எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 ஜூன், 2026

முடிசூடா இராணி மங்கம்மாள்

முடிசூடா இராணி மங்கம்மாள்

ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த திருமலை நாயக்கர் வம்ச வரலாற்றில் மதுரையை ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகள் அரசாட்சி செய்த மிகக் கம்பீரமான பெண்மணி இராணி மங்கம்மாள். தளபதியின் மகளாக இருந்தும் மிகச் சிறந்த அரசியல் ராஜதந்திரி. மதிநுட்பம் மிகுந்தவர். முகலாயர்கள், மராத்தியர்கள், கேரளத்தவர், மறவர்கள் ஆகியோரின் பகைகளையும் திறமையாக முறியடித்தவர். எல்லா மதத்தினரோடும் சமரச மனப்பான்மை கொண்டு அரவணைத்தவர். அரசியல் ஞானம், உலகியல் அறிவு, நெஞ்சில் உரம், நேர்மைத்திறம் கொண்டவர்.

ராணி மங்கம்மாள் என்றவுடன் மதுரையை அவர் ஆண்டு வந்ததாகவே நினைப்போம். ஆனால் நாயக்கர் பரம்பரையில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாதர், ராணி மீனாட்சி ஆகியோர். மன்னனுக்குப் பட்டத்தரசியாகப் பட்டம் சூட்டப்படாமலிருந்தும் தனது மகனுக்கும் பேரனுக்கும் காப்பாட்சியாளராக இருந்து பேரரசியாகக் கோலோச்சியவர். 

இவர்களுள் திருமலை நாயக்கர் போலச் சிறப்பான ஆட்சி கொடுத்தவர் இராணி மங்கம்மாள். பதவி கிடைத்தால் ஆணுக்கு நிகராகப் பெண்ணும் சாதிப்பாள் என்பதை நிரூபித்தவர். சொக்கநாத நாயக்கர் தனது தளபதியான தப்பகுள லிங்கம நாயக்கரின் மகளை மணந்தார். ஆனால் அவளைப் பட்டத்தரசி ஆக்கவில்லை. மங்கம்மாவின் மகன் அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கன்.

1682 இல் சொக்கநாத நாயக்கர் மறைந்தபோது அவர் கைக்குழந்தையாக இருந்த காரணத்தால் இராணி மங்கம்மா உடன்கட்டை ஏறவில்லை. பொதுச்சபையின் கருத்துப்படிக் காப்பாட்சியாளராகப் பதவி ஏற்றார்.  தன் மகனை வளர்த்து ஆளாக்கினாள். அரங்ககிருஷ்ண நாயக்கன் தனது பதினைந்தாவது வயதில் ஆட்சிப் பொறுப்பைத் தன் தாயிடம் இருந்து ஏற்றார். எதிரிகளிடம் தனது தந்தை இழந்திருந்த பகுதிகளை தாய் வகுத்துக் கொடுத்த வழியின்படி மீட்டார்.

கிட்டத்தட்ட ஏழாண்டுகள் ஆட்சி செய்தார். இவருக்கும். அவருக்குச் சின்ன முத்தம்மாள் என்ற பெண்ணை மணம் செய்வித்தாள் இராணி மங்கம்மாள். 1689 இல் பெரியம்மை தாக்கி அரங்க கிருஷ்ண நாயக்கர் இறந்தபோது அவரின் மனைவி முத்தம்மா கருவுற்றிருந்தார். கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பிய அவளை இராணி மங்கம்மாள் தடுத்தாள். ஒரு அழகான ஆண்குழந்தைக்குத் தாயான அவள் அதைத் தன் மாமியாரிடம் ஒப்படைத்தாள். தன் கணவனின் மறைவால் வருந்தித் தானும் அளவுக்கதிகமான பன்னீரை அருந்தி ஜன்னி கண்டு இறந்தாள். 

தாய் தந்தையை இழந்த சிசுவாய் அவளது பேரக்குழந்தை கையில் இருந்தான். அவனுக்குத் தன் மகனின் பெயரையும் கணவரின் பெயரையும் இணைத்து விஜயரங்க சொக்கதாதன் என்று பெயரிட்டு மதுரை அரசின் மன்னனாக முடிசூட்டி அவன்சார்பாக 1689 இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுத் திரும்பவும் காப்பாட்சியாளராக, முடிசூடா இராணியாக ஆண்டுவந்தாள் மங்கம்மாள்.

எத்தனை எத்தனை போர்கள், எத்தனை எத்தனை மதியூக வியூகங்கள். மாவீரன் சிவாஜிக்குப் பின் ஔரங்கசீப்பின் படை தென்னிந்தியாவில் தன் கண்ணைத் திருப்பியது. மைசூர் அரசன் சிக்கதேவராயனும், தஞ்சை மராட்டியராஜவும் திறை செலுத்த இராணி மங்கம்மாவும் தன்னை விட வலிமையான ஆட்சி பீடத்துடன் போட்டி எதற்கு எனத் தானும் திறை செலுத்தி நாட்டைக் காப்பாற்றிக் கொண்டாள்.

ஆனால் மைசூர் சிக்க தேவராயனோ ராணியைத் தப்பாக எடை போட்டு கிபி 1695 இல் சேலம் கோவையைக் கைப்பற்றித் திருச்சியையும் முற்றுகை இட்டான். ஆனால் ராணியின் திட்டப்படி தளவாய் நரசப்பையா முற்றுகையை நீடிக்க விட்டார். அதற்குள் மைசூர்ப்படை திருச்சியில் இருப்பதை அறிந்த மராட்டிய மன்னன் மைசூரைத் தாக்க திருச்சியிலிருந்து மைசூரைக் காக்கத் திரும்பின.  குமாரையாவின் தலைமையில் மைசூர் திரும்பிய படைகளை ஓட ஒட்ட விரட்டிய மங்கம்மாவின் படைகள் கோவை, சேலத்தை மீட்டன.

முகலாயர்களுக்குக் கப்பம் கட்டினாலும் தனக்குத் தேவையான போர் உதவிகளையோ ஆக்கிரமிக்கப்பட்ட தனது பகுதிகளை மீட்கவோ அவர்கள் மூலமே காய் நகர்த்தி ஜெயிப்பதில் வல்லவள் இராணி மங்கம்மாள். ஔரங்கசீப்பின் படைத்தளபதி ஜூல்பிகர்கான் அப்படிப் படையெடுத்து வந்தான். போரிட்டால் கடுமையான இழப்பு நேரும். அதே சமயம் கொட்டிக் கொடுக்கக் கஜானாவில் நிதி இல்லை. நாட்டின் நிலைமையோ சரி இல்லை. ஆனாலும் அவள் தன் கணவன் காலத்தில் பறிபோன சில நிலப்பகுதிகளைத் தஞ்சை மன்னன் ஷாஜியிடம் இருந்து திருப்பி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து  நாட்டை மீட்டாள்.

இராணி முகலாயர்களுக்குத் திறை கட்டிப் போரைத் தவிர்த்தது போல பல்வேறு தேசத்தவரும் நாயக்கர் அரசுக்குக் கப்பம் கட்டி வந்தனர். அவற்றில் ஒன்று திருவிதாங்கூர். ஆனால் ஆளுவது பெண்தானே. அவளால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணித் திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மன் கப்பம் கட்டவில்லை. உடனே மங்கம்மாளின் படைகள் திருவிதாங்கூரின் மேல் படையெடுத்தன.

ஆனால் இரவிவர்மன் தன் தந்திரத்தால் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் மேல் பழியைப் போட்டு அவர்களை அழித்தால் திரை தருகிறேன். மேலும் இந்த நகரத்தையும் கோட்டையையும் கூடத்தருகிறேன் எனப் பேரம் பேசுகிறான். இதை ஒப்புக்கொண்டு தளபதி உதவ தன் வேலை முடிந்ததும் இரவிவர்மன் ராணியின் படைகளை அழித்து ஒழித்து விடுகிறான். இதைக் கேள்வியுற்ற இராணி கொந்தளிக்க நரசப்பையா தானே படைகொண்டு கிளம்பி திருவிதாங்கூரைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். 1697 இல் நடைபெற்ற இந்த யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பீரங்கிகள் திருச்சி மலைக்கோட்டையில் வைக்கப்பட்டன

முடிந்தால் படையெடுப்பது, அட்டூழியத்தோடு அழித்துச் செல்வங்களைக் கவர்ந்து செல்வது, முடியாவிட்டால் பணிந்து போவது, திறை கட்டுவது, பரிசுப் பொருட்கள் வழங்கிப் போரைத் தவிர்ப்பது, போரிடத் தகுந்த சமயத்துக்காகக் காத்திருப்பது எனப் பல்வேறு வழிகளைக் கையாள்வதன் மூலமே ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் அன்றைய மன்னர்கள். அதற்கு இராணியும் விதிவிலக்கில்லை.

ஜூல்பிகர்கானின் உதவியால் சண்டையிடாமலேயே தஞ்சைப் பகுதிகளை எடுத்துக் கொண்ட இராணி மேல் கோபத்தில் இருந்த தஞ்சை மன்னன் ஷாஜி தளவாய் நரசப்பையா திருவிதாங்கூருக்கு இரவி வர்மாவை அடக்கச் சென்ற சமயம் தன் பகுதிகளை மீட்டுத் தன் வசம் ஆக்கிக் கொண்டான். திருவிதாங்கூரிலிருந்து திரும்பிய நரசப்பையா இவற்றைக் கேள்விப்பட்டு ராணியின் உத்தரவால் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது தஞ்சையின் மீது தாக்குதல் நடத்தினார். ஷாஜியின் மந்திரியாயிருந்த வானோஜி பண்டிதர் 5 லட்சம் வராகனும் விலை உயர்ந்த பரிசுகளும் இராணிக்கு அளித்து மேலும் தஞ்சைப் பகுதிகள் பறிபோகாமல் தடுத்தார். 

அடுத்து மைசூர் மன்னன் சிக்கதேவராயனின் சதி. சேலத்தையும் கோவையையும் முன்னர்ச் சதியால் கவர்ந்து பின்னர் இராணியின் படைகளிடம் பறிகொடுத்ததால் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தான் சிக்கதேவராயன். எனவே காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் திருச்சி தஞ்சை வயல்களைத் தரிசாக்க எண்ணிக் காவிரியைத் தடுத்து அணை கட்டினான். எதிரியானாலும் தேவைப்பட்டபோது அவர்கள் உதவியையும் நாடிக் காரியத்தை முடிப்பதில் வல்லவளான இராணி மங்கம்மா தஞ்சை மன்னன் ஷாஜியின் உதவியுடன் பெரும்படையைத் திரட்டி மைசூருக்குப் புறப்பட்டாள். ஆனால் இயற்கையே அவர்களுக்கு உதவி செய்து படை செல்லுமுன்னேயே பெருமழை பெய்து சிக்கதேவராயன் கட்டிய அணையை உடைத்தெடுத்துத் தஞ்சைக்கும் திருச்சிக்கும் நீர் வழங்கியது.

தன் நாட்டின் சில பகுதிகளைக் கவர்ந்து கொண்ட உடையார் பாளையம் அரசனை கர்நாடக நவாபின் தளபதி தாவூத்கானுக்கு ஒரு மடல் வரைந்ததன் மூலம் எளிதாக மீட்டாள். எல்லாப் போர்களிலும் தனது ராஜ தந்திரத்தால் வென்ற இராணிக்கு 1702 – 1706வரை சோதனையான கால கட்டம்.  அவள் எடுத்த தவறான முடிவு கிழவன் சேதுபதியை எதிர்க்க மறவர்களோடு போர் புரிதல் என்பது. இதனால் தன் படையிலேயே பெரும்பகுதி மறவர்களைக் கொண்டிருந்த இராணி அவர்களின் ஆதரவைப் பெறவில்லை. இராமநாதபுரம் போரில் மறவ வீரனின் ஈட்டிக்குப் பலியானார் தளபதி நரசப்பையா. அவரின் மறைவுக்குப் பின் இராணியின் ஆட்சியில் பெரும் சரிவு ஏற்பட்டது. தனது நம்பிக்கைக்குரியவர்களை அவர் இழந்தார்.

சைவம் வைணவம் ஆகியவற்றை மட்டுமே ஆதரித்த தஞ்சையும் மறவர்நாடும் மதம் மாறியவர்கள் மீது வரி விதித்தனர். மதம் மாற்றும் பாதிரிமார்களை நாடு கடத்தினர். ஆனால் மனிதநேய இராணி என்றால் அது மங்கம்மாவுக்கே பொருந்தும். மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டு இவர். ஒவ்வொரு திருவிழாவின் போதும் தன் செங்கோலை மீனாட்சியம்மன் பாதத்தில் வைத்து வணங்கினாலும் தன் நாட்டில் வாழும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு என்று சொன்னவர்.

இந்துக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்கள் அளித்ததோடு கிபி. 1701 இல் முகமதியர்கள், கிறித்தவர்களுக்கும் இறைவழிபாடு செய்யவும் தங்கள் மதத்தைப் பரப்பவும்,  பின்பற்றி வாழவும் நியாயம் செய்தார். மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்தார், அதோடு போசேத் என்ற குருவை அழைத்து விருந்தோம்பினார். சௌராஷ்டிரர்கள் என்னும் பட்டுநூல் நெசவுக்காரகள் இவர் காலத்தில்தான் திருச்சியில் குடியேறினார்கள்.

207 ஆண்டுகள் நாயக்கர்கள் வம்சம் மதுரையை ஆண்டாலும் தமிழை ஆதரிக்காதது, நாயக்கர்களாயிருந்து மறவர்களை எதிர்த்துப் போரிட அழைத்தது ஆகிய பின்னடைவுகளும் இவர் காலத்தில் உண்டு. நிஜத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காண இயலாத அளவுக்கு அதிகமான பாசம் பேரனின் மீது. .அதிகார வயதை எட்டியபின்னும் தன் பேரன் விஜயரங்கனுக்கு அவர் முடி சூட்டவில்லை. இதுவே அவரின் ஆட்சி முடிவுக்கும் வாழ்வின் முடிவுக்கும் காரணியாக அமைந்தது.

யாரும் எதிர்பாராத முடிவு ஒன்று நிகழ்ந்தது. பட்டம் ஏற்கும் வயதுக்கு வந்த பின்னும் தனக்கு அரசாட்சியை விட்டுத் தராத தன் பாட்டி மங்கம்மாவின் மேல் அதீதக் கோபத்தில் இருந்த பேரன் விஜயரங்க சொக்கநாதன் தனக்கு ஆதரவு அளித்த பல ராணுவ அதிகாரிகளின் ஆதரவோடு ஆலயத்தில் முடிசூட்டிக் கொண்டான். ஆட்சி வெறும் விளையாட்டல்ல, அரசாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனுபவம் பெறவேண்டும், அப்போதுதான் நல்லாட்சியைத் தரமுடியும் என்று கூறினார் ராணி. தளவாய் அச்சையா அதை ஆமோதித்தார். ஆனால் விஜயரங்கன் இராணியையும் மதிக்கவில்லை, தளவாய் அச்சையாவையும் மதிக்கவில்லை. இருவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்து வந்தான். நீங்கள் ராணியாகி அதன் பின்னரே அரசாட்சி அனுபவங்கள் பெற்றதுபோல் நானும் மன்னனாகி அனுபவங்களைப் பெற்றுக் கொள்வேன் என்று இராணியை வீட்டுச் சிறையில் அடைத்தான்.

18 வருடங்கள் இராணியாக ஆண்ட நாட்டில் வீட்டுச்சிறையில் பேரனின் கைதியாக யாரையும் பார்க்க முடியாமல் அதிகாரமற்ற நிலை. எத்தனையோ போர்களை தனது அரசியல் வியூகத்தால் போர்க்களம் போகாமலே ஜெயித்து ராணி மஹாராணியாக வாழ்ந்து வந்த மங்கம்மாள் தன் பேரனின் வியூகத்தில் சிக்கிக் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் தனிமைச் சிறையில் வாடி கிபி 1706 இல் தனது 55 ஆவது வயதில் முடிவை எய்தினார்.

விலங்கினங்கள் நீர் அருந்தத் தண்ணீர்த்தொட்டி அமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஊருணிகள், குளங்கள், கிணறுகள் தோண்டச் செய்தல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு அளித்தல் ஆகியன இராணியின் பொதுப்பணிகள். இவர் ஆட்சியில் இன்னும் பல நல்ல திட்டங்கள் தீட்டிச் செயலாக்கம் செய்யப்பட்டன.

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் கிபி 1700 இல் இராணியால் கட்டுவிக்கப்பட்டது. இது திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் உள்ளது. மதுரையில் எண்கோண வடிவத்தில் உள்ள விருந்தினர் அரண்மனை,  டவுன்ஹால், திருச்சி காவிரிக் கரையில் உள்ள அம்மா மண்டபம், மத்திய சந்தை, இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகக் கட்டிடம் ஆகியவை மங்கம்மாள் கட்டியது. மங்கம்மா பாலம், வாய்க்கால் பாலம், அன்னசத்திரம், ஊருணிகள், கன்யாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே உள்ள மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம் ஆகியன இவரால் கட்டுவிக்கப்பட்டன. இவர் அமைத்த  சாலைகளும் நிழல்தரும் மரங்களோடு சோலைகளாக விளங்கின. 1687 இலும் 1704 இலும் உய்யக்கொண்டான் ஆற்றைச் செப்பனிட்டது எனச் சாசனங்கள் அவள் புகழை இயம்புகின்றன. அவள் அமைத்த ஒவ்வொன்றும் அந்த முடிசூடா இராணியின் பெயரை உரத்துக் கூறும் சரித்திரச் சின்னங்களாக விளங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...