5
நாகப்பட்டினம் கப்பலடிக்கு ஆஸ்டின் காரை எடுத்துக்கினு டிரைவர்
வேலு கருப்பஞ்செட்டியைக் கூட்டப் போயிருந்தான். கப்பலடியில் பெருவாரிக் கூட்டம்.
ஒரு வழியா வக்கூடையும் சூட்கேஸுகளையும் ட்ரங்குப் பொட்டியையும்
எடுத்துக்கினு கருப்பஞ்செட்டியோடு கார் கிளம்பியது. ”அண்ணே அங்கன கணக்கப்புள்ள கல்யாணண்ணே
நல்லா இருக்காகளா “ என்று விசாரித்துக் கொண்டான் ட்ரைவர் வேலு. அவனுக்கு பெரியத்தா
மகளைத்தான் அவருக்குக் கொடுத்திருந்தது.
“அவுகளுக்கென்ன நல்லாத்தான் இருக்காக. பொட்டியடிப் பையனும் சமையக்காரண்ணனும் நல்லாப் பார்த்துக்குவாக அவுக வீட்டு அக்காளுக்கும் அவரு சாமான் குடுத்து விட்டிருக்காரு. ஒரு பையில இருக்கு. நாளைக்குப் பிரிச்சுத் தாரேன். அத அவுக வீட்டுல சேர்த்துரு வேலு.”
“நிச்சயமாண்ணே “ என்ற வேலு காரைச் செழித்திருந்த வயல்களின் ஊடாகச்
செலுத்திச் சென்றான். தூரத்திலிருந்து கடற்காற்றும் வயலின் பச்சைவாசமும் மனசைக் கிளர்த்த
கருப்பஞ்செட்டிக்கு ஒமையாளின் ஞாபகமும் பிஞ்சு மகள் சோகியின் ஞாபகமும் ஒன்றாய்த் தாக்கியது
லேசாகப் பின் சாய்ந்து கண்ணசந்தாக.
லேசாக ஏதோ புகையும் வாசனை பட்டுக் கண் திறக்க கரும்புக்காடுகளில்
சக்கைகள் தீ பட்டுக் கருகிக் கொண்டிருந்தன. ”என்ன வேலு இது” என்க, அண்ணே கரும்புக்
காடுகள்ல அடுத்து நடவு செய்ய அறுவடைக்குப் பின்னாடி இப்பிடி தீமூட்டி எரிப்பாக சக்கைகள
அதான் வாடை “ என்றான்.
”விவசாயம் எல்லாம் எப்பிடி ? பரவாயில்லையா? “ “ அப்பச்சி சொல்லி
இருப்பாகளேண்ணே, எல்லாம் குத்தகைக்கு விட்டிருக்கு. வருஷத்துக்கு 150 மூடை நெல்லுத்
தர்றதா கலியன் கிட்டப் பேசிக் குத்தகைக்கு விட்டிருக்கு. “
பெருமூச்சோடு பின்னால் சாய்ந்த கருப்பஞ்செட்டி ”அதுசரி வெளையாட்டுப்பொட்டி
வேவு என்னிக்குன்னு அப்பச்சி சொன்னாகளா “ என்று கேட்டாக.
“நீங்க வந்ததுமே இங்கன ரொட்டி முட்டாய் வைச்சிட்டு அன்னைக்குச்
சாயங்காலமே வெளையாட்டுப்பொட்டி வேவு எறக்கலாம்னு அப்பச்சி சொன்னாகண்ணே “ “ ஆனா அதுக்கு
மின்னாடியிருந்தே ஒமையாச்சி வீட்டுலேருந்து பிள்ளைக்கான வெளையாட்டுச் சாமான்க, சிட்டிக,
பெரிய பொம்மைக் காரு, மெஷினு குதுர, குளியாட்டுற தொட்டி, நடவண்டி, வெள்ளித் தொட்டி
எல்லாம் வந்தெறங்கிருச்சு அண்ணே. நம்ம அப்பச்சியும் பேத்திக்குப் பூச்சரம் பண்ணியிருக்காக
” என்றான் வேலு.
கேக்கும்போதே மனதுக்குள் பெருமிதம் பொங்கியது கருப்பஞ்செட்டிக்கு.
’பரவாயில்லை ஒமையாவுக்கு ஆத்தாவீடு நல்லாத்தான் சீர் அனுப்பி இருக்காக, அதுக்கேத்தாப்புல
நம்ம அப்பச்சியும் விட்டுக் கொடுக்காம பேத்திக்குப் பண்ணிப்புட்டாக’ என நினைச்சிக்கிட்டாக.
வெளியே குடிசைகள் கடந்துகொண்டிருந்தன. வைக்கப்போர்கள் வீடுகளுக்கருகில்
நிமிர்ந்து நின்றன. பசுவும் கன்னுமாய்க் கழுத்து மணியசைத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.
வேப்ப மரங்களும் புளிய மரங்களும் இளவேனிலில் பசுந்துளிர்களோடு அசைந்தாடிக் கொண்டிருந்தன.
“அண்ணே பசிக்குதாண்ணே.. இந்தால அரைமணி நேரத்துல போயிரலாமண்ணே.
அறந்தாங்கி தாண்டிட்டோம் “ என்றான் வேலு. “ கருப்பையாண்ணே நீங்க வர்றீகன்னு தலைக்கறிக்
கொழம்பு, கோழிக் குருமா, விரால் மீன் வறுவல்னு சேய்ஞ்சு வைச்சிக்கினு காத்திருப்பாக.
“ என்று சொல்லிச் சிரித்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. நீ நிதானமா ஓட்டு “ என்று சிரித்தபடி
சொல்லவும் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருந்த இரண்டு கோழிகள் குறுக்கே வந்து கார்ச்
சக்கரத்தில் விழவும் சரியாக இருந்தது. சடன் ப்ரேக் போட்டு வேலு நிறுத்தியும் ஒரு கோழி
அடிபட்டு வீழ்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)