எனது புது நாவல்.

வியாழன், 15 மார்ச், 2018

விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர். ஒரு பார்வை.விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர். ஒரு பார்வை.

வேங்கை சவாரி படிக்கவில்லை. நான் படித்த முதல் நூலே விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர்தான். இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் காளிமுத்து நல்லதம்பி அவர்கள்.

மிகச் சரளமான நடையில் செல்லும் இக்கதையை நான் அரைமணிநேரத்தில் படித்து முடித்தேன். எடுத்துப் படிக்க ஆரம்பித்தபின் வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவாரசியம். யதார்த்தம்.

ஒரு காஃபி ஹௌஸின் மாடியில் ஆரம்பிக்கும் தனிமனிதனின் ( திருமணமான என்று சேர்த்துக் கொள்ளலாம். )எண்ணங்களின் தொகுப்பு இந்நூல். மனைவி ஒரு பக்கமும், தாயும் சகோதரியும் ஒரு பக்கமும் தராசுத்தட்டில் இருக்க., அனைவரையும் கேதுப் பார்வையில் ஞான திருஷ்டியோடு நோக்கும் ஹீரோ.

புதிதாகத் திருமணமாகும் இன்றைய இளைஞர்களின் மனோநிலையும் குடும்பநிலையையும் புட்டுவைக்கும் கதை. மிக நுண்ணிய நையாண்டியோடு தொடரும் பாணி இவருக்குக் கைவந்த கலை.


சுய எள்ளல். சுற்றி இருப்போரின் சுயம் மற்றும் ஆதாரத்தின் மீதான கேள்விகள், ஒரு நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையின் அவசங்கள்., குடும்பம் என்ற அமைப்பில் ஒருவருக்கொருவர் போலியாக பாசாங்காகக் கட்டிக்காப்பாற்ற வேண்டிய இறையாண்மையின் அவசியங்கள் ஆகியவற்றைச் சுட்டிச் செல்லும் விதம் சிறப்பு.

மெல்லிய மனித உணர்வுகள் எப்படி வல்லியதாக சுயத்தை மட்டுமே திருப்திப்படுத்துவதாக சொல்லப்போனால் சுயநலத்துக்காக நியாய தர்மங்களை அலட்சியப்படுத்துவதாக சாதாரண மனிதர்களை எப்படி மாற்றுகிறது என்பதைக் கோடு காட்டுகிறது கதை.

வேலை இழந்த சேல்ஸ்மேனான தகப்பன், சித்தப்பாவை அண்டி வாழும் குடும்பம், அதற்காக மேற்பூச்சுப் பூசியபடி அவருக்காகச் செய்யப்படும் நித்யக் கடமைகள், அம்மா குமுதா, தங்கை மாலதி ஆகியோரின் சுயநலங்கள்., அதை எதிர்த்துக் கேள்வி கேட்கும் மருமகளான அனிதாவின் நையாண்டிக் கேள்விகள், அதை எதிர்க்கவோ அடக்கவோ துணிவில்லாமல் பதறும் ஹீரோவின் மனநிலை.. மொத்தத்தில் மாறும் குடும்பத்தின் மனநிலை ஹீரோவின் மனநிலையையும் மாற்றுவது என ஒரு யதார்த்த கன்னடக் குடும்பத்தின் நிலையைச் சொல்லிச் செல்கிறது காச்சர் கோச்சர்.

காச்சர் கோச்சர் என்பது ஒரு நூல்கண்டுச் சிக்கலைப் போன்றது . இச்சொல்லைக் கண்டுபிடித்துச் சொல்பவர் ஹீரோவின் மனைவி அனிதா. தங்கள் குடும்பங்களுக்குள் ஒரு சில செல்ல வார்த்தைகள் அல்லது சங்கேத வார்த்தைகள் பேசப்படுவது அல்லது அதை அவர்கள் மட்டுமே அறிந்திருப்பது போன்ற ஒரு வார்த்தைதான் காச்சர் கோச்சர். இதை அனிதாவின் வீட்டினர் தங்களுக்குள் பேசும்போது ஒரே சிக்கலாகி விட்ட விஷயத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்துவதுண்டு. இதே போன்றதொரு சிக்கலில் சிக்கிக் கிடக்கிறது கதாநாயகனின் குடும்பமும். 

கதாநாயகனுக்கு முன்னாள் காதலி சித்ராவின் அதிரடியான பெண்ணியப் பேச்சுக்களின் மூலம் ஏற்படும் அதிர்வும் அந்த உறவை விட்டு அவன் எளிதாக வெளிவருவதும் ஒருவிதம் என்றால் அதைவிட நெருக்கமான ஒரு உறவில் இருந்த சித்தப்பா வெங்கடாசலத்தைத் தேடி வரும் சுகாசினியின் அன்பு தோய்ந்த வார்த்தைகளும் அதை அவர் அலட்சியப்படுத்தி அவளைக் குடும்பமே வெளித்தள்ளி அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் இருப்பை தங்கள் பத்திரத்தை, தங்கள் ஆளுமையைத் திரும்பத் தக்கவைத்துக் கொள்வது இன்னொரு ரகம். 
   
தனது தந்தையை, சித்தப்பாவை, அம்மாவை, தங்கையை அவர்களின் சுயநலத்தின் கோரத்தை வீட்டிற்கு வந்த மருமகளான அனிதா எதிர்க்கிறாள் எனத் தெரிந்ததும் பல்வேறு வீடுகளில் நடந்த வரதட்சணைக் கொலைகள், திருமணக் கொலைகள், அவை விபத்தாக எப்படி மாறின என்று குடும்பத்தார் கதாநாயகனை வைத்து அலசும் இடம் திகிலடித்தது.

ஒரு குடும்பத்தில் மருமகளாக வருகிறவள் அவர்களின் எண்ணப்போக்கோடும் சுயநலத்திட்டங்களோடும் ஒத்துப்போகாவிட்டால் அவள் எப்படிக் கையாளப்படுகிறாள். எப்படி அவளைத் தங்கள் வாழ்விலிருந்து துரத்தவோ அல்லது அவள் வாழ்விலிருந்தே அவளைத் துரத்தவோ குடும்பத்தார் எண்ணுகிறார்கள் என்பதை அதிர்ச்சி கலந்த விதத்தில் பகிர்ந்திருக்கும் இந்தக் கதைக்கு முடிவு இல்லை.

புதிதாகத் திருமணமாகி முதன் முதலில் கணவன் வீட்டிலிருந்து தாய்வீட்டுக்குச் செல்லும் மனைவியை வழியனுப்பச் செல்லும் கணவனின் அசிரத்தையும் அதைவிட அசிரத்தையாக அவள் திரும்ப நடந்து கொள்வதும் இன்றைய காலகட்டத்தின் திருமண வாழ்வியலையும் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் ஒருவர்மீது ஒருவர் எத்தனை மாதங்கள் வாழ்ந்தாலும் பாசமோ பரிவோ ஏற்படாததையும் அனைவருமே குடும்பத்தின் பிணைக்கைதி ஆக இருப்பதையுமே காட்டுகிறது இந்நூல்.

ஒப்புக்குத் தன் சித்தப்பா கம்பெனியிலேயே வேலை பார்த்துவரும் கதாநாயகன் கட்டாய விஆர் எஸ்ஸில் வந்த தன் தந்தையின் வேலையின்மையையும் சித்தப்பாவின் வருமானத்தில் வயிறு வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தார் போலத் தானும் இருப்பது குறித்தான விசாரமும் அது குறித்து ஒன்றும் செய்ய ஏலாத விரக்தியும் தந்தை தன் பங்குச் சொத்தையும் யாருக்கும் யாசகம் அளித்துவிடுவாரோவென்ற பயமுமே நிரவி நிற்கின்றன.

ஒரு கீழ் மத்யதர குடும்பம் உயர் மத்திரதரம் ஆக எடுக்கும் முயற்சியில் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு புதிய பொருளும் கொண்டாடப்படுவதுபோல் ஒவ்வொரு புதிய உறவும் கூட கொண்டாடப்படுவதில்லை என்ற யதார்த்தம் நிறுவப்படுகிறது.

தங்கள் வசதியான வாழ்க்கைக்காக நேர்மையானவர்களாகக் கருதப்படும் மனிதர்கள் கூட எவ்வளவு தூரம் தரமிறங்கிப் போவார்கள் என்பதையும் தம்மைத் தடுக்கும் எதையும் அழிக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதையும் , நாம் கனவு காணும் குடும்பம் என்ன என்பதையும் யதார்த்தத்தில் அது எப்படி எல்லாம் சிதைவுற்ற மனோபாவத்தில் புரள்கிறது என்பதையும் விவேக் ஷான்பாக் கறாராகச் சித்தரித்துள்ளார்.

தொல்லைதரும் எறும்புகளைக் கொல்வது போலவே தம்மை எதிர்க்கும் மனிதர்களைக் கையாளும் மனிதர்களின் மனோபாவங்களும் நடவடிக்கைகளும் அச்சமூட்டுபவை 

கதாபாத்திரங்களின் குதர்க்கமான பேச்சுக்களும் ஒருவரை ஒருவர் குத்திக் குதறிக் கொள்வதும் நாம் எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராதோர் வாயிலிருந்து வெளிப்படும் நாராசச் சொற்களும் அதிர்ச்சி ஏற்படுத்துபவை. 

பெண்ணியம் பெண் விடுதலை என்று பேசப்படும் இந்நாளில் கூட வீட்டு மருமகளை அதிரடியாக எந்த விதத்திலாவது அப்புறப்படுத்திவிட நினைக்கும் மாமியாரும் நாத்தனாருமான பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதை தற்கால பெங்களூரின் வாழ்வியலில் இருந்து எடுத்துக்கொண்டு விவேக் எழுதி இருப்பதாக நடிகர் கீரீஷ் கர்னாட் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது. 

மனிதர்களின் மனோவிகாரங்கள் எடுக்கும் உருவங்களும், தனிமையில் மட்டுமில்லாமல் கூட்டத்திலும் உரையாடலிலும் கூட அவை நிர்வாணத்துடன் வெளிப்படும் அவலமும் இன்றைக்குத் திருமணமாகி சேர்ந்து வாழவும் இயலாமல் முடிவெடுக்கவும் இயலாமல் குடும்பம் என்னும் தறிகெட்ட குதிரையின் போக்கில் போகும் இளைஞர்களின் மனக்குமுறல்களையும் குழப்பங்களையும் வெளிப்படுத்தும் இக்கதையைக் கட்டாயம் படித்துப் பாருங்கள்.   

நடைமுறைகளும் சட்டங்களும் மாறினால் போதாது. மனிதர்களின் மனோபாவங்களின்படியே அவர்கள் நடந்துகொள்கிறார்கள். மனமாற்றம் என்பது எல்லாவற்றையும் தாண்டி ஏற்பட வேண்டும் என்று தோன்ற வைத்த கதை.

ஆனால் முடிவில் அனிதா திரும்பி வந்தாளா, காணாமல் போனாளா, அவளுக்குப் பயணத்தில் ஏதும் ஆனதா, இல்லை திரும்பி வந்தவுடன் அவரது குடும்பத்தாரால் இயற்கை சாவு போன்ற மரணம் ஏற்பட்டதா இல்லை அப்படியே பத்திரமாகத் திரும்பி வந்து குடும்பத்தினருக்கு எதிரான தனது எகனைமொகனையான பேச்சுக்களைத் தொடர்கிறாளா என்று சுஜாதா பாணியில் முடிவு சொல்லாமல் முடிந்திருக்கிறது கதை.

காப்பி ஹௌஸில் ஆரம்பித்த கதை காப்பி ஹௌஸிலேயே முடிவற்று முடிகிறது. 

மிகச் சரளமாக மொழிபெயர்த்திருக்கும் காளிமுத்து நல்லதம்பி அவர்களுக்கும், ஒரு யதார்த்தத்தை எந்த மிகையூட்டலுமில்லாமல் அப்படி அப்படியே சமூகத்தின் கண்ணாடியாகப் பிரதிபலித்திருக்கும் விவேக் ஷான்பாக் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

நூல்:- காச்சர் கோச்சர்.
மூலம் :- கன்னடம்
மூலக்கதை ஆசிரியர் :- விவேக் ஷான்பாக்
தமிழில் :- காளிமுத்து நல்லதம்பி
பதிப்பகம் :- காலச்சுவடு
விலை :- ரூ 125/-

5 கருத்துகள் :

நல்லதம்பி சொன்னது…

நன்றி தேனம்மை சகோ. அருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

விரைவில் வாசிப்பேன்.

Ramanathan SP.V. சொன்னது…

நெஞ்சம் மறப்பதில்லை சரண்யாவும் கிட்டத்தட்ட அனிதா போலத்தான். உங்கள் வார்த்தைப் பிரயோகம் மிக நன்று.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நல்லதம்பி சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி ராமு மாமா.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

bhooma சொன்னது…

good review, interesting book to read and awesome translation from Sri Nalla Thambi. Thanks for sharing.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...