புதன், 31 மார்ச், 2010

கம்பர் விழாவில் தினமணி ஆசிரியர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறி கவிபாடும்” என்றால் கம்பனை சிறுவயது முதல் நேசிக்கும் ஒருவரின் வாக்குமூலம் கேளுங்கள் .,”கம்பர் விழாவுக்குப் போவதற்காக புத்தகத்தை எடைக்குப் போட்டுவிட்டு என். சி. சி .காம்ப் போவதாக சொல்லிவிட்டு கம்பர் விழா பார்க்க வந்ததாக சொன்னவர் வேறு யாரும் அல்லர் .. தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தேடிப் போக வேண்டும் என்ற உந்துதல் பள்ளிப் பருவத்திலே ஏற்பட்டுவிட்டதால் .....இங்கும் (அதாவது கம்பர் விழாவிலும்.). இப்போதும் இருப்பதாக சொன்னவர் ...தமிழை இன்றும் நேசித்துக் கொண்டிருக்கும்., நமது தினமணியின் ஆசிரியர் ..திரு வைத்யநாதன் அவர்கள் ..
தேர்ந்த வார்த்தைகளால் அன்று அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பாக அமைந்து இருந்தது ..ஊடும் பாவுமாய் வார்த்தைகள் வந்து நெசவுக் கோர்வையாய் செம்மையாய் இருந்தது
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கி வைத்து கலந்து கொள்வது பிறவிப்பயன் என்றும் கம்பன் அளித்த வரம் என்றும் கூறினார்.
கம்பனுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கம்பன் அடிப்பொடி., தோழர் ஜீவா., தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான்., நீதியரசர்கள்
மு.மு. இஸ்மாயில்., மகராசன்.,பேராசிரியர்கள் ஏ.சி பால்ராஜ் நாடார்.,எஸ். ராமகிருஷ்ணன் ., எழுத்தாளர்களான கி.வா.ஜ., அ. ஸ்ரீநிவாச ராகவன் .,கண்ணதாசன் அனைவரின் சேவையையும் பாராட்டினார்.

தினமணி தொடங்கிய 5 வது ஆண்டில் கம்பன் விழா தொடங்கியது..தினமணியின் பவளவிழா ஆண்டுமலரில் முதல் ஆண்டுவிழா பற்றிய செய்தி இடம் பெற்றதாம்.. எல்லா தினமணி ஆசிரியர்களும் ஏ. எல் சிவராமன் உட்பட கலந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மதுரையில் தீண்டாமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வைத்தியநாத ஐயரின் சிலை பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்ற செய்தி தினமணியில் வந்தவுடன் முதல்வர் அதை சரிப்படுத்த உடன் நடவடிக்கை எடுத்ததாகக் கூறிய அவர் செம்மொழி மாநாட்டிலும் கம்பனுக்கு நாம் எதிர்பாராத இடம் தரப்படும் ..முதல்வர் மூலம் என நம்புவதாகக் கூறினார் ..

இராம காதையில் 700 திருக்குறளுக்கு மேல் இருப்பதாகவும் திவ்யப் பிரபந்தமும் இருப்பதாகக் கூறினார்..கவியரசரின் கருத்தே தமது கருத்தும் என்றார்.புதுச்சேரி கம்பன் விழாவில் ”கம்பனின்
கவிதையன்றி கன்னித்தமிழில் வாழ்த்துமில்லை” கம்பன் சீதைக்குத் தமிழ்நாட்டில் சேலை கட்டிவிட்டான் “என்று கவியரசர் புகன்றது பகி்ர்ந்தார்,
காந்தத்தால் கவரப்பட்டவர்களைப் போல இருந்ததாகவும் “கம்ப ராமாயணம் சமய இலக்கியம் மட்டுமல்ல.. சமரச சன்மார்க்க
சிந்தனை இருக்கிறது கம்பனுக்கு” என்றும் “பல்பெரும் சமயத்துள் கடலில் கலக்கிறதே”என்று எல்லா சமயத்திலும் இழுத்து அடைத்து விடுகிறான். என்றும் ஒழுக்க சீலனின் கதை இது என்றும் கூறினார். காட்சிக்குக் காட்சி காமிராக்கள் கொண்டு பார்க்கின்றான் கம்பன்... திருமணக்காட்சியில் ”நம்பியைக் காண ஆயிரம் நயனம் வேண்டும்” என்று கவிதை., காப்பியம்., மட்டுமல்ல நாடகமாகவே பார்க்க வைக்கிறது என்றார்..
நெல்லையில் ஜஸ்டிஸ் சிவராசனும் இவர் தந்தையும் பேசி அளவளாவும் ’முதல் நாள் போர்’ பற்றி சிலாகித்தார்.. ரசிகமணி டி கே சி யும் “சாம்புகிறான்” என்ற பதத்தை ( கத்திரிக்காய் சுடுவது போல அது ) சிலாகித்துக் கூறியதைக் கூறினார்.

சத்ருக்னனைன் பாத்திரப் படைப்புப் பற்றிப் பேசும் போது அவனுக்கு அதிகமாக இடம் இல்லை என்றும்., ஒரு 3 அல்லது 4 இடங்களில் மட்டும் தான் வருவதாகவும் குறிப்பிட்டார்..எதிரிகளை அழித்தான் அவ்வளவுதான்...
மற்றோரிடத்தில் இலக்குவனும் சத்ருக்னனும் சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள், கடைசியில் பேசும் பேச்சுத்தான் அவனை மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு வைக்க கம்பன் செய்தது எனக் கூறினார். பரதன் சத்ருக்னனிடம் “இதோ பார் சத்ருக்னா நான் சிதை மூட்டிக் கொள்வேன், நீ அயோத்தி ராசாவாக முடி சூட்டிக் கொள்க “எனும் போது கொந்தளித்து எழுவான் பாருங்கள் சத்ருக்னன்,
”காணாத நிலமகளைக் கைவிட்டுப் போன
ராமனைக் காத்து போனவர்கள் வரும் நேரம்
போய்விட்டது என்பதால்” ஒருவன் காட்டுக்குப் போனான் . நீ சிதை ஏறிவிடு.. நான் இழிந்தவன் எனவே அயோத்தி ராசாவாக வேண்டுமா? உனக்கு அடிமையாக உன்னைப் பின் தொடர்ந்தேனல்
லவா..?” என்பான் அப்பா.. அப்பப்பா.. கம்பனுக்கு நிகர் கம்பனேதான் ..!!
”உவமைகள்., கவிநயம்., கதாபாத்திரங்களை உருவாக்கி புதிய பரிணாமங்களுக்குள் நிலை நிறுத்துவது இதெல்லாம் கம்பனுக்கே உரியது” என்றார் கம்பனில் கரைந்து ..
தினமணியில் கட்டுரை எழுதிய சேதுபதியின் நூல் வெளியானதை வாழ்த்தி .,”என் வாழ்நாளில் நானும் இந்த விழாவில் கலந்து கொண்டது எண்ணி வாழ்நாளில் மகிழ்வேன் .. சிற்றெறும்பு வெல்லக்கட்டியை உண்டு மகிழ்வது போல” என்றார். வரும் வருடங்களிலும் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தி தன்னுரையை நிறைவு செய்தார்..

கம்பன் வாழ்க..!
கம்பன் புகழ் வாழ்க..!!
கன்னித் தமிழ் வாழ்க.,,!!!

இருப்பு என்பது வலை

நிலவு பொழிவது போல் ஆளை விழுங்க.,
மழை பொழிவது போல் தழுவிக்கொள்ள.,
சட்டை உரித்த பாம்பாய் சுயம் உரிந்து கிடக்க.,
பச்சோந்தி போல சேர்ந்த வர்ணம் அடைந்தேன்..

அன்றிலைப்போல் அல்ல., கவரிமானும் அல்ல.,
அன்றன்று அடிக்கும் அலையில் கரை கடந்தேன்..
நிலையாமை யாக்கை அறிவேன்..
நிலையற்ற நிலை அடைந்தேன்..

எப்போதும் உண்டு ஒரு உண்மை...
ஏற்றாற்போல் மாற்றுகின்ற தன்மை...
எல்லோருக்கும் கைவந்தது கண்டேன்..
என்னுடைமையும் ஆகக் கொண்டேன்..

இப்படித்தான் இருப்பது என்பது ஒரு கலை....
எப்படியும் இருக்கலாம் என்பது ஒரு நிலை..
அப்படியும் இப்படியும் முடிவில்லாத தளை ...
எப்படி இருந்தாலும் இருப்பு என்பது வலை...

திங்கள், 29 மார்ச், 2010

காரைக்குடியில் கம்பன் விழா

கம்பன் வாழ்க..!
கம்பன் புகழ் வாழ்க ..!!
கன்னித் தமிழ் வாழ்க..!!!

இந்த ஓங்கிய குரலுக்குச் சொந்தக்காரர் கம்பன்
அடிப்பொடி சா .கணேசன் செட்டியார் அவர்கள்...

தமிழை ஊனாய் உயிராய் உணர்வாய் உணவாய்க்
கருதும் எவரும் கம்பனில் தோயாதவரல்லர்..
காரைக்குடியில் 72 ஆவது கம்பன் விழா கடந்த
சனிக்கிழமை ஆரம்பித்தது.. மகத் திருநாளில்..
கவிக்கோ அவர்களின் தலைமையில்...
நேற்று பூரத்திருநாளில் ”கம்பனில் கணியன்” என்று
திரு சோ. சத்தியசீலன் அவர்களின் உரையும்.,
இன்று உத்தர நாளில் இளம்பிறை மணிமாறன்
தலைமையில் பட்டிமண்டபமும்., நாளை பங்குனி
அத்தத் திருநாளில் நாட்டரசன் கோட்டையில்
கம்பன் அருட்கோவிலில் திரு அறிவொளி தலை
மையில் வழிபாடுடனும் விழா நிறைவு பெறும்...
அறங்காவலர்கள் சக்தி திருநாவுக்கரசு.,கம்பன் அடி
சூடி திரு பழ. பழனியப்பன்.,நா. மெய்யப்பன்.,அனை
வரும் இத்துணை வருடங்களாக விழாவை
சிறப்பாக நடத்தி வருகிறார்கள்..
காரைக்குடியில் உள்ளது கம்பன் தாய்க்கழகம்...
புதுச்சேரி .,மதுரை., அருப்புக்கோட்டையிலும் இதன்
சேய்க்கழகங்கள் இருக்கின்றன..
ஒலித்தாய்” ”வரித்தாய்” என எழுதப்பட்டு இருக்
கிறது. கம்பன் கற்பக கல்விக்கூடத்தில்..தமிழை
நேசித்தும் சுவாசித்தும் வாழ்பவர்கள் இருக்கும்
இடம் அது..

திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் இறை
வணக்கத்துடன் ஆரம்பித்தது நிகழ்ச்சி ,. அடுத்து
திருமதி ராதா ஜானகிராமனின் மலர் வணக்கம்..
பின் கம்பன் கற்பகக் குழந்தைகளின் கம்பன் அடிப்
பொடி அஞ்சலி..
கம்பன் அடி சூடி திரு பழ பழனியப்பன் அவர்களின்
வரவேற்பு உரை தமிழ்த்தேனாய் ஒலித்தது..
இன்சொல் தமிழர் உரிமை என்றாலும் அன்று நமது
உரையில் கவிக்கோவிற்கு கிடைத்த வக்ஃபு வாரி
யத் தலைவர் பதவி ...சிவப்பு விளக்கு கார் அறி
விக்கும் அவர் வருகை... நம் தம் தமிழுக்குக்
கிடைத்த வெகுமதியாக... சிறப்பாகவே கருதுவதாகக்
கூறினார்.. ரகு மானின் காவியம் பற்றிப் பேச
”ரகுமானே” வந்து இருப்பது பொருத்தம்
என்றார்.
வாலி கவிக்கோவை “வாணியம் பாடி வர்ணக்
குயில்..கவிதா ஆலாபனையில் சிந்தனைக்குரிய
சிந்து பைரவி .மொத்தத்தில் தனி ஆவர்த்தனம்”
என புகழ்ந்து கூறியதாகச் சொன்னார்.
அமரர் திரு ஜி.கே.சுந்தரத்தின் படத்திறப்புக்காக
புதுச்சேரி கம்பன் கழகத்தலைவர் (93 வயது.....
தமிழ் செலுத்தும் அன்பும் வேகமும் பாருங்கள் ..!)
திரு ந. கோவிந்தசாமி வந்திருந்தார்..
அதன் பின் ”கம்பனில் நான்மறை” என்று திரு பழ.முத்தையா எழுதிய நூலை மதுரை கம்பன் கழகத்
தலைவர் திரு சங்கர சீதாராமன் வெளியிட்டுப்
பேசினார்..அதனை திரு ஏஆர் ராமசாமி (அண்ணா
மலைப் பல்கலைக்கழகம்) பெற்றுக் கொண்டார்கள்.
திரு சேதுபதி எழுதிய ”வரலாறு நடந்த வழியில்”
என்ற நூலை திரு பழ முத்தப்பன் வெளியிட
திரு அய்க்கண் பெற்றுக் கொண்டார்கள்..
பள்ளத்தூர் திரு பழ பழனியப்பன் எழுதிய கம்ப
ராமாயண உரை யுத்த காண்டம் 4 தொகுதிகள்
வெளியீடு ..இதை இராசபாளையம் திரு முத்து
கிருஷ்ண ராஜா வெளியிட புதுச்சேரி கம்பன் கழகத்
தலைவர் திரு சிவக்கொழுந்து பெற்றுக் கொண்டார்.
பின்னர் பள்ளி கல்லூரி மாணவர் மாணாக்கியருக்
கான கம்பன் பற்றிய கவிதை கட்டுரை உரைநடைப்
போட்டிகளில் வென்றவர்களுக்கு அறக்கட்டளை
மற்றும் தனிநபர் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அப்போது விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பாக
அடுத்த வருடத்திலிருந்து கம்பனில் இசைப்
போட்டியும் நடத்தி பரிசு வழங்க முடிவானது..
இறுதியில் தலைவர் கவிக்கோவின் ”யாதும்
ஊரே “ என்ற கணியனின் வரிகளோடு (இத்தனை
வருடங்களில் இல்லாத புதுமை இது ..தலைவர்
உரையில் இவ்வாறு தலைப்பிட்டு பேசுவது)..
திருநாள் மங்கலம், மங்கலமாக நிறைவுற்றது..

“கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம் “

பின் குறிப்பு:-
அடுத்து வரும் இடுகைகளில் திரு ந. கோவிந்த
சாமி., திரு பழ முத்தப்பன்., திரு சங்கர சீதாராமன்.,
திரு வி.பி. சிவக்கொழுந்து மற்றும் கவிக்கோவின்
உரையுடன் நிறைவு செய்வேன்....

வியாழன், 25 மார்ச், 2010

அன்பு அனைத்தும் ஆக்கும்

உன் மூச்சுக் காற்றும் உருவமும் உலவும் வீட்டில்
நானும் அருவமாய் உள்நுழைந்து
உன் உணர்வையெல்லாம் சுவாசித்து
எழுத்துருவில் என்னையும் நீ உணர.,
மயிலைப் போலக் கண்களும்
முயலைப் போலக் கன்னங்களும்
கலைந்த தலையழகும் எடுப்பான நாசியும்
வடிவான மோவாயும் கரங்களில் பதித்து
குழந்தையாய் அமர்ந்து இருப்பாய்..
கம்பீரமும் .,மழலைச்சிரிப்புமாய்.,
பேரன்பும் .,நகைச்சுவையுமாய்.,
உன் எழுத்தின் வழி வெடித்துச்
சிதறும் பின்னூட்டங்களாய்..
நேரமற்ற நேரமெல்லாம் கூட
விழித்து வாசித்து களைப்புற்ற நீ,
கண்களைத் தேய்த்துக் கொள்வதும்
கொட்டாவி விடுவதும் கூட கொள்ளை அழகு...
நானும் உன் போலவே எல்லாம்..
உன் தளத்தில் சகலத்தையும் நீ பகிர நானும் பகிர
நமக்கான பாதையில் எங்கெங்கும் ரோஜாக்கள்..
முட்களே இல்லாமல் ...
ஹோலியைப் போல வண்ணங்களையும்
எண்ணங்களையும் வாரி இறைத்து...
இனி முட்கள் வந்தாலும் பிடுங்கி எறிந்து
நடப்போம் இன்பமான வலியுடன்...
அன்பு அனைத்தும் ஆக்கும் ஆக்கப்பூர்வமாய்..!!!

டிஸ்கி:- என் அன்பு சித்ராவுக்கு இந்த இடுகை
பரிசு ...இந்த இடுகைக்காய்...
எங்கள் அன்பிற்குரிய சகோதரர் ஸ்டார்ஜனுக்கு
இந்த இடுகைக்காய் ...
எங்கள் அன்பிற்குரிய நண்பர் வேலனுக்கு இந்த
இந்த இடுகைக்காய் ...
எங்கள் எல்லா வாசகர்களுக்கும் கூட...

செவ்வாய், 23 மார்ச், 2010

ஈசல்களும் இறகுகளும்

மழை பொழிந்த மாலை
மனம் குழம்பும் வேளை
மொழி விளங்காத பாட்டு
இனம் புரியாது சுற்றுவதாய் ..

பாய்விரித்து அமர்ந்து ரசித்த
கூத்தும் கோமாளிகளும்
ஊர்த்திருவிழாவில் ..

வெப்பமும் புழுதியும்
புழுக்கமும் நிறைந்த
கருவேல நிழல்..

ஆடு மாடு அண்ட இயலா
வரண்ட கம்மாய்
முள் சாற்றிய படல் வேலி..

துருவேறிய ஐயனாரின்
கருக்கருவாள் ..
கருவாடுகள் வீசும் வீடுகள் ..

அடித்துப் பெய்த மழை
எப்போதோ நின்றுவிட ..
அரிதாரம் கலைந்த கோமாளிகளும்..
அறுந்து தொங்கும் படுதாக்களும் ..
நின்று விட்ட கைதட்டல்களும்..

இறக்கை இழந்த ஈசல்
கண்களில் கண்ணீர்
கன்னங்களில் உப்பளம்
பின்னோக்கி செல்ல இயலாத ஏக்கம்...

நெடுந்தூரப் பயணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய் ..
இளமை தொலைந்து..
முதுமை சுமந்து..

படுதாக்கள் மாற
நடைவண்டி , தடை ஒட்டம்
பின் நகரும் நாற்காலி ....
இறக்கைகளும் ஈசல்களும்
தனித்தனியாய்....

திங்கள், 22 மார்ச், 2010

தண்ணீர்,,! தண்ணீர்..!!

நா வரண்டு விட்டது
நான் பாலையாகிக் கொண்டு..
உப்புறைந்த மண் அள்ளிக் குடியுங்கள்
மேகங்கள் கூட இல்லா வாழ்வில்...

கிணற்றையும்., குளத்தையும் .,
நதியையும்., ஏரியையும் முடித்து...
இப்போது கடலையும் தூர்த்து...

சோதனைச் சாலையில்
உருவாக்க முடியுமா ..,
நதிக்கரையோர நாகரீகம்...?

அரை துடைக்க
மரங்களை அழித்து
காகித டிஸ்யூக்கள்...

வானம் பொய்ப்பதும்.,
வனம் கருகுவதும்
வாடிக்கையான வாழ்வு..

உங்கள் சந்ததியினருக்கு
தண்ணீரும் குளுக்கோஸ்
மாத்திரை வடிவில்....

செவ்வாயிலும் சனியிலும்
இடப் பெயர்ச்சியடையலாம்
தண்ணீர் தேடி .....
அமிலமாவது கிடைக்கும்...

சிரபுஞ்சியிலும்
அண்டார்டிக்காவிலும்
எச்சரிக்கை மணி ..

பனிப்பாறைகளாய்
வாழ்வும் இருப்பும் உருகிக்
காப்பாற்றுவார் இல்லாமல்...

மலைகளைச் சிதைப்பதும்
மரங்களை அழிப்பதும் ஆத்மஹத்தி...
பச்சையங்கள் இல்லாமல்
பாளமாகிவிடும் வாழ்வு...

அபாயச்சங்கு அலறுவதற்குள்
ஆயத்தமாகுங்கள்...
புதியன சுருக்கி
பழையன பெருக்கி...

வாகன மாசு .,குளிர்பதனங்கள் .,
நீர்நிலை ஆக்கிரமிப்பு தவிர்த்து .,
இயற்கையோடு இயைந்து நடந்து.,
தூர்த்ததெல்லாம் தூரெடுத்து.,

சேமியுங்கள் மழைநீரை ..!
வீணாக்காதீர் குடிநீரை ..!!
சந்ததியருக்காய் சொட்டுச் சொட்டாய் ..!!
செல்வம் போல நிரந்தர வைப்பாய் ...!!

http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem200310.asp

மார்ச் - 22 உலக தண்ணீர் தினத்துக்காக எழுதப்
பட்ட கவிதை யூத்ஃபுல் விகடனில் வந்து இருக்கு ..

சனி, 20 மார்ச், 2010

சந்திர காந்தக்கல்

சிரிக்கிறாய்..
கிறுக்காகிறேன்...!
என் சந்தோஷத்
தின்பண்டமே ...!!

சர்க்கரைப் பாகாய்
சிரிப்புறைந்த
உன் புகைப்படத்தில்
சாரிசாரியாய் எறும்புகள்...

ஒரு முறைதான் காதல்,,,
நான் இருமுறை விழுந்தேன்,,
உன் இரு கன்னக் குழியிலும்..

சூரியப் பார்வை..
சந்திர காந்தக்கல்..
உன் சிரிப்புச் சம்மட்டியில்
எஃகிரும்பான நான் இளகி..

திடப் பொருளான நான்
திரவமாகி .,ஆவியாகி ...
எதிர் ஜவ்வூடு பரவலில்
இனம்புரியாது ...

உன் மந்தஹாசப் புன்னகையில்
நியூரான்களின்
தாறுமாறான உற்பத்தி..

சிரித்துச் சிரித்து
இளகுகிறாயா..?
இளக்குகிறாயா..?

வாழும் வரை உன் சிரிப்பையே
என் வரமாகக் கொடு...
வாழ்வு நிறைய்ய...!!!

வெள்ளி, 19 மார்ச், 2010

அமுதே..! தமிழே..!!எனதுயிரே..!!!

அதென்ன கையில் பூங்கொத்து..?
வாசலில் நின்று கண்ணில் மிரண்டு
உடையைத் திருகியது போதும்.. உள்ளே வா..
என் வீடு எப்போதும் உனக்காய்...
எப்போதோ பார்த்தோம்...
எப்படியெல்லாம் பழகினோம்..
ஏதும் நினைவிலில்லை.,
நீ உன் விட்டை பூட்டிவிட்டு அல்ல..
புதைத்துவிட்டுச் சென்ற அன்று...
இடிந்த சுவராவது தட்டுப்படுகிறதா என
அம்மக்களைப் போல தேடி ஓடினேன்...
ஒவ்வொருவர் வீட்டுக்கும்
உன் சுவற்றின் மிச்சம் .,எச்சம் .,
ஏதுமிருக்கிறதாவென...
உன் புகைப்படம் கூட
வெள்ளரித்துக் கிடந்தது..
குடைக்குள் இருப்பாயோ..?
ஒவ்வொரு குடையையும் பார்த்தேன் ..
அந்த மழைத்துளியில்., சேற்றில்.,
மரத்தடியில்., நிலவில் .,பூக்களில் .,
பொம்மைகளில் ...எங்குமில்லை...
உனக்குள் நான்., எனக்குள் நீ என்றாயே..
உயிர் நீங்கிய மெய்யானேன்...
அன்பை மட்டுமே கையளிக்கத் தெரிந்தவளே..
குண்டு வைக்க எப்போது கற்றுக் கொண்டாய்..?
வெடித்துச் சிதறிய என் இதயத்தைப் பிடித்துக்
காத்திருந்தேன் நம்பிக்கையோடு...
அந்த மருதாணிச்சிவப்பில் தெரிந்த அன்பில் கூட
உன் முத்த ரேகை இருக்கலாம்...
உன் அணைப்பும்., முத்தமும்., மொத்தமும்
தேடித் தேடிப் பிச்சியானேன்...
பிரியத்தால் அடித்தவளே...
கடமைகள் உனக்கிருக்கலாம் ..
ஆனால் காணாமல் போய்விடாதே..
சொல்லிவிட்டுப்போ...
இப்போது உள்ளே வா...
உனக்குப் பிடித்த பப்பு பூவாவும் தச்சிமம்முவும்
பிக்கியும் உன் அக்காவின் கையால் உண்ண ...

டிஸ்கி:- என் அன்பு அம்முவின் அன்புச் செல்லம்
அபிநந்தனின் பிறந்த நாள் இன்று பல்லாண்டு
காலம் நீடூழி வாழ்க.. வளமுடன்.. நலமுடன் ..
எங்கள் அன்பு அபிநந்தன் செல்லம்..என் அம்முவுக்கு
அன்புப் பரிசு இந்தக் கவிதை

வியாழன், 18 மார்ச், 2010

ஐந்தொகை ..2

எல்லாவற்றிலும் வெல்பவன்
எல்லாவற்றையும் வெல்வதில்லை...

அழகான பெண்ணை., பொறாமைக் கண்கள்
எள்ளல் பார்வையில் அலங்கோலமாக்கி..

எல்லோரிடமும் இருக்கிறது ஏதோ ஒரு உறவின்
இருப்பதான இல்லாததான தழும்பு...

மரிக்க நினைத்த முருங்கையில்
நீள் கண்ணீராய்ப் பிஞ்சுகள்...

வெய்யிலிலும் மழையிலும் காத்து குலசாமி
வருடம் ஒருமுறையாவது பார்க்க வருவேனென்று..

புதன், 17 மார்ச், 2010

இனி இது சேரி இல்லை (A SLUM NO MORE)

எ ஸ்லம் நோ மோர்...இனி இது சேரி இல்லை

உறவினர் ஒருவரிடம் இருந்து குறுந்தகவல் வந்தது..
வாராவாரம் காந்தி ஸ்டடி சென்டரில் (சென்னை) புத்தகவிமர்சனம் நடக்கிறது ..6 .45 லிருந்து 7 45 வரை....இந்தவாரம் "எ ஸ்லம் நோ மோர்" என்ற புத்தகம் பைரவனால்ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் சாருகேசியால்"இனி இது சேரி இல்லை " என்று தமிழில் மொழியாக்கம்செய்யப்பட்டது பற்றிய விமர்சனம்..

அது சேரியாய் இருந்த ஒரு இடத்தை சிறப்பாக மற்றியமைத்தது பற்றி பேசுகிறது .."முயற்சி திருவினை ஆக்கும்" என்பதற்கு ஒரு உதாரணம் அந்த இடம் ..!!!

மாங்கொல்லையில் குடிசை போட்டு இருந்த மக்கள் 1982 இல்சென்னை விரிவாக்கத்திட்டம் செய்யக்கருதி அஷோக் நகர்எல்லைக்குள் அன்னை சத்யா நகர் என்ற இடத்திற்குஇடப்பெயர்ச்சி செய்யப்படுகிறார்கள் .. அதற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 12><20> ஸ்கொயர் ஃபீட் இடமும் தலைக்கு100 ரூபாயும் வழங்கியது அரசாங்கம்..

மக்கள்வாழ்க்கை மாறிவிடுகிறதா என்ன ..?

எங்கும் குடிசையும்.,குப்பையும் .,கூளமும் ...... சாக்கடை வசதியும்., தண்ணீரும்., மின்சாரமும் இல்லாமல் ....நினைக்கவே கடினமாய் இருக்கிறதுஅல்லவா...?

சென்னையில் வெலிங்டன் ஹாஸ்பிடல் என்ற ஒரு மருத்துவமனை இருந்தது ..அதை சென்னையின் பல பெரிய மனிதர்கள் சேர்ந்து நடத்தி வந்தார்கள்.. அதை நடத்த முடியாத போது அதன் சொத்து., இடம் மற்றும் கட்டடம் விற்கப்பட்டு (அங்கு சங்கரநேத்ராலயா உள்ளது இப்போது)
" சென்னை வெலிங்டன் கார்ப்பொரேட் ஃபவுண்டேஷன்" என்ற ட்ரஸ்ட்டாக உருப்பெற்றது.. அதில் இருந்து வருடா வருடம் வரும் ஒரு கோடி ரூபாயை பல நல்ல விஷயங்களுக்குபயன் படுத்தி வருகிறது அந்த ட்ரஸ்ட்...
அந்த ட்ரஸ்ட்டின் மிக முக்கிய அங்கத்தினரான பைரவன் அந்த ட்ரஸ்ட் சுமார் 2000 இல் அந்த அன்னை சத்யா நகரை தத்தெடுத்து இன்று சர்வ வசதிகளோடும் வாழும் சூழலில் மாற்றி அமைத்ததை புத்தகமாக எழுதி உள்ளார்...
அதுதான் ...A SLUM NO MORE ..அரிய முயற்சி கூட...

2000த்தில் அந்த இடத்தை செப்பனிட முயன்ற போது அரசாங்கத்துக்குவரி கட்டவில்லையாதலால் எந்த வசதியுமே செய்யப்படவில்லை...எனவே இந்த ட்ரஸ்ட் அரசிடம் பேசி 20 வருஷ டாக்ஸை 2 வருடமாககுறைத்தது... பாக்கியை மானியமாகத்தர அரசு ஒப்புக்கொண்டது...அடுத்து சென்னை வெலிங்டன் கார்ப்பொரேட் ஃபவுண்டேஷன் பெருமுயற்சியெடுத்து ஒவ்வொரு வீட்டையும் கட்டித்தந்தது.. கழிவறை .,குளியலறை.,தண்ணீர் வசதி., மின்சாரம் .,சாக்கடை வசதி எல்லாமே.!!!.

அத்துடன் முடிந்ததா ...? என்றால் இல்லை... ஆண்கள் மிதமிஞ்சி மதுவருந்தி மனைவிகளை துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள் ..

அதற்காக CWCF (CHENNAI WELLINGTON CORPORATE FOUNDATION )நிறைய ப்ரோக்ராம்களை நடத்தி CTK ஹாஸ்பிட்டலில் சேர்த்து குடிகாரர்களைத் திருத்தியது.. மேலும் மக்களுக்கு விழிப்புணர்ச்சிஏற்படுத்த ,"வில்லுப்பாட்டு ஆறுமுகம் " போன்ற கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியது ..

மேலும் "பெண்கள் சுய உதவிக் குழுக்கள்" அமைத்து மற்றும்தொழில் தொடங்க கடனுதவி செய்து., சிறு சிறு தொழில்களில் ஈடுபடுத்தித் தங்களுக்குத் தாங்களே பொருட்களை விற்கவும்., வாங்கவும் .,வளப்படுத்திக் கொள்ளவும் உதவியது ..
இப்போது சிமெண்ட் தரை நடைபாதை...!!.
"குடி இருப்போர் நலச்சங்கம் " என ஜொலிக்கிறது சத்யா நகர்...!!!

ஆம்...!! எத்தனை வருடங்கள் தான் நாமே மீன் பிடித்துக் கொடுப்பது .. எனவேமீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது ...!!! என்று CWCF மக்களை சுயசார்புஉள்ளவர்களாக மாற்றி விட்டது...
சொல்வது கூட எளிதாகச் சொல்ல முடியவில்லை.. செய்த அவர்களுக்குஎவ்வளவு கடினமாக இருந்திருக்கும்....அந்த மக்களின் சார்பாக CWCF க்குஒரு வலைத்தளவாசியின் சல்யூட் இது.....!!!!
ஆம் இனி அது சேரி இல்லை...!!!
டிஸ்கி.:- வாராவாரம் நடக்கும் அந்த மீட்டிங்கில் புதுப் புத்தகங்கள்மட்டுமல்ல பழைய புத்தகங்களின் விமர்சனமும்நடை பெறுவதால் விரும்புவோர் கலந்து கொள்ளலாம் .....அனுமதி இலவசம்....
நன்றி:-எனக்கு மேலதிக விபரங்களைத்தந்துதவிய திரு .வெற்றி விடியல் ஸ்ரீநிவாசனுக்கும் திரு .சேவாலயா முரளிக்கும் நன்றி

வெளிவந்து இருக்கு ..

திங்கள், 15 மார்ச், 2010

சொற்கப்பல் ..தமிழ் அலை ..டிஸ்கவரி

சொற்கப்பல்
-----------------
சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு
புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக
நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன
தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து இருந்தார் ..
செல்ல நினைத்து சில வேலைகளால் செல்ல
இயலவில்லை..வரவேற்புரை அகநாழிகை பொன் .
வாசுதேவனும் அறிமுகம் அஜயன் பாலாவும்..
விளக்குபரிசு பெற்ற விக்கிரமாதித்யனுக்கு சொற்
கப்பல் சார்பாக டிஸ்கவரி புக் பாலஸின் உரிமை
யாளர்கள் முகுந்தும் வேடியப்பனும் பொன்னாடை
போர்த்தினார்கள் ,, சொற்கப்பலின் மாலுமிகள்
தமிழ்மகன் ., அகநாழிகை.,தடாகம்.காம் டிஸ்கவரி
புக் பேலஸ்....

அந்த விழாவில் விக்கிரமாதித்தன் அவர்கள் பேசி
யதில் இருந்து ..உயிர்மைகாலச்சுவடு போன்ற
பத்திரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டும்..
ஏனெனில் அவை பதிப்பிடும் குறிப்பிட்ட சிலதையே
இலக்கியம் என்றும் குறிப்பிட்ட சிலரால் எழுதப்படு
பவையே இலக்கியம் என்று கருதும் மனப்பான்மை
தான் காரணம் என்று கூறினார் ...என்று செய்தி
வந்தது..சொற்கப்பலின் முதல் கூட்டமே களை
கட்டிவிட்டது.. வாழ்த்துக்கள்..!!அஜயன் .,அகநாழிகை
வாசுதேவன்., தடாகம்.காம் .,தமிழ்மகன் மற்றும்
டிஸ்கவரி புக் பேலஸ்...!!!
*******************************************************************
இசாக்
--------
முகப்புத்தக நண்பர் இசாக்கின் கவிதை நூல்
(தமிழ் அலை) வெளியீடு ,"துணை இழந்தவளின்
துயரம்" பிப்ரவரி 28 ம் தேதி ஹோட்டல் பெனின்
சூலாவில் நடைபெற்றது. இதற்கும் அழைப்பு வந்தும்
செல்ல இயலவில்லை.. இவரின் படைப்புகள் சில
வற்றைப் படித்து இருக்கிறேன் ..தனிமையையும்.,
வலியையும்., துயரையும் சொல்லும் தீரா எண்ணங்
களை வரையும் வரிகள் அவை ..அறிவுமதி
தலைமையில் இந்நூலை வெளியிட்டவர் தமிழச்சி
தங்கபாண்டியன் ...கருத்து பழநி பாரதி ., நங்கை
குமணராசன்.,மீரா கதிரவன்.,வன்னி அரசு....
ஏற்புரை இசாக்..

மிக எளிமையாசொல்லப்பட்ட இந்தக் கவிதை
யில் பாடு பொருளாவது வாழ்க்கைதான் .. அந்த
வாழ்க்கை நெடும் பிரிவால் அலைக்கழிகிறது..
குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது என விமர்சித்து
இருக்கிறார் இன்குலாப் ...வாழ்த்துக்கள் இசாக்..!!
மேலும் படைப்புகள் வெளியிடவும் வெற்றி
பெறவும் வாழ்த்துக்கள்..!!!
***************************************************************
டிஸ்கவரி புக் பேலஸ்
-----------------------------
புத்தகங்கள் தெய்வம் நமக்கு... புத்தக நிலையங்கள்
ஆலயம்.... அதில் சென்னையில்உள்ள டிஸ்கவரி
புக் பேலஸ் புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமல்ல..
புத்தகவெளீயீட்டாளர்களுக்கும் உகந்த இடம்..சகோ
தரர் வேடியப்பனும் அவர் தம்பி முகுந்தனும் இதை
நடத்தி வருகிறார்கள்..வேடியப்பன் எழுத்துக்களில்
உள்ள நேசத்தால் இந்த நிலையத்தை நடத்தி வரு
கிறார்..மிக நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள்..
நல்ல காற்றோட்டமும் கண்ணாடிகளும் பொருத்
தப்பட்ட இடம்.. ஒரு 50 லிருந்து 100 பேர்வரை
தாங்கும் இடம்.. வெளீயீட்டு விழாக்களுக்கு குறைந்த
வாடகைகளில் அனைத்துவசதிகளும் செய்து தரு
கிறார்கள்.. சேர்கள்., மைக்., ஃபேன் .,ஹால்.,
எல்லாம்..சென்னையின் ஹிக்கின்ஸ் பாதாம்ஸ் .,
லாண்ட்மார்க் போன்ற கடைகளில்வாங்குபவர்கள்
ஒருதரம் இங்கும் வாங்கிப் பார்க்கலாம்..

இலக்கியத்தில் ஈடுபாடு இருக்கும் சகோதரர் வேடி
யப்பனுடைய புத்தகம் ஒன்று நியூ செஞ்சுரி புக்
ஹவுஸால் வெளியிடப்பட்டு இருக்கிறது ..முதல்
முறை சென்ற போது சொன்னேன் வேடியப்பனிடம்
வலைத்தளம் ஆரம்பித்து படைப்புகளை வெளி
யிடும்படி.. அடுத்த முறை சென்ற போது கணனி
யுடன் அமர்ந்து இருந்தார்..வலைத்தளமும் ஆரம்
பித்து .. நீங்களும் விசிட் செய்து பாருங்கள் ..அவர்
வலைத்தளமுகவரி http://vediyappanpages.blogspot.com/
அப்புறம் ஒண்ணு முக்கியமான விஷயம் சொல்ல
மறந்துட்டேன்..அவருடைய 6 மாத பெண் குழந்தை
யின் பெயர்," மதிவதனி " என்ன செய்வது ..?
என்னால் செய்ய முடிந்தது இதுதான் என் அன்பைத்
தெரிவிக்க என்றார்.. நெகிழ்ந்துவிட்டேன்..
வாழ்க..! வளர்க..!!

சனி, 13 மார்ச், 2010

காயின் ருசி

கரித்துக் கொட்டிய
துப்புரவுப் பெண்
வாரிச் செல்கிறாள்,
இலைத் துகள்
இல்லாத நடைபாதையை...

ஒடித்துப் போட்ட
பக்கத்து பால்கனிக்காரர்கள்
முகத்தில் இடிக்காது
என்ற நிம்மதியில்...

முறித்துப் போட்ட
கீழ்வீட்டுப் பெண்
காயும் துணிகளில்
பூச்சி விழுவதாய்...

வெட்டிப் போட்டபின்
அள்ளவந்த வண்டிக்காரன்
பிணம் சுமக்கும் டாக்ஸி போல்
பேரம் பேசி...

எல்லோருக்கும் நிம்மதி
வெட்டுப்பட்ட தண்டின் மேல்
விழுந்து கிடந்தன பச்சைப்
பால்துளியாய் சில இலைகள்...

பக்கத்து அஸ்பெஸ்டாசில்
கிடந்தசில பழுத்த இலைகள்
அதன் கல்லெடுத்துப் பால்
ஊற்றிய ஞாபகமாய்...

முதலில் முறிந்த
அதன் ஒற்றைக்கிளை
ட்யூப்லைட்டையும் சாய்த்து
சிலநாள் இருண்டு கிடந்தது
துஷ்டியுடன்...

காக்கைகளும் குருவிகளும்
வண்டுகளும் இல்லாமல்
கண்கள் காயும் வெளிச்சத்தில்
வறண்டு கிடந்தது
சிமெண்ட் தரை...

நிலவு கூட
மொட்டையடித்தது போல்
இலையிழந்து
அழகிழந்து
களையிழந்து...

விழிப்புவரும் நடுநிசி
ஜன்னல் வழி அசைந்து
கன்னம் வருடும் சுகமிழந்து
துக்கமாய்...

திரும்பவும் சுரக்கவே இல்லை
அதன் முலைகள்
வெட்டவேண்டும் என
நினைத்த என் மனதின்
கொத்துப்பட்டதுபோல்...

எப்போதாவது
நினைத்துக் கொண்டார்கள்
எல்லோரும்
அதன் காயின் ருசி பற்றி...

http://www.vikatan.com/ http://youthful.vikatan.com/ http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem110310.asp

இது மார்ச் மாதம் 12ம் தேதி யூத்ஃபுல் விகடனில்
வந்து இருக்கு

வெள்ளி, 12 மார்ச், 2010

எனக்குப்பிடித்த பத்துப் பெண்கள் ...

அன்பு சகோதரி திவ்யாஹரியின் அழைப்புக்
கிணங்க இந்த இடுகை ..

நிபந்தனைகள் :-
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?

வை.மு. கோதை நாயகி அம்மாள் :- முதல் பெண்
எழுத்தாளர் ..
முத்துலெக்ஷ்மி :- பெண்கள் முன்னேற்றத்துக்குப்
பாடுபட்டவர் .,
"கேரம்" இளவழகி:- விளையாட்டு வீராங்கனை.,
கல்பனா சாவ்லா:- விண்வெளி வீராங்கனை.,
மருத்துவர் ஷாலினி.:-உடல் உளவியல் மருத்துவர்.,
இந்திரா நூயி :- பெப்சி CEO .,
சந்தா கோச்சார் :-ICICI வங்கி சேர்மென்.,
கேதரின் சீடா ஜோன்ஸ் :- ஹாலிவுட் நடிகை..
மேதா பட்கர் :- சமூக சேவகி..
ரப்ரி தேவி :-சிறந்த (!) அரசியல் வாதி ...

இந்த பதிவை தொடர நான் அழைப்பது :-

ராகவன் நைஜீரியா.,
பா.ராஜாராம்.,
கோபிநாத் முத்துசாமி .,
முனுசாமி பாலசுப்பிரமணியம்.,
சாந்தி லெக்ஷ்மணன் .,
ஃபாத்திமா ஜொஹ்ரா
அன்புடன் மலிக்கா .,
ஷஃபி.,
எம்.பிரபு ..


புதன், 10 மார்ச், 2010

மருதாணிசெடிக்கு

இதுவும் 1986 கவிதை கோபியை சேர்ந்த நண்பர்
பா.மா. மனோகரன் நடத்திய பூபாளம் இதழுக்காக
எழுதியது ..

எனக்குள்ளேயும் கப்பு வெடித்துப்
பூச்சொரியும் பய மரங்கள்
பிரசவிக்கும்..

நீ இருந்தது என் வீட்டின்
வடக்கு மூலையில்..
என் மனதின் வசந்த மூலையில்..

கையிலும் காலிலும்
பச்சையாய்க் கருத்தரித்து
சிவப்பாய் உமிழும் உன்னை
உதிர்க்கவே மனசில்லை..

மனசெல்லாம் மணக்க .,மணக்க..
உன் மிருதுத் துகள்கள்
உள்ளங்கையை வருடிக்
கொடுக்கும் போது .,

என்னுள் குளிர்ச்சி
ரத்தம் செலுத்தும் போது .,
அடி வயிற்றின் பயச்செடிகள்
உன்னை யாரிடமும் உதிர்த்து
விடுவாயோவென கிளை வெடிக்கும் ...

தெருவோரப் பொறுக்கிகள்
உன்னைப் பறிக்கும் போது .,
உன் முட்களின்
தலை வணங்கல்கள் வருத்தும் ..

வெளிச்சப் பாதுகை தடம் பதிக்கும்
அகலிகைக்கல்லாய் நீ என்னை
உயிர்க்கச்செய்து..

சிவப்பு வெளிரும்போது
உன்னைஅடைய வருவேன்
திரும்ப . .திரும்ப ..

இழப்பு என்பது
யார்க்குள்ளும் ஏற்படலாம்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பிரிவின் தரிசனம் கூட எதிர்படக்கூடாது...

செவ்வாய், 9 மார்ச், 2010

செவிலி... யாதுமான சக்தி நீயுமாகி!

செஞ்சிலுவை சுமந்துவரும்
வெள்ளுடை தேவதையே...

சேவை செய்ய வந்த
பாவை விளக்கே...

வாழ்வின் திசையில்
வளையக் கற்றுத் தந்த
நதியோர நாணலே...

கருவாகி உருவாகி
தாயுமான தாதி
உடல் நோவிலெல்லாம்
உடன் நிற்பவளே..

உன் புன்னகையில்
உயிர்த்தெழுகிறேன்
மருந்துவக்கும் மருத்துவச்சி..
மனித ரூபம் எடுத்த சக்தி..

துயருற்ற போதெல்லாம்
என்னருகே நீயிருந்தாய்
தோளணைத்து எனைச்சுமந்து
உடல் துவட்டி மருந்தூட்டி

படுக்கையை சீர்செய்து
பாடிஸோர் வராமல் காத்து
வெளியாகும் எச்சமெல்லாம்
வெறுக்காமல் சுத்தம் செய்து...

வியாதியுடன் போராட
வாழ் நாளெல்லாம் கூட வந்து
இறைமைக்கு அடுத்தவள் நீ
அத்தனை பொறுமை உனக்கு...

யுத்தமோ பேரழிவோ
யுகயுகமாய் உன் சேவை
தெரசாவாய் நைடிங்கேலாய்
தன்னுயிரைத் துச்சமாக்கி...

நடுநிசியோ வைகறையோ
ரணகளத்திலும் முதலுதவி...
அரு மருந்தே அர்ப்பணிப்பே
ஆற்றலோடு வந்த அருங்கொடையே..
.
யாதுமான சக்தி
தாயுமானவளே
வாழ்ந்திடு நீ
எல்லோருக்குமாய்
என்றென்றென்றும்!

http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/thenammaipoem050410.asp

டிஸ்கி:- ஒரு சகோதரர் எனக்கு யூத்ஃபுல்
விகடனின் லிங்கை அனுப்பி வைத்தார்,..
சகோதார் கோபிநாத் முத்துசாமி
(http://bhrindavanam.blogspot.com/)யின்
அன்பு அம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டதை
உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

இது சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல் .
சக்தி 2010 யூத்ஃபுல் விகடனில் வந்தது..

ஞாயிறு, 7 மார்ச், 2010

மகளிர் தினம் ஸ்பெஷல் (இசைப் பாடல்)




மகளிர் தினத்திற்காக நண்பர் ,"அவர்" பட இயக்குனர்
திரு. செல்வகுமார் அவர்கள் ஒரு பாடல்...--
"தாய்மையும் பெண்மையின் பெருமையும்" மிகுந்த
ஒரு பாடல் ..--எழுதும் படி கூறினார்.
அதை ,"அவர்" படத்தின் இசை அமைப்பாளர்
திரு. விவேக் நாராயணன் இசை அமைத்துப் பாடி
இருக்கிறார்..அன்பு சகோதரிகளே... உங்களுக்காக
நானும் சகோதரர் திரு. செல்வகுமாரும் .,
திரு.விவேக் நாராயணனும் வழங்கும் பாடல் .
கேட்டு மகிழுங்கள் ....பின்னூட்டத்துல உங்க
பதில் அன்பைத் தெரிவியுங்க மறந்துடாம...!

இது டவுன்லோடு லிங்க்..
http://www.4shared.com/file/236169902/cf878963/Magalir_dhinam.html


அன்பென்னும் ஊஞ்சலில் அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!

அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப் பறவையாய் நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே.!

காந்தம் நீ கருணை நீ எரிமலை நெருப்பும் நீ
பனி உருவச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!


வெள்ளி, 5 மார்ச், 2010

சாயம் போன வானவில்கள்

1985 மார்ச் புதிய பார்வைகள் இதழில் வெளி
வந்தது ..இது என்னுடைய 150 ஆவது இடுகை...

நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்..
எங்களுடைய ஒட்டகங்கள்
எலும்புக்கூடுகளாய்
நின்று போயின..
சித்தன்ன வாசல்கள்
எலிப்பொந்துகளால்
வவ்வால்களால் சீழ் பிடித்து..

நாங்கள் கடற்கரைக்
கோயில்களானோம்..
அலைக்கரையான்களுக்கு
எங்களை அரிக்கக்
கொடுத்துவிட்டு..
எங்கள் நம்பிக்கைகளின்
கற்புகளைக் காப்பாற்றிக்கொண்டு..

காற்றுக்கு சங்கீதத்தைக்
கற்றுக்கொடுத்து மலடுகளாய்..
எங்களின் வீணைகள்
ஸ்பரிசிக்கப்படுவதற்கு முன்னமேயே
தந்திகள் அறுக்கப்பட்டன..

நாங்கள் உருவாக்க
நினைத்ததென்னவோ
அஜந்தாக்கள்தான்..
கிடைத்தவை கரி அடைத்த
பூதப் பிரசவங்கள்..

நாங்கள் அர்ஜுனர்களாகிப்
பாதை திரும்பிக் கொண்டிருக்கிறோம்..
எங்கே எங்களின் அந்த
இதிகாசக்கண்ணன்...?

கோவர்த்தன கிரியைத்தூக்குதல்..,
ஆதிஷேஷன் மேல் நடனமாடல்..,
அரக்கியை அழித்தல் என்ற
இந்திரஜால வித்தைகளை
எம்மைப்போன்றோர்க்குக்
கற்றுத்தரட்டும்..

நாங்கள் கப்பல்களாய்த்
தயாராய்க் காத்திருந்து..
நிமிஷ நேரத்தில்
ஜல்லிகளாய்த்தூர எறியப்பட்டு..

பக்கத்து மேகங்களைப்
பார்த்து பரவசித்தபோது
எங்களை அபிஷேகித்தது
எரிமலைகுழம்புதான்
நாங்கள் புறப்பட்டது
பெரும்பயணம்தான்
எங்களுடைய ஒட்டகங்கள்தான்
எலும்புக்கூடுகளாய்..

வியாழன், 4 மார்ச், 2010

நதி மூலம் ரிஷி மூலம்

"பார்... நீ எவ்வளவு மோசமான ஆசாமியின்
எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து இருக்
கிறாய் பார். அந்த பிம்பத்தை உடைக்கிறேன்
பார்.... ஒரு நடிகை என்பவள் எந்த சமயத்திலும்
எல்லார் பார்வைக்கும் விருந்தானவள்.. அவளை
இப்படியெல்லாம் காட்டலாம்.. ஈனப்பிறவி...."
என்று எந்த விஷயத்தைப் போட்டாலும் நாலு
நாள் ஆனாலும் கூடத்தில் அமர்ந்து அதை
ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்து எதற்
காகவோ சந்தோஷப்பட்டு மகிழ ஆட்கள்
இருக்கிறது .. என்னுடைய டி ஆர் பி ரேட்டிங்
ஏற என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற ஊடகம் .. எல்லாவற்றிலும் ஒரு பொறுப்
பற்ற தன்மை.. இதை மார்பிங்க் என்று சொல்ல
ஒரு கூட்டம். அடுத்த பிரச்சனை ஆரம்பம்..

எழுத்துக்கள் மூலமே அறிந்து .."உங்கள் மகிழ்ச்சி
உங்களுக்குள்ளே இருக்கிறது.. அதை யாரும்
அழிக்க முடியாது".. என்ற வரிகளைப் படித்து
முடிந்தால் ஒரு முறை பிடதி செல்ல வேண்டும்
என நினைத்தது உண்டு ...கானலை உண்மை
என நம்பியது என் பிழை..அனுபவங்கள் கற்றுக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன..

இன்றும் வயதுவந்த இருவர் என்ன வேண்டு
மானாலும் செய்யலாம்.. ஆனால் எல்லா
மதங்களாலும் புனிதமாக மதிக்கப்படும் காவியோ
வெள்ளுடையோ உடுத்தி அல்ல..

குழந்தைகளுக்கு சிலவற்றை போதிக்கிறோம்..அந்த
ஒழுக்கம் சார்ந்த எண்ணங்களை விதைக்கும்போது
அதை வலியுறுத்த ஒரு பிம்பம் தேவைப் படுகிறது..
விவேகானந்தரைப் பார் .. வள்ளலாரைப் பார் என்
கிறோம்.. அப்படி ஒருவரை நாம் சுட்டும்போது
அதில் அசிங்கம் இருந்தால் யாரை முன்மாதிரியாகக்
கொள்வது.. திருவோடு வைத்திருப்பதாலேயே பத்திர
கிரியாரை பட்டினத்தார் பணக்காரர் என்றாராம்..

.இன்று தங்க சிம்மாசனம்., ரதம் என்று ஹைடெக்
ஆஸ்ரமங்கள்.. ஓவ்வொரு தரிசனத்துக்கும் பல்லா
யிரங்கள் பணம் கட்டிப் பார்க்கிறார்கள்.. எங்கே
இருந்து வருகிறது இவ்வளவு பணம் ..

யாரையோ நம்பி அல்ல உன்னையே நம்பு ..
உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என
இனி மாற்றிக்கொள்ளலாம் என இருக்கிறேன்
நல்ல புத்திக் கொள் முதல்

புதன், 3 மார்ச், 2010

ஆ..! "சாமி"

பார்க்க ரிஷபம் போலவே
பரிசுத்தமாய்..
கம்பீரக் கொம்புகள்..
கழுத்தில் மாலைகள்..
நெற்றியில் குங்குமம்..
சைவத்தின் தொகுப்போ...
எழுத்தெல்லாம் செங்காவி...
காற்றெல்லாம் அகவிதைகள்..
விளைந்தபின் கோயில் மாடாய்...
எதன்மீதோ நம்பிக்கை
உய்விக்க வந்ததென்று ..
நல்லவேளை....!!!
எழுத்தோடு எரிந்தது எல்லாம்...
காடெல்லாம் கருங்காலி..
அது சாதுத்தோல் போர்த்திய
சினைப் பன்றி....

ஆசாமியெல்லாம் சாமியல்ல...!!!
அந்தர்யாமி...!!!

செவ்வாய், 2 மார்ச், 2010

உபரி

பூட்டின பக்கத்து வீட்டின்
தென்னை முதிர்ந்து காய் உதறியது
எல்லைசுவர் தாண்டி...
எடுக்கவா .,உபயோகிக்கவா.,
தூக்கித் திரும்ப எறியவா.,
மண்ணிலேயே கிடந்தழியட்டுமா.,
யாருக்கும் கொடுக்கலாமா ..
குழப்பத்தில்... கோபம் கூட ...
தென்னையிடம்..
எங்கோ ஈசல் பொறித்து
இலையில் பொறுக்கித்
தின்னும் குழந்தை
தொலைக்காட்சியில்....