எனது புது நாவல்.

வியாழன், 12 ஏப்ரல், 2018

பெண் ஏன் அடிமையானாள் ? ஒரு பார்வை.


பெண் ஏன் அடிமையானாள் ? ஒரு பார்வை.

ஈ வெ ராமசாமிப் பெரியார் அவர்கள் 1942 இல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 76 வருடங்கள் கழித்து இன்றும் இக்கட்டுரைகள் சொல்லும் கருத்துக்கள் வெகு ஜனத்திற்கு அதிர்ச்சி அளிப்பனவாகவும் கைக்கொள்ள இயலாததாகவுமே இருக்கும்போது 1942 இல் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு அதிகமாகத்தான் இருந்திருக்கும்.


கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழியவேண்டும். ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் படைத்துள்ளார்.   

இதுவரை சமூகத்துக்காக தனி மனிதர்கள் கைக்கொண்டுள்ள போலியான நடைமுறைகளையும், ஒவ்வொரு தனி மனிதனின் உண்மையான உள்ளக்கிடைக்கைகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது இந்நூல்.

ஆண் அல்லது பெண் இருபாலாருக்குமே வாழ்வின் தாத்பர்யங்களையும் தாங்கள் சமூக நெறிப்படிக் கொண்டுள்ள சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் களைந்து உண்மையான யதார்த்தமான வாழ்க்கைக்குக் கைக்கொள்ள வேண்டிய கருத்துக்களை உரத்துச் சொல்லிச் செல்கிறார் பெரியார்.

பெண்களுக்காகவும் பெண் விடுதலைக்காகவும் வாழ்வியல் சுதந்திரத்துக்காகவும் குரல் கொடுக்கும் அதே நேரம் ஆண்களின் அவசத்தையும் அவர்களின் பக்கமிருந்து பார்த்து எழுதி அவர்களுக்காகவும் குரல் கொடுக்கப்பட்ட நூலாகும் இது.

கற்பு இரு பாலாருக்கும் பொதுவானது. கற்பு என்று சொல்லிப் பெண்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தோலுரிக்கிறது முதல் அத்யாயம்.

வள்ளுவரும் கற்பும் என்ற தலைப்பில் அது எப்படி ஆண் சார்ந்த சமூகத்தில் அக்கால ஆண்களால் பெண்களுக்கான நீதி போதனை மாதிரியானதாக எழுதப்பட்டது என்றும் ஆண்களுக்கு அது சவுகர்யம் ஏற்படுத்தும் அதே சமயம் பெண்களுக்கு எவ்வளவு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது என்றும் குறள்களை மேற்கோள் காட்டி எடுத்துச் சொல்கிறார்.அதை அப்படியே காலகாலத்துக்கும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் இடித்துரைக்கிறார்.

காதல் என்பதன் போலித்தனத்தையும் அதன் மாயையையும் கூறும் அதேகணம் உண்மையான காதலுக்கான மரியாதையையும் தெரியப்படுத்துகிறார். ஆனால் அன்பு என்ற பெயரில் அடிமைப்படுத்துவதை ஏற்கவில்லை. ஒரே காதல் என்பதையும் ஒரே புருஷன் ஒரே மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவரிடத்தில் ஒருவர் கொள்ளும் ஆக்கிரமிப்பைக் காதல் என்று நினைத்துக் கொள்வதையும் பகடி செய்கிறது இந்த அத்யாயம்.

கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல என்பது இக்காலக் கட்டத்திற்கு வெகு பொருத்தமுள்ள கட்டுரைகள். விவாகரத்துகள் அடிக்கடி நிகழும் காலம் இது. இதன்பொருட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மனிதர்களுக்கென்றே எழுதப்பட்டுள்ளன இந்த அத்யாயங்கள்.

விபச்சாரம் என்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்யாசத்தையும் பெண்ணை மட்டும் குற்றம் சாட்டும் சமூகம் ஆணை அவ்வாறானா நிலையிலும் பல்வேறு தார நிலையிலும் பலபெண்களோடு தொடர்பு கொண்ட நிலையைப் பெருமையாகவும் ஆண் தன்மையாகவும் கருதுவதைக் கிண்டலடிக்கிறது இவ்வத்யாயம்.

சொத்துரிமை , விதவைகள் நிலைமை என்பன பெண்ணுக்கான சமூக நீதியையும் குடும்ப நீதியையும் ஸ்தாபிக்கின்றன. காஷ்மீர், திருவிதாங்கூர், மைசூர் சமஸ்தானங்கள் எடுத்துக்காட்டாய் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. ( சுதந்திரத்துக்கு முன் வந்த கட்டுரைகள் இவை ) . கர்ப்பத்தடை ஏன் வேண்டும் எனவும் கூறுகிறார். பிள்ளை பிறப்பிக்கும் மெஷின் அல்ல பெண் அவளுக்கு எனத் தனியாக உணர்வுகளும் வாழ்வியல் விழைவுகளும் உண்டு என்பதைச் சொன்ன அத்யாயம் கர்ப்பத்தடை.

ஆண்மை, பெண்மை, கடவுட்தன்மை அவற்றின் பண்புநலன்கள் போன்ற மாயங்களை விலக்க வேண்டும் என்கிறது கடைசி அத்யாயம்.சாஸ்திர சம்பிரதாயங்களை மூடப் பழக்க வழக்கங்கள், அவை ஆண்கள் என்னும் ஒரு சாராரால் பெண்களை அடிமையாக்கத் திணிக்கப்பட்டவை என்று சொல்கின்றன கட்டுரைகள்.

பெண்களின் எண்ணங்களில் வாழ்வியலில், வார்த்தைகளில் நடப்புகளில் எவ்வாறெல்லாம் இவ்வடிமைத்தனம் பகுதி பகுதியாகப் புகுத்தப்பட்டுள்ளது என்றும் காலகாலமாகப் போதிக்கப்பட்டு உண்மையாகப் பரிணமிக்கப்பட்டுள்ளது என்றும் உரத்துச் சொல்கின்றன கட்டுரைகள். 

இன்றைய வாழ்வியலிலும் இவை இப்படியே நீடிப்பதால்  மக்கள் தம் எண்ணப்போக்கை மாற்றிக் கொள்ள இக்கட்டுரைகளை வாசிக்க வேண்டிய தேவை இன்றியமையாததாகிறது.

நூல் :- பெண் ஏன் அடிமையானாள்?
ஆசிரியர்:- தந்தை பெரியார்
பதிப்பகம் :- எதிர் வெளியீடு
விலை :- ரூ 80/-

2 கருத்துகள் :

சனா யாழகிலன் சொன்னது…

எழுதிக் கொண்டே இருக்கின்றாள் என் தேவதை எனும் அம்மா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அகிலா

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...