சனி, 12 பிப்ரவரி, 2011

தலைப்பு இழந்தவை.. ஈழவாணி கவிதைகள்.. . எனது பார்வையில்எழில் கொஞ்சும் இலங்கைத் தமிழுக்குச் சொந்தக்காரர் அன்புத் தங்கை ஈழவாணி ஜெயதீபன். இவர் எழுதிய 5 வது நூல் தகிதா பதிப்பகத்தின் வெளியீடு ,” தலைப்பு இழந்தவை” . விலை ரூபாய் . 40.

அழிந்து கொண்டிருக்கும் நாட்டாரிலக்கியத்தினை எடுத்து ,” நெஞ்சோடு கொஞ்சும் நாட்டார் பாடல்கள்” என்ற நூலையும் தொகுத்தவர். 2000 ஆம் ஆண்டுகளில் .” தேடல்” சஞ்சிகையின் ஆசிரியராகவும்., 2003 ல் ,”செந்தணல்” பத்ரிக்கையின் ஆசிரியராகவும் ஜொலித்தவர்.


இனி விமர்சனம்..

புறநானூறு., அகநானூறு என பண்டைய இலக்கியங்கள் சார்ந்த ரசனை தெறிக்கிறது கவிதைகளில். மொத்தம் 59 கவிதைகளில் முதல் பதினைந்து கவிதைகள் தலைப்பு இழந்தவை என்ற தலைப்பில் வருகின்றன.


“அரசிகள் அழுவதில்லை” என்ற கம்பீரத்தோடு ஆரம்பிக்கும் கவிதைகள் அப்பாவை கண்ணாடியாக உவமிக்கும் கவிதையோடு பூரணத்துவம் அடைகின்றன..


மௌனமொழி உயிர் கொல்வதும்., இடப்பக்கம் விழுந்த இரை உண்ணா பெண் சிங்கத்தின் கம்பீரமும்., கதைக்காக காலங்கள் காத்திருக்காமல் மொழி புதைவதும்., பிள்ளைகள் கற்பை உண்ணும் நரிகள் கண்டு வெதும்புவதும்., கற்சிலைகட்கு மாலையிடும் மேடை கண்டு நொந்து கொள்வதுமாய் இருக்கிறது., பெண் மனத்தின் கம்பீரங்களும். , சோகங்களும் ...


“பெண்மனம்தானோ இது

நேற்று

காதல் பேசியவனிடமும்

கொஞ்சியது இன்று

காதல் கேட்டவனிடமும்

மிஞ்சியது

நாளையொரு காதல் கிறுக்கன்

காத்திருப்பதாய் தாவுகிறதே

பெண்மனமோ இது..”


இந்தக் கவிதை யதார்த்தம் கூறலாய் தோன்றுகிறது.. நம்மைச் சுற்றி நடக்கும் வாழ்வியலை பதிவு செய்கிறது.


மழை நீராய் நனைந்து வீடுவரை தேடுவதும்., விதவைகளின் கலர்ப்பூக்கள் மட்டுமல்ல கனவுப் பூக்களும் பிரிக்கப்பட்டதும்., உதடு கடித்து மீளுமுன் உயிர்துடித்து வீழ்ந்த குருவியின் காதலுக்காய் வருந்துவதும்., காதல் திருமணத்துக்குப் பின் காசு பேசப்படுவதும்., மெய் மெய்யால் எடுத்தாட் கொள்ளப்படுவதும்., நினைவுகளை தீக்குளிக்க இருப்பதும்., காதல் ஆயுள் காப்பீட்டு நிதியாய் அவசர சிகிச்சை நல்குவதும் சோகத்திலும் அழகு.


”விருதுக்கான தேர்வு” கவிதை அருமை..

“உணர்ச்சிகள் கூடாது

விடுதலை உணர்வு

வார்த்தைகளில் விடுதல் பெற்றிருந்தால்

நன்று

வீரம் மானம் தவிர்த்தல்

கொடூர நினைவுகளின்

நினைவுறுத்தல்கள் கூடாது

கொலைக்கணக்குகளோ

கற்பழிப்பு நினைவுகளோ

செம்மணி அறிவித்தல்களோ

கட்டாய விலக்கல்.

கண்டிப்பான முன் அறிமுகங்களோடு

அரசு அறிவிப்பு.

சாகித்ய விருதுகள்

நூல் தேர்விற்காய். “


மேகத்தை பிழிந்து வானம் நீராட்டிக் கொண்டிருப்பதும் அதில் நனைந்து கொண்டே ஒரு தாய் மழை நீரை சட்டி ஒழுக ஒழுக வெளியில் கொட்டுவதும்., அழகிய சாமரமாய் இருக்கும் அணிற்குஞ்சை கறுப்புப் பூனை ஏப்பம் விடுவதும்., மண்வாசத்தோடு பகிரப்படும் சினேகிதியின் அன்பும்., அழகு கலந்த அவலம்.


மகளிர் தின வாழ்த்துக்கவிதை நல்ல சுருக்..

”அம்மா கொண்டு வார

ஆயிரம் பவுன் பெட்டையைத்தான்

கட்டவேணும் பிறகு

அடக்க ஒடுக்கமா

கவனமா இருந்து கொள்ளும்.”


பருவக் கலைப்பு கவிதை..கொஞ்சம் விரசம்.

“மதங்கொண்ட ஒரு

யானையின் புணர்ச்சியில்

பருவத் தோட்டம்

சாய்ந்து கிடந்தது..

பரிமாறப்படாமலே

பந்தியுண்ணப்பட்டிருந்தது.”


புத்தனோடு உறவோ உனக்கு மௌனமாய் புரிகிறாய் மரணத்தை எனவும்., சதைகளைக் கீறி கூறு போடும் வார்த்தைகளின் வலியும்., கைபேசியில் தேவையற்றவை தகவல்களாய் வர தேவையான அழைப்பு கிடைக்கப் பெறாமல் ஏங்குவதும்., கால்களின் கீழ் அடித்துச் செல்லும் அலைகள் மரணக் குழிகளை வளர்ப்பதும்., பாம்ஸ் இலைகடித்துத் துப்பிக்கொண்டே அவனின் வருகைக்காய் காத்திருந்த சுவரோரப் பாறையும் ., என் தேசத்தைக் களவாடாதே என்ற தார்மீகக் கோபமும்., பயங்கரவாதியான ஆசுபத்திரி ஆலமரமும்., அப்பா அழகிய கண்ணாடியாகி பிம்பம் பார்க்குமுன் நழுவி விழுந்தது, நினைவில் வரையும் சொற்சித்திரம்..


ஒரு பெண்ணின் கனவு., காதல் ஏக்கம்., பாசம்., காமம்., ஆசை.,தேசப்பற்று., வீரம்., கண்ணியம்., பெருந்தன்மை., கருணை., கோபம் எல்லாம் பேசுகிறது கவிதை.. கவிதைகளில் தன்னை ஒளிக்கவில்லை ஈழவாணி.. நன்கு வெளிப்படுத்தியே அனைத்தும் பகிர்ந்திருக்கிறார் எல்லாம்.. மிக அருமையான கவிதைகள் வாணி..


படித்துப் பாருங்கள்.. ஈழத்தமிழின் மிச்ச சொச்ச சுவையோடு இருக்கிறது .. ஈர்க்கிறது..


டிஸ்கி:- அன்புத் தங்கை ஈழவாணி ஜெயாதீபனுக்கு இன்று பிறந்தநாள்.. அன்புத் தங்கைக்கு இந்த விமர்சனம் பிறந்தநாள் பரிசு.. நீடுழி வாழ்க வளமுடன் ஈழவாணி.. உங்கள் பெயர் சொல்லும் போதெல்லாம் ஈழம் இனிக்கிறது.


10 கருத்துகள் :

போ. மணிவண்ணன் சொன்னது…

ஈழவாணிக்கு இதைவிட ஒரு இனிய பிறந்த நாள் பரிசு வேறெதுவும் கிடைத்திருக்க முடியாது.ஈழவானிக்கு வாழ்த்துக்கள் .தேனம்மைக்கு நன்றிகள்.

ஸாதிகா சொன்னது…

வாழ்த்துக்கள்!

elaavani சொன்னது…

மிகவும் நன்றி கனி. உங்கள் விமர்சனத்திற்கும் பரிசிற்கும்.

தங்க,கதிரவன் சொன்னது…

அருமையான விமர்சனம்..
சுவையான கருத்து பகிர்வு..
ஆழமான ஆய்வு..
அவசியமான கருத்துக்கள்...!
தேனம்மையின் தேன் தமிழில்
ஈழவாணிக்கு பிறந்த நாள் பரிசு..!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஈழவாணிக்கு வாழ்த்தும்,உங்்களுக்கு நன்றியும்

சத்ரியன் சொன்னது…

தேனக்கா,

இந்த நூல் விமர்சனம்-

கவிதாயினி ஈழவாணிக்கு பிறந்த நாள் பரிசு.

எங்களுக்கு சிறந்த நூல் ( ஒன்றை வாங்கிப் படிக்க பரிந்துரைப்) பரிசு.

கே. ஆர்.விஜயன் சொன்னது…

நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.

kanagaraj சொன்னது…

Miga nalla vimarsanam, nall kavithaikal, Eelavani and honey thanks two.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி மணி., ஸாதிகா., ஈழவாணி., தங்க. கதிரவன்., செந்தில்., கோபால்., விஜயன்., கனகராஜ்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...