எனது நூல்கள்.

சனி, 31 மார்ச், 2018

வாய்மையின் மைந்தன் லோகிதாசன் :- தினமலர் சிறுவர்மலர் - 11.


வாய்மையின் மைந்தன் லோகிதாசன் :-


சீரும் சிறப்புமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது வாரணாசி. காசி என்னும் இப்பதியில் விசுவநாதரும் விசாலாட்சியும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நானோ நாகத்தால் தீண்டப்பட்டுக் கங்கைக் கரையின் ஓரத்தில் கிடக்கிறேன்.  ஆனால் என் தாயோ காசிராஜன் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு என் தந்தையாலேயே வெட்டுப்படப் போகிறாள்.

இதெல்லாம் எதனால் என நினைக்கிறீர்கள்.? வாய்மையே என்றும் வெல்லும் என்று என் தந்தை கொண்ட விடாப்பிடியான கொள்கையால்தான். மனைவியானால் என்ன மகனானால் என்ன சத்யமேவ ஜெயதே என்று கடமையில் கண்ணாய் இருக்கிறார் என் தந்தை.
  
மனைவியும் மகனும் இறப்பின் நுனியில் இருக்கும்போதும் தன் வாய்மையை விடாத அந்த மயானக் காவலர் யார் ? அவர் தான் என் தந்தை அரிச்சந்திர மகாராஜா. இந்தத் தாரணியே போற்றும் அயோத்தியின் பேரரசர். விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் எக்காலத்திலும் வாய்மைக்காகப் போற்றப்படக் கூடிய மன வலிமை வாய்ந்தவர் என வசிஷ்டரால் புகழப்பட்டவர். ! அதனாலேயே விசுவாமித்திர மகரிஷியின் அழுக்காறுக்கும் அளவற்ற சோதனைக்கும் ஆளானவர்.

வாருங்கள் காசி மாநகரம் அழைத்துச் செல்கிறேன். எங்கள் கதையைப் பார்த்து வாய்மையைக் கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுங்கள்.


யோத்தி மாநகர். அரிச்சந்திர மகாராஜா சபை. முதல் மந்திரி சத்யகீர்த்தி முதலான மந்திரிப் பிரதானிகள் அமர்ந்திருக்கிறார்கள். தாய் சந்திரமதியுடன் பாலகனான லோகிதாசனும் அமர்ந்திருக்கிறான். விசுவாமித்திர மகரிஷி வருகிறார்.

”இஷ்வாகு குல மன்னனே, திரிசங்கு புத்திரனே. நேர்மையும் வாய்மையும் தவறாதவனே.  நீ என்னுடைய கனவில் உன்னுடைய நாட்டை தானம் தருவதாகக் கூறினாய்.கொடுத்த வாக்கைக் காப்பாற்று. நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டுக்குப் போ. !”

அவையோர் சலசலத்தார்கள். முனிவருக்கு சித்தம் பிசகிவிட்டதா.  நாடாண்ட மன்னன் சுடுகாடாள்வதா ? கனவில் கூறியதெல்லாம் நனவில் செயல்படுத்த முடியுமா. இதென்ன கேலிக்கூத்து.

ஆனால் ஈதென்ன. அரசன் அரிச்சந்திரன் முனிவர் வாக்குக்குக் கட்டுப்பட்டு காடு செல்லத் துணிந்து விட்டானே. கலிகாலக் கொடுமை. அயோத்தி மாநகரே ஸ்தம்பித்தது. உண்மை ஊமையாக்கப்பட்டது.

அத்தோடு விடவில்லை அந்த விசுவாமித்திர மகரிஷி. ” தானம் கொடுத்தாயே, எனக்கான தட்சிணை எங்கே ?”

”தட்சிணை தரப் பணமேதுமில்லையா . இல்லை என்று கூறு.” என வலுக்கட்டாயமாக வலியுறுத்துகிறார் முனிவர்.

மனைவியையும் பச்சைப் பாலகனான லோகிதாசனையும் காலகண்டர் என்பாரிடம் விற்று தட்சிணைப் பணம் கொடுக்கிறார் அரிச்சந்திரன். அது போதாததால் தன்னையும் ஏலமிட்டு விற்கத் தயாராகிறார். மனைவியும் மகனும் கண்ணீரும் கம்பலையுமாக அவரை விட்டுப் பிரிகிறார்கள். அரிச்சந்திரனுக்கும் சொல்லொணா துயரம்.

மாலை நெருங்குகிறது. இன்னும் சற்று நேரத்தில் இருளடைந்துவிடும். அதற்குள் முனிவரின் கடனை அடைக்க வேண்டுமே. பதைக்கிறது அரிச்சந்திரனின் உள்ளம்.  

காசி மாநகரின் மயானக் காவலர் வீரபாகு அங்கே வருகிறார். அவரிடம் தன்னை விற்று ஒரு வழியாக முனிவரின் கடனை அடைக்கிறார் அரிச்சந்திர மகாராஜா.

காலையில் அயோத்தி ராஜா மாலையில் மயானக் காவலனான நிலை நிலையாமையை உணர்த்துகிறது அவருக்கு. தன் வாய்மையைக் காக்க விலைப்பொருளாகிப் போன மகனையும் மனைவியையும் நினைத்துப் பரிதவிக்கிறார்.

அரிச்சந்திரனைப் பொய் பேச வைக்க இன்னும் என்னென்ன ப்ரயத்தனங்கள்.. முனிவரின் கொடுங்கோன்மை எல்லை மீறுகிறது.  

ங்கோ காலகண்டர் படுத்தும் பாட்டுக்கு அளவேயில்லை. சின்னஞ்சிறு பாலகனான லோகிதாசன் ஹோம சமித்துக்களை காட்டுக்குச் சென்று சேகரிப்பது, விறகுகள் சேகரிப்பது, பூக்கள் கொணர்வது, பசு பரிபாலனம் என்று பனியில் அலைந்து வெய்யிலில் உலர்ந்து பசியில் உலைந்து போய்க் கிடக்கிறான்.

தாய் சந்திரமதிக்கோ காலை முதல் இரவு வரை இடையறாத கடும் வேலைகள். தன் மகனின் பசி பார்த்து ஒரு வாய் உணவு கொடுக்கக் கூட உரிமையில்லை. 

அரண்மனையில் பாலும் தேனும் முக்கனிகளும் உண்டு வளர்ந்த பிள்ளை ஒரு பிடி சோற்றுக்கு ஏங்கும் நிலைகண்டு வாடித் துடிக்கிறது தாய் உள்ளம். காலகண்டரும் அவர் மனைவியும் இழைக்கும் கொடுமை கண்டு கல்லும் கண்ணீர் விடும்.

ஆனால் கல்லும் முள்ளும் குத்த மற்ற சிறுவர்களோடு விறகு சேகரிக்கச் சென்றிருந்தான் லோகிதாசன். இருட்டி வெகுநாழிகை ஆகிவிட்டது. பச்சைப் பாலகர்கள் வேகமாக ஓடி வந்தார்கள். அவர்கள் சொன்ன கொடிய சேதி கேட்டு நெஞ்சம் நொந்தாள் சந்திரமதி. தன் எஜமானனான காலகண்டரிடம் மகனைப் பார்த்துவர அனுமதி கேட்கிறாள்.

இரக்கமற்ற அந்த மனிதர் கடமைகளை முடித்துச் செல்லப் பணிக்கிறார். ஒரு வழியாக நைந்த மனதுடன் முடித்த அவள் உலைந்து கலைந்து ஓடிச் சென்று ஒரு வழியாக மகனைக் கண்டு பிடிக்கிறாள். மகனின் உடலெங்கும் வேலி முள்ளின் கீறல்கள். பசியாலும் தாகத்தாலும் வாடி சாம்பல் பூத்த உடல். நாகம் தீண்டி நீலம் பாரித்துக் கிடக்கிறது. அம்மா அப்பா என்றழைத்த அந்தத் தளிர் வாய் பேசாமல் உண்மையைப் போலவே ஊமையாகிக் கிடக்கிறது. கடவுளர்களுக்கும் கண் இல்லையோ.

என் செய்வது. சித்தம் பிசகியவாறு மடியில் ஏந்திய அவள் காசி மாநகரின் மயானத்துக்கு வருகிறாள். கடைசிக் கடமைகளைச் செய்தாக வேண்டுமே. ஆ ஈதென்ன அங்கே மயானக் காவலராக அரிச்சந்திர மகாராஜா நிற்கிறார்.

இருவரும் மனம் நொந்து அழுகிறார்கள். ஆனால் அங்கே ஒரு முழத்துண்டும் கால்பணமும் கொடுத்தால்தான் ஈமக்கிரியைகள் நடைபெறும். தான் உடுத்தியிருந்த உடையில் இருந்து ஒரு முழம் துண்டு அளிக்கிறாள் சந்திரமதி . பணத்துக்கு என் செய்ய. யாரிடம் கேட்க.

பணம் தேடிச் சென்ற சந்திரமதி சாலையில் கிடந்த ஒரு பாலகனை தன் மகன் என மடியில் ஏந்தி மருகிக் கொண்டிருக்கிறாள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த காவல் படையினர் அவள் காசிராஜனின் மகனைக் கொன்றுவிட்டதாகக் கைது செய்து செல்கிறார்கள். தான் கொல்லவில்லை எனக் கூறியும் அங்கேயும் உண்மை பொய்த்துத் தோற்கிறது. அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறார் காசி ராஜா.

சந்திரமதியை சிரச்சேதம் செய்யும் பணி அரிச்சந்திரனிடம் வருகிறது. ஒரு புறம் மகன், மறுபுறம் மனைவி. நேரக் கூடாத கொடுமைகள் நேர்ந்தபின்னும் உண்மையையே பற்றிக்கொண்டு வாழும் வாழ்வெதற்கு என ஒரு கணம் கூட யோசிக்கவில்லை அரிச்சந்திரன். வாய்மையே வெல்லும் என மனதைக் கல்லாக்கிக் கொண்டு அரசனின் ஆணையை ஏற்று மனைவியை சிரச்சேதம் செய்ய வெட்டரிவாளைத் தூக்குகிறார் அரிச்சந்திரன்.

பொறுமையின் கடைசி எல்லைவரை உண்மையையே பற்றிக் கொண்டு அவர் வீசிய வாள் ஒரு பூமாலையாகி சந்திரமதியின் கழுத்தில் விழுகிறது. தூங்கி எழுந்தது போல் பொன்னுடலுடன் உயிர்த்தெழுகிறான் லோகிதாசன். சந்திரமதியும் அரிச்சந்திரனும் கூட பழைய தோற்றப் பொலிவு பெறுகிறார்கள். அங்கே வருகிறார் விசுவாமித்திர மகரிஷி. தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். அரிச்சந்திரனின் வாய்மை வென்றது என்று அறிவிக்கிறார். . மூவுலகிலுமிருந்து தேவர்கள் பூமாரி பெய்து வாழ்த்துகிறார்கள்.

எத்தனை இன்னல்களைச் சந்தித்தாலும் முடிவில் சத்தியசந்தனான தன் தந்தையின் உண்மை வென்றதைக் கண்டு மகிழ்கிறான் வாய்மையின் மைந்தன் லோகிதாசன் .

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 23. 3. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... எழுத்து நடை சிலிர்க்கிறது....!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்.

// கதையைப் பார்த்து வாய்மையைக் கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுங்கள்.//

வேண்டாம் என்கிறீர்களா!!!!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்களின் எழுத்தில் கதை அருமையாக உள்ளது. வாழ்த்துகள்!

//எங்கள் கதையைப் பார்த்து வாய்மையைக் கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுங்கள்.//

தேனு இது கொஞ்சம் வேக்(vague) ஆக இருக்கோ?!!

கீதா

R Muthusamy சொன்னது…

கதை தெரிந்தது. எழுத்து நடை. எளிமை, புதுமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

முடிவை படிச்சிட்டு சொல்லுங்க ஸ்ரீராம் :)

அப்பிடியா. கதையின் முடிவில் எந்த துயரம் வந்தாலும் சத்யசந்தனான அரிச்சந்திரனின் உண்மை ஜெயித்ததுன்னு சொல்லி இருக்கேனே. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கணுமோ கீத்ஸ் ?

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...