சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது. குருக்ஷேத்திரப்
போர் பூமி. ரத்தமும் சதையும் நாலாபக்கம் நிண வாசமுமாக இருக்கிறது. எட்டாம் நாள் போர்
அது. அங்கே அம்புகளையே படுக்கையாகக் கொண்டு ஒருவர் வீழ்ந்து கிடக்கிறார். என்னது அம்புப்
படுக்கையா ஆம் அம்புப் படுக்கையேதான். அவ்வளவு மனோ வலிமை வாய்ந்தவர் யார்.?
விஷ்ணுவின் ஆயிரம்
நாமங்களையும் துதித்தபடி வானோக்கி இருக்கிறது அந்த தேஜசான முகம். யார் முகம் அது ?
நெருங்கிப் போய்ப் பார்ப்போமா. அஹா இது கங்கையின் புதல்வன் தேவவிரனின் முகம் அல்லவா.
தந்தைக்காக திருமணம் மறுத்து பிரம்மச்சர்ய விரதம் பூண்ட பீஷ்ம பிதாமகர் அல்லவா அங்கே
வீழ்ந்து கிடக்கிறார்.
கௌரவப் படையின்
சேனாபதியான அவர் மட்டுமா வீழ்ந்து கிடக்கிறார் .
அநியாயத்தின் பக்கம் நின்றதால் அங்கே சத்தியமும் வாக்கு தத்தமும் அல்லவா வீழ்ந்து
கிடக்கிறது. அவரை வீழ்த்தியது எது ?
அவரைப் பற்றித்
தெரிந்து கொள்ள நாம் அஸ்தினாபுரம் அரண்மனைக்குப் போவோம்.
சந்தனு மகாராஜா கவலையோடு அமர்ந்திருக்கிறார்.
அவையோர் மௌனம் காக்கிறார்கள். அத்தினாபுரத்து அரண்மனையில் ஒரு மச்சகன்னியும் அவர் தந்தையும்
அரசரின் வாக்குறுதிக்குக் காத்திருக்கிறார்கள்.
அதென்ன வாக்குறுதி?
அரசருக்கோ மச்சக்கன்னியான
சத்யவதியை மணம் செய்ய ஆசை. ஆனால் அரசபட்டத்துக்குக் காத்து நிற்கும் மூத்த புதல்வன்,
வில் வேல் வாள், யுத்தம், வேதம், வித்யா பயிற்சியோடு அனைத்துத் தகுதிகளும் பெற்ற தேவவிரதன்
இருக்கும்போது சத்யவதிக்குப் பிறக்கும் குழந்தையே அரசாளவேண்டும் என்பது சத்யவதியின்
தந்தையின் கோரிக்கை.
தந்தையின் முகம்
பார்க்கிறார் பீஷ்மர். சத்யவதி, அவரது தந்தை மற்றும் அவையோரைப் பார்த்து உரத்துக் கூறுகிறார்.
“ நான் அரச பட்டத்தைத் துறக்கிறேன். “
அவருக்குத் திருமணம்
ஆகி குழந்தை பிறந்தால் அக்குழந்தை அரசபட்டத்துக்குப் போட்டியிடலாம் என சத்யவதியின்
தந்தை திரும்பவும் மறுத்துரைக்கிறார்.
தேவவிரதன் உறுதியான
மனதோடும் முகத்தோடும் திரும்ப வாக்கு தத்தம் கொடுக்கிறார் , “ நான் திருமணமே செய்து
கொள்ள மாட்டேன். என் தந்தை சந்தனு, தாய் சத்யவதிக்குப் பிறக்கும் குழந்தைகள் அரசாள்வார்கள்.
அவர்களுக்கு நான் பக்கபலமாக உறுதுணையாக இருப்பேன். ” இதைக்கேட்டு மூவுலகும் அதிர்கிறது.
தேவர்கள் வாழ்த்தொலி
செய்கிறார்கள். துந்துபி முழங்குகிறது. ’பீஷ்ம, பீஷ்ம’ என்றொரு ஒலி எங்கெங்கும் ஒலிக்கிறது.
பீஷ்மர் என்றால் யாராலும் செய்ய முடியாத காரியத்தைச் செய்பவர் எனப் பொருள். இந்த தியாகத்தைச்
செய்ததால் அவருக்கு இச்சா மரணம் சித்திக்கும்படி சந்தனு வரம் கொடுக்கிறார்.
அதுதான் சந்தனு மகாராஜா இச்சா மரணம் வழங்கிவிட்டாரே
அதன்பின்னும் ஏன் பீஷ்மர் அம்புப் படுக்கையில் காத்திருக்கிறார். ?
அதைக் காண நாம்
இரு வேறு நிகழ்ச்சிகளுக்குப் போகவேண்டும். அவரது சிறிய தாய் சத்யவதிக்குப் பிறந்த தம்பி
விசித்திரவீரியனுக்காக காசிராஜனின் மூன்று அரசிளங்குமரிகளை சுயம்வரத்தில் புகுந்து
கவர்ந்து வந்தார் பீஷ்மர். அவர்கள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோர்.
மூவரில் அம்பா
சால்வன் என்ற அரசனைக் காதலித்ததனால் விசித்திரவீரியனை மணம் செய்து கொள்ள மறுத்தார்.
அவரை விரும்பிய சால்வனோ அவர் பீஷ்மரால் கடத்திச் செல்லப்பட்டது தன் வீரத்துக்கு இழுக்கு
என அவரும் மறுத்தார். பீஷ்மரோ தான் பிரம்மச்சரிய விரதம் பூண்டிருப்பதால் அம்பாவை மணம்
செய்துகொள்ள முடியாது என மறுத்தார்.
ஆராயாமல் பீஷ்மர்
செய்த காரியம் அம்பாவின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கியது. “அடுத்தொரு ஜென்மம் எடுத்தாவது
பழி முடிப்பேன் “ என சூளுரைத்தாள் அம்பை. அடுத்த ஜென்மத்தில் துருபத ராஜன் மகள் சிகண்டியாகப்
பிறந்தாள். பழி முடிக்கக் காத்திருக்கிறாள்.
குருக்ஷேத்திரப் போர் தொடங்குகிறது. பத்தாம்
நாள் நெருங்குகிறது. கருடவியூகம் அமைத்துப் பாண்டவப் படையைச் சிதறடிக்கிறார் பீஷ்மர்.
வில்வித்தையில் சிறந்த அர்ஜுனன் முதலான வீரர்களால்
கூட பீஷ்மரை நெருங்க முடியவில்லை. பீஷ்மர் செய்த இன்னொரு சபதம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணருக்கு.
பெண்களை எதிர்த்துப் போர் புரியமாட்டேன் என்ற சபதம்தான் அது.
போர்க்களத்தில்
அர்ஜுனனுக்கு முன்பாக பீஷ்மரின் முன் எதிர்ப்படுகிறாள் சிகண்டி ரூபத்திலிருந்த அம்பை..
வில்லேந்தி நாண் தொடுக்கிறாள். பெண்களுடன் போரிடமாட்டேன் என்ற அவரது சபதம் காக்க வில்லை
இறக்குகிறார் பீஷ்மர். அஹா இதென்ன சிகண்டியை முன்னிருத்தி அவள் பின்னிருந்து அர்ஜுனனின்
வில்லிலிலிருந்து அம்புகள் மழை மாதிரிப் பொழிகின்றனவே.
மாவீரர் பீஷ்மரின்
உடல் முழுக்கச் சல்லடையாகத் துளைத்து நிற்கின்றன எல்லா அம்புகளும். அந்த அம்புகளே படுக்கையாக
அமைய அவற்றின் மேலேயே விழுந்து கிடக்கிறார் பீஷ்மர்.
உத்தராயன புண்ணிய
காலமும் நெருங்குகிறது. இச்சா மரணம் சம்பவிக்கவில்லையே என்ன காரணம் என யோசிக்கிறார்
பீஷ்மர். தர்மருக்கு ராஜநீதி பற்றி தர்ம உபதேசங்களை செய்யும்போது பீஷ்மருக்குத் தான்
த்ரௌபதி மானபங்கமடையும்போது சபையில் அதை எதிர்த்துக் குரல்கொடுத்து அவளைக் காக்காததுதான்
தான் கடுந்துயர் அடையக் காரணம் எனப் புரிகிறது.
தவ வாழ்வே வாழ்ந்தாலும்
அவர் செய்தத்தவறிய அச்செயலை நினைத்து வருந்துகிறார். சூரியன் வடக்கு நோக்கி நகரத் துவங்குகிறான்.
பௌர்ணமியின் எட்டாம் நாள் அன்று கடவுளின் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லியவாறு இறைவனை
அவர் துதிக்க வாழ்நாள் முழுக்க வாக்கைக் காக்க வாழ்ந்த அந்த கங்கையின் மைந்தன் இறைவன்
திருவடியை அடைந்து இறப்பில்லாப் பேரின்பப் பெருவாழ்வு எய்துகிறார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 6. 4. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர்மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இதிகாச புராணக் கதைகள் சொல்லும் நீதியைப் பாராட்டிய வாசகர் போளூர் ஜி. சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 6. 4. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர்மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இதிகாச புராணக் கதைகள் சொல்லும் நீதியைப் பாராட்டிய வாசகர் போளூர் ஜி. சூர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அருமையான நடை. அழகு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்! நல்லாருக்கு சொன்ன விதம்...
பதிலளிநீக்குநன்றி இளங்கோ சார்
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!