வில் போலவும் வேல் போலவும் மயில் போலவும் திருவாவினன் குடி நிறையக் காவடிகள் ஆடி வருகின்றன. பறவைக்காவடிகளும், பன்னீர்க்காவடிகளும் புஷ்பக்காவடிகளும் , பால் காவடிகளும், தீர்த்தக் காவடிகளும், அலைஅலையாய்ப் பழனி மலையைக் கடலாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி மலைமேல் முருகனைக் காண ஓட்டமாய் ஓடுகின்றன. பல கண்கவர் காவடிகள் சிந்து பாடி ஒயிலாகச் செல்கின்றன.
இந்தக் காவடிகள் எல்லாம் திருவாவினன்குடிக்கு ஆயிரக்கணக்கில் வருடந்தோறும் வரும் காரணம் என்ன ? எதனால் வருகின்றன.. இதன் காரணகர்த்தா யார் ?
முருகனுக்கு முன்னே முழு மரியாதையும் இந்தக் காவடிக் கட்டும் யாருக்காக ? சக்தி கிரியையும் சிவகிரியையும் அநாயசமாகத் தூக்கி வந்தானே அந்த அசுரனுக்கா இத்தனை மரியாதை ?
இதைத் தெரிந்துகொள்ள நாம் அதோ இடும்பவனத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துவரும் இடும்பாசுரனையும் இடும்பியையும் பின்தொடர வேண்டும்.
ஆரண்ய விருட்சங்களில் செழித்திருக்கிறது இடும்பவனம். எங்கெங்கும் தேவதாரு மரங்களும் சந்தன மரங்களும் தேக்கு வாகை போன்றவையும் உறுதியுடன் மேகமுகட்டைத் தொட்டபடி நிற்கின்றன. மேகங்கள் அலைந்து கலைந்து இடும்பனும் இடும்பியும் செய்யும் தினப்படிப் பூஜையைப் பார்த்துச் செல்கின்றன.
அந்த வனம் முழுக்க அதிர அதிர ஒலிக்கிறது “ஓம் நமச்சிவாய “ என்ற இடும்பனின் குரல். பக்கத்துணையாய் இடும்பி வில்வ இலைகளையும் கொன்றைப் பூக்களையும் பூஜைக்காகக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவை அனைத்தும் சிவலிங்கத்தை மலைபோல் மூடிக்கிடக்கின்றன.
தென்னாடுடைய சிவனைத் துதித்து அமரும் இடும்பனின் முகத்தில் சிந்தனை ரேகைகள். ஏன் இந்தக் கவலைக் கோடுகள். இடும்பியும் கணவனின் பக்கத்தில் அமைதியாக அமர்ந்து கணவன் முகத்தை நோக்கிக் கொண்டிருக்கிறாள்.
யாரோ முருகனாம், அழகனாம், வில்லும் வேலும் கொண்ட வடிவேலனாம், தன்னிடம் வில் வித்தை பயின்ற சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகியோருடன் பொருது அழித்துவிட்டானாம். கேட்கக் கேட்க ரத்தம் கொதித்து சித்தம் கலங்கிக் கொண்டிருந்தது அந்த அசுரகுல வில்லாசிரியனுக்கு. எப்பேர்ப்பட்ட வீரர்கள், எப்படி இறந்தார்கள். ? தன் வில் பொய்த்ததா இல்லை கற்றுக்கொடுத்த வித்தை பொய்த்ததா ?
தன்வயப்பட்ட சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவனுக்கு அந்த முருகனைக் காணும் ஆவல் உதித்தது. யார் அந்த அழகன், எங்கே இருக்கிறான், நரன்தானா இத்தனை பேரையும் அழித்த அவன் மானுடன் அல்ல. தெய்வம்தான் அவர்கள் நிகழ்த்திய அக்கிரமம் தாங்காமல் நின்று கொன்றிருக்கிறது. யாரிடம் கேட்கலாம். பொதிகையின் குறுமுனியை கேட்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
திருக்குற்றாலம். அருவிகள் திரை எழும்பி வானின் வழி ஒழுகிக் கொண்டிருந்தன. சித்தர்கள் காயசித்தி இசைத்துக் கொண்டிருந்தனர். மூலிகைகளாலும் முனிவர்களாலும் நிரம்பிக் கிடந்தது பொதிகை. தேடித் தேடிக் கடைசியில் கண்டுபிடித்தே விட்டனர் இடும்பன் தம்பதியர் ஒரு பலா மரத்தினடியில் நிஷ்டையிலிருந்த அந்தக் குறுமுனியை.
வணங்கினர் இருவரும். தன் மனமெனும் கருவி அருவியைப் போல் இடையறாது எதற்கோ ஏங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான் இடும்பன். அகத்திய மாமுனிவரிடம் பணிந்து தம்மை ஆட்கொள்ளுமாறு இருவரும் வேண்டுகிறார்கள்.
அவரோ கேதாரத்தில் உள்ள சக்தி கிரியையும் சிவ கிரியையும் பொதிகைக்கு எடுத்து வரப் பணிக்கிறார். இறைவனின் திருவிளையாடல் தொடர்கிறது. அவை இரண்டும் மலைகள் அவற்றை எடுத்து வருவதெப்படி. ?
சிந்தை தளராத இடும்பனும் இடும்பியும் அகத்தியர் இயம்பியதை சிரமேற்கொண்டு செய்கிறார்கள். சிவனின் துணை வேண்டித் துதிக்கிறார்கள்.அவரருளால் அவர்களுக்கு பிரமதண்டமும் அஷ்டதிக்கு நாகங்களும் கிடைக்கின்றன.
பிரமதண்டத்தைக் கம்பாகக் கொண்டு நாகங்களை உறிபோல முறுக்கி அவ்விரு மலைகளையும் உறிப்பானை போலச் சுருட்டிக் கட்டித் தோளில் காவடியாகத் தொங்கவிட்டபடி பொதிகை திரும்புகிறார்கள் இருவரும்.
களைப்பைப் போக்கிக் கொள்ள அவ்வப்போது அகத்தியர் உபதேசித்த ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். தங்கள் பாவம் போக்க ”அரோகரா” என்று மாற்றி மாற்றி உரக்கச் சொல்கிறார்கள் இருவரும். அவர்கள் மனம்தோய்ந்தழைக்கும் ”சரவணபவ” என்னும் மந்திரம் சிவன் மகன் காதில் விழுகிறது. இழுக்கிறது அவனை அங்கே.
சிவனருள் சித்தித்த அவர்களுக்கு அவரின் மகனருள் கிட்டாமல் போகுமா ? சமயம் பார்த்து அவர்களை ஆட்கொள்ளவிருந்த அவ்வழகன் முருகன் வேலன் ஒரு சிறுவன் உருவம் எடுக்கிறான்.
திருவாவினன் குடி நெருங்குகிறது. பொதிகைக்கு இன்னும் சற்றுத் தூரம் இருக்கிறது. என்னவோ இடும்பனின் தோள் கனக்கிறது. பூர்வவினைப் பயன் இழுக்கிறது. பாரம் தாங்காமல் அங்கேயே அந்தச் சுமையை இறக்கி வைக்கிறான் இடும்பன். ஆகா என்னவொரு ஆசுவாசம். என்னவொரு நிம்மதி. சோர்வகன்று சுறுசுறுப்பும் புத்துணர்வும் பிறக்கிறது.
சிறுவன் ஒருவன் அந்நேரம் அம்மலைகளில் ஒன்றில் ஏறி விளையாடிக் கொண்டிருக்கிறான். ஏறுமயில் ஏறுபவன் ஏறிய மலை சிவகிரி. அம்மலையே அவனது தந்தை மலை, அதைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டான் ஆறுதலைத் தரும் ஆறு தலை கொண்டவன்.
மனைவியுடன் திரும்ப அம்மலைகளை எடுக்க முனைகிறான் இடும்பன். ஆ ஈதென்ன ? இம்மலைகள் இவ்வளவு கடினமாகி விட்டன. பூமியுடன் ஒட்டிக்கொண்டுவிட்டனவா. அல்லது இம்மாயச் சிறுவன் ஏதேனும் வித்தை செய்துவிட்டானா.
அச்சிறுவனைத் துரத்துகிறான். அவனோ இது தன் மலை என இறங்க மறுக்கிறான். திரும்பத் துரத்தவும் தண்டாயுதம் கொண்டு அச்சிறுவன் இடும்பனை லேசாகத்தான் தாக்கினான். ஆனால் ஐயகோ அவன் மரித்து வீழ்ந்தான். அவனின் பாதி உடலும் உயிருமான இடும்பி கதறுகிறாள்.
”ஈசனே நீர் யார் என்று அறியேன். என் கணவனை இப்படியாக்கும் சக்தி ஒருவருக்கே உள்ளது. அது எம் அசுரர்களை அழித்த அந்த முருகவேளுக்கே வாய்க்கும். நீர்தான் அந்த முருகனா ? என் ஆருயிர்க் கணவரை உயிர்ப்பித்துத் தாரும் “ என இறைஞ்சுகிறாள்.
அவள் சொல்லுக்கு மதிப்பளித்த அந்த வேலன் இடும்பாசுரனை உயிர்ப்பிக்கிறார்.அறுமுகமும் பன்னிரெண்டு கையும் வேலுமாகக் காட்சி அளிக்கிறார். இடும்பனும் இடும்பியும் அவரைத் தொழுதுப் பரவி வணங்குகிறார்கள்.
தனக்காக மலைகளைக் காவடியாகக் கட்டிவந்ததனால் அவனுக்கு அம்மலையின் நடுவில் கோயில் கொள்ள அனுமதிக்கிறார். அங்கே தனக்கு நேர்த்திக் காவடி கட்டி வருபவர்களெல்லாம் இடும்பனை வணங்கிய பின்பே தன்னை வணங்க வரவேண்டும் என்றும் இடும்பனுக்கு முதல் மரியாதை அளிக்கிறார்.
இடும்பு என்றால் துன்பம். எனவே துன்பத்தைக் களையும் இடும்பனை வணங்கியபின்பே அனைவரும் இன்பம் நல்கும் முருகனை வணங்குகிறார்கள். அம்மலைகளையே காவடிகளாக. திருவாவினன்குடிக்கு இடும்பாசுரன்தான் கொண்டு வந்தான். எனவே அவனுக்கு முருகனுக்கு அருகில் இன்னொரு மலையான சக்தி கிரியில் கோயில் கொள்ளும் சித்தியும் வாய்த்தது.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 16. 3. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.
காவடி எடுப்பின் வரலாறு முழுமையாக இன்றே அறிந்தேன் நன்றி சகோ.
பதிலளிநீக்குஇடும்பு என்றால் துன்பம். எனவே துன்பத்தைக் களையும் இடும்பனை வணங்கியபின்பே அனைவரும் இன்பம் நல்கும் முருகனை வணங்குகிறார்கள்.//ஆம்! சஷ்டிக்கவசத்தில் கூட வருமே! இடும்பன் கதை கேட்டதுண்டு ஆனால் திருஆவினன் குடிக்கு இடும்பாசுரனின் காவடி பற்றி அறிந்ததில்லை...அருமை வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதுளசி இம்மாதம் ரிட்டையர் ஆகிறார் எனவே கொஞ்சம் பிஸி...வாசிக்க முடியலை என்று சொல்லச் சொன்னார். ஏப்ரலில் தளம் வாசிக்கத் தொடங்கிவிடுவார்...
கீதா
அருமையான நிகழ்ச்சியோடு தொடர்புடைய பல அரிய செய்திகளை அறிந்தேன்.
பதிலளிநீக்குதிருவாவினன்குடி (பழனி) காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் வழக்கத்திற்கு இடும்பன் சுமந்த காவடியே காரணம். கதை எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. நன்றி.
பதிலளிநீக்குhttp://agharam.wordpress.com
செல்போனில் இருந்து உங்கள் வேர்ட்ப்ரஸில் பின்னூட்டமிட முடியவில்லை முத்துசாமி சகோ
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி சகோ
பதிலளிநீக்குஅஹா இனி நிறைய நேரம் கிடைக்கும் . இனிய ரிடையர்மெண்ட் லைஃபுக்கு வாழ்த்துக்கள் துளசி சகோ.. மெதுவா வாங்க. :) நன்றி கீத்ஸ்.
நன்றி தமிழ் திரட்டி
நன்றி ஜம்பு சார்
நன்றி முத்துசாமி சகோ
நன்றி நாகேந்திர பாரதி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!