”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்
51.அத்தகைய எழுத்துத் தான் எப்போதும் வாசகர்களுக்குத் தேவையா?
ஆம். அவைதான் அவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றன. ஆனால் அவை நீதிநெறி விளக்கமாக இருக்க வேண்டாம்.
52.வாசகர்களின் தரம் உயர்ந்திருக்கிறதா?
நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் அதிகமாகப் புது வாசகர்கள் உருவாகவில்லை. ஆழ்ந்த எழுத்தை வாசிக்கும் இளையர்கள் சிலர் நம்பிக்கை தருகிறார்கள்.
53.வாசகர்களின் தரத்தை உயர்த்துவது எழுத்தாளர்களின் வேலையா?
நல்லபடைப்புகளைக் கொடுப்பது மட்டும்தான் எழுத்தாளர்களின் வேலை. அதைப் பகுத்துப் படித்துக் கொள்வது வாசகர்களின் தேவையின் பொருட்டு நடக்கிறது.
54.எழுத்தாளர்களும் வாசகர்களா?
அதிலென்ன சந்தேகம் J
55.எழுத்தாளர்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்?
56.பொழுதுபோக்கு, வெகுஜன இலக்கியம், இவையும் தரம் உள்ளவையாக இருக்கின்றனவா? அவை தரமுள்ளவையாக மாற்றவேண்டுமா?
இல்லை. ஆம்.
57.காத்திர இலக்கியத்திற்கு வாசகர்கள் இல்லாதது எதனால்?
அப்படிப்பட்ட இலக்கியங்களை வாசகர்களுக்கு முறைப்படி கொண்டு சேர்க்காததால் வாசகர்கள் அருகி இருக்கிறார்கள். வாசிப்பின் ருசி அறிந்தவர்கள் அவற்றை வாசிப்பார்கள்.
58.வெகுஜன இலக்கியம், நடுத்தர இலக்கியம், காத்திர இலக்கியம் என்ற பிரிவினையை ஏற்கிறீர்களா?
ஏற்கிறேன்.
59.நீங்கள் படித்த இந்த மூன்று இலக்கியங்களில் எது சிந்தனையை மாற்றி அமைத்தது?
காத்திர இலக்கியம்தான்.
60.பெண்ணின் ஒடுக்கப்பட்ட உணர்வு மட்டும்தான் இன்றும் படைப்பாக மாறுகிறதா?
ஆம். பெண்ணின் ஒடுக்கப்பட்ட உணர்வோடு இன்று ஆணின் ஒடுக்கப்பட்ட உணர்வும் படைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. அது புத்தகமாக வராவிட்டாலும் வலைத்தளம், முகநூல், ட்விட்டர் வழி வெளியாகிகொண்டிருக்கிறது. அதுபோல் சாதி ரீதியாகமட்டுமல்ல, இன்றைக்குக் கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வும் எழுத்தாகிறது.
61.அது இந்த மூன்று இலக்கிய வகைமைகளிலும் பிரதானமாக வெளிப்படுகிறதா?
ஆம்.
62.உங்கள் எழுத்து எந்த வகைமையில் வரவேண்டும் என்று நினைப்பீர்கள்?
காத்திரமாக வரவேண்டும் என நினைத்து அதன் பின் விளைவுகளை யோசித்துக் காத்திரத்தைக் குறைத்து நடுத்தரமாகப் படைக்கிறேன். ஆனால் நிச்சயம் ஒருநாள் நானும் காத்திரமான படைப்பைக் கொண்டு வருவேன். அதற்கான எண்ணம் இருந்தாலும் சாதகமான மனச் சூழலுக்காகக் காத்திருக்கிறேன்.
63.உங்கள் கவிதைகள் அனுபவத் தொகுப்புகளாக உள்ளன. சம்பவங்களை உருவகப்படுத்தி எழுதப்படுபவையாக உள்ளன. சமுக அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளன. திட்டமிட்டு இது போன்ற வர்ணனையை மேற்கொள்கிறீர்களா?
இல்லை. அது தன்னைப் போல நிகழ்கிறது. எதை எதிர்கொள்கிறேனோ அதையே படைக்கிறேன். என்னைச் சுற்றி நிகழ்பவை எழுத்தாகின்றன. நான் திட்டமிடாமல் என்னை வழி நடத்துகின்றன அவை.
64.உங்களை செலுத்தும் தத்துவம் எது? இருப்பின் சிக்கல், சுயத்தின் பிளவு, போன்ற உள்ளுறை அம்சங்கள் கவிதைகளில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன ஏன்?
நான் அவற்றை உணர்கிறேன். அதனால் படைக்கிறேன். என்னைச் செலுத்தும் தத்துவம் ’கூட்டத்திலும் தனிமை.’ எதிலும் ’நிம்மதி இன்மை”. ”இன்னும் என்ன இன்னும் என்ன” என்ற தேடல். கிடைத்ததிலும் படைத்ததிலும் நிறைவு இன்மை. எளிமையாக இருக்க விருப்பம் ஆனால் சிக்கலான சிந்தனைகள் ஆட்கொள்கின்றன. கிடைத்த நல்லவற்றையும் கூட ஆராய்ந்து கொண்டே இருக்கும் அறிவு.
65.உங்களுடைய கவிதைகள் தமிழ் பாரம்பரிய கவிதை வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்த்தக்கூடிய செயல்பாடு எதுவாக இருக்கவேண்டும்?
இந்த நூற்றாண்டின் நடுத்தர வர்க்கத்துப் பெண்மணிகளின் உணர்வுகளின் வெளிப்பாடாக அது பதிவாக வேண்டும். எங்களைப் பற்றி நாங்கள்தானே சொல்ல முடியும். இருவேறு சூழ்நிலைகளுக்குள் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டவர்கள் நாங்கள். பெண் சுதந்திரம் வேண்டிப் போராடி அது பூமாராங்க் போல எங்களையே தாக்கிய மோசமான அனுபவம் பெற்றவர்கள் நாங்கள்தான். எங்கள் முன்னவர்களிடம் பெற்ற அனுபவப் பாடத்தைப் பின்னவர்களிடமும் மோசமாகக் கற்றோம் என்பதே எங்கள் எழுத்தின் வெளிப்பாடு. முன்னோடிகளான பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்து பிள்ளைகள் மருமக்களிடமும் விட்டுக்கொடுத்து அசலான சுதந்திரம் என்ன என்பதையே ருசித்தறியாதவர்கள் நாங்கள். எனவே எங்கள் படைப்பு நிச்சயம் அது பற்றிப் பேசும்.
66.கவிதைக்குரிய அம்சமாக என்ன இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
கவிதைக்குப் பொய் அழகு என்பார்கள்.ஆனால் அது உண்மையைப் பிரதிபலிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு உணர்வைக் கடத்த வேண்டும். ஒருவரின் கனவை அவர் எழுத்தின் மூலம் இன்னொருவர் உணர்ந்து படைக்க வேண்டும் அதுவே கவிதையின் சிறப்பம்சம்.
67.கவிதையின் அம்சங்களை அந்தந்தக் கவிதைதான் நிர்ணயிக்கிறது என்பதை ஏற்கிறீர்களா?
ஆம். அவை நிகழும் சூழல், சம்பவம், மனிதர்கள், அல்லது உணர்வுகள்தான் நிர்ணயிக்கின்றன.
68.பொதுவாகக் கவிதைக்குரிய அம்சமாக தீர்மானிக்கப்படுபனவற்றுக்குள் வராதவை கவிதைகளாக ஏற்கப்படுவதில்லையா?
தனிநபர் வாழ்வியல் மாதிரி ஒவ்வொருவர் எழுத்தும் வெளிப்பாடும் வேறு வேறு. எனவே இவை கவிதை, இவை கவிதை இல்லை என்று யார் தீர்மானிப்பது ? இவைதான் பாடுபொருள் என்ற நிலைமை இன்றைய புதுக்கவிதைகளில் இல்லை. மேலும் ஒவ்வொரு இயலையும் அதில் பகுத்தாய்வு ( சர்ஜரி ) செய்ய அது என்ன கவிதையா இல்லை மார்ச்சுவரிப் பிணமா. கவிதை என்பது மன உணர்வின் பிரதிபலிப்பு.
69.கவிதையின் மீதான விமர்சனம் எதைச் சார்ந்து இருக்கிறது?
பல சமயங்களில் கருத்தைச் சார்ந்தும், சில சமயங்களில் அது கவிதைதானா என்ற ஆராய்ச்சியையும், பெரும்பாலான சமயங்களில் அது படைப்பாளியின் மீதான காழ்ப்பை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.
70.கவிதையின் உள்ளடக்கத்தை வைத்துத்தான் கவிதை மதிப்பிடப்படுகிறதா?
உள்ளடக்கம் வகிக்கும் பங்கு பாதி. அதைச் சொல்ல வரும் சுகமான எழுத்துக்களின் மாயாஜாலப் பங்கு பாதி. படிப்பவரின் மனதில் அது எந்தவிதமான சித்திரத்தை அல்லது உணர்வை உண்டாக்குகிறதோ அதை வைத்துத்தான் மதிப்பிடப்படுகிறது.
71.தமிழின் பாரம்பரிய கவிதையின் வரையறை சுதந்திரமான கற்பனைக்கு இடம் கொடுக்கிறதா?
அன்றே பரீட்சார்த்த முயற்சிகள் ( உவமை, உவமானம், உள்ளுறை உவமை ) நடந்திருக்கின்றனவே. தேர் வடிவக் கவிதைகளும் உண்டே. ( திருவெழுக் கூற்றிருக்கை )
72.புதுக்கவிதை அதை மாற்றி அமைத்ததா?
தெய்வம், அரசன், வள்ளலைப் புகழ்ந்து பாடுவது மற்றும் புராணம், இதிகாசம், சரித்திரம், நிகண்டு, என்றிருந்ததை மாற்றிப் புதுக்கவிதை எதையும், யாரையும் பாடுபொருளாக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தது.
73.நவீனக்கவிதையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?
நிறைய. விதம் விதமான அமைப்பில் கூட கவிதைகள் எழுதுகிறார்கள். ஒற்றை எழுத்தைச் சேர்த்துச் சேர்த்து வரி வரியாக அமைத்து ஒவ்வொரு வரிக்கும் அதன் அர்த்தம் வித்யாசப்படுமாறு முபின் சாதிகா அவர்கள் எழுதிய நவீனக் கவிதையை சிலநாட்கள் முன்பு வாசித்தேன்.
74.இன்றைய கவிதை ஆண்-பெண் என்ற பிளவில் இயங்குகிறதா?
எனக்குத் தெரிந்து இல்லை. ஆனால் சில இடங்களில் இருக்கலாம்.
75.ஆண்கள் எழுதும் கவிதைகளுக்கும் பெண்கள் எழுதும் கவிதைக்கும் என்ன வேறுபாட்டைப் பார்க்கிறீர்கள்?
சில ஆண்கவிஞர்கள் பெண்களின் பார்வையிலும் சில பெண் கவிஞர்கள் ஆண் பார்வையிலும் கவிதை எழுதுகிறார்கள். இப்போது திருமண பந்தத்தால் பாதிக்கப்பட்ட அல்லது வேலை, கல்வி இடங்களில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் ஆணியக் கவிதைகள் புனையத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் விநோதமான புரட்சி.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!