எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 ஏப்ரல், 2013

தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.

போலி.

தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் 11. 9. 84 அன்று நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான ( ON THE SPOT --  கவிதை எழுதும் போட்டியில் .) கவிதைப் போட்டியில் இரண்டாம் தகுதி பெற்ற கவிதை. 

இந்தியாவின்
அசோகச் சக்கரங்கள்
வெள்ளியால் அஸ்திவாரமிடப்பட்டுத்
தங்கத்தால் அமைக்கப்படுகின்றன.

இந்தியனே..! நீ பணக்காரன் !.
ஏன் இன்னும்
இதழின் மடிப்புக்களில்,
சலனமற்ற கண்களில்,
அழுக்கடைந்த உடைகளில்
சோகத்தைப் பொதித்துக் கொண்டிருக்கிறாய்.?


உள்ளங்கையில் மருதாணித் துகள்கள்
பச்சையாய்க் கருத்தரித்துச்
சிவப்பாய் உமிழும்.
உன் பச்சையக் கனவுகளும்
சிவப்பாய்ப் பிரசவிக்கையில்
நீ
கல்லறை அஸ்திவாரங்களில்
உன் அமைதிக்காலங்களைத்
தேடிக் கொண்டிருக்கின்றாய்.

மறுபடியும்.,
மறுபடியும்.,
சர்வாதிகாரங்கள்தான் இங்கு
ஆட்சி செலுத்தப் போகின்றன
எனத் தெரிந்தால்
உன் வலிமையை வீணாக்கி
இருக்க மாட்டாயோ..?

வாருங்கள்
நாம் ஜனாதிபதியைத் தரிசித்துப்
பூவால் பூசை செய்து
பாதம் கழுவி நீர் குடிப்போம்.
"இந்தியன் ஒருவனே,
ஒற்றுமை ஒற்றுமை" யெனக்
கத்திவிட்டு மற்ற
கட்சிக்காரருடன் சண்டையிட்டு,
நம் கட்சித் தலைவருக்கு
அலங்கார வளைவு அமைத்துப்
பூமாலை, பணமுடிப்புப் பரிசளித்து,
அவர் இந்தியாவின்
"அரசியல் சித்தாந்தத்தை"
 ஞானாசிரியனாய் நடத்திக் கொண்டிருக்க
'வழிபிறழாத சீடராய்'க் கேட்டுக்
கூட்டம் முடிந்து வந்து
பச்சைத் தண்ணீரைக்
குடித்துவிட்டுப் படுப்போம்.

இங்கே வேர்களில் வெந்நீர் கொட்டப்பட்டுப்
பூக்கள் புகழப்படுகின்றன.
காலை அறுத்தெறிந்துவிட்டு
முகத்துக்குச் சந்தனம் பூசும்
கும்பல்கள் அதிகம்.
\பாவங்கள் பல செய்துவிட்டு
ஒட்டுமொத்தமாகப் பரிகாரம் தேடிக்
கோஷமிடும் சதைத் துருப்பிடிப்புக்கள்..

நம்பியவனை அடுத்துக் கெடுத்துவிட்டு
நல்ல பெயர் எடுக்கும் "தர்மராஜாக்கள்"
நல்ல மேய்ப்பனைத் தெரிந்தெடுக்கத்
தெரியாத காரணத்தால்
விழிக்கும் மந்தைகள்..

போலியையும் அசலையும்
பிரித்தெடுக்கத் தெரியாத
முட்டாள் அன்னங்கள்.

இந்த அப்பாவி அன்னங்கள்
இருக்கும் வரையில்
தண்ணீரில் பாலைக் கலக்கும்
பைசாசப் பால்காரர்களும்
இருக்கத்தானே செய்வார்கள்.

"பொங்கியெழ நானென்ன
கங்கையா..? காவிரியா..?
என வினவும் நண்பனே..
ஒன்று மட்டும் உறுதி..
நீ
வயலோரக் கால்வாயல்ல என்பது..

போலிகளைக் களைந்தெரிந்து
உண்மைப் பயிர்களைக் காண
எந்த உழவனாவது பயப்படுவானா
உன்னைத் தவிர..

போலிகளை அக்கினியில்
வேகவைத்துச் சுட்டுப் பொசுக்கி
ஆவலோடு உண்மைகளைக் காண
நீ விரும்புவாயென நம்புவதால்
நண்பனே உன்னின்
சாதகமான பதிலெனும் பூத்தூவலுக்குச்
சாகரப் பட்சியின் பொறுமையாய்க்
காத்திருக்கிறேன். ..

5 கருத்துகள்:

 1. வரிகளில் போலி இல்லை... அருமை...

  ON THE SPOT எழுதுவது பழக்கமானவர்களுக்கே முடியும்... பாராட்டுக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அப்ப எழுதுனாலும் இப்போதும் பொருந்துகிறது
  நாடி கவிதைகள்

  பதிலளிநீக்கு
 3. முப்பது வருடங்களுக்குப் பின்னும் இன்னும் முட்டாள் அன்னங்களாகவே இருக்கிறோமே என்று கவலைப்பட்டாலும் மொத்தமும் போலியாய் இருக்கையில் போலியை மட்டும் எங்கே தனியாய் பிரித்தறிவது என்று குழம்பியும் கிடக்கிறோமோ என்று தோன்றுகிறது.

  கண நேரத்தில் கனம் பொருந்திய கவிதை படைத்தமைக்குப் பாராட்டுகள் தோழி.

  பதிலளிநீக்கு
 4. இங்கே வேர்களில் வெந்நீர் கொட்டப்பட்டுப்
  பூக்கள் புகழப்படுகின்றன. //
  இதுதான் கல்வி

  பதிலளிநீக்கு
 5. நன்றி தனபால்

  நன்றி மணி

  நன்றி கீதமஞ்சரி

  நன்றி கவியாழி கண்ணதாசன்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...