எனது நூல்கள்.

வெள்ளி, 16 மார்ச், 2018

மகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.

சென்றவாரம் மகளிர் தினத்தன்று ஒரு சிறப்புப் பரிசு கிடைத்தது எனக்கு. அதை வழங்கியவர்கள் முனைவர்  திரு வி டி மாணிக்கம் அவர்கள் குடும்பத்தார்.

திரு வெ தெ மாணிக்கம் அவர்களின் நூலான மருதத்திணையையும் ( ஆங்கிலம் ) அவரது மற்றைய படைப்புகளையும் கொண்டு சென்றவருடம் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் திருமதி சத்யா அசோகன் தலைமையில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் அவரது ஆக்கங்களைத் தொகுத்துப் பேசினேன்.

அது அன்றே புத்தகமாகவும் வெளிவந்தது. அதில் அவர் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பி இருந்தன. அவற்றைக் கொடுத்து உதவியர்கள் அவரது திருமதியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள்.

கணவரின் தமிழ்ப் பணிக்கு இதயமாக விளங்கியவர்கள். அவருடன் இருக்கும்போது தான் பெற்ற தமிழின்பத்தைச் சேமித்து அதை அமுதம் போல் தற்போது வழங்கி வருகிறார்கள்.

வெவ்வேறு ஊர்களில் நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து ( தந்தையின் புகழையும் பெருமையையும் பற்றி எழுதிய ) என்னை கௌரவிக்க அவர்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்களின் மகன்கள் மருமக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டுரை வாசித்துப் பட்டுப் புடவையோடு வழங்கினார்கள்.  இரண்டுமே மகாகனம் பொருந்தியவை. !

அன்று என்னை மட்டுமல்ல என் பெற்றோருக்கும் என் சின்ன மருமகளுக்கும் கூட பரிசளித்துக் கௌரவித்தார்கள்.

இவர்கள் எங்கள் அம்மா வீட்டுப் பங்காளிகள்.  எங்கள் உறவினர்கள். திரு வி டி மாணிக்கம் அவர்கள் எனக்குப் பெரியப்பா, அவர்கள் மனைவி திருமதி மீனாக்ஷி ஆச்சி பெரியம்மா ஆவார்கள்.


இனி அவர்கள் வாசித்தளித்த அன்பு மடலிலிருந்து.

இன்றைய நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நன்நாள். பெரியப்பாவைப் பற்றி சிந்திக்க வைத்த நாள். 

செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற உள்ளது.  அதில் பெரியப்பாவின் ஆய்வு நூல்களைப் பற்றி பேச இருக்கிறேன். அதனால் நீங்கள்  எனக்கு முடிந்தவரை ஆய்வு ஏடுகளைத் தந்து என்னை ஊக்குவிக்கவேண்டும் பெரியம்மா என்று தேனு கேட்டுக் கொண்டாள். 

கரும்பு தின்னக் கூலியா என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் முழுமையாகச் செயல்பட முடியவில்லை. ஏனெலின் அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்திற்கு நிறைய புத்தகங்களைக் கொடுத்து விட்டோம். அச்சிடப்படாத கையேடுகளை வீட்டுக்கு அடிக்கடி வரும் மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் கொடுத்து விட்டோம். 

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை . என்னிடமிருந்த விபரங்களையும் மருதத்திணை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற நூல் இவைகளையும்தான் தேனுவிடம் கொடுக்க முடிந்தது. குறுகிய காலத்தில்  கிடைத்த விபரங்களைக் கொண்டு கருத்துக்களைத் தெளிவாய்ச் சொல்லித் தினையளவும் பிசகாமல் ஆய்வு செய்து பேசியதற்கு மிக்க நன்றி. 


ஏறுவார் மேலே செல்லும் ஏணி போல் இருந்தவர்கள் பெரியப்பா. ஆயிரம் பேர் நூலறிவு பெற்றுச் செல்ல ஆசானாய் இருந்து குடவிளக்காய்த் திகழ்ந்தார்கள். பேரும் புகழும் பெற்றுச் சென்ற பெரியப்பா எண்ணிலடங்கா நூல்களை விட்டுச் சென்றார்கள்.  உத்தம வாழ்க்கை வாழ்ந்த உத்தமனாக அத்தை நூல்களிலும் காண்கிறேன். 

பெரியப்பாவின் பேச்சு வன்மை சொல்லில் அடங்காது. பட்டிமன்றப் பேச்சில் அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாக சுளை சுளையாகச் சொற்களைச் சொல்லி பதம் பதமாகப் படியும் படிக்கு அணி அணியாக அடுக்கிய கருத்துக்கள் அவையோரை அசர வைக்கும். தங்கு தடையின்றி பொங்கும் வெள்ளம் போல் கருத்துக்கள் கரை புரண்டு ஓடும். 

தொல்காப்பியத்தின் சூத்திரங்கள், சங்க நூல்களின் சாறுகள், சிலப்பதிகாரம், திருக்குறள், திருமந்திரம், தேவாரத்தின் திருவருள், திருவாசகத்தின் தேன் சுவை, இவை எல்லாம் சேர்த்துத் தொடுத்த மாலையெனப் பேசி மகிழ்விப்பார்கள். கேட்டவர் நெஞ்சம் எண்ணும் போதெல்லாம் இன்பம் ஊறும். 

பெரியப்பாவின் நூலை தேனு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது பற்றி மிக மிக மகிழ்ச்சி. நல்ல தந்தையும் நலமிகு அன்னையும் பெற்ற பிள்ளைகள்தான் உயர்வுறும். அது தேனுவுக்குப் பொருந்தும். ஊரார் புகழ உலகம் புகழ உற்றார் மதிக்க கற்றவர் மதிக்க பொற்றாமரைபோல் பொலிய வேண்டுகிறேன்.

இவ்வளவு அற்புதமாக இவர் எழுதுவார் என்று நினைத்ததே இல்லை. விஷ்ணு சகஸ்ர நாமம், தமிழ் சுப்ரபாதம் ஆகியவற்றை அழகாகக் கூறுவார் எனத் தெரியும். இன்று வாசித்தளித்த மடலின் மூலம் அவர்கள் தமிழறிஞரின் மனைவி என்பதை நிரூபித்து விட்டார்கள்.

பெரியப்பாவின் மாணக்கர் பற்றி பேச்சு வந்தது. நிறையப்பேருக்கு ஏணியாக விளங்கியவர்கள் அவர்கள்.  நிறையப் பேருக்கு வழிகாட்டியவர்கள். அவர்களிடம் பயின்றவர்களில் இப்போது நமது செட்டிநாடு இதழில் கௌரவ ஆசிரியராக இருக்கும் முனைவர் எம் எஸ் லெக்ஷ்மி அவர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

பெரியப்பாவின் படைப்புகள் பல பல்வேறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகப் பெரியம்மா கூறினார்கள். அப்போதே அவர்கள் அருமை தெரிந்திருந்தால் அதை எல்லாம் சேகரித்து நூலாக்கியிருக்கலாம் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று ஆதங்கப்பட்டேன்.
மாலை விருந்தும் மனதுக்கிசைந்த மனிதர்களும் சூழலும். :) !

 பெரியப்பாவைப் பற்றித் தேனு எழுதியது எங்கள் குடும்பத்தாருக்குப் பெருமை என்றார்கள். அதற்கு என் தந்தை பெரியப்பாவைப் பற்றி எழுதத் தேனுவுக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை.

பெரியம்மாவிடம் நன்றியறிதலோடு ஒரு வார்த்தை சொன்னேன். பெரியப்பா தமிழை உங்கள் துணையாக விட்டுச் சென்றிருக்கிறார்கள் பெரியம்மா. நீங்கள் தமிழ் பெற்றதால் அனைத்தும் பெற்றவர்கள். என்று. 

8 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள்!
அருமையான நிகழ்வு பற்றிய தொகுப்பு சிறப்பு. உங்கள் பெரியம்மா மிக அழகாக எழுதியுள்ளார்! நல்ல தமிழ்!!

கீதா

பாலராஜன்கீதா சொன்னது…

கல்லூரியில் மூன்றுவருடங்கள் முனைவர் வெ.தெ.மாணிக்கனார் அவர்களிடம் தமிழ் பயிலும் அரிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தோம். அவர் மகன் எங்கள் பள்ளி / கல்லூரியில் எங்களுக்கு மூத்தவர்.

பாலராஜன்கீதா சொன்னது…

தமிழ் வகுப்புகளில்
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வது சண் முகனே
என்ற தொடக்கப் பாடலுடன்தான் அவரிடம் தமிழ் கற்றோம்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai சொன்னது…

இந்நிகழ்வுகள் தொடரட்டும் வாழ்த்துகள் சகோ

R Muthusamy சொன்னது…

பாராட்டும் பரிசும் பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள். திரு வெ தெ மாணிக்கம் பற்றிய மிகச் சிறப்பான அறிமுகம் வழங்கியுள்ளமைக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீதா.

அப்படியா ! கருத்துக்கு நன்றி பாலராஜன் கீதா

நன்றி ஸ்ரீராம்

நன்றி டிடி சகோ

நன்றி கில்லர்ஜி சகோ

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...