக்கப் போகிறார்களோ என்று எதிர்பார்த்து அனைவரும் ஏமாந்தோம்.

ஒரு வழியாக நான்கு மணிக்குத் திறந்து விட்டார்கள். உள்ளே சென்றால் வேறு க்யூவில் இருந்தவர்கள் போலோ அல்லது திடீரெனப் பணம் கொடுத்து உள்ளே நுழைந்தவர்கள் போலோ பலர் முன்பே க்யூவில் நின்றிருந்தார்கள் . அதுவோ கருவறையின் சந்நிதி. அதில் இவ்வளவு பேர் முன்பே காத்து நின்றிருக்க வாய்ப்பே இல்லை.

கிட்டத்தட்ட ஒரு வரிசையில் 50 பேர் இருப்போம். அந்த நவசக்தி மண்டபத்தில் தங்கவேண்டுமென்பது முருகன் ஆக்ஞை  போலும். ஒரு லைனில் இருந்தவர்கள் கட்டிய பணமே ஒருவருக்கு ரூபாய் 200 என்றால் 50 பேருக்கு பத்தாயிரம் ரூபாய். இது பல வரிசை இருந்தது. அதிலும் காலையில் இருந்து போய்க் கொண்டிருக்கிறது. இவ்வளவு பணம் வாங்கியும் மக்களை அவதிப்பட வைத்துவிட்டார்கள்

மதிய நேரம் உணவு இடைவேளைக்கு காலையில் சேவை செய்த அர்ச்சகர் சென்றுவிட்டால் வேறு  சில அர்ச்சகர்களைஅடுத்த கால பூஜை செய்ய நியமித்திருக்கலாம். பக்தர்கள் வரிசைப்படி வந்து வணங்கி காலாகாலத்தில் சென்றிருக்க முடியும்.

ஆனால் ஒரு விநோதம் நாங்கள் உள்ளே சென்றதும்  அங்கே ஒரே ஒரு அர்ச்சகர் மட்டுமே இருக்க முருகனை ஆறேழு பணியாளர்கள் அல்லது அதிகாரிகள் சந்நிதியின் இருபுறமும் நின்று மறைத்துக் கொண்டிருந்தார்கள்.

நார்மலாக தர்ம தரிசனத்தில் வந்தாலே மூன்று நான்கு நிமிடங்களாவது தரிசிக்க முடியும். இருபது ரூபாய் டிக்கெட்டிலும் 200 ரூபாய் டிக்கெட்டிலும்  வந்தால் உடனே நகருங்க நகருங்க என்று ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தால் தொட்டு இழுத்து அநாகரீகமாகத் தள்ளி விடுகிறார்கள்.

இருநூறு ரூபாய் கொடுத்த பக்தர்கள் ஓரு நிமிடமாவது கந்தனைக் கண் குளிர வணங்கநினைக்க மாட்டாரா. நமக்கு முன் நின்ற சிலரை அவ்வாறு ஊழியர்கள் தள்ள நாம் எச்சரிக்கையாக கடவுளைப் பார்த்தபடியே நகர்ந்தோம்.

இதில் இன்னோரு கோளாறு என்னவெனில் அங்கே நிற்கும் ஊழியர்களே குறுக்கும் நெடுக்கும் போய் பக்தர்களிடம் இருந்து பால்குடத்தில் இருந்து பாலை வாங்கி அண்டாவில் ஊற்றுகிறார்கள். இறைவன் கருவறைக்குப் பக்கத்தில் இன்னார்தான் நிற்க வேண்டும் என்ற வரைமுறை ஏதுமில்லையா.
அர்ச்சகர் தீபாராதனை காட்டுவதே இல்லை. அவர் வெறுமனே தட்டை வைத்துக்  கொண்டு இருக்கிறார். அது நமக்கு எட்டுவதும் இல்லை. ஒருவழியாக விபூதியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம்.
இவ்வளவு காசு வாங்குகிறார்களே மேலே பாருங்கள் சுதைச் சிற்பங்கள் எல்லாம் உடைந்திருக்கின்றன. கும்பாபிஷேகத்தின் போதுதான் சரி செய்வார்களோ.
பிரதோஷத்தின்போது சண்டீசர் வரை வலமும் இடமும் ஓடி ஓடி வணங்குதைப் போல முருகனையும் எல்லாப் பக்கங்களில் ஓடி ஓடி உலா வந்து சுற்றி வந்து ஒரு வழியாகக் கருவறை அடைந்து வணங்கினோம். ஒரு வேளை அது ஓம் என்ற எழுத்தில் அமைந்திருக்கலாம். :)
நாரதரும் அகஸ்தியரும் பசியோடு நின்ற எங்களை ஆற்றுப்படுத்தினார்கள். நாங்களே பிசுபிசுப்பில்தான் இருக்கிறோம் என.
ஒரு வழியாக கும்பிட்டு வெளியே வந்தோம். மழைக்கோணமாக இருந்தது. அன்று தங்கரத உலா இல்லை என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அன்னதானத்துக்காக நினைத்திருந்த தொகை ஒன்றைச் செலுத்திவிட்டு வந்தோம். திரும்ப  அன்னதான க்யூவில் நின்றால் இன்னும் மூன்று மணி நேரம் ஆகும்.

திரும்ப அடிவாரம் செல்ல ஒன்றரை அல்லது மூன்று மணி நேரம் ஆகும் என்றார்கள் விஞ்சுக்கும், கேபிள் காருக்கும். பயங்கரக் க்யூ.  எனவே படி இறங்கி கட கடவென ஓடி வந்தோம். ஒரு வாரமாக கெண்டைக்கால் சதை எல்லாம் கடகடத்துக் கொண்டிருக்கிறது.

கோயிலில் நவபாஷாண முருகன் மெல்லிய உருவமாய் இருக்கிறார். எங்கள் ட்ரைவர் கேட்டார் ”என்ன அலங்காரம் அக்கா” என்று. ”தெரியலப்பா முருகன் வெள்ளை வேஷ்டி அங்கவஸ்திரம் தலைப்பாகையில் இருந்தார். மதிய நேரமாக இருந்ததால் ராஜ அலங்காரமா இருக்கலாம்” என்றேன். நேரமாகிவிட்டதால் நளபாகத்தில் உணவை வாங்கி வைக்கச் சொல்லி இருந்தோம்.

போகர் செய்த முருகன் சிலை அதுதானா என்று அந்த சின்னச் சிலையைச் சுற்றியே என் சிந்தனை அலைந்து கொண்டிருந்தது. வேல் தரித்திருந்த முருகன் என்ன காரணத்தாலோ எங்களை அன்று (அங்குலம் அங்குலமாகப் பாதம் வைத்து நடந்து பாடல்கள் கவசங்கள் எல்லாம் மனதுக்குள் பாடிக் கொண்டிருந்தேன் ) பழனி மலையில் தங்க வைத்திருந்தார் என்று புரியவில்லை. ஆனால் வரும் வழியில் ஒரு ஸ்விஃப்ட் காரில் ஒரே குடும்பத்தவர் நால்வர் மூன்று மணி நேரம்  முன்பு அங்கே விபத்துக்குள்ளாகி இறைவனடி சேர்ந்திருந்தார்கள். முருகா என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
   மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
      பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
         வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

3 கருத்துகள்:

  1. இந்த சிரமங்களை முருகன் தான் தீர்க்க வேண்டும்...!

    பதிலளிநீக்கு
  2. பழனி சென்று ரொம்ப வருடங்களாகிவிட்டது. ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிரமமாக இருக்கும் போல இருக்குதே..இத்தனை சிரமங்களா? அதனிடையில் நீங்கள் சென்று வந்திருப்பதற்கு உங்களுக்குப் பாராட்டுகள். சகோ/தேனு

    கீதா: கூட்டமாக இருந்தால் நான் கோயில் செல்வதில்லை. கூட்டமில்லாமல் இருந்தால் மட்டுமே இது போன்ற ஃபேமஸ் கோயில் தரிசனம்.

    பதிலளிநீக்கு
  3. ஆம் டிடி சகோ

    ஆம் கீத்ஸ்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...