வியாழன், 26 நவம்பர், 2009

மலர்கள்

இது ஒரு 1984 அக்டோபர் மாத
கல்லூரி டைரிக்குறிப்பு.....

இலைகளுக்கு இறைவன்
கொடுத்த குடைகள்...

பச்சை உடை அணிந்து
உடலை மறைத்து
செடி காட்டும் முகங்கள்...

நடக்கத்தெரியாத வெகுளி
மனிதர்கள் பிரசவித்த
சிரிப்புக் குழந்தைகள்...

காற்றுடன் சினேகம்
செய்து கொள்ளச்
செடிகள் பூத்த புன்முறுவல்கள்...

பிறக்கும் போதே
அழத்தெரியாமலே
சிரிக்கக் கற்றுக்கொண்ட
பச்சை மண்கள்...

கரும்பச்சையில்
பூத்து நின்ற
ஜிகினா நட்சத்திரங்கள்...

வெய்யிலின் தொடுதலில்
மரித்துப்போகும்
மின்மினிப் பூச்சிகள்...

செடியின் முகத்தில்
இறைவன் குத்திய
வர்ண மச்சங்கள்...

செடியைத் தினமும்
பருவம் வந்த பெண்ணாய்
நாணித் தலை குனிய வைக்கும்
வசந்த நிகழ்வுகள்...

மரங்கள் மனிதனைக்காண
ஆசைப்பட்டுத் தினமும்
திறக்கும் கண்கள்...

வயல்வெளி வரப்பின்
கால்வாய் நீரைத் தொட்டுப்
பார்க்கச் செடிகள் படைத்துக்
கொண்ட கரங்கள் ...

நீலப்பச்சையில்
பூத்து நின்ற
வெண்மேகங்கள்...

மரங்களின் செடிகளின்
நிழல்கள் நிதமும் அணியும்
பாத அணிகள்....

செடித்தாய் பத்திரமாய்ப் பாதுகாக்கும்
பருவம் வரக் காத்திருக்கும்
மொட்டுப்பெண்கள்....

விடிகாலைப் பனிவேளையில்
செடி கரம் நெறித்துச்சோம்பல் முறித்ததனால்
போதவிழும் மொட்டுக்கள்...

கவிஞர்களைப் பரவசப்படுத்தும்
செடிகள் எழுதிய
ஆச்சர்யக் கவிதைகள் ....

சனி, 21 நவம்பர், 2009

பிடித்த பத்தும் பிடிக்காத பத்தும்

நெஞ்சில் நிறைந்தவர்களும் நெஞ்சை எரிப்பவர்களும்

அன்பு சகோதரர் விஜய்யின்
(விஜய் கவிதைகள் )ஆணைக்கு
கட்டுப்பட்டு ......
(மிகத் தாமதமாக எழுதுவதற்கு
மன்னிக்கவும் விஜய்)

1. அரசியல்வாதிகள்

பிடித்தவர் :- இந்திரா காந்தி , ஜெயலலிதா
(மிசா. பொடா, தடா தாண்டியும் பிடிக்கிறது)
தன்னம்பிக்கையின் உருவங்கள் ...
என் இந்தியத் தாய்கள்.. அன்னை ..!அம்மா..!!!

பிடிக்காதவர் :- மோடி., சுவாமி., தாக்கரேக்கள்..

2, நடிகர்கள்

பிடித்தவர் :- விக்ரம் , சூர்யா. மாதவன் ,
அர்விந்தசாமி., பசுபதி....

பிடிக்காதவர் :- யாரையும் புண்படுத்த
மனமில்லை

3. கவிஞர்கள்

பிடித்தவர் :- பாரதி, கண்ணதாசன். .
தாமரை (வசீகரா ஒன்று போதும்)
வலைத்தளத்தில் நேசன், ஹேமா, விஜய் ..
நேசன் நவீன பாரதி

பிடிக்காதவர்:- மேடை ஜால்ராக்கள் எல்லோரும்

4. நடிகைகள்

பிடித்தவர்:- பானுமதி, சரிதா, ராதிகா,
குஷ்பூ சிம்ரன்.

பிடிக்காதவர் :- அப்படி யாருமில்லை

5. இயக்குனர்கள்

பிடித்தவர்:- பாலசந்தர், சேரன் ,
சசிகுமார், சுகாசினி.

பிடிக்காதவர் :- வினியோகஸ்தர்கள்,
தயாரிப்பாளர்கள் ,பைனான்சியர்கள்
எல்லோருடனும் சமரசம் செய்து
நன்றாக எடுக்கும் சிலரும்
சொதப்புவதுதான் பிடிக்கவில்லை....

6. இசை அமைப்பாளர்கள்

பிடித்தவர் :- எம்.எஸ். விஸ்வனாதன் (வேலை
வேண்டும்) ஹாரிஸ் ஜெயராஜ் (நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை)

பிடிக்காதவர் :- காப்பி அடிப்பவர்கள் எல்லோரும்
மற்றும் ரீமிக்ஸ் செய்பவர்கள்...

7. விளையாட்டு வீரர்கள்

பிடித்தவர் :- காரம் இளவழகி,
ஸ்குவாஷ் ஜோஸ்னா சின்னப்பா....

பிடிக்காதவர் :- பெட்டிங்குக்கு ஆடுபவர்கள்...

8. ஊர்கள்

பிடித்தது :- மதுரை., காரைக்குடி, செட்டிநாடு
(காரைக்குடியைப் பற்றியும் செட்டிநாடு பற்றியும்
விரிவாக எழுத வேண்டும் ..
மிக மிக அழகான ஊர்கள்...
சமையல் புடவைகள் கட்டிடக்கலை
கோயில்கள் எல்லாமே சிறப்பு )

பிடிக்காதது :- செம்புலப் பெயல் நீர் போல
ரெண்டு நாளிலேயே கலந்துவிடும்.
எனவே பிடிக்காத ஊரில்லை ...

9. பாடகர்கள்

பிடித்தவர்கள் :- பி.பி. சீனிவாஸ் (சந்திப்போமா)
டி.எம்.எஸ். (எல்லாமே) சங்கர் மகாதேவன்
(தனியே தன்னந்தனியே ...----..ரிதம்)
உன்னிகிருஷ்ணன்(என்னவளே) ., கார்த்திக்., கிரீஷ்..

பிடிக்காதவர்:-ரீமிக்ஸ் பாடுறவங்கதான்

10. பாடகிகள்

பிடித்தவர் :- உஷாஉதுப்., ஜானகி, ஜிக்கி ,,
ஜென்சி, சுசித்ரா

பிடிக்காதவர் :- யாருமில்லை ..
எல்லோரையுமே பிடிக்கும்...

நான் மாட்டி விடப் போகும் நண்பர்கள் ஐவர்
சந்ரு
தியாவின் பேனா
Mrs.Menagasathia
எம்.எம்.அப்துல்லா
சந்தான சங்கர்
யாராவது ரெண்டு பேரை மட்டும்
சொன்னா அவங்க எஸ்ஸாயிடறாங்க...
எனவே இவங்க ஐவரும் ...
அப்பாடா நல்லா மாட்டி விட்டாச்சு ...
நன்றி மக்களுக்கு...!!!
(இவ்வளவு பெருசா எல்லாம்
இம்போஸிஷன் குடுக்காதீங்கப்பா ...
எதோ பத்து பதினைஞ்சு வரியில கவிதை
எழுதிக்கிட்டு தேமேன்னு இருந்தேன் ...
ஆனாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் என்ற பரந்த
மனப்பான்மை தான் காரணம்...

நன்றி நன்றி நன்றி

வெள்ளி, 20 நவம்பர், 2009

பரங்கிப்பூ

இரட்டைக் குவிக்கண்ணாடியும்
நடைப்பயிற்சி மின்சாதனமும்
இரத்த அழுத்தமும் இன்னா நாற்பதை
இடித்துரைக்க ...

பரம்பரையோ
உன் கைப்பக்குவமோ
அதிகம் உண்டு கொழுப்புமேற்றி ...

நெற்களஞ்சியத்திலிருந்து
நியூதில்லியின் கரோல்பாக்
கணப்பு வீட்டில்....

மார்கழியின் திருவையாறும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒலி ஒளி நாடாக்களில் கண்டு....

பகல் பத்தும் ராப்பத்தும்
வைகுண்ட ஏகாதசியும்
ஆனித்திருமஞ்சனமும் ஏக்கமெழ வைக்க..

பத்துவிரல் கோலத்தில் பூத்த
என் பரங்கிப்பூவே...
பப்ளிமாஸே....

என் சகுந்தலையே வைஷாலி
யசோதரா மேனகையே...
மாவடுக் கண்ணழகி ...
மலர்ந்த சிரிப்பழகி....

துஷ்யந்தன் ரிஷ்யசிங்கன்
சித்தார்த்தன் விஸ்வாமித்திரனல்ல
நான் உன்னைக் கைகழுவ.....

ஆண்காமம் மட்டும் கண்டு
அழிந்துபட்ட நீ என்னுள்
ஆண்காதல் பார்.....

என் பூபாளமே மோகனமே
ஆனந்தபைரவியே ராகமும் தாளமும்
போல் நீயும் நானும்....

என் பாத தரிசனத்தை
பாதுகா ரட்சையை தாலியாய் சுமந்து
என் காலடியில் நீ....

மஞ்சள் குங்குமம் மெட்டி
பூக்களணிந்து சனாதன தர்மத்தின்
அநாகத வெளிப்பாடே....

அட்டாங்க யோகங்களும்
பதஞ்சலியும் வியாக்கிர பாதரும்
இறுகப்பற்றின இறைவனைப்போல்...

வானப்பிரஸ்தம் ஏகாமல்
இம்மையில் நானும்
உன்னை இறுகப்பற்றி
க்ருஹ்ஸ்தாஸ்ரமத்தில்.....

வியாழன், 19 நவம்பர், 2009

ஜாதிப்பூ

நவதான்யங்களிலும் எள்முடிச்சிலும்
எலுமிச்சை விளக்கிலும்
கழிந்துகொண்டே இருக்கும்...

உன் இளமை வீணாய்....
நன்னீர் முகத்துவாரம்
கடலுள் அழிவது போல்... .

உன் அன்பு வார்த்தைகள்
என்னுள் கங்கின்
கதகதப்போடு...

சூரியனைப்போல்
தீராமல் எரிந்துகொண்டே
நான்...

பாம்புப்பிடாரனின் மகுடியாய்
உன் பார்வைகளிலும்
வார்த்தைகளிலும் மயங்கி...

நேசத்தின் இழைகள்
சரங்கொத்தியாய்
இன்பமாய் வலித்து...

விடுபடமுடியாமல்
உன் அன்பெனும் ஆணிக்குள்
அழுந்தி ரத்தச்சுகத்துடன்....

வேட்டைக்காரனும்
ஆடப்படுபவனுமாய்
உன் உண்டிவில்லில்....

பார்த்துப் பார்த்துப்
பெருமூச்சிலேயே தேய்ந்து
கொண்டிருக்கிறோம் நாம்....

சுயேட்சைஎண்ணங்கள் இருந்தாலும்
மத ஜாதிக் கோட்பாடுகளுக்குள்
சிக்கிச்சீரழிந்து....

முகப்பில் பூத்து
எட்டாத உயரத்தில் இருக்கும்
ஜாதிப்பூவைப்போல்.....

பறிக்கப்படாமல்
உன் வாசம் மட்டும்
எங்கெங்கும்....

ஈசலும் தும்பியும் போல்
குறுகியகாலம்தான்
நம் நேசமென்றாலும்....

நினைக்கும்போதெல்லாம்
உன் வாசம்
என் சுவாசத்தில்....

புதன், 18 நவம்பர், 2009

சரக்கொன்றைப்பூ

பார்வதி ஆயா வீட்டு முகப்பு
பாத்திர வாடகை நிலையமாய்
சரக்கொன்றை சாட்சி....

பிறந்து வளர்ந்து படித்து
உனைப் பார்க்கவென்றே
அபுதாபி வந்தது போல்...

அல் அய்னில் க்ரூஸரில்
அல் மராயின் லாபான் போல்
வெண்மஞ்சளில் வந்த
லெபனிய அழகே...

கிரிஸ்டல் பேலஸின்
ஷாண்டிலியர்கள் போல
ஜொலித்த கண்களுடன்...

துபாய் மாலின்
கேண்டிலைட்டின்
அல்ப்ரோஸாய்...

புர்ஜ் அல் அராபின்
கலங்கரை விளக்கமாய் நீ
இசை நீரூற்றாய் நான்...
உன்னை எட்ட...

தங்கச்சிலைப் பெண் கூட
உன்னைப் பார்த்துத்தான்
முத்தமிட்டுக்கொண்டே....

உனக்காகவே செயற்கை
அருவியில் மனிதர்கள்
தலைகீழாகப் பாயவும் தயாராய் ...

பூக்களின் புன்னகையை
மட்டுமே அறிந்த நான்
முதன் முதல் அறிந்தேன்
பூக்களும் புகைக்குமென...

பட்வைஸரா ஹெனின்கைனா
சாப்ஸூயியுடன் நீ பிடித்தது
மால்பரௌ ரெட்டா லைட்டா...

தயங்கி மயங்கி நின்றேன்
உன்னால் புகைக்கப்படும்
டேவிடாபாகவாவது ஆக மாட்டோமாவென...


பி.கு......
படித்து விட்டு கருத்து அல்லது
ஆங்கிலக் கலப்பு பிடிக்காவிட்டாலும்
கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் ...
கருத்து சொல்லாம போயிடாதீங்க
வழக்கமா படிக்கிற மக்களே ......

செவ்வாய், 17 நவம்பர், 2009

டிசம்பர் பூ

நொடிக்கு நூறு முகம்
காட்டும் என் ஆசை
இந்திராணி....

கண்கள்வழி பிடிபட்டேனே
மத்திய சிறையா அது...
வெளியேறமுடியாமல்
ஆயுள் கைதியாய்....

மயங்கினாயா
மயங்குவதுபோல்
மயக்கினாயா....

நீ தட்டெழுத்தால் எனைத்தட்ட
நான் சுருக்கெழுத்துக் கூட
சுருக்காய் எழுதி...

உனைக் காணும்
ஒரு நொடி கூட
வீணாக்க விரும்பாமல்....

ஜிஆர் ஈ வகுப்புக்கும்
கணினி பயிற்சிக்கும்
சென்றுவரும் நாம்...

ஜெயித்துக்காட்டுவோம்
காதலோடு கல்வியும்
கூடுமென...

நீ ஊதா வயலட் பர்பிள்
மஞ்சள் நாமக் கோடு என
உடைக்கேற்ற டிசம்பர்பூ
சூடிவரும் மன்மதப்பூ....

புதிய பார்வைகள் கணையாழி
காலச்சுவடு உயிர்மைக்கு
நாம் பொருததைக்கண்டு...

குழம்பித் தவித்தன
வாசகசாலைச் சுவர்கள்
சண்டையா ஊடலாவென்று ..

.வெண்ணைத் தாழி மண்டபத்தில்
கிருஷ்ணனுக்கு இடுவதாய் நீ
என் மேல் வெண்ணை வீசி ...

சேரன் குளமும் திருப்பாற்கடலும்
கீழராஜவீதியும் பந்தலடியும்
உன் பின் நான் சுற்றி...

ஆடி பதினெட்டில் ஓலைத்தோடும்
கறுப்பு வளையலும் பூமாலையும்
சித்ரான்னமும் ...

பாமினிக்குப் பரிசாய் ...
என்னையும் மூழ்கடித்தாய்
மீளாக் காதலில்...

வாழ்வில் வருவாயோ
வழி வழியே போவாயோ
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
உன்னுடன் இந்த நிமிடம்...

திங்கள், 16 நவம்பர், 2009

கினியா பூ

வான் ஹ்யுஸைனின்
ஸூட்டணிந்த
வயலட் லேடி...

காப்பர்கலர் ஹேர்ஸ்ட்ரீக்கிங்கும்
ஏரோபிக்ஸும் யோகாவும் செய்யும்
மெல்லிய தேவதையே...

ப்ரூட் மீல்ஸும் சாலட்ஸும்
ஸாண்விச்சும் உண்டு உடம்பை
ஸ்லீக்காக வைத்திருக்கும்...

மேடம் டூஸாட்டின்
மெழுகுச் சிலையே.....
மிட்டலின் பெண்ணுருவே....
என் மேலதிகாரியே..

நிர்வகத்திறமையில் நீ
இந்திரா நூயிக்கும் மேலே...
உன் பிஏவாய் நான்
ஒவ்வொரு தருணத்திலும் வியந்து...

ஆட்சி மாறினாலும்
பங்குச்சந்தை சரிந்தாலும்
நெருக்கடிநிலையே பிரகடனம் ஆனாலும்
நெஞ்சுறுதியுடன் புன்னகைப்பாயே....

சைபர் க்ரைமில்
சைபர் கேஸான நிறுவனம் கூட வாங்கி
சைபர் ஸ்பேசில் உயரச்செய்வாயே...

சென்செக்ஸும் நிப்டியும்
உன் நிறுவனத்தின் கிராப்பை ஒட்டி...
பிறக்கும் போதே வணிக நாடி...
எல்லாவற்றிலும் இயக்குனர் நீ...

பெட்ரோல் முதல்
தொலைத் தொடர்புவரை
புதுமை முதன்மை
தைரியம் தனித்துவம்
உன் தாரக மந்திரம்...

ஜே டபிள்யூ மாரியட் லீ மெரிடியனில்
பிரதமர்களூடன் விவாதத்தில் நீ
பிஸினஸ் மாக்னெட்....

கேப்பிடல் மார்கெட்
சிஎன்பிசி யிலிருந்து
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வரை...

உலகமே உன் பின் சுற்றும்போது
உன் கண்ணசைவில் சுற்றும்
துணைக்கோளாய் நானும் ....

ஞாயிறு, 15 நவம்பர், 2009

தும்பைப்பூ

கடலில் மூழ்கிய
கப்பலாய் சென்னை...
மழையில் ராயவரம்
குடிசைகள் தெப்பமாய்...

ஆலை ஊருக்குள்
தும்பைப்பூ வேஷ்டி செய்யும்
தினக் கூலியாயிருந்து ...
வேலையிழந்து...

ரிக்ஷாக்காரனாய்.
மீன்பாடிவண்டி ஓட்டியாய்
திருவல்லிக்கேணியில்...

நியானோ சோடியமோ
ஒளிவீச என்னுடன்
சேர்த்துக்கொண்ட
என் கறுத்த உதட்டழகி ...
கன்னத்து மருவழகி...

காடுகளில் முளைத்துக்
கிடக்கும் தும்பைப்பூவாய்
என் மார்பில் மகன் ...
சிறுகோழிக்குஞ்சாய்...

குலினான் சுரங்கத்து
பட்டை தீட்டப்படாத
பெட்ரா டைமண்டாய்...

மழையென்றும்
வெய்யிலென்றும்
நான் இடம் பெயரும்
திசையெல்லாம்
என்னோடு கூட அவள்...

ப்ளாஸ்டிக் குடத்தில்
நீர் சுமந்து கொடுத்தும் .,
மல்லிகை கட்டி விற்றும் .,
வீட்டு வேலை செய்தும்.,

காசு புரளும் நாளெல்லாம்
ராவுத்தர் பிரியாணியும்
ரத்னா கபே இட்லி சாம்பாரும் ...

மழையடித்து என் உலகம்
மேல் கீழாய் மாறும் காலம்.,
பாரீஸின் ப்ளாட்பாரங்களில்...

தார்பாலின் தடுப்பு வீட்டில் ...
கல்கூட்டி சோறாக்கி ..
கருவாட்டுக் குழம்போடு...

வாசமாய் அவள் போட
பாசமாய் என் கண்ணில்
இரு தும்பைப்பூக்கள்....

வெள்ளி, 13 நவம்பர், 2009

வாழைப் பூ

கீரைக்காரியின் கூவலில்
மிதந்து வந்தது
வாழைப்பூ..

மாடியில் இருந்து
கூடையைக் கீழிறக்கி
பூ வாங்கிய பூவை...

சாம்பல் புறா நீ...
சாண்டில்யனின்
ராஜபேரிகை...

என் நெஞ்சம் அதிர அதிர
மறுபடி மறுபடி பார்த்தேன்..
என் இதயம் இயங்குவதை
உறுதி செய்ய...

கின்னஸில் பதியலாம்
உலகின் அதிவேக பம்ப் என
என் இதயத்தை...

கிண்ணம் வழி
என் வீட்டில்
உன் உசிலி
என் தட்டில்...

துவர்ப்புக்கூட
உன் கை பட்டதால்
உவப்பானது எனக்கு ...

குடியிருப்பில் திருமணம்
வாழைமரம், தோரணம்,
மொட்டைமாடி ஷாமியானா...

பட்டுப்பாவாடை தாவணியில்
மடல் பிரிந்த பருவப்பூவாய்
ஜிமிக்கியில் நீ ...

அதன் ஒவ்வொரு குலுக்கலிலும்
ஒன்பதாம் மேகத்தின் மேல்
நான் தடுமாறி....

வாழைப் பூப்பந்தலுக்குள்
வாழைத்தண்டுக் காலெடுத்து
வசந்தமாய் நீ வர
வேஷ்டியில் நான்...

பன்னீரும் ரோஜாவும்
சந்தனமும் எடுத்து
கல்கண்டுப்பார்வையை
என் மேல் நீ வீச...

நின்றதடி என் இதயம்...
இன்னொரு கல்கண்டால்
இனிமையாக தட்டிவிடு...
மீண்டும் இயங்க ...

வியாழன், 12 நவம்பர், 2009

அனிச்ச மலர்

என் ஆன்மாவின் கர்ப்பமே ..
நான் சூலுறாத சொர்க்கமே.. .
என் இள உருவின் பேரழகே...
என் மகளே.. என் தாயே ..

மகரந்தச் சேர்க்கையின்
போதே அறிந்தேன் ..
நீ சூல்கொண்டதை
தேனே.. என் தெய்வமே..

உனக்குச் சோறூட்டிப்பசியாறி
நீ தூங்கி நான் விழித்து ..
திரிசங்கு சொர்க்கத்தில் நான்.. .

உனக்கு வரும் நோயெல்லாம்
பாபர் போல்
எனக்கு வேண்டி...

பென்டெனிலிருந்து பிஎஸ்பி வரை
உன்னோடு களித்திருந்து ...
விழிப்பும் கனவும் அற்ற பேருலகில்..

நீ பள்ளி செல்ல
நான் அழுத கதை
ஊரறியும்...

பைக் ரேஸராகவோ.,
காரம் சேம்பியனாகவோ.,
ஸ்குவாஷ் ப்ளேயராகவோ
வருவாயென நினைத்தேன் ..

உன் குரலெனும் குழலில்
கண்ணன் காலுறை கோமாதாவாய்
என்னைக் கட்டினாய்...

கட்டழகுப் பொக்கிஷமே...
கொலுசணிந்த சித்திரமே...
கனிந்து வந்த பால் மணமே...

ஊனோடும் உயிரோடும்
உருவான உயிரழகே ...
டால்பினைப் போல் ..

யாழும் குழலுமான
உன் பிஞ்சுக் குரலில்
மிழற்றினாயே ...

ஊடகங்கள் உன் குரலை
ஓங்கி ஒலிபரப்ப...
என் ஒவ்வொரு நரம்பிலும்
ஊடுருவிப் பெருமிதத்தில் ...

கடைசிச் சுற்றில்
தரவிரக்கமானபோது
என் நெஞ்சு வெடித்ததடி...

வெடித்த நிலம் போல்
நான் பிளக்க...
மேன்மகளே...

மேகத்து நீர்போல்
கலங்கும் கண்களுடன்
நீ புன்னகைத்தாய் ...

இன்னும் இருக்கு வாழ்க்கை...
சிகரம் எட்ட...
என்றாய் என் அற்புத அனிச்சமே...

உன்னைப் பெற்ற பொழுதிலும்
பெரிதும் உவந்தேன்
நான்......

புதன், 11 நவம்பர், 2009

புங்கைப் பூ

அட்சரேகை தீர்க்கரேகை போல்
உன் முகத்தில்
வெட்க ரேகை... .

பேசாமடந்தையாய் நீ..
விக்கிரமாதித்தனாய் நான்..
திரைச்சீலைதான் பாக்கி ..

போர்ப்பகுதியில்
ராபர்ட் யங் பெல்டன் போல்
உன் கண்ணால் சுடப்படும்
அபாயத்தில் உன்னருகே...

நீ ஹெலனா எரிமலையா
கத்ரீனா புயலா ...
என்னை என்ன செய்யப்
போகிறாய் அன்பே...

செவ்வாய்ச் சாமி
கும்பிடும் நீ..
செவ்வாய்க்காரனான
என்னை ஒதுக்கி....

புங்கைப் பூவும்
புளிய இலையும்
கோலமாவும்
தேங்காய் நாரும்...

உன் கை பட்ட
கும்பத்தில் தீபமும்
கொழுக்கட்டையும்...

என்னை விட்டு
வேறான உன் உலகத்தில் நீ..
தள்ளாதே என்னை...
தாளமுடியவில்லை...

க்ரிக்கெட்டும் ரேஸர் பைக்கும்
ஐநாக்ஸும் உலகமென
இருந்தேன்...

உன் வீட்டைச்
சுற்றும் பறவையாக்கி
விட்டாயே ...

வசீகரமான
கண்கள் உனக்கு ..
பார்க்கப் போகிறாயா...

பட்டாம் பூச்சிகள்
வயிற்றுக்குள்
மோதித் துடித்து...

ரிபோஸோம்ஸூக்காக
ஒரு தமிழனுக்கு
நோபல்...

அத்தனை அதிசயங்களும்
அடங்கிய உன்னை
ஆராயும் எனக்கு...

கடைக்கண்ணைக்
காட்டி விடு..
நமக்கிடையேயான
மலையைக் கடுகாக்க ...

திங்கள், 9 நவம்பர், 2009

கருங்குவளை

ஹிஜரப் அணிந்த
ஹாஸல்நட்டே ...
வான் ஹூட்டனே..

கண்ணாடிக்குடுவைக்குள்
கருமணல் ஒட்டகம் போல் ..
அல்மஜாஸின் கார்னிஷில்
அழகாய் வந்தாய்.. .

நாவல்பழக்கண்ணே..
என் நைஜீரிய பெண்ணே..
கருநிற மோஹினியே..
ப்ரபஞ்சத்தின் கருந்துளையே..
எனைக் கண்களால் விழுங்க..

கட்டுறுதியான இரும்பை
உடுத்த க்ரானைட் போல
பளபள தேகம்..

கருந்திராட்சை ரஸத்தைக்
கண்களில் ஊற்றி
பெல்லி டான்ஸைவிட
போதை ஏற்றினாய்..

சக்கரவியூகத்து
அபிமன்யுவாய் உன்
பார்வைக்குள் நான்...

ஒரு புன்னகையாலே
பற்ற வைக்கிறாய் என்னை..
கொழுந்து விட்டு நான்..

ஓராயிரம் பின்னல்கள்
உன் தலையில்..
உன் மேலான
என் மனப் பின்னலாய்..

உன் தொடுகைக் காசில்
ஜுயூக் பாக்ஸாய்
அதிர்ந்தது நெஞ்சம்...

க்ரிக் பார்க்கின்
கேபிள் காரில் நீ எனை
உரசிக்கடக்க...

ஒளதும் பாய்ஸனும்
சானலும் சேர்ந்து அடிக்க...
மிதக்கும் பாலமாய் நான்...

களவாடப்பட்டதே தெரியாமல்
நான் கொள்ளையடிக்கப்பட்டு
உன்பின்..

வெள்ளி, 6 நவம்பர், 2009

தொடர் இடுகை

நண்பர் ராகவன் நைஜீரியா கணக்குப் பிரிவு
மேலாளராக இருக்கிறார்.. அவர் ஒரு தொடர்
இடுகைக்கு அழைத்து இருக்கிறார் ...
நட்பு கொண்ட நல்லவருக்காக இந்த இடுகை ...

1. உங்களைப் பற்றி சிறு குறிப்பு:-
இல்லத்தரசி ..
இரு பையன்கள்..
இந்தியாவுக்குள் கணவர் பணி நிமித்தம்
10 .,12 ஊர்களில் இருந்திருக்கிறோம்..

2. தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவுக்கு
வரும் (மறக்க முடியாத) சம்பவம் எது ?
1977 தீபாவளி என் அப்பா திருப்பதியில்
மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு
மீண்டு வந்தது ...
மற்றும் தமிழ் வாணன் மறைவு..
(நான் ஐந்தாவது படிக்கும் போதே கல்கண்டு
ரசிகை .. )

3. 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள் ?
ஷார்ஜாவில் என் சின்னத்தம்பி வீட்டில் ..
என் தம்பி மெய்யப்பன் தங்கக் கம்பி..
அவன் மனைவியும் அப்படியே....


4. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும்
தீபாவளி பற்றி ஒரு சில வரிகள் ?
வீட்டுக்குள் மட்டுமே தீபாவளி ...
பட்டாசு சத்தம் கேட்காத முதல் தீபாவளி ..
பர் துபாயில் இருக்கும் கிருஷ்ணர் .,
சிவன் கோயில் சென்றோம் ஷிர்டி
சாயிபாபாவும் குருத்துவாராவும் இருக்கிறது
ஒரே இடத்தில்...ஆப்ரா என்ற படகில்
சென்றது இனிய அனுபவம் ...

முக்கியமாக எமிரேட் ஹுயுமர் க்ளப் பற்றி
சொல்லணும் தீபாவளி முதல் நாள்..
மாதாந்திர கூட்டம்.. குணா ஸார் , சுரேஷ், சுஜாதா
என்று ஹுயுமர் க்ளப் ஆர்கனைஸர்ஸ்
நன்றாக நடத்தினார்கள் ..சிரித்து சிரித்துப்
புண்ணான வயிறு இன்னும் சரியாகவில்லை .

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக என் அம்மா
துபாய் பற்றி ஒரு கவிதை வாசிக்க
ரசித்தவர்கள் "காரைக்குடி ஆச்சியம்மா
கவிதையெல்லாம் சுப்பரம்மா " என்று பாராட்ட
என் தாயின் முகத்திலே 1000 வாட்ஸ் வெளிச்சம் ..
எங்களை யெல்லாம் நெகிழவைத்த
குணாஸாருக்கு நன்றி ..
(என் அம்மா மரபுக் கவிதைகள், திருமண
வாழ்த்துக்கள், இறைவன் துதிப்பாடல்கள்
எழுதுவதில் வல்லவர்..சும்மாவின் அம்மா
என ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க திட்டமிட்டு
உள்ளார்.....மக்களே தயாரா இருங்க...
சும்மா அதிருதில்ல !!!)

5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள்/ அல்லது தைத்தீர்கள் ?
ஆரெம்கேவீ மற்றும் சுந்தரி ஸில்க்கில் ..

6. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்
அல்லது வாங்கினீர்கள்?
வாங்கினது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ..
செய்தது பாதாம் ஹல்வா.. கல்கண்டு வடை..
நான் சமையலில் நளபாகியாக்கும்...

7 உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு
வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்?
(உ.ம்.மின்னஞ்சல் ., வாழ்த்து அட்டை., தொலை பேசி.,)
மின்னஞ்சல்தான் அதிகம் ..தொலைபேசியிலும்..
வாழ்த்து அட்டையா ...அப்படின்னா..?
வாழ்த்து அட்டைகளிலே வாழ்ந்தது
ஒரு காலம்..... ஆனா இப்ப பார்த்தே
பல காலம் ஆச்சு...

8. தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா
அல்லதுதொலைக்காட்சி நிகழ்ச்சியில்
உங்களைத் தொலைத்து விடுவீர்களா?
இதையெல்லாம் செய்தால் சமைப்பது யார்.?
.அடுப்படியே திருப்பதி ..!!

.9. இந்த இனிய நாளில் யாருக்கேனும்
ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில் ,
அதைப்பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு
நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர் ,
முகவரி, தொலைபேசி எண்கள், அல்லது
வலைத்தளம், ?
ஊர் விட்டு ஊர் சென்று கொண்டே இருப்பதால்
அருகில் உள்ள அனாதை ஆஸ்ரமம்
எதற்காவது சென்று துணி, இனிப்பு கொடுப்பது
வழக்கம் ..தீபாவளி என்றில்லை.. பிறந்தநாள்,
திருமண நாளிலும் கூட ..

10. நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர் .,
அவர்களின் வலைத்தளங்கள்?
ஜோதிஜி. தேவியர் இல்லம்.
ஜோதிஜியின் துளசி தளம் மிகவும் அருமை..
சிந்தனையைத் தூண்டும் எழுத்துக்கள்...
புலவன் புலிகேசி
கடவுளையே கண்டவர்..

மரமல்லி

மூடி மூடித் தூறும்
மழையாய் முகிழ்ந்துகொண்டே
இருந்தது காதல்....

பருகப் பருகத் தீராமல்
வழிந்துகொண்டே இருந்தது
உன் விழிவழி அமிழ்தம்....

காதலுடன்
புன்னகைக்கிறாயா
கருணை சிந்துகிறாயா...

ஒவ்வொரு ஈராவிலும்
உனைக் கண்டு பிடிக்கிறேன்
டார்வினிஸப் பரிணாமம்....

உருவாய் அருவாய்
இருந்திலாத நிலையிலும்
உனை உணர்ந்து....

அசரீரியைப் போல
அவ்வப்போது
வாய்ஸ் மெஸேஜிலும்...

ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
உன் காதலை...

வாசமில்லாவிட்டாலும்
பாசமாய் விரித்துக்
கொண்டே இருக்கிறாய்
பூப்போன்ற உன் பார்வையை....

உன் கண் குடுவைக்குள்
அடர்த்தியான திரவமாய்
அயர்ந்தது மூளை....

சிலிக்கான் சில்லுகளில்
ஒவ்வொரு மெகாபைட்டிலும்
ஒவ்வொரு கிகாபைட்டிலும் நீ...

என் தவறையெல்லாம்
களைந்து எறியும்
நார்ட்டனும் சிமெண்டெக்கும் நீ...

கண்ணாடிக்குள் கண்ணும்
மீசைக்குள் உதடும் ஒளித்த
மேகத்துக்குள் நிலவா நீ....

மரத்துள் மலர்ந்த
மல்லியா நீ ...
என் மனத்து மல்லி ...

வியாழன், 5 நவம்பர், 2009

சப்பாத்திக் கள்ளிப்பூ

எனக்குப் பகையில்லை
எந்த மாநிலத்தோடும்
எந்த நதியோடும்....

யாவரும் கேளீர்...
தண்ணீரின்மையிலும்
தளிர்த்துக் கிடப்பேன்...

வேலியோரம்...
காய்ந்த வாய்க்காலோரம்...
தோட்டத்து எல்லைகளில்...
இயற்கை அரணாய்...

வேலிக்காத்தான்., முள்முருங்கை,
கருவேலம்., பிரண்டை,
சோற்றுக்கற்றாழையுடன்
காக்டஸாய் நானும்....

விரல் நக அளவில்
வெங்காயக் கலரில்
வாடாமல் நான்
பூத்துக் கிடப்பேன்...

மழையோ, வெய்யிலோ,
சூறாவளியோ
சூறாடுவதில்லை
என்னை எதுவும்...

உப்பளத்தில்
விளைந்த வெப்பிளம்
பிஞ்சு நான்...

நான்கு திணைகளிலும்
பூக்கும் பாலைத்
திணை நான்...

அத்தினி சித்தினி
பத்மினி தரங்கிணியில்
ஐந்தாவதாக
அம்பை நான்...

எனக்கான இடத்தில்
ஏகப்பட்ட முட்காவலர்களுடன்
நான் ...

யாரும் ரசிக்காமல்
குறையவில்லை
என் அழகும்
கம்பீரமும்...

பூத்தலும் சிரித்தலுமான
அரிய பிறப்பில்
நெகிழ்ந்து நான்

புதன், 4 நவம்பர், 2009

மயில் மாணிக்கம்

கண்கள் இரண்டும்
பளபள கன்னங்களும் இணைந்து
பட்டாம் பூச்சியானதொரு முகம்...

சிறகடிக்கும் தேன்சிட்டு
செம்பிள மேனி
செந்நிறத் தும்பி...

காமட்டின் வால் போல்
குழந்தைகள் அவள் பின்...
ராணித்தேனி....

ஓராவின் ஒளிப்பிழம்பு
வெள்ளிக் கிழங்கு
பாலிவினைல் வழுமை...

கண்கள் இரண்டும்
ஐஸ்க்ரீமில் விழுந்த
ரஸ்மலாய் போலும்
குலோப் ஜாமூன் போலும்...

பப்பேயில்
பார்வைகளின் சாணையில்
அவள் இன்னும் மெருகேறி...

டிஎன் ஏக்களும்
ஆரென் ஏக்களும்
புதிப்பித்த க்ளோனாய்...

கண்களும் இதழும்
காண்பவரை விழுங்கும்
பெர்முடாஸ் முக்கோணம்...

அரக்குப் பட்டோலை
தங்கமலை ரகசியம்
மெக்கன்னாஸ் கோல்டு...

சிவந்த ஒற்றைப்பூவாய்
தொட்டியில் இருந்து
தூணில் கொடியாய் ....

வெண்ணை பொம்மை
வாசனைப் பந்து
கிராபிக்ஸ் பார்பி....

பப்பே ஹாலின்
ஐயாயிரம் சதுரத்திலும்
ஆயிரம் கண்களிலும் அவள்
நிரம்பித் ததும்பி...

உறங்கு முன்னான
அனைவரின் கண்ணுள்ளும்
பதிந்த ஒற்றை முகமாய்
மயில் மாணிக்கமாய் அவள்.....

செவ்வாய், 3 நவம்பர், 2009

கல் வாழைப்பூ

வாசலோடும் ஜன்னலோடும்
மட்டுமே நான் ..
வாகைசூடி அணிய அல்ல....

செங்கொற்றக்கோல் போல்
செம்மையாய் உயரமாய்
இருந்தாலும்...

அகநானூறில் நீ யாரோடோ கூட
உன் புறநானூறுக்கான
பெருமை நான் ...

பரணியோடும்
புலவர்களோடும்
வீரத்தழும்புகளோடும் நீ...

மஹாராணிகளோடு
மஞ்சத்தில் நீயிருக்க உன்
சேடிப்பெண்ணாய் நான்....

இதயப் பாதக்குறடு உனக்காய்...
ஆனால் என் வாசம்
உன் வாசலில்....

கல்லிலும் முள்ளிலும்
உனைக்காத்து செந்நிற
ஆரஞ்சாய்ப் பூத்து......

லிப்டைப்போல்
நீ விரும்பும் தளத்துக்கெல்லாம்
உனைச் சுமந்து ...

உதறுவதுபோல்
அவசரமாய் விரைந்து
வெளியேறும் நீ....

எனை உயிராய்க்
கருதாவிட்டாலும்
பரவாயில்லை...

திரை ஓவியமாகவாவது
தொங்க விடு
உன் வீட்டுள்ளே....

நீ வாழும் நாள் முழுதும்
உனைக் கண்டு
களித்திருக்க....

ஞாயிறு, 1 நவம்பர், 2009

நாகலிங்கப்பூ

பங்களா தோட்டத்தில்
பூத்து இருந்தது
மரத்தில் அங்கங்கே
நாகங்கள் போல்...

சிறுவயது வியப்பு ..
செறிந்த மகரந்தங்களின்
காவலாய் ஒரு குடை
மழைத்தடுப்பாய்...

மலைப்பாம்பு சுற்றியதான
மணிப்பிளாண்ட் போல்...
மழையில் பூத்த
மரக்காளான்களும் குடையுடன்...

சிவன் சூடுவதா
மன்மதனின் அடையாளமா
பார்த்தால் பரமபதப் பாம்பு...

மேலே ஏற ஏற
உன்னைக் கீழிறக்கிக்
கொண்டு இருக்கிறது
அதன் கடிவாய்..

காமத்தின் கேள்விக்குறி
காதலின் ஆச்சர்யக்குறி
உலகின் உயிர் உற்பத்தி
குண்டலியின் மோட்சநிலை...

கல் தூண் சிற்பங்களிலும்
சகஸ்ராரச் சக்கரங்களிலும்
சிவனின் சிரசிலும்...

மாலின் படுக்கையாயும்
ஞானத்தின் மூலமாகவும்
பேரின்ப முக்தியாகவும்..

பதஞ்சலியின் யோகமுத்திரையாய்
மூச்சை அவதானித்து
சிரசின் மேல்
அமிர்த தாரை...

உன்னை ஒளிக்க ஒளிக்க
தேய்க்கப்பட்டதான் விளக்கிலிருந்து
வெளிக்கிளம்பி பூதம்
உன்னயறியாமல்...

தீயை அணைத்துப் படுத்து
இருக்கிறாய் மறைப்பதாய்...
மரங்களுக்கு மேலே அதன் புகை
அனைவருக்கும்...