புதன், 22 ஜூலை, 2015

தாமரைகள் கூம்பிவிடுமுன்.தாமரைகள் கூம்பிவிடுமுன்
எழுதிவிடவேண்டும்

சமவெளி இருட்டுச் சகதிக்குள்
வம்சவெளிதெரியாமல்
பள்ளத்தாக்குகளாய்
பதுங்கிப் போவதற்குள்

கட்டிட உலகங்கள்
வானத்தை முந்தானை போட்டு
மறைத்து விடுவதற்குள்

இதய நெருங்கல்களை
கறுப்புத் திரையால்
வானம் மூடுவதற்குள்

கால்வாயோரத்துக் தண்ணீரெல்லாம்
அச்சம் பூசிக்கொள்வதற்குள்

கொலுசுச் சத்தங்கள்
காற்றில் சப்திக்காமல்
நினைவு உறைபோட்டுத் தடுப்பதற்குள்

கிணற்று இராட்டினங்களின்
சங்கீதலயங்கள் ஓய்ந்துபோவதற்குள்

தவளைகளின் இருப்புகள்
தெரியப்படுத்தப்படுவதற்குள்

மேகம் கறுப்பு மயிரிழைகளை உதிர்த்து
வழுக்கையாகுமுன்

ஆகாயத்தோடு நிர்மலமாய்க் கிடக்கும்
மனச்சிதறல்கள் வாரிக்கொட்டப்படும்முன்

ஜன்னலின் வாய்களுக்கு
திரைப் ப்ளாஸ்த்ரிகள் ஒட்டப்படுமுன்

எல்லா வீடுகளும் சாணி குளித்து
கோலப்பூவைச் செருகிக்கொள்ளுமுன்

தொண்டை கரகரக்க அவரசமாய்
அர்த்தசாமக் கோழி குரல்கொடுக்குமுன்

மனிதர்கள்
அழகியவிரல்களின் கோரநகங்களாய்த்
தங்கள் முகம் காட்டுமுன்

இராத்திரி தன் மௌனத்தை
ஒப்பாரியோடு முறித்துப்போட்டு விடுமுன் 

ஆதிகாலத்து வறுமை ஓலங்கள்
காதில்படுமுன்

முடியில் ஒட்டிய ஒட்டடையாய்
பகல் வெளிச்சச் சிலந்திகளை
ஓட்டிவிடுமுன்

கிளைகளில் தொங்கும்
இருள் மேகங்கள் பயந்து ஓடிவிடுமுன்

மலைகள் பனியணிந்து
அங்குமிங்கும் அலைமோதி
மனம் தெளிவதற்குள்

சப்தங்கள் காதைக் கோருவதற்குமுன்

நிசப்த அலைகள் வடிவதற்குள்

கோழி பொறுமையாய்க்
காத்திருக்கும் மௌன அடையாய்

மனதின் துடிப்புகள்
அடங்கிப் போவதற்குள்

மணியோசைகள் காதைப் பரிவதற்குள்

சீக்கிரமாய் குதிரைத் தாவுதலின் அவசரமாய்

அசுரத்தனமாய் எழுதிவிட வேண்டும்.

-- 85 ஆம் வருட டைரி. 

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை எத்தனை...!

ஆனால் உங்களால் முடியும் சகோதரி...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அழகான அருமையான வரிகள்! ஆம் பல சமயங்களில் மனத்தின் துடிப்புகள் பதியப்படாமல் போய்விடுகின்றது....

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா ! நன்றி டிடி சகோ

நன்றி துளசி சகோ உண்மைதான்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

உங்களின் ஆசைகள் நிறைவேறட்டும்! அருமை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...