வியாழன், 26 ஜூலை, 2012

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர

புலம் பெயர்ந்த பெண்களின் மன அழுத்தம் தீர:-

************************************************

கிட்டத்தட்ட நான் கல்லூரிக்கு வந்த முதல் வருடத்தில் இருந்து ஈழப்பிரச்சனைகளை உணர ஆரம்பித்திருக்கிறேன். தஞ்சாவூரில் எங்கள் அத்தை வீட்டில் ஒரு ஈழப்பெண் வேலை செய்து வந்தார். ஒரு கலியம் பெட்டி நிறைய அங்கு உபயோகப்படுத்திய சாமான்கள் கொண்டு வந்திருந்தார். அவர்கள் தமிழ் பேசுவதே கேட்க இனிமையாய் இருக்கும். ஆனால் அதிகம் படிக்காததால் தன் குடும்பத்தேவைகளுக்காக வீட்டு வேலை செய்து வந்தார். நன்கு படிக்க வைக்கப்பட்டிருந்தால் அவர் ஏதாவது அலுவலகங்களில் வேலை பார்த்து வந்திருக்கக்கூடும். திரும்ப தன் நாட்டுக்குச் செல்லும் ஆவலோடு இருந்தார் அவர். இருட்டில் படகில் அதிகமாகப் பணம் கொடுத்து இந்தியா வந்து சேர்ந்ததாகச் சொன்னார்.


1983 ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று எங்கள் கல்லூரியில் சிலோன் பிரச்சனைக்காக விடுமுறை விட்டார்கள். ரிட்ரிட் ஹாலிடேஸ் என 3 முதல் 5 நாட்கள் விடும் வழக்கம் உண்டு என்றாலும் அந்த முறை 20 நாட்கள் நீடித்தது அந்த விடுமுறை. இன்று பள்ளி நடக்குமா பாடம் படிக்க முடியுமா என குழந்தைகள் குழப்பத்தில் இருப்பதைப் போன்ற மன நிலையில் இருந்தோம். வீட்டுக்குச் சென்ற கல்லூரித் தோழிகள் சிலர் வீட்டுக்குச் செல்லாமல் காதல் கடிமணம் புரிந்திருந்தனர். ரொம்ப குழப்பமான மன நிலை இருந்தது.

நிறைய கவிதைகளும்., கவியரங்குகளும் கலந்து கொண்டிருக்கிறோம். இது பற்றி விவாதித்திருக்கிறோம் என்றாலும். இன்றைய நிலைமை என்ன என யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. யுத்த சமயங்களில் பெண்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்தலும். அலங்கோலப்படுத்தலும். சீரழித்தலும். கொன்று குவித்தலும் பாலியல் பலாத்காரங்களும் எல்லா இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன். முறையான வளரும் நாடுகளிலேயே கூட இவைகளைக் கட்டுப்படுத்த இரும்புக் கர நடவடிக்கை எடுக்க நேரும்போது யுத்தத்தில் சிக்கியும் அகதிகளாயும் வாழும் மக்கள் திறந்த வெளியில் வாழும் நாடோடிகளாய் எல்லாத் துயரங்களோடும் வாழவேண்டி இருக்கிறது.

புலம் பெயர் பெண்கள் என நினைக்கும் போது அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் நிறைய எக்ஸ்போஷர் என சொல்லலாம்.இந்த உலகம் என இந்தப் புலம் பெயர்தல் உணர்த்தி அவர்களை இன்னும் உறுதியானவர்களாய். படைப்பாளிகளாய்., ஆக்கி இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 30 வருடங்களில் உருவான ஈழப் பெண் எழுத்துக்கள் உயிர்ப்பானவை. ஈழவாணி ஜெயா தீபன் ., தமிழ்நதி ராஜேந்திரன்., மாயோ மனோ., ஹேமா சுவிஸ்., மஞ்சுபாஷிணி ஜெகன்னாதன்., போன்ற பெண் படைப்பாளிகள் தங்கள் உணர்வுகளை தங்கள் எழுத்துக்களில் வலிமையாக பதிவு செய்கின்றனர்.

இந்த எக்ஸ்போஷர் மற்றும் உலகளாவிய தன்மையினால் அவர்களின் பொறுப்பு., மன அழுத்தம் ., வேலைப்பளு அதிகம்தான். சொந்த ஊரில் ஒன்றுமறியா சிறுமியாக உலா வந்தவர்கள் தங்கள் குடும்பச் சுமைகளை சுமக்கத் தொடங்கி விட்டார்கள். ஏனெனில் பல் குடும்பங்களில் அம்மா அப்பா சிலோனிலும் பிள்ளைகள் படிப்பு மற்றும் வேலை இன்ன பிற சுதந்திரத்துக்காக வெளிநாடுகளிலும் வசிக்கத்துவங்கி விட்டார்கள். குடும்பத்து்க்காக வேலைக்குச் செல்லும் பெண்கள் அங்கும் உடல் ரீதியான பலாத்காரத்திலும். வாழும் நாடுகளிலும் மூன்றாம் தர குடிமக்களைப் போலும் பார்க்கப்படுகிறார்கள். இவற்றை எல்லாம் மீறி அவர்கள் தங்களை குடும்பத்தில் பெண்ணாகவும் வெளியுலகில் ஆணாக செயல்படவும் வேண்டியிருக்கிறது.

கல்ஃப் நாடுகள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா., போன்ற நாடுகளில் தனித்து வாழும் பெண்களை அறிவேன். அவர்கள் குடும்பம் சிலோனில் இருக்கும் . பிள்ளைகள் கணவர் கூட அங்கே இருப்பார்கள் அம்மா அப்பாவுடன். இவர்கள் நிறைய சம்பளத்துக்காக வெளிநாடுகளில் வேலைக்குச் செல்கிறார்கள். சிலர் வீட்டு வேலைக்கும்., சிலர் அலுவலக வேலைக்கும் சிலர் ஆஸ்பத்ரி வேலைக்கும் செல்கிறார்கள்.

வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்பவர்., மேலதிகாரி ஆகியோருடன் சுமுகமாக அட்ஜஸ்ட் செய்து செல்லும் நிலைமை. இல்லாவிட்டால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள். அதனால இங்கு பிள்ளைகள் படிப்பு., கட்டி வரும் வீட்டுப்பணி எல்லாம் பாதிக்கப்படும். அவர்கள் தங்கி இருக்கும் இடமும் நால்வர் அறுவர் தங்கும் இடமாக இருக்கும். எல்லா விதத்திலும் பணம் மட்டுமே பார்க்கப்படுவதால் இவர்கள் தங்கள் சுயகௌரவத்தை விட்டுக் கொடுத்து வேலை செய்ய வேண்டி வருகிறது. குடும்பம் குழந்தைகளைப் பிரிந்த வருத்தம் வேறு.தங்கள் குடும்பத்தேவைகள் முடிந்து தங்கள் குடும்பத்தோடு எப்போது சேரப்போகிறோமோ என்று வேறு வருந்தியபடி இருக்கிறார்கள்.

முழுதாக குடும்பத்தோடு புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் விட்டு வந்த சொத்து., தங்கள் தாய் மண் அதனோடான நேசம் ஆகியவற்றிலும் அங்கு இருக்கும் மிச்ச சொந்தங்களைக் காணும் ஆவலிலும் வாழ்ந்து வருகிறார்கள். என்று எல்லாம் சுமுகமாகும் எல்லாரும் ஒன்று சேர்வோம் என்பதே அவர்கள் எண்ணமாய் இருக்கிறது.மிகக் குறைவான சம்பளங்களில் முதலாளிகளின் கொடுமைகளை அனுபவித்தும் என்ன செய்வதென தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

தாய்நாட்டில் தாங்கள் உட்பட்ட துயரமான சூழ்நிலைகளில் இருந்து வெளியேற சிலர் யுத்தக் குழுக்களில் சேர்ந்து போராளி ஆகி தன் உயிரைக்கூடத் துறக்கின்றனர். தங்களைத் தாங்களே குண்டுகளாக்கி மாய்த்து., மாய வைக்கும் மனநிலையும் வருகிறது.சிலர் தெரியாமல் அந்தக் குழுக்களுக்கு உதவி தங்கள் வாழ்நாள் பூராவும் சிறைக்கைதியாகவே உயிர் துறக்கின்றனர். எல்லாவற்றையும் விட்டு விலகி வெளிநாடுகளில் செட்டிலான ஈழக் குடும்பப் பெண்களும் தங்கள் தாய் நாட்டில் வாழும் ஆசையோடு தங்களை உயிர்பித்துக் கொண்டிருக்கின்றனர். தாய் மண்., தாய் நாடு., தாய் மொழி என்பதெல்லாம் நம் உயிரோடு கலந்ததாயிற்றே..

இந்த மனநிலைகளில் இருந்து மாற முதலில் புலம் பெயர் பெண்கள் தாங்கள் இருக்கும் நாடுகளில் தங்களை ( தங்கள் தாய் நாட்டில் சிறப்பாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கட்டும் . அது ஒரு பக்கம் ) எஸ்டாபிளிஷ் செய்து கொள்ள வேண்டும். இன்னும் அதிகம் படித்து நல்ல உயர் வேலைகளில் அமர வேண்டும். தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணம் போல வாழ்வு என்ற சொற்றொடர் தமிழில் உண்டு.

நான் சில சுய உதவிக் குழுப் பெண்களோடு பழகி இருக்கிறேன். . அவர்கள் சொல்வார்கள்., தங்கள் சம்மதம் இல்லாமல் ஒரு ஆணால் கூட நெருங்க முடியாது என்று. அதுதான் உண்மை. அப்படி நேர்மைக்கு., மனசாட்சிக்குப் புறம்பான வேலைகளைத் தூக்கி எறியுங்கள். எந்த நிலைமையிலும் உங்களுடைய தனித்துவத்தை இழக்காதீர்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உங்கள் அனுமதி இல்லாமல் பலாத்காரமாக ஏதேனும் நடந்திருந்தால் அதை ஓவர் கம் செய்து வெளிவரப் பாருங்கள். மிகவும் அதிகமான மனச்சிக்கலில் அந்தச் சம்பவம் ஆழ்த்துமானால் அதை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் காண்பித்து சரி செய்து கொள்ளுங்கள். உங்கள் படிப்பை., வேலையை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். நீங்கள் என்னவாக ஆக வேண்டுமோ அவ்வாறாக ஆக முடியும். உங்களை அறியாமல்., உங்கள் சம்மதம் இல்லாமல் நடந்த எதற்குமே நீங்கள் பொறுப்பாளி இல்லை.

யுத்தம் என்பதும் புலம் பெயர்தல் என்பதும் ஒரு மோசமான சம்பவமே. அதை நாம் கட்டுப்படுத்த இயலாத போதும் நம் வாழ்க்கைக்கான குறிக்கோள்களையும் நாம் வாழும் நாட்டையும் முறைகளையும் நம் கட்டுக்குள் வைக்க முடியும். தற்போதெல்லாம். குடும்பத்திற்காகதனியே வெளிநாட்டில் இருந்து சம்பாதிக்கும் பெண்களை சந்திக்க நேருகிறது. இவர்களை குடும்பங்கள் சம்பாதிக்கும் மிஷினாகக் கருதுகிறதோ எனக் கருதும் அளவிற்கு குடும்பங்களுக்குப் பணத்தேவை இருக்கிறது. தன்னுடைய சம்மதம் இல்லாமலே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் அங்கு நிலவிய சூழ்நிலையில் தன் சுய கௌரவம், தன்மானம் காக்க முடியாது என ஊர் திரும்பி சிலோனிலேயே குறைந்த சம்பளத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார். குடும்பதோடு இருக்க முடிகிறது. ஆனால் வருவாய் போதவில்லை. என்ன செய்வது. மானேஜ் செய்துதான் ஆக வேண்டும். இன்னும் சிறப்பான வேலை கிடைக்கும் வரை இதில்தான் செலவுகளைக் கட்டுப்படுத்தி வாழவேண்டும்.

ஈழபெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கற்றுத்தர வேண்டாம். யுத்தம் ஏற்கனவே அதிகம் கற்றுக் கொடுத்துவிட்டது. ஆனால் மனநிம்மதியோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தன் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும். காயம் நேரும் போது வெளியேறவும் கற்க வேண்டும். யோகா., தியானம்., போன்ற பயிற்சிகள் உதவும். மன உறுதி., மனத்திண்மை வேண்டும். எல்லாம் நம் கைக்குள்தான்., காலடியில்தான் என எல்லாவற்றையும் எளிதாகக் கடக்க வேண்டும்.

சாதனை செய்யும் பெண்களுக்கு நேரும் அனைத்தும் இந்தப் புலம்பெயர் பெண்களுக்கும் நேரும். இன்னொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வாழ்க்கையிலும் வெற்றிக் கொடி நாட்ட முடியும். இப்போது அந்த மாதிரி வளரும் பெண் குழந்தைகள் தங்களின் வளர்ச்சிப் பாதையில் முன்னணியில் இருக்கிறார்கள். இதற்குத்தேவை., தன்னம்பிக்கை. எந்த சூழ்நிலையிலும் விடாமுயற்சி., தன்னைக் கடந்து இன்னும் பிரகாசமாக வெளிப்படுதல்., தன்னால் முடியும் என நம்புதல்., சூழ்நிலைகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துதல். எனவே புலம் பெயர் பெண்கள் இன்னும் சாதனைகள் புரிந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே இந்த உலகத்துக்கு சொல்லும் செய்தியாகும்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 அக்டோபர் இரண்டாம் வார உயிரோசையில் வெளியானது.

14 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நல்ல அற்புதமான உபயோகமுள்ள கட்டுரை .நன்றி மேடம்
ராமகிருஷ்ணன் வானவில்

Uma சொன்னது…

புலம் பெயர்ந்த பெண்களின் சுமைகளையும் பிரச்சனைகளையும் அருமையாக பதிவு செய்ததோடு மன அழுத்தங்களிலிருந்து மீளவும் அழகாய் ஆலோசனை தந்துள்ளீர்கள்.பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழும் மற்ற பெண்களுக்கும் உதவியாய் இருக்கும்.நன்றி

தீபிகா(Theepika) சொன்னது…

பொறுப்புணர்வுடனும்..உண்மையான அக்கறையுடனும்..புலம்பெயர் ஈழத்தமிழருக்காய் கரிசனை கொள்கிற உங்கள் எழுத்துக்களுக்கும்..ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.பாராட்டுக்கள்.

எங்கள் தாய் நாட்டில்.. ஈழத்தில் போரின் கோரவடுவால் அதிகம் பாதிக்கப்பட்டு அந்த பெருந்துயரை தொடர்ந்து சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் பெண்களின் வலி சொல்லில் எழுத முடியாதது. கணவனை போருக்கும்..சிறைச்சாலைக்கும்..எங்கேயென தெரியாமலும்..இன்னும் உயிருடன் இருக்கிறாரா..இல்லையா என தெரியாமலும்...இளம் தாய்மார்கள் சமூகத்தில் சுமக்கின்ற கண்ணீ்ர் சிலுவையின் பாரம் கனதியிலும் கனதியானது.
அடுத்த காலடியை எப்படி வைப்பது என தெரியாமல் தடுமாறும் அறுபதாயிரத்துக்கும்(60000) மேற்பட்ட இளம் விதவைகளின் நிலை வலிமிகுந்தது. தொடர்ந்தும் இராணுவப் பேய்கள் குறிவைத்துக் கொண்டிருக்கும் திகில் நிறைந்த பகல்களுக்குள் பதுங்கி இரவுகளில் விழித்தபடி கூடாரங்களுக்குள் பிரார்த்தனை செய்த கொண்டிருக்கும் இளம் சகோதரிகளின் கொடுமை மிகு வாழ்வு உலகமறியாதது. அப்பா எங்கே எனகேட்கும் எந்த விபரமுமறியாத குழந்தைகளின் வினாக்களுக்கு பதில் சொல்லமுடியாமல் கண்ணீரில் கரையும் எங்கள் சகோதரிகளுக்கு நம்பிக்கையும்..அன்பும்...உதவிகளும் வேண்டும்.அவர்களை தேடிப்போய் அந்த உதவிகளை செய்ய எல்லோரும் முன்வர வேண்டும். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ”நாங்கள் இருக்கிறோம்..நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கையோடு காய்களை நகர்த்துங்கள்” என்று அறிவுமதி எழுதி போராட்டத்தக்கு உற்சாகம் கொடுத்த அந்த வரியில் கோர்த்த பாடலை ஈழத்தின் தெருக்களில் போராட்டத்தின் நடுவே நின்று நானும் கேட்டிருக்கின்றேன். ஆனால்..அந்த வரிகள் இன்று நமக்கு அதைவிட அதிகமாய் தேவைப்படுகிறது சகோதரி. ஆம்..தமிழக மக்களின் அன்பும்..ஆதரவும்..எங்கள் ஈழமக்களுக்கு நிறையவே தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கதையை சுமந்தபடி அங்கு காத்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் அந்த கதைகளை..அவர்களின் மனசின் பாரங்களை இறக்கி வைக்க உதவியாய் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் வலியை அவர்கள் சொல்ல கேட்கின்ற செவிகளேனும் வேண்டும்.
கீழ்வரும் இணைப்பு ஆயிரம் சகோதரிகளின் கதைக்கான ஒரு துளி.படித்துப் பாருங்கள்.
http://mullaimann.blogspot.in/2012_03_01_archive.html

ஹுஸைனம்மா சொன்னது…

நல்ல கட்டுரை அக்கா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கட்டுரை... வாழ்த்துக்கள்... நன்றி...

ஹேமா சொன்னது…

தேனக்கா வணக்கம்.நீங்கள் நிறையவே எழுதியதுக்கு நான் ஒற்றைவரியில் சொல்றதெண்டால் அழகான நிறைவான புரிதல் உங்களிடம்.அவ்வளவே சொல்லுவன்.

எழுத்து என்கிற ஒன்றில்லையென்றால் என்றோ தொலைந்திருப்போம் புலம்பெயர் தேசத்திலும்.இப்போதுகூட முகப்புத்தகத்தில் மனதில் பட்டதைக் கிறுக்கினேன்.ஒரு கருத்து வந்தது.பழையதை மற.இப்போ கிடைக்கும் சந்தோஷத்தோடு வாழப்பாரெண்டு....எப்படி எப்படி?எம் மக்கள் எம்மினம்....தொலைந்த சந்தோஷங்கள்,இழப்புகள்...இன்னும் கிடைக்காத நிம்மதி.காயமில்லமல் வதைபடும் என் மக்கள்.எதை மறந்து எப்படி வாழ....நல்ல புரிதல் தேனக்கா உங்களுக்கு.நன்றி !

Manavalan A. சொன்னது…

A very good motivation article. Also tried to keep them warm in their endeavors.

Manavalan A. சொன்னது…

A very good motivational article. Also tried to keep them warm in their endeavours.

Manavalan A. சொன்னது…

A very good motivational article.

Manavalan A. சொன்னது…

A very good motivational article.

Manavalan A. சொன்னது…

A very good motivational article.

Manavalan A. சொன்னது…

A very good motivational article.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராம்

நன்றி உமா

நன்றி தீபிகா படித்தேன்..:(

நன்றி ஹுசைனம்மா

நன்றி தனபால்

நன்றி ஹேமா

நன்றி மணவாளன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...