சமத்துவம் போதித்த சாதுவன்.
கடல் கொந்தளிக்கிறது. அலை தத்தளிக்கிறது. கப்பல் தடுமாறுகிறது. மேலும் கீழும் சதிராடுகிறது. திசைமாறிச் சென்று எதன் மீதோ மோதுகிறது. மிகப் பெரும் பாறையாக இருக்கக்கூடும் அது.
வெளியே எங்கும் அந்தகாரம். எந்தப் பிடிமானமும் கைக்கு அகப்படவில்லை. உடைந்த மரக்கலத்தின் ஒரு துண்டுகூடக் கிட்டவில்லை. இருளைப் பற்றி நீரைச் சுழற்றி நீந்துகிறான் சாதுவன். எங்கெங்கும் நீர். சில்லென்று மேனியெங்கும் விறைக்கிறது. தான் பிழைப்போமா சாவோமா தெரியாது நீரில் தவறி விழுந்த பறவையைப் போலத் தலைதெறிக்க நீந்திக் கொண்டிருக்கிறான் சாதுவன்.
அலை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. கால்கள் சோர்வுறுகின்றன. அவனுடன் பயணித்தவர்கள் எங்கே ?. நாவாய் மோதித் தெறித்ததும் அனைவரும் எங்கெங்கோ சிதறிப் போனார்கள். கண்கள் இருள கைகளும் கால்களும் சோர தன் அன்பிற்குரிய மனையாட்டி ஆதிரையின் முகத்தை நினைத்து ஏங்கியபடி மயக்கத்துக்குப் போனான் சாதுவன்.
ஆமாம் யார் இந்த சாதுவன்.? அவன் ஏன் கப்பலில் பயணித்தான். ஏன் விபத்துக்கு ஆட்பட்டான். பார்க்கப் போனால் கண் போன போக்கிலும் கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்த ஒருவன் சாதுவன். அவன் எப்படி சமத்துவம் போதித்தான் அதுவும் யாருக்குப் போதித்தான் ?
அன்பும் பண்பும் ஒருங்கே அமையப் பெற்றவள் ஆதிரை. இவள்தான் பின்னாளில் மணிமேகலையின் அமுத சுரபியில் “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக “ என்று முதல் பிச்சையிட்ட பெருமைக்குரியவள். வணிகக் குலத்தைச் சேர்ந்த இவளது கணவன் சாதுவன். அன்பு மனையாட்டி அகத்திருக்க அவளை விட்டுச் சென்று கணிகையுடன் களித்திருந்தான் சாதுவன். மேலும் சூதாட்டத்தில் தனது சொத்துக்களைத் தோற்றுக் கொண்டிருந்தான்.
அகமுடையாள் அன்பு காட்டுவாள், எந்நேரம் சென்றாலும் அன்னமிடுவாள், அடித்தாலும் அணைத்துக்கொள்வாள். காசு பணத்தைத் தோற்றதும் கணிகையோ அவனைப் பிரிந்துவிட்டாள். ஒன்றுமில்லாமல் சென்று மனையாட்டி முகத்தில் விழிக்க அவனுக்கு வெட்கமாக இருந்தது. வணிகம் செய்து சம்பாதித்துப் பெரிய தனவந்தனாகித்தான் தன் மனைவி ஆதிரையைச் சந்திக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டான். தனக்காகத் துயருற்ற அவளை நல்ல ஸ்திதியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவாவுகிறது அவன் மனம்.
எனவே திரைகடலோடித் திரவியம் சேர்க்கும் நோக்கில் கிடைத்த மரக்கலமொன்றில் ஏறுகிறான். வணிகர்களோடு சென்ற அக்கப்பல்தான் காற்றில் வீச்சால் கதறிச் சிதைகிறது. எப்படியோ நீந்தி நீந்தி மயங்கிய அவனை அலை இழுத்துக் கொண்டுபோய் ஏதோ ஒரு ஊரின் கரை சேர்க்கிறது.
ஐயகோ இதென்ன மனிதர் ஊனை மனிதர் உண்ணும் நரமாமிசபட்சிணிகள் இருக்கும் இடத்தில் கரை சேர்த்திருக்கிறதே என்ன ஆகப்போகிறதோ சாதுவனுக்கு. ? அங்கே இவனுக்காகக் காத்திருக்கும் ஆதிரையின் கதி என்ன ?
கடல்பறவைகள் அங்கிங்கும் பறந்து திரிகின்றன. கடற்கரையோரம் மணலில் குப்புறக் கிடக்கிறான் சாதுகன். உப்புக்காற்றும் நீரும் உடல் அரித்துச் செல்கிறது. யாரோ இருவர் அவனைப் புரட்டுகிறார்கள். நல்ல கொழுத்த மாமிசம் உடைய உடல் இது என்று சந்தோஷிக்கிறார்கள். ஈட்டியால் லேசாகக் குத்தி அவன் உடலில் இன்னும் உயிர் இருப்பது கண்டு அவனை எழுப்புகிறார்கள்.
அவர்களைக் கண் திறந்து பார்க்கிறான் சாதுகன். எங்கே இருக்கிறோம். ? அரை மயக்க நிலையிலும் அவர்கள் பேசும் மொழி அவன் செவிக்கு எட்டுகிறது. அடடா இதென்ன நரமாமிச பட்சிணிகளான நக்க சாரணர்களின் நாகர் மலையிலா ஒதுங்கி இருக்கிறோம். இதற்குப் பிழைக்காமலே இருந்திருக்கலாமே. அவர்கள் மொழியிலேயே உரையாடுகிறான் சாதுகன். அவனைக் கொல்ல எண்ணியவர்கள் அவன் தம் மொழி பேசுவது கண்டு தம் தலைவனிடம் அழைத்துச் செல்கிறார்கள்.
சாதுவன் கடல் அழிவில் சிக்கி இறந்துபட்டானோ எனத் துயருற்ற ஆதிரை தீக்குளிக்க முனைகிறாள். ஆனால் அவளைத் தீச்சுடவில்லை. “ தீயும் கொல்லாத் தீவினையாட்டி நான்” என அவள் வருந்த அவள் கணவன் உயிருடன் இருக்கிறான் எனவும் திரும்பி வருவான் எனவும் அசரீரி ஒலிக்க அவள் இல்லம் திரும்பிக் கணவனுக்காகக் காத்திருக்கிறாள்.
காய்ந்த மனித எலும்புகள், கள்ளுப்பானைகள், கவிச்சி நாற்றமடிக்கும் சூழல், புலாலின் வீச்சம் எங்கெங்கும் அடிக்க தன் இருக்கையில் கள்ளருந்தியவாறு கிடக்கிறான் நாகர்தலைவன். அவன் அருகே அவனது துணைவி அமர்ந்திருக்கிறாள். இருவரும் மாபெரும் மாமிச மலை போலக் காட்சி அளிக்கிறார்கள். அவனிடமும் அவர்கள் மொழியில் உரையாடி சாவில் இருந்து தப்பிக்கிறான் சாதுவன்.
அவனது பேச்சால் கவரப்பட்ட நாகர் தலைவன் அவனுக்குக் கள்ளையும் மங்கையையும் பரிசாகத் தருகிறான். சாதுவன் இரண்டையும் மறுக்கிறான். இதைக்கண்டு ஆச்சரியமடையும் நாகர் தலைவன்,
”மயக்குறு மங்கை, மயக்கம்தரும் கள், இதைவிட வேறென்ன உலக இன்பம் இருக்கிறது” என வினவுகிறான்.
’இல்லறமே நல்லறம் எனவும் கொல்லாமை பற்றியும்’ கூறத்தொடங்குகிறான் சாதுவன்.
“நல்லறம் செய்வதால் நல்லுலகம் கிட்டும். உயிர்க்கொலை புரிவதால் நரகமே வாய்க்கும். எனவே உணர்வுக் கொலையும் உடற்கொலையும் புரியற்க. நம் உயிரைப் போன்றதே மற்றொரு உயிரும்.” என்கிற சாதுகனைப் பணிகிறான் நாகர் தலைவன். நல்லறம் பற்றி இன்னும் போதிக்குமாறு வேண்டுகிறான்.
“சிந்தை மயக்கும் கள்ளை ஒழித்திடுக. அத்துடன் அலைகடலில் சிக்கி இங்கே வரும் மக்களைக் கொல்லுதல் நிறுத்திடுக. அதே போல் முதுமையடைந்து இறக்கும் மாக்கள் ( விலங்குகள் ) தவிர்த்து வேறெந்த உயிரையும் உண்பதற்காகக் கொல்வதைத் தவிர்த்திடுக, மக்களே மக்களைத் தின்னல் மாக்களின் செயல். அதைச்செய்யற்க. மனிதராய் நடத்திடுக ” என அறிவுறுத்தினான் சாதுவன்.
அவனது வேண்டுகோளை ஏற்ற நாகர் தலைவன் அதைத் தம் மக்கள் அனைவரும் பின்பற்றுவதாக உறுதி அளித்து மரக்கலத்தில் மனிதர்கள் கொண்டு வந்த அரும் பொருட்களையும் பெரும் நிதியமும் பரிசாக அளித்து அனுப்பினான்.
அதோ வருகிறது பட்டொளி வீசிப் பாய்மரக் கப்பலொன்று. அதில்தான் வருகிறான் ஆதிரையின் கணவன் சாதுவன். அல்ல வழி சென்றாலும் நல்ல வழியில் திரும்பிய கணவனையே பரிசாக எண்ணி வரவேற்கிறாள் ஆதிரை. நாகர்களுக்கு சமத்துவம் போதித்த சாதுவன் அவர் தந்த பொருளைக் கொண்டு ஆதிரையுடன் இல்லறம் திரும்புகிறான். நல்லறம் செய்து வாழ்கிறான். உயிரனைத்தும் சமமே என்று நாமும் சாதுவன் போல் சமத்துவம் போற்றுவோம்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 9. 3. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 9. 3. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.
சமத்துவம் போதித்த சாதுவன். எளிமையான மொழிநடையில் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கதை. இன்னும் சற்று எளிமைப் படுத்தியிருக்கலாமோ? என்றாலும் மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளது.
பதிலளிநீக்குநல்லாருக்கு....வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குநன்றி முத்துசாமி சகோ. இனி கவனத்தில் கொள்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி துளசி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
ஊரெங்கும் கம்பன் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவதால் இராமாயணப் பாத்திரங்களும் கதையும் நீதியும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இலப்பதிகாரத்துக்கு இப்படி விழா எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் எனக்கு உண்டு.சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற காப்பியங்களின் மாந்தர்களை நீதியை சிறுவர்களுக்கு தேன்தமிழில் தரும் தேனுக்கு அன்பும் நன்றியும்.சாதுவன் கதையும் அருமை.நாடகம்போல காட்சிகள் கண்ணில் விரிகின்றன.மகிழ்ச்சி தேனம்மை
பதிலளிநீக்கு