எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 ஜூன், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 5

 **கண்ணிலொன்று

இதழிலொன்று
கழுத்திலொன்று
சாரல் துளியாய்
மெல்ல இட்ட முத்தங்களை
மொத்தமாக என்மேல் கொட்டுகிறது
திடீரென வந்த மழை.

 

**சிற்றில் கலைத்து
சிறுதினை மேய்ந்து
சிறு உயரம் பறந்து
பாலை காய்கிறது
பெடையொடு செம்போத்து.


**மாறும் வட்டங்கள்
வாழ்வின்
வளர்ச்சிக் கட்டங்கள்.


**ப்ளாஸ்டிக் அரிசி
ப்ளாஸ்டிக் முட்டை
ப்ளாஸ்டிக் இறைச்சி
ப்ளாஸ்டிக்கில் தண்ணீர்
போதும் நமக்கு
பொறுப்பற்ற திமிர்
நம் சொத்து.
விதைத்தவன் வெய்யிலில்
செத்தால் நமக்கென்ன
வினையை அறுப்போம்
பின்னொருநாள் நிச்சயமாய்

**என் அடையாளமற்ற இடங்களில்
உன் அடையாளம் தேடி அலைகிறேன்
பின் தொடர்கிறது நமது காதல்.


**தேடாமல் தேடுகிறேன்
தொடாமல் தொடுகிறேன்
தேடலும் தொடலும் அறியாமல்
புன்னகைக்கிறாய்
என் எழுத்து சுவை என்பாயென
எழுதி எழுதி அனுப்பாமல்
நானே சுவைத்து அழிக்கிறேன்
தினம் தினம் உன் மனதில்
என்னவெனக் கேட்கிறது முகநூல்.
உன் முகம்தான் எனச் சொல்லமுடியுமா

 

**கன்னத்தோடு கன்னமிழைத்து
எச்சில் காய்கிறது
இதழ்களில் வீணான முத்தம்

 

**தட்டாமாலை சுற்றி இறக்குகிறாய்
ஆடு நனைகிறதென
ஓநாய் அழுகிறதெனத் தெரிந்தும்
விழுந்து விடுகிறேன்.


**முகம் திருப்பி வரட்டுக் குரலில்
பதினைந்து நாளாகும் என்கிறேன்
முகம் கோணி முரட்டுக் குரலில்
மூன்று மாதமாகும் என்கிறாய்
உண்மையோ பொய்யோ
அதன்பின்
வார்த்தைப் புனலில் வீழ்ந்தெழுகிறோம்
தனிமைத் தழல் நீறு பூக்கத் தொடங்குகிறது.
கொஞ்ச நேரம் ஒதுங்கி நிற்கிறது கோபம்
கடந்துவிடுவோமாவெனத்
தயங்கி நிற்கிறது தாபம்.


**குழந்தைமொழி கொண்டு
பதம் பிரிக்கிறோம்
அபிநயிக்கிறது இரவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...