பூக்களும்
பூவையர்களும்.
பூக்களிலே
நானும் ஒரு
பூவாய்த்தான்
பிறப்பெடுத்தேன்.
பூவாய்
நான் பிறந்தாலும்
பொன்விரல்கள்
தீண்டலையே.
பொன்விரல்கள்
தீண்டலையே
நான்
பூமாலை ஆகலையே.
என்ற
மு மேத்தாவின் கவிதை கல்லூரிப் பருவத்தில் படித்தது. அரளிப்பூ சொல்வது போல் அமைந்த
இக்கவிதை முதிர்கன்னிகளையும் அவர்தம் நிலையையும் குறிப்பது. இன்னும் மறக்காமல் நினைவில்
நிற்கின்றது.
நேரு
மாமா என்றால் நமக்கெல்லாம் ரோஜாப்பூ ஞாபகம் வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, மென்னகை அரும்புதல், முல்லைச்
சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா,
பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா , ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று
நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.
பெண்கள்
பருவமடைந்துவிட்டால் புஷ்பவதியாகிவிட்டாள் என்பார்கள். உடலும் உள்ளமும் பூத்துப் பக்குவமாகி சூல்கொண்டு
ஒரு குழந்தையைச் சுமக்கும் பருவம் வந்துவிட்டது என்பதன் குறியீடுதான் அது. பொதுவாகவே
பூக்கள் என்பவை பெண்களைக் குறிப்பவைதான். மலர்கள் இனப்பெருக்கம் செய்ய விதைகளை உருவாக்குதல்போல
பெண் மலர்தல் என்பது குழந்தைகளை உருவாக்கும்
பணிக்காக இயற்கை பெண்ணின் உடலைப் பக்குவப்படுத்த அளித்திருக்கும் கொடை எனலாம்.
அநேகப்
பூக்களின் அமைப்புக்கள் கூட பெண்களின் அங்கங்களின் குறிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன.
தலையைக் குனியும் தாமரையே, செங்காந்தள் விரல்கள், எள்ளுப் பூ நாசி, முல்லைப் பற்கள்,
மாதுளம்பூமேனி நிறத்தாள், முருக்கம்பூ மேனி நிறத்தாளே ஆகியன அவற்றுள் சில.ஆசிய மேற்கத்திய கலை ஓவியங்களில் பெண்ணுறுப்பின் அடையாளம் பெண்மையின்
அடையாளமாகப் பூக்கள் குறிக்கப்படுகின்றன. தேன் ,மகரந்தப் பை, சூல் ஆகியனவும்
பெண்களின் கரு உறுப்புகளோடு ஒப்புமை சொல்லப்படுகின்றன. அவ்வளவு ஏன் ஹிமாலயப் பகுதிகளில் பெண் உருவில்
நாரிலதா என்று பெயர் கொண்ட பூக்கள் பூப்பதாகச் செய்தி உண்மையா என்று தெரியவில்லை.
ஆண்
வண்டுகளை மகரந்தச் சேர்க்கைக்குக் கவர பெண் உருவங்களில் பூக்கும் ஒருவகை ஆர்க்கிட்டுகள்
பெண் வண்டுகளின் உருவங்களை ஒத்திருக்கும்- வகை நிறம் வடிவம் வாசனையில் - காணப்படுகின்றனவாம்.
கடவுள்
வழிபாட்டில், திருவிழாக்களில், நல் நிகழ்வுகளில் பூப்புனித நீராட்டு விழாவின்போது தாய்மாமா
பூமாலை போடுதல், திருமண நிச்சயம், திருமணத்தில் மலர் மாலை அணிதல், பெண் தலையைப் பூநாகத்தால்
அலங்கரித்தல் பூச்செண்டு வைத்திருத்தல் ,மேலும் வளைகாப்பு, குழந்தைக்குப் பெயர்சூட்டல்,
கடவுளுக்குக் காணிக்கையாக பூமுடி கொடுத்தல். குழந்தைகளுக்கு பூச்சடை தைத்தல் ( சீசன்
பூக்களைக் கொண்டோ அல்லது தாழம்பூ போன்றவற்றை வெட்டித் தைத்தோ அலங்கரிப்பார்கள். ),
நல்லது கெட்டதுக்கு சாமிக்குப் ( இரு வண்ணப் ) பூப்போட்டுப் பார்த்தல், மேலும் இறப்பின்
போது பூமாலைகள் போட்டு பூத்தூவி அனுப்புதல், கல்லறையில் பூப்போடுதல், முன்னோர்களின்
புகைப்படத்துக்குப் பூவைத்தல் என்று பிறப்பிலிருந்து இறப்பு வரை நம் இல்லங்களில் பூக்கள்
ஆட்சி செலுத்துகின்றன.
ஏன் பலரும் கூடும் இடங்களுக்கு குழந்தையை எடுத்துச் செல்லும்போது
திருஷ்டி படக்கூடாது என்று பீநாறிப் பூ என்ற ஒன்றை அரைத்துத் தடவுவோம் என்று அண்டை
வீட்டுத் தோழி ஒருவர் கோயமுத்தூரில் நாங்கள் இருந்தபோது குறிப்பிட்டார்.
பூக்கள்
இல்லாமல் விருந்து விஷேஷம் என்று ஏதுமேயில்லை. விழாக்களிலும் பூக்களை வைத்து மண்டபங்கள்
அலங்கரிக்கப்படுகின்றன. மேலும் வரவேற்பில் சந்தனம் கற்கண்டோடு ரோஜாப்பூக்கள் வழங்குதல்,
திருமணம், பிறந்தநாள் விழா, பதவி உயர்வு, மேலதிகாரியை/முக்கிய விருந்தினரை வரவேற்க,
வழியனுப்ப என்பன போன்ற நிகழ்வுகளுக்கு பூங்கொத்து வழங்கும் பழக்கமும் உண்டு. பேச்சாளருக்கு,
அரசியல்வாதிக்கு ரிட்டயர்மெண்ட் ஆனவருக்குப் பூமாலை போடுவதுண்டு. அலுவலகங்களில் வரவேற்பறைகளில் இகபானா
என்ற ஜப்பானிய மலர் அலங்காரம்.,வீட்டு அலங்காரம், அரங்க அலங்காரம். செய்ய மேலும் சூடிக்கொள்ளவும்
பயன்படுகின்றன.
இந்துக்கள்
மட்டுமல்ல கிறிஸ்தவ இஸ்லாமியக் குடும்பங்களிலும் மலர்கள் இல்லாமல் திருமணம் இல்லை.
இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் திருமணத்தன்று முன்புறம் முகத்தை மறைத்தாற்போல மல்லிகைப் பூச்சரங்களால்
அலங்கரிக்கப்பட்டிருப்பர். கிறிஸ்துவப் பெண்களின் திருமணத் தலையலங்காரங்களில் பூக்கள்
இடம் பெறுகின்றன. உயர் வகுப்புத் திருமணங்களில் ஆர்க்கிட் போன்ற பூக்களைக் கொண்டு வரவேற்பார்கள்.
நம் பாரம்பரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் காணும் பொங்கலன்று ஆவாரம்பூபறித்தல் என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். மாமன்மார் தங்கள் முறைப்பெண்களின் கூடை நிறையப் பூப்பறித்துக் கொடுக்கும் சுவாரசியமான நிகழ்வு இது. ஒருவருக்கொருவர் பிரியத்தையும் காதலையும் தெரிவிக்க உதவுகிறது இது. இதே போன்ற பூப்பறிக்கும் திருவிழா ஒன்று ஜப்பானிலும் நடைபெறுகிறது. காந்தர்வ விவாகம் போன்று பெண்கள் தாங்கள் விரும்பியவரை இத்தருணத்தில் தேர்ந்தெடுப்பர்.
நம் பாரம்பரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல் திருநாளுக்கு மறுநாள் காணும் பொங்கலன்று ஆவாரம்பூபறித்தல் என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். மாமன்மார் தங்கள் முறைப்பெண்களின் கூடை நிறையப் பூப்பறித்துக் கொடுக்கும் சுவாரசியமான நிகழ்வு இது. ஒருவருக்கொருவர் பிரியத்தையும் காதலையும் தெரிவிக்க உதவுகிறது இது. இதே போன்ற பூப்பறிக்கும் திருவிழா ஒன்று ஜப்பானிலும் நடைபெறுகிறது. காந்தர்வ விவாகம் போன்று பெண்கள் தாங்கள் விரும்பியவரை இத்தருணத்தில் தேர்ந்தெடுப்பர்.
நம் புராண இதிகாசங்களிலும்
கடவுள்களுக்கு ஆயுதங்கள், வாகனங்கள்
போல குறிப்பிட்ட மலர்களும் உண்டு. இன்னின்ன மலரால்தான் வழிபாடும் நடத்தப் படுகிறது.
விஷ்ணு அம்பாள் ஆகியோருக்குத் தாமரை சரஸ்வதிக்கு வெண் தாமரை. துர்க்கை அரளிப்பூ, விநாயகர்
எருக்கம்பூ, .முருகன் குறிஞ்சிப்பூ, (முருகன் கிரவுஞ்ச மலையை
வென்றபோது காந்தள் பூச்சூடினான் என்றும்,
சிவபெருமான் முப்புரத்தை எரித்த காலத்தில் உழிஞைப்
பூச்சூடினான் என்றும் கூறுவர்.). சனீஸ்வரன்
நீலச்சங்குப் பூ, ஆஞ்சநேயர் மகிழம்பூ, சிவனுக்கு நந்தியாவட்டை என்று அம்பிகைகளுக்கு
வெண் சாமந்தி என்று விதம் விதமான பூக்களால் அர்ச்சிப்போம். கோயில்களில்
பூக்கட்டி பூமாலைகளாலும் பாமாலைகளாலும் இறைவழிபாட்டுத்
தொண்டு செய்பவரை ஓதுவார் , தேசிகர் என்று கூறுவதுண்டு. பூப்பல்லக்கு, அம்மனுக்குப்
பூத்தட்டு, பூந்தேர் என்று நிறைய வேண்டுதல்களும் உலாவும் கோயில்களில் நடைபெறும்.
இந்திய இதிகாசங்களில் தாமரைப்பூ படைப்பு
உருவாக்கத்தின் அடையாளம். விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உதித்த தாமரைப்பூவில் இருந்துதான்
படைப்புக்கடவுள் ப்ரம்மா தோன்றினார். தாமரைப் பூவில் அமர்ந்துதான் சரஸ்வதி ஞானத்தைக்
கற்பிக்கிறாள். அதேபோல லெக்ஷ்மி செல்வத்தை அள்ளி வழங்குகிறாள். துளசிதளத்தில் பிறந்த ஆண்டாள் தொடுத்து அணிந்து அனுப்பிய மாலைகளை அரங்கன் விரும்பிச் சூடிக் கொண்டதால் ”சூடிக்கொடுத்த சுடர்க்கொடி”
என்று சிறப்பிக்கப்படுகிறாள். பூக்கள் தூவும் வசந்த காலத்திற்கான ரோமானியப் பெண் கடவுள்
ஃப்ளோரா. க்ரேக்கப் பெண் கடவுள் க்ளோரிஸ். உலகம் முழுக்கப்பெண் கடவுள் வணக்கத்துக்கும் பூக்கும் காலத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
இலக்கியங்களிலும்
சரி, திரை இசையிலும் சரி, (திரைப்படப் பெயர்களிலும் சரி, )மலர்களைப் பெண்களோடு ஒப்பிட்டுப்
பாடாத, குறிப்பிடாத கவிஞர்கள் குறைவு. பூப்பூவா பூத்திருக்கு, பூந்தோட்டக் காவல்காரா. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ.
பூங்காற்று புதிதானது, ,பூவே பூச்சூடவா இதுபோல ”பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவல் மௌவல்”.
என்று ரஜனி எந்திரனில் பாடி இருப்பார். ஆம்பல் மௌவல் இதெல்லாம் பூ வகைகள்தான். குறிஞ்சிப்
பாட்டில் கபிலர் 99 வகைப் பூக்கள் பற்றிப் பாடி இருப்பார். அதைப் பற்றி செம்மொழி மாநாட்டு
சிறப்பு மலரில் தினமணி நாளிதழ் பூக்களின் படத்தோடு செய்தி வெளியிட்டுள்ளது.
அவை செங்காந்தாள் (விடுதலை புலிகளின் தமிழ் ஈழத்தில் செங்காந்தாள் மலர்தான் தேசிய மலர்) , ஆம்பல் , அனிச்சம், குவளை , குறிஞ்சி , வெட்சி, செங்கோடுவேரி, தேமா, மணிச்சிகை (செம்மணி), உந்தூழ் (பெருமூங்கில்), கூவிளம் (வில்வம்), எறுழம், கள்ளி, கூவிரம், வடவனம், வாகை , குடசம் (வெட்பாலை) , எருவை (கோரை) , செருவிளை (காக்கணம், சங்கு), கருவிளை , பயினி , வாணி (ஓமம்) , குரவம் , பசும்பிடி (இலமுகிழ்) , வகுளம் (மகிழம்) ,காயா , ஆவிரை , வேரல் (சிறு மூங்கில்) , சூரல் , பூளை, கன்னி (குன்றி மணி) , குருகிலை (முருங்கிலை) , மருதம் , கோங்கம், போங்கம், திலகம் , பாதிரி, செருந்தி , அதிரல் (புனலி) , சண்பகம் , கரந்தை, குளவி (காட்டுமல்லிகை ), கலிமா , தில்லை , பாலை , முல்லை , குல்லை, பிடவம், மாறோடம் , வாழை , வள்ளி , நெய்தல் , தாழை (தென்னம்பாளை), தளவம் , தாமரை , ஞாழல் , மொவ்வல் , கொகுடி , சேடல் (பவளமல்லிகை), செம்மல் , செங்குரலி, கோடல் , கைதை (தாழை) , வழை (சுரபுன்னை), காஞ்சி , நெய்தல், பாங்கர், மரா (கடம்பு) , தணக்கம் (நுணா) , ஈங்கை, இலவம் , கொன்றை , அடும்பு , ஆத்தி , அவரை , பகன்றை , பலாசம் , பிண்டி, வஞ்சி , பித்திகம் , சிந்துவாரம் (நொச்சி) , தும்பை , துழாய் (துளசி) , தோன்றி, நந்தி ( நந்தியாவட்டம் ), நறவம் , புன்னாகம் , பாரம் (பருத்தி) ,பீரம் (பீர்க்கு), குருக்கத்தி , ஆரம் (சந்தனம்) , காழ்வை (அகில்) , புன்னை , நரந்தம் ( நாரத்தம்) , நாகம் , நள்ளிருள் நாறி (இருவாட்சி) ,குருந்து (காட்டு எலுமிச்சை), வேங்கை , புழகு (மலை எருக்கு) .. அப்பாடா கொஞ்சம் இருங்க
மூச்சு விட்டுக்குறேன். இவ்ளோ பூக்கள் பேரையும் நடிகர் சிவகுமார் மனப்பாடமா சொல்வார்.
நல்ல ஞாபக சக்திதான்.
செந்தமிழர் மரபுல ஆதி காலம் தொட்டு பூக்களுடன் தொடர்பு
இருக்கிறது. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பூக்கும் பூக்களைக் கொண்டு
திணை வகுத்தவர் நாம். பூப்புனைதல் என்று மன்னர்கள் பக்கத்து நாட்டுடன்
போர்புரிய ஆநிரை (பசுக்களைக் )கவரச் செல்லும்போது வெட்சிப்பூவையும்,
ஆநிரை மீட்போர் கரந்தைப் பூவையும் அணிவார்கள். அதே போல் பகை நாட்டின்மீது படை எடுப்பவர்கள்
வஞ்சிப் பூவையும் அந்த நாட்டின் கோட்டை மதிலைக் காப்போர் நொச்சிப் பூவையும் அதனை முற்றுகை
இடுவோர் உழிஞைப் பூவையும் அணிவார்கள். ஒரே களத்தில் யுத்தம் செய்யும் இரு சாராரும்
தும்பைப் பூவையும் அதில் வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவையும் சூடுவார்கள். அரசர்கள்
பொன்னாலான பூக்களையும் அணிவார்கள்.
ஜீலியஸ் சீசர் லாரல் மாலை எனப்படும் வாசனை இலைகளைக்
கொண்ட க்ரீடத்தை அணிந்திருப்பதாக ஆஸ்ட்ரிக்ஸ் என்னும் காமிக்ஸில் படித்திருக்கிறேன்.
இதில் அரசர்கள் வெற்றி பெற்றபின் வாகை மாலை சூடுவதைத்தான் வாகை சூடினான் என்று சொல்லப் போய் யதார்த்த வாழ்வில்
எல்லாவித வெற்றிக்கும் வெற்றி வாகை சூடினார் என்று கூறும் பழக்கம் வந்தது.
இந்தியாவில் மலர்த்தோட்டம் இல்லாத
ஒரு கேரள வீட்டைக்கூடப் பார்க்க முடியாது. காசியில் சம்போ என்று ஆறு காலங்களிலும் வழிபாடு உண்டு அப்போது கருவறை
லிங்கத்துக்கு புஷ்பாஞ்சலி செய்ய முடியும் நாமே பூ வைக்க முடியும்.
வாசனையற்ற
மலர்களான காக்கரட்டான் மல்லி, கனகாம்பரம், டிசம்பர், மஞ்சள் டிசம்பர் பூ, நாம டிசம்பர்பூ போன்றவற்றையும் மக்கள்
விரும்புகிறார்கள். டேலியா, கினியா, கிருஷாந்திப்பூ, டெய்சியும்
குளிரான இடங்களில் அதிகம் பூக்கின்றன. திரும்பிப்பார் கதம்பம் என்பது மதுரையில் பேமஸான
ஒன்று . மதுரை மல்லி , கோட்டை மல்லி என்று கோடைக்காலங்களில் மிகப் பெரும் சைஸில் பூக்கும்
மல்லியின் வாசம் வீடெல்லாம் நிறைந்திருக்கும். இயற்கைச் சூழலியலிலும் மனித வாழ்விலும்
இவை அதிகம் பங்கு வகிக்கின்றன. அநேகம் பூக்கள் மாலையிலேயே பூக்கின்றன. சாயங்காலம்
அந்திமந்தாரை, இரவில் பவளமல்லி. விடியற்காலையில் செம்பருத்தி, நந்தியாவட்டை போன்றவை மலர்கின்றன..
ஒரே நாளில் காலையிலிருந்து மாலைக்குள் மூன்று முதல் பல்வேறு நிறங்களில் மாறும் ரோஜாக்கள்
கூட உண்டு.
மலர்கள்
பற்றிய கல்விக்கு ஃப்ளோரியோகிராஃபி என்று பெயர். இவை மேற்கத்திய கலாச்சாரத்திலும் முக்கியக்
குறியீடு வகிக்கின்றன. சிவப்பு ரோஜாக்கள் காதலைத் தெரிவிக்கவும், மஞ்சள் ரோஜாக்கள்
நட்பைத் தெரிவிக்கவும் பயன்படுகின்றன. கல்லறைப்பூக்கள் என ஒரு வகை இருப்பது போல மரணத்
தருவாயில் ஆறுதல் வழங்க பாப்பீக்கள் என்ற பூக்கள் அடையாளமாக இருக்கின்றன. லில்லிகள் உயிர்ப்பித்தலைக்
குறிக்கின்றன. டெய்சிக்கள் அப்பாவித்தனத்துக்கான அடையாளம்.
வான்காவின் சூரியகாந்தி மேலும் மோனட்டின் வாட்டர் லில்லி போன்ற ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை.ரவி வர்மாவின் வெண்தாமரையில் அமர்ந்த சரஸ்வதி, செந்தாமரையில் அமர்ந்த மஹாலெக்ஷ்மி ஆகியன சிறப்பான ஓவியங்களாகும்.
வான்காவின் சூரியகாந்தி மேலும் மோனட்டின் வாட்டர் லில்லி போன்ற ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை.ரவி வர்மாவின் வெண்தாமரையில் அமர்ந்த சரஸ்வதி, செந்தாமரையில் அமர்ந்த மஹாலெக்ஷ்மி ஆகியன சிறப்பான ஓவியங்களாகும்.
ஹெர்பேரியம்
செய்ய , 3 டி மலர் ஓவியம் செய்ய, நறுமணத்திரவியம் தயாரிக்க ,( மரிகொழுந்து, ஜாஸ்மின் சென்ட்
), மலர் மருத்துவத்துக்கு ( மருதாணிப்பூவை தலையணையில் வைத்தால் நல்ல தூக்கம் வரும்
), ஏற்றுமதிக்கு, கூந்தல் தைலம் செய்ய (செம்பருத்தி
ஆவாரம்பூ, ஓரிதழ் தாமரை,) என்று மலர்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன.
மிகப்
பெரும் ஸ்டார் ஹோட்டல்களில் மலர் உணவும் வழங்கப்படுகின்றது. அவிக்கப்பட்ட சால்மோன்
மீனுடன் ஃபெடா சீஸ் சாண்ட்விச் மற்றும் டெய்சி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சாலட்ஸ் வழங்கப்படுகின்றது.
விலை ஒண்ணும் அதிகமில்லை சில ஆயிரங்கள் இருக்கும். J மூலிகை டீயில் ரோஜா , அதிமதுரம் போன்றவற்றைப்பொடித்துப்
போடுவதுமுண்டு. சூரிய காந்தி எண்ணெய், ரோஜா குல்கந்து, வேப்பம்பூரசம், முருங்கைப்பூத்
துவட்டல், ப்ராக்கோலி சூப் , காலிஃப்ளவர் ( பூல் கோபி ) மஞ்சூரியன், முட்டைக்கோஸ்
( பந்த் கோபி ) பரோட்டா, வாழைப்பூ வடை , குங்குமப்பூப் போட்டுக் காய்ச்சிய பால், என்று பூக்களையும்
நாம் உணவாகக் கொள்கிறோம். தாய்லாந்து உணவில் மல்லிகையை ஊறவைத்த நீரில் அரிசியைப் போட்டு
ஒரு ஸ்பெஷல் உணவாகச் சமைப்பார்கள்.
மோப்பக்
குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்று விருந்தினரை உபசரிக்கும்
பாங்கைத் திருக்குறள் அனிச்சமலர் கொண்டு விவரிப்பது அழகு. இன்னும் மலர் பற்றிக் கவிதை எழுதாத ஒரு கவிஞரையும்
நாம் கைகாட்டி விட முடியாது. பூ, பூவை, பூங்கா ( குல், குல்ஷன் ,குல்ஃபாம் ) என்றொரு தொலைக்காட்சித்
தொடர் ஒன்று பல வருடங்களாகத் தேசியத் தொலைக்காட்சியில் சக்கைப்போடு போட்டது.
எவ்வளவோ
இருந்தும் பிறந்ததில் இருந்து பூச்சூடி வரும் பெண் கணவன் இறப்புக்குப் பின் சிறிய பொட்டாக
கறுப்புப் பொட்டு வைத்துக் கொள்ளலாம் என்பதை அனுமதித்தாலும் பூச்சூடக்கூடாது என்பதை
எழுதப்படாத சட்டமாக இந்தச் சமூகம் வைத்துள்ளது. ஒரு காலத்தில் தாலியில் பூச்சூடிய பெண்கள்
பின்னர் தம் கூந்தலில் சூடிக்கொண்டார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆண்களும் கூந்தல் வளர்த்து
கொண்டையாகச் செருகிப் போருக்குப் போனபோது தங்கள் கொண்டையில் பூச்சூடி இருந்தனர். பின்
பக்தி மயத்தால் காதுகளில் கூட வாசனைப்பூக்களை செருகிக்கொண்டனர். அந்தப் பழக்கம் இப்போது
வழக்கொழிந்து விட்டது.
பிறப்பில்
இருந்து தான் விரும்பும் ஒன்றை – தான் ஆணுக்கான போகப்பொருள் மட்டுமேயல்ல என்று கருதும்
பெண்கள் தனக்கான அழகுணர்ச்சியுடன் கொள்ள வேண்டிய உரிமை பூ வைத்துக் கொள்வது. எனவே அவர்களின்
உரிமைகளில். பெண்ணடிமை ஏதுமில்லை. இதைக் குடும்ப நிறுவனங்களும் பெண்ணியவாதிகளும் அதிகாரம்
செலுத்தியோ அரசியலாக்கியோ அவர்களைச் சிறுமைப் படுத்தவும் பகடைக்காயாக்கவும் வேண்டியதில்லை.
பூக்களைப் போன்றே நளினமும் மென்மையும் கொண்டவர்கள் பெண்கள். எதிர்ப்புக் காற்றில் சட்டென்று சருகாய் வாடி விடும் தன்மையும் கொண்டவர்கள். எந்தக் காலகட்டத்திலும் பெண் தனக்குச் சரி என்று தோன்றியதைச் செய்யும் தைரியத்துடன்
வாழ்வதே சமூகம் அவர்களுக்குச் செய்யும் சிறப்பாகும்.
டிஸ்கி :- இந்தக் கட்டுரை 2014 கார்த்திகை மாத மெல்லினத்தில் வெளியானது.
டிஸ்கி :- இந்தக் கட்டுரை 2014 கார்த்திகை மாத மெல்லினத்தில் வெளியானது.
ஆஹா பூவுக்குள் இத்தனைபுதையலா? அற்புதம் தேன் ---சரஸ்வதிராசேந்திரன்
பதிலளிநீக்குஅட! பூக்களைக் கொண்டே பூவையர்களின் சார்பில் இறுதி பாராவில் நச்சென்ற வரிகள்! மென்மையான பூக்களும் வீறு கொண்டெழும் எனச் சொல்லும் கட்டுரை அருமை! வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி சரஸ் மேம்
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!