திங்கள், 28 பிப்ரவரி, 2011

பராமரிப்பு..


கிணற்று உறைகளுக்குள்
காம்பவுண்டுச் சுவர்களில்
கோயில் கோபுரங்களில்
மேங்கோப்புகளில்

தேவையற்றதெல்லாம்
செழித்து வளர்கிறது..
தண்ணீர் பூச்சி மருந்து
உரம் எதுவும் இல்லாமல்..

களை களையென
களைந்து களைத்து
அமிலம் ஊற்றினாலும்
கலைவதில்லை..

பாத்திகட்டி மண் அடித்து
இயற்கை உரம் போட்டாலும்
இளைத்துக் கிடக்கிறது சவலையாய்..
பார்த்துப் பார்த்துப் பராமரிக்கும் செடி..

டிஸ்கி:- பராமரிப்பு என்ற தலைப்பில் இந்தக் கவிதை 24. 02. 2011 யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது..

சனி, 26 பிப்ரவரி, 2011

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி..?

தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி அக்கா.. ? இது எனக்கு முகப் புத்தகத்தில் உள்டப்பியில் வந்த கேள்வி.. பார்த்தவுடன் அரண்டு போய் விட்டேன்..

என்ன இது ? எதற்காக எனப் புரியவில்லை.. இந்த மனநிலை வரக் காரணம் என்ன..? தனிமையா.. வியாபார போட்டியா..? தொழில் நஷ்டமா.? குடும்ப தகராறா.. ? காதல் தோல்வியா.. என்னவென்று தெரியவில்லை..எதாக இருந்தாலும் பேசி பகிர்ந்து தீர்வைத் தேட வேண்டுமே தவிர எதற்கு இந்த கோழைத்தனமான முயற்சி..

ஆனால் மன அழுத்தம் கூடின நிலை கட்டாயம் பார்க்கப்படவேண்டும்.. வேலைப்பளு.. , எதையும் சரிவர செய்ய முடியாத நிலை., நிலை கொள்ளாமை., வெறுப்பு., விரக்தி போன்றவை சரி செய்யக்கூடியவை.

எத்தனையோ கோடி உயிரணுக்களில் ஒற்றை உயிரணுவாய் நாம் மட்டுமே தப்பி தாயிடம் புகுந்து உயிர்த்துள்ளோம். எத்தனை போராடி இத்தனை வயது வரை வளர்ந்திருப்போம்.. திடீரென இப்படி எல்லாவற்றையும் விட்டு விட்டு போவது என்பது பிரச்சனையின் தீவிரமாய் இருக்கலாம். ஆனால் ஒரு கணமாவது யோசிக்க வேண்டும்.. இதற்கெல்லாம் மாற்று என்ன என்ன செய்யலாம் என.

பணப்பிரச்சனை., கடன் பிரச்சனை என்றால் தான் மட்டுமில்லாமல் மொத்தக் குடும்பத்தையுமே விஷக் குளிர்பானம் கொடுத்துவிட்டு தானும் குடித்து மரிப்பது என்பது சரியான தீர்வல்ல.

முதலில் உங்கள் குடும்பத்தரோடு மனம் விட்டுப் பேசுங்கள். நிலைமை எடுத்து சொல்லுங்கள். அவர்கள் உதவியோடு பிரச்ச்னையிலிருந்து வெளியேறுங்கள். பல வருடங்கள் உழைத்தும் நாம் இப்படியே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமே என எண்ணாமல் உண்மையான உழைப்புக்கு என்றாவது பலன் கிடைக்கும் என எண்ணுங்கள்.

நல்ல புத்தகங்கள்., நல்ல பொழுதுபோக்குகள்., நல்ல நண்பர்கள் நம்மை புதுப்பிக்கிறார்கள். இவற்றை கைக் கொள்ளுங்கள். மனம் சோகமுறும் போதெல்லாம் பிடித்த இசையை கேளுங்கள். யாருடனாவது உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டுக் கூறுங்கள்.. தீர்வு கிடைக்கா விட்டாலும் கொஞ்சம் தெளிவாவது கிடைக்கும்.

ஒரு பேப்பர் எடுத்து உங்கள் பிரச்சனைகளை எழுதி பாருங்கள் .. அனேகமாக அனைத்தும் சரி செய்யப் படக்கூடியவையே.. முயற்சியும் காலமும் பயிற்சியும் தேவைப்படும். அவ்வளவுதான்.

உங்களுக்காக என தினமும் அல்லது வார இறுதி நாட்களில் நேரம் ஒதுக்குங்கள்.. நான் ஏன் இப்படி இருக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.. இதற்கு முடிவே இல்லையா என நெகடிவ்வாக எண்ணாமல்.. நான் இன்னும் மேலே முன்னேறுவேன்., எனக்கும் காலம் வரும். ஜெயிப்பேன்., இதல்லாம் தற்காலிகம்தான்.. இதுவும் கடந்து போகும் என பாசிடிவாக நினையுங்கள்.

தற்கொ்லை எண்ணங்கள் தீவிரப் படும்போது ஒரு டாக்டரைப் பார்ப்பது அவசியம். நிலைமையின் தீவிரம் குறைந்து மனம் சமனப்படும் வரை முயற்சி எடுத்து வெளியில் வரவேண்டும்.

வேறு உறவினருடன் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள., வெளிப்படுத்த விரும்பாவிட்டாலும்.. இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் இதை நீக்க நீங்கள் இந்த எண்களுக்கு டயல் செய்யலாம்..

இதற்காக ஜஸ்ட் டயல் மூலம் நான் சேகரித்த எண்கள்.

ஜஸ்ட் டயல் எண் :- 044 26444444.

1. INTERNATIONAL ASSOCIATION FOR SUICIDE PREVENTION :- 04428229635
NUNGAMBAKKAM HIGH ROAD.,
NUNGAMBAKKAM ,
CHENNAI .- 600 034.

2. FOR PRIVACY LOG ON TO http://privacy.justdial.com/.

3. SNEHA SUICIDE PREVENTION HELPLINE :- 044 24640050
04424640060.
NO. 11, NEAR CORPORATION COMMUNITY HALL.,
PARK VIEW ROAD.,
R.A. PURAM,
CHENNAI :- 600 028.

4. JEEVAN SUICIDE PREVENTION HOTLINE,
04426564444,
04426564333,
04426565452.
NO171, GOLDEN GEORGE NAGAR,
NERKUNDRAM,
AMBIKA STREET,
KOYAMBEDU.
CENNAI - 600 107.

வாழ்வது ஒரு முறை.. எவ்வளவு துயரம் வந்தாலும் போராடி வாழ்ந்து பார்ப்பதுதான் மனிதருக்கு அழகு.. விட்டு விட்டு ஓடுவதல்ல.. எனவே ஒரு முறை தீர யோசித்து தீர்வை கண்டுபிடித்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு வாழுங்கள்..

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தூண்கள்.. பூமிப்புழு..



தூண்கள்..:-

****************

எத்தனை முறை

ஓடிப்பிடித்து

ஒளிந்த தூண்கள்..


கட்டிப் பிடித்துச்சுற்றி

சாக்பீசால் எழுதி.,


கம்பால் அடித்து

பாடம் நடத்தி.,


கல்நாகங்கள்

தலை மீதேறி.,


பட்டியக்கல் விட்டு

பட்டியக்கல் நோக்கி ஓடி.,


கல்லா மண்ணா

விளையாடிய கால்தடங்களை

ஒளித்து வைக்கிறது..


தடவிப் பார்க்கும் நான்

இப்போது ஒளிந்து கொள்ள

முடியாத உருவத்தோடு..

==============================


பூமிப்புழு..:-

****************

எப்போதும் உண்கிறது

பழுத்து உதிர்ந்த இலைகளையும்., சருகுகளையும்.,

சில சமயம் வெட்டுப்பட்ட துளிர்களையும்..



புதன், 23 பிப்ரவரி, 2011

நானும் ஒரு ப்லாகர்தாம்லேய்..


எப்ப பார்த்தாலும் நடுநிலைமையா எழுதி போரடிக்குது.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு சொல்லிட்டு என் ப்லாக் பக்கம் கொஞ்ச நாள் வர்றவங்க கொஞ்ச நாள்ல கார சார பதிவு பக்கம் போயிடுறாங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்னு பார்த்தா ஒருத்தங்க.. லேய் நானும் ஒரு ரவுடிதாம்லேன்னு தன் இடத்தை நிரூபிச்சவங்க.. சரி அவங்க கூட கூட்டணியா இன்னும் ரெண்டு பேரை சேர்த்துகிட்டா கொஞ்சம் கித்தாய்ப்பா இருக்கும்னு இன்னும் ரெண்டு பேரு.. மொத்தம் மூணு பேரு.. சரி நம்ம ரேஞ்சுக்கு இவங்கள எதிர்த்து எதிர் இடுகை போட்டு ஃபேமஸ் ஆகிடலாம்னு.. வேற யாரையாவது சொல்லி கொத்துப்பரோட்டாவாவோ., ரத்தக்களறியாவோ ஆனா ப்லாக் எல்லாம் ஷட்டர் போட வேண்டியதுதான்னு இவங்கள தேர்ந்தெடுத்தேன்.

என்னம்மா இது உப்பு சப்பில்லாம.. ஒரு மொக்கை பதிவு.. யாரையாவது திட்டி எழுதி இருக்கீங்களான்னு என் பசங்களும்., சர்ச்சையில வாய் கொப்புளிச்சு இருக்கீங்களா... நீங்களாம் ப்லாகரா இருக்குறதே வேஸ்ட்னும் என் அன்புத் தோழி வசுவின் கணவர்., முகப்புத்த நண்பர் செந்தில் வாசனும் சீண்டிவிட.. இயல்பான தமிழ் மறத்தி குணம் வந்து நாம தெகிரியமா செஞ்ச முதல் எதிர் இடுகை இது.. ( கொஞ்சம் நடுங்குதுன்னாலும் ஸ்டடியா நின்னு சமாளிச்சுற வேண்டியதுதான்..)

ஏதோ நாமளும் ஒரு பத்ரிக்கையில ஃப்ரீலான்சரா இருக்கோமேன்னு படமெடுக்குறது. பாம்பு இல்லங்க நானு.. காமிராவுலதான். அதுல ஆனா., ஆவன்னா கூட தெரியாது. லைட்ஸ் ., காமிரா., ஆக்‌ஷன்ல இருக்குறத சுட வேண்டியது. சுட்டது நல்லா இருக்கா தீஞ்சு போய் இருக்கான்னு கூட பார்க்காம பத்ரிக்கைக்கு அனுப்புறது., ப்லாக்குல போடுறது., ஃபேஸ் புக்குல போடுறதுன்னு நாம உண்டு நம்ம இம்சை உண்டுன்னு போயிக்கிட்டு இருந்தா நேத்து ஒருத்தங்க மலை எல்லாம் ஓடுற காருல இருந்து சுட்டுகிட்டு வந்து போட்டு இருக்காங்க பாருங்க சூப்பரா இருந்துச்சு.. சூப்பர் மேன் கூட இந்த மாதிரி பறந்துகிட்டே பர்ஃபெக்டா சுட முடியாது.. இதுல இவங்க காமிரா உமன் மாதிரி வேற அற்புதமா எடுப்பாங்களா..( மிஷ்கின்., சேரன் கவனத்துக்கு).. ஸ்டில் போட்டோகிராஃபி அற்புதமா செய்வாங்க.. சரி நாமளும் சூப்பரா ரெண்டு படம் மூவிங்ல எடுத்து பேர் வாங்கிறனும்னு ஒரு ஆசை.. ஆசை யாரை விட்டது.. அது இப்போ உங்களைதான் விபரீதமா இந்த இடுகையில கடிக்குது..

சரின்னு காமிராவை தூக்கிகிட்டு ..( ஒண்ணும் பெரிசில்லங்க சும்மா LUMIX 10 MEGA PIXEL தான்) ஒரு பேட்டி ப்ளீஸ்னு ஒரு இடத்துக்கு போனமா. வர்ற வழியெல்லாம் மலை வரலை.. சிலையா வந்துச்சு. அண்ணல்., கண்ணகி., எம்ஜியார்., அண்ணா., பிடி தியாகராஜர் .. சரி நமக்கு வாய்ச்சதை எடு்ப்போம்னு எடுக்க ஆரம்பிச்சா முதல் கவர் .,அப்புறம் இன்னொரு கவர்லருந்து காமிராவை எடுக்கும் போது ஒரு சிலை கடந்துருச்சு. அடுத்த சிலை தங்க கலர்ல தெரிய ஆரம்பிக்கும் போதே ஒரு ஆள் ரோடை கிராஸ் செய்ய அந்த ஆள் மறைச்சு எடுக்க முடியலை.. அடுத்த சிலை வந்த போது காமிராவை ஆன் பண்ணா அது போட்டோவை பார்க்கும் ஸ்டேடசில் இருக்கு. அதை எடுக்கும் நிலைக்கு ஆன் பண்ணி மாத்தும் போது அது போயிருச்சு.. போஸ் கொடுத்தும் விட்டுட்டியே மக்(கா) குங்குற மாதிரி.
விடாது கருப்பு மாதிரி அடுத்த சிலைக்கு வெயிட்டிங் .. ஏன் சிலைன்னா அதுதானே மலை மாதிரி அசையாது.. இதை போட்டா யாராவது அதுக்கு பூர்வபுராணம் எல்லாம் சொல்வாங்கல்லன்னு நப்பாசைதான். அடுத்த சிலை வந்த போது கண்ணகி . நாம எடுக்க முயற்சி பண்ணும்போதெல்லாம் எல்லாரும் என்ன பண்ணுறாங்கன்னு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஏதோ ஃபேமஸ் ஃபோட்டோகிராஃபர் மாதிரி போஸெல்லாம் பார்த்து சுட்டு முடிக்கிறதுக்குள்ள கை மட்டும்தாம் கம்பி கேப்ல கிடைச்சுது.. இதுதான் கண்ணகின்னு நான் கையை மட்டும் காமிச்சா நம்பவா போறீங்க.. சரி விடுங்க மக்கா. எதுக்கு எனக்காக வருத்தப் படுறீங்க..

ஸ்டாப் தெரியாம எங்காவது போயிறப் போறம்னு கண்டக்டர் கிட்ட சொல்லி வச்சமா.. அவர் பக்கத்துல டிக்கட் கொடுக்க வரும் போதெல்லாம் ஸ்டாப்போன்னு நினைச்சு நினைச்சு பாதி பொழுது போயிருச்சு. அதுவேற ஒரு காரணம். சரியா ரன்னிங்கல எடுக்க முடியாததுக்கு..
சரின்னு போயே போய் சேர்ந்தாச்சு நம்ம பேட்டி ஸ்பாட்டுக்கு.. சரி போனா போகுது போன்னு நாம போன இடத்துல ஒரே ஒரு சிலை நம்மை பார்த்து எடுக்குறியா இல்லையான்னு கத்தி கபடாவோட போஸ் கொடுத்துச்சா.. நாம போன வேலையை மறந்துட்டு சுத்தி சுத்தி போட்டோ எடுத்தோம்ல.. ரன்னிங்ல. பொழச்சுட்டுப் போன்னு போஸ் கொடுத்த சிலைக்கு நன்னி நன்னி நன்னி.. சரி இது என்னன்னு யாராவது விக்கி பீடியா பார்த்து லிங்க் கொடுத்தாலும் சந்தோஷந்தான்..

அப்புறம் சிலை அழகா கலை அழகான்னு எல்லாம் நாம கேக்க மாட்டோம் .. அங்க ஒரு ஆளு பனை மரத்து மேலே மேகத்துல மறைஞ்சு வந்தாலும் நான் தான் அழகுன்னு சொல்லிக்கிறாப்புல.. அப்புறம் நாமளும் கேக்கப் போயி யாராவது கலைன்னு பேர் உள்ள ஆள் வந்து எல்லாரும் என்னதான் அழகுன்னு சொல்றாங்கன்னு சொல்லிப்புடாம..


நன்றி ஹுசைனம்மா., ராமலெக்ஷ்மி., கதிர்..:))

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பங்குச் சந்தை முதலீடு ஆலோசனை (2) டீமேட் அக்கவுண்ட்.


நம்முடைய பணத்தை வங்கியின் ஃபிக்சட் டெப்பாசிட்., ரெக்கரிங் டெப்பாசிட்., அஞ்சலக முதலீடு., இன்ஷுயூரன்ஸ்., ரியல் எஸ்டேட்., தங்கம்., வெள்ளி., பங்குச் சந்தை., பாண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

இதில் பங்குச் சந்தையில் நாம் முதலீடு செய்யும் பணத்தில் 5 % ஆவது ஒரு மாதத்தில் லாபமடையலாம் என ஒரு பங்குச் சந்தை நிபுணர் கூறினார். இது சரியான முறையில் ட்ரேடிங் செய்யும் பங்குகளுக்கானது.

தேசிய பங்குச் சந்தை (NSE) ., மும்பை பங்குச் சந்தை (BSE) இவற்றில் ட்ரேடிங் செய்யலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முதலில் டீமேட் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும். இதற்கென்று செபி பதிவு பெற்ற தரகர்கள் இருக்கிறார்கள்.

இந்த பங்குச் சந்தை அலுவலகத்தில் சென்று நாம் ஷேர் செய்வதற்காக டீமேட் ( DEMAT ) அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முதலில் நமக்கு ஷேர்களுக்கு ஒரு ட்ரேடிங் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். நாம் கொடுக்கும் பணத்தை வைத்துதான் ட்ரேடிங் ஃபண்டை ரிலீஸ் செய்து பங்குகளை வாங்கி டீமேட் அக்கவுண்டுக்கு அனுப்புவார்கள்.. நமக்கு தேவையான போது பங்குகளை விற்று டீமேட் அக்கவுண்டிலிருந்து எடுத்து சந்தைக்குக் கொடுத்து பிறகு பணம் சந்தையிலிருந்து வந்தவுடன் செக்காக பெற்றுக் கொள்ளலாம்.

டீமேட் அக்கவுண்ட் ஆரம்பிக்க பான் கார்டு., ரேஷன் கார்டு நகல்களை கொடுக்க வேண்டும். மற்றும் அவர்கள் கொடுக்கும் ஃபார்ம்களை நிரப்பி., நம் வங்கிக் கணக்கையும் கொடுக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு கொடுத்து ., டீமேட் அக்கவுண்டும்., ட்ரேடிங் அக்கவுண்டும் ஓபன் ஆகிவிட்டால் நாம் முதலில் கொடுக்கும் செக்கை ரிலீஸ் செய்து நம் அக்கவுண்டில் நாம் கேட்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவார்கள். இதில் வங்கி அக்கவுண்ட் என்பது பணத்தை காசோலையாகத்தான் பெறவேண்டும் என்பதால். டீமேட் அக்கவுண்ட் என்பது நம் பங்குகளை வாங்கி வைப்பது . ட்ரேடிங் அக்கவுண்ட் என்பது பங்குகளை வாங்கி விற்பது.

பங்குகள் வாங்க நாம் ஃபோன் மூலம் ஆர்டர் கொடுக்கலாம். டிவி பார்த்தும்., எகனாமிக் டைம்ஸ்., காப்பிடல் மார்க்கெட் பார்த்தும்., ஆர்டர் கொடுக்கலாம். என்.டி.டி.வி., சி.என்.பி.சி போன்ற தொலைக் காட்சிகளில் கம்பெனிகளின் ஷேர் விலை ஏற்ற இறக்கங்கள் ஏ முதல் இஸட் வரை ஓடிக் கொண்டே இருக்கும். அதைப் பார்த்து நமக்கு வேண்டிய பங்குகளை வாங்கலாம். ஏறிய பின் விற்று விட்டு அடுத்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம். பணம் தேவை என்றால் நம் அக்கவுண்டில் இருக்கும் தொகைக்கேற்ப ., தேவைக்கேற்ப செக்காக பெற்று நம் வங்கிக் கணக்கில் மாற்றி பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம் பங்குகள்., இண்டக்ஸ்கள்., கமாடிடீஸ் ., கோல்ட் ., சில்வர் ஃப்யூச்சர்ஸ் எல்லாம் வாங்கலாம்.

இந்த முறையில் வங்கி மற்றும் நிறுவனங்களின் பாண்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நம் ஷேர் புரோக்கரிடம் சொல்லி ஃபார்ம் வாங்கி ஃபில் செய்து செக் கொடுத்தால் அவர் அந்த பாண்டுகளை மற்றும் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்க்ஸ்களை., நமக்காக வாங்கிக் கொடுப்பார். இது குறிப்பிட்ட காலம் வரை வைத்து பலன் பெறக் கூடியதாக இருக்கும். மெச்சூரிட்டி சமயம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து சிலசமயம் மாறுபாடு அடையலாம்.

டிஸ்கி:- இந்த பாண்டுகளை எங்கு வாங்குவது என சகோ சசி பின்னூட்டத்தில் கேட்டதால் இந்த விவரங்கள்..:))

திங்கள், 21 பிப்ரவரி, 2011

பங்குச் சந்தை முதலீடு.. ஆலோசனை.1.(பாண்டுகள்)

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பாண்டுகள் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்க்ஸ் ஓபன் ஆகுது. இது AAA ரேட்டட் SBI BONDS . இந்த ஆஃபர் 28 ஃபிப்ரவரியோட முடியுது.. இதன் வட்டி விகிதம் 9.95 பர்சண்டேஜ் ஒரு வருடத்துக்கு. இது தேசிய பங்குச் சந்தையிலும்., சென்னை பங்குச்சந்தையிலும் லிஸ்டட் ஆகப்போகுது.. உங்க பணத்தில் கொஞ்சத்தை இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாம். இது வங்கியின் சாதாரண வட்டி விகிதத்தைவிட அதிகமா இருக்கு. சென்ற முறை நான் வங்கிகளுக்கு சென்ற போது 8.25 % தான் அதிகபட்சம். சிறிதை பாண்டுகளில் அதுவும் முதல் பொதுமைப்படுத்தபட்ட சந்தை வாய்ப்புகளில் பெற்று பயனடையுங்கள்.

புத்தகக் காட்டில் சிங்கதோடும்., சிறுத்தைகளோடும்..:))

எங்கள் அன்பிற்குரிய பாரதி மணி ஐயாவை முதன் முதலில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்தான் சந்தித்தேன்.. அனுபவங்களின் பெருங்கடல்.. சரளமான கிண்டலுக்கு சொந்தக்காரர். மிகவும் மதிக்கும் எழுத்தாளர் க. நா. சு அவர்களின் மருமகன். இவரின் புத்தகம் பல நேரங்களில் பல மனிதர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.. சமீபத்திய பகிர்வு.. நீரா ராடியாவும் டெல்லியில் நான் செய்யாத திருகுதாளங்களும்.. கட்டாயம் வாசியுங்கள்.







நேற்று ஒரு பெண்கள் மாத இதழுக்காக சென்னையில் இருக்கும் பெண்வலைப்பதிவர்களை ஒன்றிணைத்து கருத்துரையாடி மகிழ முடிந்தது. இடம் கொடுத்து உதவிய டிஸ்கவரி புக் பேலஸின் அன்பு சகோதரர்கள் வேடியப்பன்., சஞ்சய்க்கு நன்றி.. அது தாய் வீடு போல.. மிக சௌஜன்யமாக சென்று வர முடிகிறது.. 8 பெண் வலைப்பதிவர்கள் சந்தித்தோம்.. மிக அருமையான கருத்துக்கள் பகிரப்பட்டன.. அனைத்தும் மார்ச் மாத இதழ் வெளிவந்தபின் பகிர உத்தேசம்.. வந்து கலந்துகொண்ட தோழியருக்கு நன்றி..:))

சனி, 19 பிப்ரவரி, 2011

வாளோர் ஆடும் அமலை.. ட்ராட்ஸ்கி மருதுவின் புத்தக வெளியீடு..

முகப்புத்தகத்தில் நண்பர்கள் ஐயப்ப மாதவன் மற்றும் கா முகுந்த் தேவநேயப்பாவாணர் அரங்கில் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள்.. அதற்கு அமுதரசன் கீற்றுவில் போட்டிருந்த அழைப்பிதழும் காணவே அருமையாய் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்தோடு இருந்தது.. ஜெயராஜ்., மாருதி., ம.செ., வர்ணம்., கோபுலு., ராமு., இந்த வரிசையில் நம் மனம் கவர்ந்தவர் ட்ராட்ஸ்கி மருது.. இன்னும் வித்யாசம் என்னவென்றால் ஒரே ஓவியத்துள் இரண்டு படிமானங்களை காணலாம்.. கதைக்காக ஓவியமா., ஓவியத்துக்காக கதையா என ரசித்தது அநேகம் இருக்கும். ஒரு நாற்காலியும் மனிதனும் பின்னிப் பிணைந்து ஒரு கதைக்கு பார்த்த ஓவியம் இன்னும் மறக்க இயலாதது.. சிலர்தான் இப்படி தங்கள் ஸ்டைலால்., பாணியால் ஈர்க்கிறார்கள்.. அதில் இவர் பாணி இன்னும் வித்யாசமானது. கோட்டோவியங்களில் இவ்வளவு உணர்வுபூர்வமான., எழுச்சியான படங்களை காண்பது அரிது..

ச. விசயலெட்சுமி தொகுத்து வழங்க விழா ஆரம்பித்தது. நமக்கு பிடித்த எழுத்தாளர் பிரபஞ்சன் ( இவரின் எழுத்துக்களை மிக விரும்பி வாசித்திருக்கிறேன்)., நண்பர்., டைரக்டர் மிஷ்கின்., மற்றும் டைரக்டர் ஜனநாதன்., அறிவுமதி., நாசர்., அனைவரும் பங்கு கொள்ள மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் நாகநாதன் வெளியிட்டார். இது தடாகத்தின் முதல் வெளியீடு. ட்ராட்ஸ்கி மருது பேசும் போது தன் தந்தை சிறுவயதில் படங்களோடு கூடிய புத்தகங்களை அறிமுகப்படுத்தியதுதான் இன்று தான் வரையக் காரணம் என்றும்., தந்தை தற்போது முதல் புத்தகம் வெளியிடும் இந்த சூழலில் இல்லாவிட்டாலும் வந்திருந்த அனைவரையும் தன் தந்தையின் பிரதிகளாக பார்ப்பதாக சொன்னார். மன்னர்கள் குறித்து தன்னை ஈழத்தமிழ் நண்பர்கள் வரைய சொன்னதாக கூறினார். ஜெர்மனியின் ஒருங்கிணைப்பாளர் வரதராசன் தான் இவ்வாறு வரைய பெரும் ஊக்கமூட்டியதாக சொன்னார்..

பிரபஞ்சனின் பேச்சு மிக அற்புதமாக இருந்தது. அவர் இது மருதுவின் 20 ஆண்டுகால உழைப்பின் பயன் என்று சொன்னார். வெறும் படங்களாக மட்டுமில்லாது இது 45 தமிழ் மன்னர்கள் பற்றிய ஆவணம் போல வருங்காலதலைமுறைக்கு பயன்படும் என சொன்னார்.பழங்கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் பற்றிக் கூறும் போது மன்னர்கள் மக்களோடு கலந்து அவர்களும் மக்களைப்போலவே இருந்ததாக யுவான்சுவாங்க் என்ற சீன யாத்ரிகர் தன் பயண நூலில் பதிந்துள்ளதாக சொன்னார். மூன்று தலைநகரங்கள் சோழர்களுக்கு இருந்ததாகவும் அவை திருவாரூர்., பூம்புகார்., உறையூர் எனவும் கூறினார். மனுநீதி சோழனின் பெயர் மன்பதை சோழன் எனவும் மன்பதை என்றால் உலகம் ., அதைக் காத்து நீதி வழங்கியதால் மனுநீதி சோழன் எனவும் கூறினார். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு பற்றி கூறினார். களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல எனவும் சொன்னார். இந்த இரு மன்னர்கள் மட்டுமில்லாது மற்ற மன்னர்கள் அனைவரையும் மண்ணின் மரபும் பண்பாடும் கெடாது மக்களோடு மக்களாக வாழ்ந்த மாண்பும் அதை ட்ராட்ஸ்கி மருது ஓவியமாக பதிந்தது குறித்தும் சொன்னார். இதை மருது புத்தகங்கள்., கோயில் ஓவியங்கள் மற்றும் பல இடங்களுக்கு சென்று நன்கு தெரிந்து பின் உருவாக்கியதாக சொன்னார்.
புத்தகத்தில் மன்னர்களின் ஓவியங்களோடு கூட அவர்களைப்பற்றிய சரித்திரமும் சுவாரசியமாக பகிரப்பட்டிருப்பதாக கூறினார். புத்தங்கங்களை திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன் வெளியிட அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.
நண்பர் மிஷ்கினும்., ஜனநாதனும் பேசுமுன்பே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. முகப்புத்தக நண்பர் ஜீவாவை பார்த்தேன். அவர் ட்ராட்ஸ்கி மருதுவின் தோழர் என்பதால் வந்திருந்தார். எனக்கு அவரை பார்ப்போம் என்று தெரியாததால் சர்ப்ரைசாக இருந்தது. இவரும் நன்கு வரையக்கூடியவர். இவர் ஜீவாஆர்டிஸ்ட் என்ற வலைத்தளம் வைத்திருக்கிறார். இவரின் திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலையை நான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். இந்த புத்தகம் விலை ரூ 300/- . பார்க்கவே சிறப்பாய் இருக்கிறது. வாளோர் ஆடும் அமலை என்றால் வாகை மாலை சூடி வென்ற அரசர்கள் பின் அமலை மாலை சூடி கொண்டாடுவார்களாம் என மிஷ்கின் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். !! வாழ்த்துக்கள் ட்ராட்ஸ்கி மருது., மற்றும் தடாகம். !!!

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோழிப்பண்ணை..


கட்டமிட்ட கூண்டுக்குள்
கூட்டமாய் இரைதின்று
சதை வளர்த்திக்
காத்திருக்கின்றன.,
கத்திகளை எதிர்நோக்கி
எந்நேரமும் தன்முறைக்காய்..


டிஸ்கி:-
இந்தக் கவிதை 18.1. 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வள்ளுவர் கோட்டத்தில் கலைமாமணி விருது விழாவுக்கு முன்..

வள்ளுவர் கோட்டம் நுழைவாயிலின் முன்..
பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறாங்க..

இளம் கலைஞர்கள் அநேகம்..

மேளக் கலைஞர்களும் வெயிட்டிங்.. கலைஞருக்காக..

கரகம் சுமந்த பச்சைக் கிளிகள்..

திருவிழாக்களிலும் தேரோட்டங்களிலும் ஒற்றை ஆள் ஆடப் பார்த்தது.. இப்போது கண்கள் குளிர பலரும் அழகாய் ஆடினார்கள்..

பொய்க்கால் குதிரை.. குருதையில மருதைக்குப் போகலாம்..:))

இந்தக் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை டெல்லியில் நேருவின் முன் ஆடி விருது வாங்கிய பெங்களூர் கலைஞர்கள் ( கணவன் மனைவி ) இருக்கிறார்கள். அவர்கள் மன்னார்குடி பாமினி உரமணி ஆலையில் வேலை செய்த பக்கத்து வீட்டு இன்ஜினியர் அங்கிளின் மாமனார் மாமியார். !!!

இது உருமி மேளமா..

அழகாக ஆட்டமிட்ட ரெட்டைக் குதிரைகள்..
சீக்கிரம் போ என் செல்லப் புரவியே.. செல்லக்கிளி காத்திருப்பா..

பாண்ட்..??
அரிதாரம் சுமந்த அர்சுன மகராசா..
மகராசா நடக்கும் போது பின் தொடர்ந்து எடுத்தது..
தெருக்கூத்துக் கலைஞர்கள்..

வேட்டைக்கு வந்து கோட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி..

தந்தனத்தோம் என்று சொல்லியே..

புலி வருது..புலி வருது..
வெள்ளம் வந்தாலும் தப்பிச்சுருவோம்..
அந்தரத்தில் ஆட்டம்.

எதையும் பற்(று)றிக் கொள்ளாமல் சமாளிக்கிறோம் .. பாருங்க..

புலி மேல புலி..

கிலி வேண்டாம் புலிதான்.. கடிக்காது..
இன்னும் எத்தனை முறை பல்டி அடிச்சா அந்த உயரத்தை எட்டலாம் சொல்லுங்க மக்களே..
அதாரு அங்கே.. இந்த மகராசாவோட மகாராணி நான்தான்..

ALL I WANNA SAY THAT THEY DONT REALLY CARE ABOUT US.. இந்த மைக்கேல் ஜாக்சன் பாட்டின் ம்யூசிக் நம்ம பறைதான்.. மச்சி..

அக்கா நீயும் வர்றியா..
அடுத்த சுற்றிலும் இதே பாண்ட்..
ரெடியா இருங்க.. சங்கமம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நம்ம பெண்ணுக தஞ்சை சின்னப்பொன்னு குமாரும்., பி. முருகேஸ்வரியும்., எஸ். மாலதியும் இன்னைக்கு கலைமாமணி விருது வாங்குறாங்க.. பார்க்கணுமப்பு..
காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் திருவிழாவில் எப்போதோ பார்த்தது.. கியாஸ் லைட்டில் ., மிட்நைட்டில்.. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில் திருவிழாவின் போதும். வாழைப்பழம் வைத்து வாளால் துண்டாக்குதல்.. கரகத்தோடு படுத்தமாதிரி சுற்றிச் சுழலல் என.. எங்கள் கல்லுரியில் மகாராணி என்ற அக்கா இந்த மாதிரி அழகாக கரகம் எடுத்து ஆடுவார்.. ஆடிக்கொண்டே புடவை கட்டிக் காண்பிப்பார். ரூபாய் நோட்டை கண் இமைகளில் எடுத்தல்.. ஊசியை கண் இமைகளில் மடக்கி எடுத்தல் என.. மலரும் நினைவுகள் மலர்ந்து விட்டது விதம் விதமாய் பூத்துக் கிடந்த இவர்களைப் பார்த்து..

சீக்கிரம் ரெடியாகுங்க.. கலைமாமணி விருது வாங்கப் போற நம்ம மக்கள் க. கருப்பண்ணன்., மு. இளங்கோவன்., கே.ஏ. பாண்டியன்., எம். திருச்செல்வம்., சிவகங்கை வி. நாகு., டி. சேகர்., செ. முத்துராமலிங்கம்., எல். ஜான்பாலா .. இவங்க எல்லாரையும் வரவேற்கணும்.. சபையேறிய மக்களுக்கு நம்ம சார்புல ஒரு வந்தனம் வந்தனம் வந்தனம்.. !!!
டிஸ்கி:- மக்களே .. அரங்கத்துக்குள்ள காமிராவை கொண்டு செல்ல விடலை.. எனவே என் தம்பியை ( தூங்கிக்கொண்டிருந்தவரை தொந்தரவு செய்து மாலை 3. 45 க்கு ) வரச் சொல்லி காமிராவை கொடுத்தனுப்ப வேண்டியதாகிவிட்டது.. நம்ம காமிரா இல்லாட்டி அப்புறம் அப்பிடி நாம் போற இடத்துல இருக்குற சிலை., கலை ., செய்யிற சமையல் எல்லாத்தையும் பகிர்றது.. :)) ஏற்கனவே அதை தரையில் போட்டு ரிப்பேர் பார்த்து ஒரு சைஸா ஏதோ சமாளிக்குது.. எனவே கண் போல அதை பாதுகாப்பா வைக்க வேண்டியதா போச்சு..:)) ஆனா அரங்கத்துக்குள்ள மக்கள் செல்போனில் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. நாம அந்நியன் மாதிரி நேர்மையா எடுக்காம வந்துட்டோம்..:))