எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

புத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..

புத்தர் வாழ்வியல் கதை கடியாபட்டியில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது ஃப்ரேம் செய்த ஃபோட்டோ ஓவியங்களாக காண நேர்ந்தது.

2500   வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கபிலவஸ்துவை அரசாண்ட சாக்ய வம்சத்தின் ராஜா சுத்தோதனர் , மகா மாயா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. வெகு நாள் கழித்து சூலுற்ற மகாமாயா தன் தாய் தந்தையரைக் காணச் சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்து விடுகிறது.


அவருக்கு சித்தார்த்த கௌதமா என்ற பேரைச் சூட்டி வளர்க்கிறார் ராஜா. மிகுந்த தேஜசோடு இருந்த குழந்தை ஒரு துறவியாகும் வாய்ப்பு இருப்பதாக அறிகிறார் ராஜா.மகா மாயா இறந்துவிட ராணியின் சகோதரி ப்ரஜாபதி கோதமி சித்தார்த்தரை வளர்க்கிறார்..

பிணி மூப்பு மரணம். உலக கஷ்டம் எதுவுமே தெரியாமல் வளர்க்கப்படவேண்டும்  என எண்ணும் அவர் ஒரு அழகான அரண்மனையைக் கட்டி அதில் வளர்க்கிறார்.

உறவுப் பெண்ணான அழகிய யசோதராவுடன் 16 வயதிலேயே திருமணமாகி விடுகிறது சித்தார்த்தனுக்கு. வாழ்வியல் இன்பங்களை அனுபவித்த அவர் சிறுவயதிலேயே பிணி மூப்பு மரணம் ஆகிவற்றை சண்ணா உடன் வெளியே செல்லும்போது அறிகிறார்.

அரண்மனையின் சுகபோகங்களில் இருந்தாலும் அவர் மனம் மனிதர்கள் அனுபவிக்கும் துயரத்துக்கான காரணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

யசோதரா அழகிய ஆண் குழந்தை ராகுலனைப் பெற்ற அந்த நாளில் வீட்டை விட்டு நள்ளிரவில் சண்ணாவுடனும் காந்தகா என்ற தன் குதிரையுடனும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.


 (அவரது குழந்தை ராகுலனைக் கையில் வாங்கிய ராஜா தன் மகனின் துறவு அறிந்து வருத்தமுறுகிறார். )


ஒரு ஆற்றங்கரையில் தன் ராஜ உடைகளைக் களைந்து பிக்கு உடைகளை அணிகிறார். கண்ணீர் சிந்தியபடியே காந்தகாவும் சாணாவும் பிரியமனமில்லாமல் செல்கிறார்கள்.

பின் அவர் பிம்பிசாரரைச் சந்தித்து உயிர்க்கொலையைத் தடுக்கிறார். அலாரா கலாமா, உத்தாக்கா ராம்புட்டா ஆகிய குருக்களிடம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும் பற்றற்றிருக்கவும் கற்கிறார். இருந்தும் உயிர்கள் படும் துன்பத்துக்கான காரணத்தை அறிய முயற்சிக்கிறார். உடலை வருத்தி பிறப்பற்ற நிலையை அடைய எண்ணும் கொண்டன்னா, பாடியா, வப்பா, மஹாநாமா, அஸ்ஸாஜி ஆகியோரைச் சந்தித்து அதன் படி நடக்கிறார்.

ஒரு கட்டத்தில் மரணமெய்தும் நிலைக்குப் போய்விட ஒரு ஆட்டுக்காரச் சிறுவன் ஊட்டும் ஆட்டுப் பாலினால் உயிர்பெறுகிறார். அதன் பின் இது வெல்லாம் உண்மையை எய்தும் வழியல்ல எனவும், தானேதான் தேடிக் கண்டடைய வேண்டும் என உணர்ந்து ஒரு போதி மரத்தடியில்  அமர்கிறார். அப்போது அவருக்கு சுஜாதா என்ற பெண் பால் கஞ்சி போன்ற உணவை வழங்கி வருகிறார்.

உணவை மறுக்காமல் உண்டு வரும் கௌதமருக்கு ஒரு கட்டத்தில் ஆசையேதான் துன்பத்துக்குக் காரணம் என்றும் எனவே ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் எண்ணம் உண்டாகிறது. நாளுக்கு நாள் அவரது தேஜஸ் அதிகமாகிறது. பலருக்கும் தான் கண்டடைந்த உண்மைகளைப் போதிக்க ஆரம்பிக்கிறார். ஆனந்தரைத் தன் பிரதம சீடராக அறிவிக்கிறார். புத்தம், தம்மம், சங்கம் ஆகிய மூன்றையும் மனித குலம் உய்யத் தந்துவிட்டு இந்த உலகை விட்டு தன் 82 ஆவது வயதில் இறவாப் பெருநிலை எய்துகிறார்.

அவர் கடைசியாக போதித்தது “மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி. எனவே  உங்கள் ஆன்ம விடுதலைக்காக  நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.

டிஸ்கி:- இந்தக் கதையை ஓவியமாக வரைந்தவர் பெயர் M. SARLIS  என்று கையொப்பமிடப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு புகைப்படத்தில் D. WILLIAM PREMS COLOURS  என்று இருக்கிறது. யார் வரைந்தது என்று தெரியவில்லை. ஒவியங்கள் புகைப்படங்களாக மாற்றப்பட்டு ஃப்ரேமுக்குள் இருக்கிறது. அதைப்புகைப்படம் எடுத்து நான் வெளியிட்டிருக்கிறேன். இதை ஓவியர் பி. ஆர் ராஜன் அவர்களும் ஓவியர் ஜீவானந்தன் அவர்களும் கூட “ Classic~"  என்று புகழ்ந்திருக்கிறார்கள். ஒரிஜினல் ஓவியம் இன்னும் எவ்வளவு அழகாக இருக்குமோ..

4 கருத்துகள்:

  1. நல்ல போதனை... உண்மையும் கூட...

    ஓவியங்கள் அருமை... (Flash இல்லாமல் எடுத்திருக்கலாமோ...?)

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபால்.. ஆம்.. ஆனால் சரியாகத் தெரியவில்லை..அதனால் ஃப்ளாஷ் உபயோகித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. புத்தரின் பிறப்பு வாழ்க்கை பற்றிய ஓவியங்கள் அரிய தகவல் .நன்றி தேனம்மை

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...