எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வேதங்களைக் காத்த கல்விக் கடவுள். தினமலர் சிறுவர்மலர் - 14.


வேதங்களைக் காத்த கல்விக் கடவுள்.

ங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அறியாமையின் இருள். நான்கு வேதங்கள் கொண்டுதான் பிரம்மன் படைப்புத்தொழிலைச் செய்துவந்தார். ஆனால் இதென்ன அந்த வேதங்களை திடீரென எங்கிருந்தோ வந்த இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டனவே. அதனால் சூழ்ந்த இருள் பிரம்மனின் மனத்தில் மருளை உருவாக்கிவிட்டது. தன் தந்தையாராகிய விஷ்ணுவிடம் ஓடிச் சென்று முறையிடுகிறார்.

“தந்தையே .. வேதங்களை இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டன. அவற்றைக் காப்பாற்றித் தாருங்கள். “

”என்னது குதிரைகளா.. எதற்காகத் திருடிச் சென்றார்கள் “

” ஆம் தந்தையே குதிரைகளேதான். தாங்களே புதிய உயிர்களைப் படைக்க எண்ணிப் பறித்துச் சென்றார்கள் அப் பரிகள் ”

”எங்கே சென்றன. ?”

“அவை பாதாளலோகம் நோக்கிச் சென்றன.அங்கே ஒளித்து வைத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மீட்டுத்தந்தால்தான் நான் சிருஷ்டிகளை உருவாக்க இயலும்.”

வேதங்களை மீட்க விஷ்ணு ஒரு உபாயம் செய்தார். அதற்காக ஒரு வித்யாசமான வடிவையும் எடுத்தார்.

பரிசுத்தமான வெண்மை நிறம். மிகப் பிரகாசமான ஒளியோடு கூடிய மனித உடல், சூரியனும் சந்திரனும் இரு விழிகளாக ஒளிர கங்கையும் சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகளாகக் காக்க முகமோ குதிரையின் முகமாகிறது. குதிரைகள் திருடிச் சென்றவற்றைக் குதிரையாகிப் பின் தொடர்ந்தால்தானே பிடிக்க இயலும்.

குளம்பொலி ஒலிக்க பாதாள லோகம் அதிர்கிறது. இரு குதிரைகளையும் வேதத்தையும் தேடிச் சென்ற அந்தக் குதிரைமுகம் கொண்ட பெருமானின் பெயர் ஹயக்ரீவர். அவரின் உக்கிரம் பெருகுகிறது. குளம்பொலியோடு நீண்ட நாசித் துவாரங்களில் இருந்து மூச்சுக் காற்று அசுரவேகத்தில் வெளிப்பட்டு உஷ்ணம் கிளப்புகிறது.

அவர் வேதங்களைத் திருடிய குதிரைகளைத் தேடிக் கொண்டிருக்கட்டும் . நாம் அதற்குள் அந்த வேதங்கள் ஏன் திருடு போயின, அவற்றைக் கவர்ந்தவர் யார் எனப் பார்ப்போம்.

டைப்பவன் நான் என்ற பிரம்மனின் அகந்தை பெருகிக் கொண்டிருக்கிறது. தான் படைப்பதால் தானே எல்லாம் என்ற அவரது இறுமாப்பு அனைத்தையும் இருளாக்கிக் கிடக்கிறது.

ஆலியையில் யோகநித்திரை செய்துவரும் பெருமான் இதைக் கண்ணோக்குகிறார். தன் நாபிக்கமலத்தில் உருவான மைந்தன் பிரம்மனுக்கு வேத உபதேசம் செய்ததே அவர்தானே.

அவனுடைய அகந்தையைக் களைய அதே நாபிக்கமலத்தில் ஒரு இதழில் இரு தண்ணீர்த்திவலைகள் மூலம் மது, கைடபன் என்னும் அரக்கர்களை உருவாக்குகிறார். அவர்கள் குதிரை உருவெடுக்கிறார்கள்.

ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று பிரம்மனின் அகந்தைக்கும் படைப்புத்தொழிலுக்கும் காரணமான வேதங்களைக் கவர்ந்து செல்கிறார்கள்.

பரிதவித்துப் போகிறார் பிரம்மன். வேதங்கள் இல்லாமல் தான் ஒன்றுமில்லை என்று சிந்தை வாடித் தந்தைமுன் சென்று தலை கவிழ்கிறார். வாடி நிற்கும் மகனைக் கண்டதும் விஷ்ணுவின் உள்ளம் கரைகிறது. தனயனைக் காக்கவும் வேதங்களை ரட்சிக்கவும் பெருமாளும் பாதாளலோகம் புகுகிறார்.

பாதாள லோகம். இருண்மையான மனிதர்களின் இருப்பிடம். அது ஒரு ஆடிப் பௌர்ணமிக் காலம். உத்தராயணம் தொடங்கும் காலம். அப்போதுதான் ஹயக்ரீவரின் அவதாரம் நிகழ்ந்தது. 

பெருமாள் தேடத் துவங்குகிறார். அங்கே இரு குதிரைகள் நின்று கொண்டிருக்கின்றன. அவைதான் மது, கைடபன் என்ற இரு அரக்கர்களின் மறுவடிவம்.  இஷ்டம்போலச் சுற்றித் திரிகின்றன. வேதம் தம்மிடம் இருக்கும் நினைப்பில் அவற்றின் கனைப்பு கூட ஹூங்காராமாய் ஒலிக்கிறது.

பெருமாளைக் கண்டதும் அவற்றுக்குப் பயம் பீடிக்கிறது பெருமாளும் உடனே புரவி முகம் கொண்டு பொருதத் தயாராகிறார். எந்த ரூபத்தில் வந்தாலும் பரம்பொருளை உணரத் தெரியாதா என்ன. தம் கையிருப்பாய் வேதத்தைப் பிடித்தபடி பாய்ந்தோடத் துவங்குகின்றன.

அவரது நாபிக் கமலத்தில் தெறித்த இரு துளிகளில் உருவானவர்கள்தானே அந்த மது, கைடப அரக்கர்கள். பெருமானைக் கண்டதும் சித்தம் சிதறித் தோற்றோடுகிறார்கள்.  வேதங்களைக் கையகப்படுத்துகிறார் கடவுள்.

“பெருமானே நாங்கள் மது கைடப அரக்கர்களின் கரங்களில் பட்டுப் புனிதமிழந்துவிட்டோம். படைப்புத் தொழிலுக்கு உதவ எங்களைப் புனிதப்படுத்துங்கள். ” கோரிக்கை விடுக்கிறன நான்வேதங்களும்.

புத்திக்கினிய பொருள் கிடைத்தால் உச்சி முகர்வார்கள் பெற்றவர்கள். அதேபோல் ஹயக்ரீவர் தனது நாசித் துவாரங்களில் வெளிப்படுத்திய வேகமான மூச்சுக் காற்றால் உச்சி முகர புத்துயிர் பெற்றன வேதங்கள்.

வேதங்களைக் காத்த கல்விக் கடவுள் ஹயக்ரீவரின் உக்ரம் இன்னும் அடங்காமல் இருக்கிறது. அங்கே லெக்ஷ்மி தோன்றி ஹயக்ரீவரின் பக்கம் அமர்ந்து உக்கிரம் தணிக்கிறார். ஆனந்தம் பொங்குகிறது வெண்ணிற ஹயக்ரீவரின் முகத்தில். ஞானமும் வித்யையும் படைப்புத் தொழிலும் புத்துணர்வு பெறுகின்றன.

நான்முகனின் அகந்தை அடங்கத் தந்தையான ஹயக்ரீவரின் கையிலிருந்து நான் வேதங்களையும் பெற்று படைப்புத் தொழிலைத் துவங்குகிறார். வேதங்களைக் காத்ததால் ஹயக்ரீவர் சரஸ்வதிக்கும் குருவான கல்விக்கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 13. 4. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். மிகக் கம்பீரமான ஹயக்ரீவரை அருமையான ஓவியமாக வரைந்தளித்த ஓவியர் அஷோக் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 

டிஸ்கி :- கிருஷ்ணரின் மகன் சாம்பன் கதையைப் பாராட்டிய வேதாரண்யம் வாசகி ஜா. வேதா அவர்களுக்கு நன்றிகள். 

6 கருத்துகள்:

  1. கல்விக்கு அதிபதி ஹயகிரீவரின் கதை மிகவும் எளிமைப் படுத்திச் சொல்லியவிதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. ஹயக்ரீவரின் கதையை புரியும்படி சொன்னமைக்கு வாழ்த்துகள்! குழந்தைகளுக்கு இல்லையா? அப்படியே எங்களுக்கும் புரிந்தது...(கீதா: நாங்களும் குட்டீஸ்!!!???ஹா ஹா ஹா)

    பதிலளிநீக்கு
  3. நன்றி முத்துசாமி சகோ

    நன்றி மணவாளன்

    நன்றி கீத்ஸ் :))))))))))))))))))

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. அருமையான நடை. குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் அமைந்துள்ளமை சிறப்பு. வாழ்க தங்கள் தமிழ்ப் பணி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...