எனது நூல்கள்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

இருவேறு உலகங்களுக்கு இடைப்பட்ட திரிசங்கு உலகத்தில் வாழ்பவரை திருநம்பிகள் என்றும் திருநங்கைகள் என்றும் சொல்லலாம். அவன் அவள் என்று இரு பாலினங்கள் மட்டுமே உயர்திணையாயிருக்க அது என்று அஃறிணையாகக் குறிப்பிடப்பட்டவர்கள் இந்தத் திருநம்பிகள் திருநங்கைகள்.

பெரும்பாலும் பதின் பருவத்துக்குமேல் தன்னைத் திருநங்கையாகவோ திருநம்பியாகவோ இனம்கண்டுகொள்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம். குடும்ப அவமதிப்பு, சமூக அவமதிப்பு, தன் உடலில் நிகழும் பாலியல் குழப்பம். இவற்றை மீறி அவர் செயல்படமுடியாமல் தொடர்ந்து அவமானம், அருவறுப்பு, இழிவான பார்வையைச் சந்திக்கிறார்.  மனதளவில் பெண்களாக உணர்வதால் எதிர்கொள்ளும் உலகையும் பலவீனமான மனதோடே எதிர்கொள்கிறார்.இவர்களின் பாலியல் குழப்பத்தில் இவர்களே தவிக்க ஆறுதல் சொல்ல வேண்டிய குடும்பம் இவர்களைக் கண்டு அருவெறுத்துக் கைவிடும்போது வீட்டை விட்டுவெளியேறி தன்னைப் போன்ற சகபாலர்களுடன் இணையும் இவர்கள் கைக்கொள்ளும் தொழில்கள் கடைகேட்டல், பஸ் ஸ்டாண்டு, ரயில் போன்ற பொதுஇடங்களில் பிச்சை எடுத்தல், காம நிவாரணியாகப் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வருதல் ஆகும்.

பொது இடங்களில் இவர்களைக் கிண்டல் செய்வது, அடிப்பது , துன்புறுத்துவது பாலியல் வன்புணர்வு செய்வது, சினிமாக்களிலும், ஊடங்களிலும் கேவலமாகச் சித்தரிப்பது என நடந்து வந்திருப்பது மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இலக்கியத்தில் புராணத்தில் இதிகாசத்தில் கூட இவர்கள் அடுத்தபட்சமாகப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்.

லிவிங் ஸ்மைல் வித்யா புதிய தரிசனம் பத்திரிக்கையில் ( ஆகஸ்ட் 1 – 14 2013, பக் 13. ) ப. திருமலைக்கு அளித்த ஒரு பேட்டியில் சொல்லும்போது /// ஈழத்தில் போர் அவலங்களுக்குப் பின்னும் மத உணர்வும் , சாதி உணர்வும், ஆணாதிக்கப் பிற்போக்குத்தனமும் இருப்பதைக் காணமுடிந்தது. தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும், பெண்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைகளையும், தலித்துக்களும் இஸ்லாமியர்களும் மலையகத் தமிழ்ப்பெண்களுக்கும் இவர்கள் எல்லாரும் சேர்ந்து திருநங்கைகளுக்கும் சமபால் ஈர்ப்புடையவர்களுக்கும் இழைத்த கொடுமைகளையும் கேட்டு ஜீரணிக்க முடியாமல் நொறுங்கிப் போனேன் /// என்கிறார்.

திருநம்பிகள் பெண்ணின் உடலோடு பிறந்து ஆண் போன்ற உணர்வும் தோற்றமும் கொண்டவர்கள். இவர்களில் சிலர் ஆணைப் போல உடையணிந்து கொள்வார்கள். ஆனால் இவர்கள் அவ்வளவாக இனம் காணப்படாததால் சமூகத்தால் பெரிதான பிரச்சனைகளை எதிர்கொள்வதில்லை என்றாலும் ஒரு பெண் உடலில் பிறந்து விட்டு ஆணைப் போன்ற உணர்வும் தோற்றமும் கொண்டிருக்கிறோமே என்ற குழப்பங்கள் ஏற்படும். டாம் பாய் என்று சொல்வார்கள். சிறுவயதிலிருந்தே பையனைப் போல நடந்து கொள்வது. இது க்ரோமோசோம், டி என் ஏ ஆர் என் ஏ குறைபாட்டினால் வருவது. இந்தத் தன்மையினால் சிலர் குடும்பத்தினரால் நண்பர்களால் சிலசமயம் அவமானத்துக்குள்ளாவார்கள். திருமணம் போன்ற சமயங்களில் பெரும் தடுமாற்றமும் சமூகத்தால் அவமானமும் ஏற்படுவதுண்டு.

ஆணின் உடலோடு பிறந்து தன்னைப் பெண்ணாக இனம் கண்டு கொள்ளும் ஒரு திருநங்கை தன் உணர்ச்சிகளோடு போராடியும் உலகத்தின் பார்வையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது, பாலியல் அங்கீகாரத்துக்காகப் போராடுவது மட்டுமல்ல குடும்பம், சமூகம் மற்றும் சுய உணர்ச்சிகளோடும் போராட்டம்தான்.

இதிலும் குடும்பமும் நண்பர்களும் கைகொடுக்க நர்த்தகி நட்ராஜ், க்ளாடி, ஸ்மைலி, கல்கி, ரோஸ் போன்றோர் இவற்றில் ஈடுபடாமல் தாங்கள் விரும்பிய துறையில் ஈடுபட்டு வெற்றிகண்டு வருகிறார்கள்.

காரைக்குடியில் பத்துப் பன்னிரெண்டு வயது இருக்கும்போது ஒரு விடுமுறை நாளில் இராமவிலாசம் தியேட்டரில் சினிமா பார்த்துவிட்டுவரும்போது அங்கே குடிசையில் பனியனும் லுங்கியும் அணிந்து சடை பின்னியிருந்த ஒருவர் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். என் கூட வந்த உறவினர் பெண் இதா பாரு ஒம்போது என்றார். உடனே அவருக்கு கோவம் வந்து அடிக்க வந்துவிட்டார். பயந்து வேகமாக ஓடி வந்து விட்டோம்.கொஞ்சம் அதிர்ச்சியில் இருந்த நான் வீடு வந்ததும் என் உறவுப் பெண்ணிடம் ஒம்போது என்றால் என்ன ஏன் அப்பிடிச் சொன்னே என்று கேட்க பொம்பளமாதிரி ஆம்பிள்ளைங்க நடந்து வந்தா அப்பிடி சொல்வாங்க என்றாள். அதற்கு மேலும் அவளுக்கும் தெரியவில்லை.

இது ஹார்மோனல் கோளாறு/உறுப்புக் கோளாறு என்பதும், இதனால் அவர்கள் எவ்வளவு மன உளைச்சல் அடைகிறார்கள் என்பதும் அடுத்தவர்களால் புரிந்துகொள்ள இயலாத விஷயம். ஆண் ஒருவர் உடலில் பெண் தன்மை உள்ள ஹார்மோன் ( எஸ்ட்ரோஜன் ) அதிகமாக சுரப்பது, அல்லது பிறக்கும்போது ஆண்& பெண் உறுப்புகள் சேர்ந்தே இருப்பது. அல்லது அந்தரங்க உறுப்புக்களே இன்மை ஆகியனவும் காரணமாகும்.

பதின்பருவத்தில் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ உணரும் அவர்கள் அதற்கேற்ப உடையணிய  மேக்கப் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். மேலும் நிஜப்பெண்ணாக ஆக அவர்கள் அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ள விழைகிறார்கள். தனிப்பட்ட முறையில் தங்களைப் போன்று மாறியவர்களிடமே தங்களின் அந்தரங்க உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துவந்தார்கள். தற்போது இந்தப் பாலின மாற்று அறுவை சிகிச்சை. அரசாங்கத்தின் உதவியுடன் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்படுகிறது. 

பெண்களைப் போல மாறும் இவர்களின் குரல் மட்டும் பெண் குரலாக மாறாமல் இவர்களின் எதிரியாகி விடுகிறது. மற்றபடி இவர்களின் அழகுணர்ச்சியும் நளினமும் நாணமும் பெண்களே தோற்றுவிடும் அளவு இருக்கும். தங்களை சிரத்தையுடன் அழகுபடுத்திக்கொள்வார்கள். அரவான் திருவிழாவில் அழகிப் போட்டிகளும் நடக்கும். அதில் வரும் அழகிகளைப் பார்த்தால் நாமே அதிசயிப்போம்.

வட இந்தியாவில் இவர்கள் மதிக்கப்படுகிறாரகள். திருமணம் குழந்தைப்பேறு போன்ற நிகழ்வுகளில் இவர்களின் வருகையை அவர்கள் வரவேற்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இவர்களை ட்ரெயினிலோ வேறு எங்குமோ பார்த்தாலும் பணம் கேட்டார்கள் என்றால் கையில் இருப்பதைக் கொடுப்பேன். வாங்கித் தலையைச் சுற்றி வாயில் வைத்து பிரார்த்தனை செய்து ஆசீர்வதித்துச் செல்வார்கள்.

ஆனால் உறவினர்கள் சிலர் இவர்கள் ரொம்பத் தொந்தரவு செய்வதாகவும் தொட்டுத் தொட்டுக் காசு கேட்பதாகவும் ட்ரெயினில் உணவுண்ணும்சமயம் வந்து ஒரு முறை உணவைத் தரச்சொல்லிப் பிடிவாதம் பிடித்து வாங்கிச் சென்றதாகவும் கூறி வருந்தினர். இப்படிச்சிலர் செய்யும் செயலால் வேறுபல திருநங்கையரும் அவமானப் பட நேரும்.

ஒரு முறை கே கே நகரில் இருந்து லேடீஸ் ஸ்பெஷல் அலுவலகத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். 3 பேர் திருநங்கைகள் ஏறினார்கள் மிகச் சிறிய வயது. என் பக்கத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர்கள் ஏறியதும் அருவறுத்த முகத்தோடு உடலைச்சுருக்கியது போல அமர்ந்து கொண்டார். அதைக்கண்டதும் அவர்கள் மூவருக்கும் கோபம் ஏற்பட்டது. அந்த ஷேர் ஆட்டோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு பாடலை சேர்ந்து ஓங்கிக் குரலெடுத்துப் பாடியபடியே உடலை அசைக்கத் துவங்கினார்கள் அந்தத் திருநங்கைகள்.அவர்களோடு பயணம் செய்யப் பிடிக்காமல் பயந்த பக்கத்து சீட் பெண்மணி அடுத்த ஸ்டாப்பில் இறங்கி ஓடினார். அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பாட்டையும் அசைவையும் நிறுத்திய திருநங்கைகள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்கள். அவர்கள் அவமதிக்கப்படும்போது பொங்கி எழுகிறார்கள் பின்பு இயல்பாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரில் அரவானைப் பலிகொடுக்குமுதல்நாள் திருமணசுகம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கும் அரவானின் ஆசைப்படி கிருஷ்ணர் பெண்ணாக மாறித் திருமணம் செய்துகொண்டு அன்று அவருக்கு மனைவியாக இருப்பார். இதேதான் விழுப்புரம் கூவாகம் திருவிழாவிலும் நடைபெறும். அரவானைத் தங்கள் கணவனாக வரிக்கும் அவர்கள் அரவானுக்குப் பதிலாக பூசாரியிடம் தாலி கட்டிக் கொள்வார்கள். மறுநாள் அரவான் பலியிடப்பட்டதும் தங்கள் தாலியறுத்து பூவும் பொட்டும் கலைத்து அழுது புலம்புவார்கள். ஒரு மாதம் கழித்துத் திரும்ப தாலி அணிந்து கொள்வார்கள் என்று கூறினார்கள். இந்த சமயங்களில் அங்கே ஆண்களும் இவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் கூடுகிறார்கள். இவர்களே தவிர்க்க விரும்பினாலும் அங்கே அந்த வேண்டாத சகவாசம் ஏற்பட்டு விடுகிறது.

ஒம்போது, அலி, அரவாணி, திருநங்கை, பேடி, பெட்டை என்று எல்லாம் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.  அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனும், மோகினி அவதாரத்தில் விஷ்ணுவும் இந்த இருபால் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இதிகாசங்களில் சிகண்டி, பிருகன்னளை என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறார்கள். தான் காதலித்தவரைத் திருமணம் செய்யவிடாமல் கடத்தி வந்து தன் தம்பிகளுக்குத் தாரமாக்க முனைந்த பீஷ்மரை எதிர்த்த அம்பைதான் அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து வந்து அவரை யுத்தத்தில் ( பெண்களுடன் போரிடமாட்டேன் என்று அவர் சபதம் இட்டிருப்பதால் ஆண் பெண் கலந்த ரூபத்தில் பிறந்த சிகண்டி ) பீஷ்மரை அம்பு எய்து கொன்றார். முகலாய அரண்மனைகளில் கூட அந்தப்புரக் காப்பாளர்களாக , ராஜா ராணிக்கு அந்தரங்க சேவகர்களாக இருந்திருக்கிறார்கள். அதிகாரத்தை நிர்ணயிக்கும் வலிமையான பதவிகளில் கூட இருந்திருக்கிறார்கள்.

திருமண காதல் வாழ்வு என்பது திருநங்கைகளுக்கு எட்டாக கனவாகவே இருக்கிறது. பால் மாற்ற சிகிச்சை செய்து கொண்டாலும் ஏதோ ஒரு ஆண் விரும்பி மணந்துகொண்டாலும் இவர்களுக்கு பிள்ளைப்பேறு இருக்காது என்று சொல்கிறார்கள்.வாரண்ட் பாலா என்பவர் இப்படி உள்ளவர்களை காவல்துறையில் பயிற்சி அளித்து மகளிர் காவல் நிலையங்களில் பொறுப்பில் வைக்கலாம் என்று கூறி இருக்கிறார். மேலும் இவர்கள் வாரிசு குடும்பம் என்று இல்லாததால் தொழிலுக்கு நேர்மையாகவும், கையாடல் போன்றவை செய்யாமலும் லஞ்சம் வாங்காமலும் இருப்பார்கள் என்கிறார்.

சமூக மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமல்ல ஒரு திருநங்கையைத் சகபாலராக அங்கீகரிப்பது தனி மனித உரிமையை அங்கீகரிக்கும் செயல். எல்லா மனிதர்களையும் போல தன்னுடைய சாதி மதம் பால் உரிமையை நிர்ணயம் செய்வது ஒவ்வொரு திருநங்கைக்குக்கும் நம்பிக்கும் உரிய உரிமையாகும் என ஏப்ரல் 15, 2014, கோர்ட் அறிவித்துள்ளது.

சமூகம் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் பிற்படுத்தப்பட்டவர்கள்  என்று கூறி கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் ஏன் அரசாங்கத்தின் அங்கமாகவும் சலுகை வழங்கி பணியமர்த்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளது.

மூன்றாம் பாலின சர்டிஃபிகேட். ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் எல்லாம் தமிழகத்தில் முந்திய அரசின் காலத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அரவாணிகள் நல வாரியம் அமைத்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை குறைதீர் கூட்டங்கள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது. நடக்கிறதேவெனத் தெரியவில்லை.

ஓட்டர் ஐடியும் வழங்கப்பட்டால் ஒரு மில்லியன் அளவில் இருக்கும் அவர்கள் ஓட்டளிக்கும் உரிமைபெற்று அரசை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுவார்கள். என்று முன்னாள் எலக்‌ஷன் கமிஷனர் சையத் குரைஷி கூறி இருக்கிறார். போன வருடம் இவர்களுக்கான வோட்டர் ஐடியும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் ஜேசி ரோட்டில் இருக்கும் ரவீந்திரா கலாக்ஷேத்திராவில் ஃபிப்ரவரி மாதம் 800 திருநங்கைகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று பென்ஷன் கேட்டு நடந்தது. அதன்படி மைத்ரி திட்டம் மூலம் 40 வயதுக்கு மேல் இருக்கும் திருநங்கைகளுக்கு பெங்களூருவில் 500 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும் என்று (தமிழ்நாட்டில் 1000 ரூ. வழங்கப்படுகிறதாம்.).ரெவின்யூ மினிஸ்டர் வி ஸ்ரீனிவாஸ் ப்ரஸாத், சோஷியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஹெச் ஆஞ்சநேயா, மற்றும் அர்பன் டெவலெப்மெண்ட் மினிஸ்டர் ராமலிங்க கவுடே கலந்து கொண்டு தெரிவித்தார்கள். தமிழகம் போலவே இங்கும் 1000 ரூபாய் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள அன்னபாக்யா, யஷஸ்வினி, மற்றும் அக்ஷர்யா ஆகிய திட்டங்களும் அவர்களுக்காக வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் தகுதியும் திறமையும் வாய்ந்த திருநங்கைகள் அரசுப்பணிக்கு விண்ணப்பிக்குமாறும் வேலை ஏற்பாடு செய்துதரப்படும் என்றும் அமைச்சர் ப்ரசாத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்துக்கு வந்த திருநங்கைகளிலேயே இரண்டு குழுக்கள் இருந்தன. ஒன்று சங்கமா என்ற குழு, இன்னொன்று (KSMF), கர்நாடகா செக்ஸுவல் மைனாரிட்டி ஃபாரம், இது போக இன்னும் சில குழுக்களும் இருக்கின்றன. இவைகளுக்குள் யார் தலைமைதாங்கி இதை கோ ஆர்டினேட் செய்து எடுத்துச் செல்வது என்று ஒரே சச்சரவாகிவிட்டது.  

திருநங்கைகள் உரிமைக்காகப் போராடிவரும் கிரண் என்ற செயற்பாட்டளர், ( இவர் கர்நாடகா செக்ஸுவல் மைனாரிட்டி ஃபாரமில் உறுப்பினராகவும் இருக்கிறார் .) கூறும்போது அனைவரும் தனித்தனிக்குழுவாக இருந்து செயல்படாமல் கர்நாடக அரசின் கீழ் செயல்படும் செக்ஸுவல் மைனாரிட்டி ஃபார்மில் இணைந்து செயலாற்றினால் எல்லாத் திருநங்கைகளையும் ஒரே குழுவில் இணைக்க ஏதுவாக இருக்கும் என்றும், கர்நாடக மாநிலத்தில் இவர்களைப் போன்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் எடுக்கவும் என்ரோல் செய்யவும் மேலும் பென்ஷன் மற்ற வசதிகளை உடனடியாகப் பெற்றுத்தரவும் வழிவகுக்கும் என்றும் கூறுகிறார். 

பாலினம் ஒரு தடையல்ல என்று நிரூபித்தபடி ரோஸும், நட்ராஜும், கல்கியும் ஸ்மைலியும் தங்கள் துறையில் சாதித்து முகநூலிலும் கலக்கி வருகிறார்கள்.தங்களைக் கல்வியறிவிலும் தொழிற்துறை அறிவிலும் மேம்படுத்திக்கொண்டு தாங்கள் விரும்பிய துறையில் இவர்கள் ஈடுபட்டு தங்கள் குறைகளையும் மீறி ஜெயித்திருக்கிறார்கள். அதற்கு இவர்கள் குடும்பம் இவர்களுக்குப் பக்கபலமாக அமைந்தது போல் மற்ற திருநங்கைகளுக்கும் அமைந்தால் அவர்களும் தங்களை மீட்டெடுத்து சமூகத்தில் உயர்வாழ்வு பெறுவார்கள். சகபாலராக அவர்களை (சமூக பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு சுயமரியாதை, சகமனித )அங்கீகாரம், அளித்து ஏற்றுக்கொண்டு மதிக்கும் மனது ஒவ்வொருவருக்கும் வாய்க்கப்பெற்றால் அவர்கள் வாழ்வு மிளிரும்
 

9 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கட்டுரையில் அருமையான பல அலசல்கள்.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அக்கா
திருநங்கைகள் குறித்து அருமையான அலசல்களை அழகான கட்டுரையாகத் தந்திருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் அக்கா...

ezhil சொன்னது…

அருமையான பதிவு...திரு நங்கைகள் குறித்த பல கேள்விகளுக்கு விடையாக இந்தக் கட்டுரை

Thenammai Lakshmanan சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றிகள் கோபால் சார்

நன்றி குமார் சகோ தொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி

மிக்க நன்றி எழில். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அலசல்.

வட இந்தியாவில் இவர்களுக்கு மதிப்பு கொடுத்தாலும் இதை இவர்களில் தவறாக பயன்படுத்துவதும் நடக்கிறது.

ஆண் குழந்தை பிறந்தால் ஐம்பத்தி ஓராயிரம், பெண் குழந்தை என்றால் இருபத்தி ஓராயிரம் என்று வைத்திருக்கிறார்கள். இதை வாங்காது நகர்வதில்லை. பல பிரச்சனைகளும் வருகிறது.

இவர்களில் ஒரு சிலர் இப்படி இருப்பதால் மொத்தமாக அவமதிப்பது தவறு. அவர்களும் மனிதர்கள் தானே......

Thenammai Lakshmanan சொன்னது…

அப்படித்தான் சொல்கிறார்கள் வெங்கட் சகோ.

ரயில் ப்ரயாண நேரங்களில் அவர்கள் பெண்களிடம் அதிகம் வம்பு செய்வதில்லை. ஆனால் ஆண்களிடம் கொஞ்சம் அடித்துப் பிடித்து வாங்கத்தான் செய்கிறார்கள்.

புஷ்பா ஸ்ரீனிவாசன் சொன்னது…

அருமை தோழி, முதன்முதலாக உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி புஷ்பா ஸ்ரீனிவாசன்.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...