எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஜூலை, 2015

காதல் காதல் காதல்.



காதல் காதல் காதல்.

நாட்காட்டியில் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று. அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன் கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான். அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.

ரோமப்பேரரசில் வீரர்களுக்கு திருமணமாகிவிட்டால் போரில் நன்கு யுத்தம் செய்யமாட்டார்கள் என்று திருமணத் தடையும் காதல் தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாம். வேலண்டைன் என்ற பாதிரியார் அவர்களுள் காதலித்த வீரருக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த காரணத்தால் மரண தண்டனை பெறுகிறார். பண்டைய ரோமில் கொண்டாடப்பட்ட லூபர்கேலியா என்ற திருவிழாவின் வீரியத்தைத் தடை செய்யவே புனித வேலண்டைன் நாள் என்று அறிவிக்கப்பட்டுக் காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.


ஒவ்வொரு நாட்டிலும் இது காதலர் தினமாக, பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் டே என்று நண்பர் தினமாகக் ( ஸ்டேவன்பாபியா ) , ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்றும் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் தனித்திருப்பவர்கள் விழித்திருக்கும் நாள் என்றும், அனைத்து இதயங்களின் நாள் என்றும் வெள்ளை தினம் என்றும் சொல்லப்படுகிறது. க்ரேக்க தேவதை ஹெராவுக்கும் ஜீயஸுக்கும் நடந்த தெய்வீகத் திருமணத்துக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்றும் கூறப்படுகின்றது.

காதல் என்பது எதுவரை. ? கல்யாணகாலம் வரும்வரை என்ற சந்திரபாபு பாட்டு கேட்டிருக்கலாம். காதல் என்பது கல்யாணம் வரைதானா. அதற்குப் பின் அது அழிந்து போய்விடுகிறதா. ?

ஆனால் காதல் மகத்துவபூர்ணமானது என்றுதான் தோன்றுகிறது. நண்பர் ஒருவரின் மகன் பள்ளிப்பருவத்தில் கோடை விடுமுறைக்குச் சென்றிருந்த உறவினர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் பெண்ணைச் சந்தித்திருக்கிறான். ராமன் சீதையை நோக்கியதுபோல அண்ணலும் நோக்க அவளும் நோக்க உருவாகி இருக்கிறது காதல். ஆனால் இது இன்பாச்சுவேஷன் என்ற கட்டத்தையும் க்ரஷ் என்ற கட்டத்தையும் தாண்டி தகவல் தொடர்பு அதிகமின்றி ப்ளஸ்டூவில் ஒரே க்ரூப், ஒரே கல்லூரியில் ஒரே சப்ஜெக்ட், முடித்து ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஓரிரு வருடங்கள் கழித்துப் பணி நிரந்தரம் ஆனதும் பெற்றோரிடம் தெரிவித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கே இனம் மதம் ஜாதி, எதுவும் குறுக்கிடவில்லை. கல்வி கூட அவர்களுடன் கைகோர்த்துச் சென்றிருக்கிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தும் பைக் எடுத்துக்கொண்டு பார்க் பீச் சென்று ஊர் சுற்றாமல் யூனிவர்சிட்டியிலேயே முதலிடம் வந்து கல்லூரி அளிக்கும் ( கட்டிய முழுத்தொகையையும் திரும்ப அளிக்கும் ) ஸ்காலர்ஷிப் பெற்ற மாணவன் அவன்.

இப்படி நேர்மையாய் நம் முன் வேண்டி நிற்கும் பிரியத்தின் முன் நீங்கள் என்ன செய்து விட முடியும், உங்களைச் சுற்றியிருக்கும் சமூக நிர்ப்பந்தங்கள், குடும்பக் காரணங்களைக் களைந்து நிஜமான நல்ல ஆசீர்வாத்தோடு உங்கள் அன்பைப்  பரிசளிப்பதைத் தவிர. ?

அலிஷா டேயின் ஒரு பாட்டு ஒன்று உண்டு “ MADE IN INDIA” DIL CHAHIYIYEE WOH MADE IN INDIA”. மிலிந்த் சோமன் ஹீரோவாக அந்த ராணியை வந்து தூக்கிச் சென்றபின் சுபம் போடுவது போல “ THEY LIVED HAPPILY EVER AFTER “  என்று ஃபேரி டேல்ஸ் கதைகள் போல எண்ட் கார்டு போட்டுவிட முடிவதில்லை எல்லாக்காதல்களிலும். வசந்தமாளிகை, ஒருதலைராகம் ஆகியன மறக்க முடியாத படங்கள்.

ரோமியோ ஜூலியட், க்ளியோபட்ரா மார்க் ஆண்டனி, லைலா மஜ்னு, ஹெலன் பாரிஸ், சலீம் அனார்கலி, ஷாஜகான் மும்தாஜ் மஹல், மேரி க்யூரி என்று சரித்திரக் காதலர்களாட்டும் , அம்பிகாபதி அமராவதி போன்ற இலக்கியக் காதலர்களாகட்டும், பரம்பொருளை நேசித்து அடைந்த நாயக நாயகி பாவக் காதலான ஆண்டாள்,மீரா, ராதா, ஆழ்வார்கள் நாயன்மார்களாகட்டும் இவர்களுக்குள்ளே ஊடுபாவாக இருந்த விஷயம் ஒன்றை ஒன்று இடைவிடாமல் ஈர்ப்பதேயாகும். அநேகக் காதல்களில் மறைபொருளாகச் சொல்லப்படும் விஷயம் வெளியப்படையாகத் தெரியும் பொருள் பரமாத்மாவை நோக்கியதான ஜீவாத்மாவின் காதல். பரமாத்வை சேரத் துடித்த காதல் என்பதேயாகும். காதல் போயின் சாதல் என்று பாரதியும், கடைக்கண் பார்வை காதலி காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்று பாரதிதாசனும் பாடிச்சென்றிருக்கிறார்கள்.

அகநானூறு காட்டும் ”செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே” என்றும், குறுந்தொகை சொல்லும் “ இம்மை மாறி மறுமை ஆகினும் நீயாகியர் என் கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே “ என்றும் இன்றையப் பெரும்பான்மைக் காதல்கள் இருப்பதில்லை. குறுஞ்செய்திக் காதல்கள்தான். குறுஞ்செய்தி அழிக்கப்படுவது போலக் காதலும் அழிந்து படுகிறது. ஒரு படத்தில் கமல் பாடுவது போல “ ஒரே காதல் ஊரில் இல்லையடா” என்பதுதான் பெரும்பான்மையான நிதர்சனம்.

சங்கத் தமிழ் காட்டும் காதல்கள் சுவாரசியமானவை. அவை திணை சார்ந்து காதலைக் கூறுகின்றன. குறிஞ்சி புணர்தல் நிமித்தமும், முல்லை இருத்தல் நிமித்தமும், மருதம் ஊடல் நிமித்தமும், நெய்தல் இரங்கல் நிமித்தமும், பாலை பிரிதல் நிமித்தமும் பாடப்பட்டுள்ளன. இவற்றில் தோழி விடு தூது, அன்னம் விடு தூது  நெஞ்சு விடு தூது போல இன்றைக்கு குறுஞ்செய்தித் தூது மேலும் தொலைக்காட்சித் தூதும் அடக்கம். பாடல் சேனல்களில் ப்ரீத்தி ஐ லவ் யூ, ராஜ் மை ஸ்வீட் ஹார்ட் என்று உலகறியத் தங்கள் காதலைப் பறை சாற்றுகின்றார்கள் காதலர்கள்.

காந்தர்வம் இராக்கதம் என்றும் காதலித்தவரைத் திருமணம் செய்து கொள்வார்கள். காதலிலும் கைக்கிளை ஒரு தலைக் காதல், பெருந்திணைப் பொருந்தாக் காதல் ஆகியனவும் இலக்கியத்தில் இருப்பது போல நிறைய ஒருதலைக் காதல்களும் பொருந்தாக் காதல்களும் ஏற்பட்டு அதனால் ஆசிட்வீச்சுகளும், கொலைகளும், நடைபெறுகின்றன.

சினிமாவில் நாடகத்தில் காதலர்களைப் பிரித்து வைப்பதைப் பார்த்தால் அழுது வருந்துபவர்கள் கூட தன் குடும்பம் என்று வரும்போது கொடுமையான மனதோடுதான் நடந்து கொள்கின்றார்கள். தன் குடும்ப கௌரவம் சமூக மதிப்பு ஆகியவற்றைப் பெரிதாகக் கருதியே இனம் மதம் ஜாதி தாண்டிக் காதலிக்கும் காதலர்கள் கௌரவக் கொலைக்கு உள்ளாகிறாகிறார்கள். இது இந்தியா முழுமையும் நடைபெறுகிறது. 

மகள், மகனின் வாழ்வு செழித்து கஷ்டப்படாமல் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் எடுக்கும் அவசரமுடிவுகள் இவை யாவும்.மகன் அல்லது மகள் தேர்ந்தெடுத்த நபர் ஜாதி மத இன ரீதியான பிரிவினைகள் தவிர்த்து நல்ல மனிதநேயமிக்க நபராக இருந்தால் சம்மதிப்பதில் அர்த்தமுண்டு. 20 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னும் இவற்றை எல்லாம் கொடிபிடித்துப் பிள்ளைகளைத் தம் சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டுக் கப்பம் கட்டும் சிற்றரசுகளாக எண்ணிக் கொடுமைப்படுத்தாமல் அவர்கள் முடிவுக்கும் ஒத்துப் போகலாம்.

மகன் அல்லது மகளின் காதலில் பெற்றோர் குறுக்கிடுவதன் காரணமும் அவர்கள் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணத்திலும்தான். ஒரு வேளை தாங்கள் தேர்ந்தெடுத்த துணையிடம் இன்பாச்சுவேஷன், க்ரஷ், போன்றவை அல்லது இரக்கத்தினால் ஏற்பட்ட காதல் போன்றவை இல்லாமல் ஒருவரை விட்டு ஒருவர் வாழவே முடியாது என்று தோன்றினால் பெற்றோரிடம் சொல்லித் திருமணம் செய்து கொள்ளலாம். அது தவிர பெற்றோர் சுட்டிக்காட்டும் ஒழுக்கம் சார்ந்த மற்றும் தவிர்க்க இயலாத வேறு குற்றச்சாட்டுகள் இருந்தால் இருவரும் தங்கள் காதலைப் பரிசீலித்து முடிவெடுப்பது அனைவருக்கும் நலம் பயக்கும்.

அப்படித் திருமணம் முடித்தவர்களும் ஆத்ம அன்பில் கரைந்து குற்றம் குறை பொருட்படுத்தாமல் மிச்சமுள்ள ஆயுள் வரை ஒன்று சேர்ந்தே வாழ்வோம் என்று தீர்மானம் எடுங்கள். அதுதான் உங்கள் காதலை எதிர்த்த உலகுக்கு நீங்கள் கொடுக்கும் தீர்ப்பாக இருக்கும்.  

திரை இசைப்பாடல்களும் காதலை விதம் விதமான வண்ண வண்ணமாக வரைந்து காட்டுகின்றன. “ மனம் விரும்புதே உன்னை “ “ நறுமுகையே நறுமுகையே “ “ சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள். “ ” சந்திப்போமா சந்திப்போமா “ “ உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா “  “ யார் அந்த நிலவு “ “ அழகே வா “ என்று ஆயிரக்கணக்கான ரொமாண்டிக் மெலடிப் பாடல்களைக் குறிப்பிடலாம். காதல் என்றதும் பிரிவும் நம் ஞாபகத்துக்கு வரும். அதனோடு ஊடல் கூடலும் கூட. மோரிஸ் எல்பர்ட்டின் பாடல் ஒன்று நான் எப்போதும் ரசிப்பது “ ஃபீலிங்க்ஸ் “ “FEELINGS “ MORRIS ALBERT.

எப்பக் கேட்டாலும் இனம்புரியாத ஒரு உணர்வுல ஆழ்த்தும் பாட்டு இது. சாஃப்ட் ராக். ப்ரேசிலைச் சேர்ந்த பாடகர் மோரிஸ் அல்பர்ட் பாடியது.70 களில் மக்களை ஆட்டிப் படைத்த பாடல்.பார்ட்டி கில்லர்ஸ் என்று சொல்வார்கள் அந்த ரகம்.

உணர்வுகளைக் கொய்து போடும் தன்மை இந்தப் பாடலுக்கு உண்டு. நினைவுகளும் கனவுகளும் தனிமையும் நிரம்பிய ஒரு மாய வெளிக்குள் இட்டுச் செல்லும் இசை. லூயிஸ் காஸ்டே எழுதியது. 1974 இல் வெளிவந்த இது 40 வருடங்களுக்குப் பின்னும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது. 20 மொழிகளில் பல்வேறு பாடகர்களால் பாடப்பட்ட பெருமையும் கொண்டது.

தொடர்புடைய ஆனால் தொடர்பில் இல்லாத இருவேறு மனநிலைகளையும் ., ஏதோ ஒரு விதத்தில் பாதித்த- என்னவோ ஒரு நெருக்கம் விழையும் மனதுடன்., ஒரு பெண்ணுடன் கொண்ட உணர்வுகளையும். ,அதே நேரம் இருவருக்குமான இடைவெளியை உணர்ந்தும் ரோஷார்ஷ் சித்திரங்கள்போலச் சிதறிச் செல்லும் பாடல் இது.

இசை ஒரு பக்கம் சுற்றிச் சுழலும் நீருக்குள் ஆழ்த்த, பாடல்வரிகள் துடுப்புபோல் மெல்ல அசைக்க, மோரிஸ் அல்பர்ட்டின் குரல் படகைப் போலத் தாலாட்ட .. இன்னுமென்ன சொல்ல. எல்லாமே உணர்வுகள்தானே.

அலையடிக்கும், பொங்கும் மனநிலையில் கண்ணீர்தானே வரும். காதல் உணர்களை மறக்கவோ மறைக்கவோ முடியுமா. தொலைக்கத்தான் முடியுமா.

தனிமையும் பொங்கும் காதலும் தவிர்க்கவே இயலாத & ஒன்று கூடவே முடியாத  விஷயங்கள் . இருவரும் சந்திக்கவுமில்லை பிரியவுமில்லை. சேர்ந்திருக்கவும் இல்லை பிரிந்திருக்கவும் இல்லை. எல்லாம் காதலில் மட்டுமே சாத்தியம். அவ்வப்போது மனசை ஆட்டிப் படைக்கும்பாடல் .

எல்லார் வாழ்விலும் ஏதேனும் ஒரு தருணத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய ஒரு விதமான பிரியமும் பிரிவும் இந்தப் பாடலைக் கேட்கும்போது நினைவுக்கு வரும். அதுவே இதன் இத்தனை வருட நீடித்தலுக்கும் வெற்றிக்கும் காரணம்.

முன்பே கேட்டிருந்தாலும் இன்னும் ஒரு முறை இசைக்காகவும், பாடல் வரிகளுக்காகவும் மோரிஸின் குரலுக்காகவும் கேட்டுப் பாருங்கள். அற்புதம். காதலிப்பவர்களை ஆசீர்வதிக்கும் மனநிலை வாய்த்துவிடும். காதல் என்பது உண்மை அன்பாயிருக்கும் பட்சத்தில் நிச்சயம் அது கடவுளுக்கு நிகரானதுதான்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை மே 9 - 23 , 2015 ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானது.

6 கருத்துகள்:

  1. விரிவான அலசல். அபாவும், போனி எம்மும், டோன்ட் வொரியும் தவிர நான் வேறு ஆங்கிலப் பாடலறியேன்! ஏரியா வரியாக டைம்ஸ் என்று சிறு பத்திரிக்கை வருகிறதா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி ஸ்ரீராம். என் கணவரும் பிள்ளைகளும் அருமையான பாடல்களை அறிமுகப்படுத்துவார்கள். அது போக நானும் முகநூல் நண்பர்களின் பரிந்துரையிலும் சில பாடல்கள் கேட்பதுண்டு :) ஆம் ஷெனாய் நகர் டைம்ஸ் ஷெனாய் நகர் போக சென்னையில் இன்னும் சில ஏரியாவிலும் வருவதாகக் கூறினார்கள். :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா சகோதரி....என்ன ஒரு அருமையான அலசல்..பண்டைய காலத்து வரலாற்றிலிருந்து, சங்க இலக்கியம் சொல்லி, திரைப்படப்பாடல்கள் சொல்லி, மிகவும் நேர்மையான அழகான காதல், உண்மையான நிகழ்வு பற்றியும் சொல்லி அருமையாக அலசி முடித்திருக்கின்றீர்கள். திரைப்பாடல்கள் நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையான காதல் சொட்டும் பாடல்கள்....ஆங்கிலப் பாடல்கள் அவ்வளவு அதிகமாகத் தெரியாது ஆனால் தமிழ் பாடல்கள் நிறைய கேட்பதுண்டு...என மனசுலதான் நிக்காது...ஹஹஹ்

    வாழ்த்துகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  5. விரிவான கருத்துக்கு மிக்க நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...